சென்னை 28, சரோஜாவின் வெற்றிக்கு பிறகு வெங்கட் பிரபு டீமிலிருந்து வந்திருக்கும் படம். ஊர்பட்ட கடன் பிரச்சனையில் பஞ்சாயத்துக்களை பார்த்து வெளிவந்திருக்கும் படம். சாதாரணமாகவே ஹாலிடே மூடில் இருக்கும் இவரின் படத்திற்கு வெங்கட் பிரபுவின் ஹாலிடே என்றதும் எதிர்பார்ப்பு அதிகம் ஏற்படுத்தியிருந்த படம்.
இவர்களும் வழக்கம் போல பழைய தமிழ் சினிமாக்களை கிண்டலடித்தே ஆரம்பிக்கிறார்கள். கிராமத்தில் யாருக்கும் அடங்காமல் ஊர் சுற்றி திரியும் ஜெய், பிரேம்ஜி,வைபவ் மூவரும் பஞ்சாயத்தில் நிற்கும் காட்சியில் தொடங்குகிறது படம். ஏற்கனவே பலராலும் கிழித்து தொங்கவிடப்பட்ட கிராமத்து பஞ்சாயத்து காட்சிகள். பிரேம்ஜி கோவிலுக்கு நேர்ந்து விடப்பட்ட சாமி பையன் என்பதற்கான ப்ளாஷ்பேக் சீன் அட்டகாசம். முக்கியமாய் ஷண்முகசுந்திரத்தின் படு காமெடியான் சீனில் அவரின் சீரியஸ் நடிப்பும், ஒரே நேரத்தில் வாந்தியெடுத்து,குழந்தை பிறப்பது வரை வரும் காட்சி நிஜமாகவே ஒரு எதிர்பார்ப்பை எகிறத்தான் செய்ய வைக்கிறது.
அதன் பிறகு வரும் காட்சிகளில் ஏதும் பெரிய ப்ளஸ் இருப்பதாய் தெரியவில்லை. பிரேம்ஜியை சாமி கண்ணை குத்துவதாய் வரும் காட்சியும், அதை ஜெய் சொல்லுமிடமும் சிரிப்பு. அதுக்கப்புறம் மூவரும் கோவா போய் சேர்ந்து தாடி, மீசையை மழித்ததை தவிர பெரிதாய் எதுவும் நடக்காத முதல் பாதிக்கு இண்டர்வெல் விடுகிறார்கள்.
இவர்களை தங்கள் காட்டேஜில் தங்க வைக்கும் ஆகாஷ், அவனின் ஹோமோ ஜோடி சம்பத், ஜோடி தமிழ் படங்களுக்கு புதுசு. ஆகாஷின் ஸிக்ஸ் பேக்கை நம்பர் போட்டு காட்டுவதும், சம்பத், பிரேம்ஜி ரூமுக்குள் “உங்களுக்கு இவ்வளவு பெரிசா” என்று போட்டோவை காட்டி கேட்பதை வெளியே தவறாய் புரிந்து கொண்டு குமையும் ஆகாஷ் நடிப்பு. அவ்வப்போது சிரிப்பை வரவழைக்கிறது. நிஜமாகவே சம்பத்தின் பாடிலேங்குவேஜும் டயலாக் டெலிவரியும் அருமை.
ஆரம்ப காட்சியில் பிரேம்ஜியை காதலிக்கும் வெள்ளைக்கார பெண்ணை கரெக்ட் செய்ய பிண்ணனியில் கண்கள் இரண்டால் பாட்டை போட்டு அதில் ஜெய்யின் முன்னாலேயே தலையாட்டி பாடுவதும், சிரிப்பதும் அருமை ஆனால் அதையே படம் முழுவதும் காட்டி வெறுப்பேற்றுகிறார்கள்.
ஜெய் பியா ஜோடிக்கு பெரிதாய் வேலையில்லை. அவர்களின் காதல் காட்சிகளிலும் அழுத்தம் இல்லாததால் பெரிதாய் ஏதும் தோன்றவில்லை. பியா அழகாய் இருகிறார். வைபவ் ஸ்நேகா காட்சிகள் படு சொதப்பல். க்ளைமாக்ஸ் காட்சிகள் முற்றிலும் பொலிவிழந்ததாகவே இருக்கிறது.
படத்தில் சொல்லிக் கொள்கிற மாதிரியான நடிப்பு, பிரேம்ஜியும், சம்பத்தும், பரவாயில்லை. மற்றவரக்ளுக்கு பெரிதாய் ஏதுமில்லை. படம் முழுக்க பிரேம்ஜியை நம்பியே இருந்திருப்பது தெரிகிறது.
சக்தி சரவணனின் ஒளிப்பதிவு துல்லியம், யுவனின் இசையில் இரண்டு பாடல்களை தவிர பெரிதாய் ஏது சொல்வதற்கில்லை. ஆண்ட்ரியாவின் இதுவரை அட்டகாசம், டைட்டில் பாடலும் நச்சென்று நிற்கிறது.
வழக்கமாய் வெங்கட்பிரபுவின் படங்களில் ஒரு சின்ன மேட்டரை எடுத்துக் கொண்டு அதை நோக்கி போகும் போது மிக இயல்பான நகைச்சுவையோடு திரைக்கதை நகரும். இதில் அது மிஸ்ஸிங். இங்கிலீஷ் காரி தமிழ் பேசும் காட்சி படுத்தல் மிக அருமை. முழுக்க, முழுக்க, பிரேம்ஜியை நம்பி களமிறங்கியது பெரிய லெட்டவுன். ஆங்காங்கே இங்கொன்றும் அங்கொன்றுமாய் இருக்கும் நகைச்சுவை காட்சிகள் இருக்கிறதே திரைக்கதையின் தொடர் தொய்வினால் இளமை கொப்பளிப்பாக வந்திருக்க வேண்டிய படம் நம்முள் ஏற மாட்டேன் என்பது சோகமே. என்னை பொருத்தவரை வெங்கட்பிரபு ஹாட்ரிக் மிஸ் செய்துவிட்டார்.
கோவா – A Dull & Boring Holiday.
தமிழ்மணத்திலேயும், தமிலிஷிலேயும் உங்க ஓட்டை குத்துங்க எசமான் குத்துங்க..