எப்படி இந்த படத்தை மிஸ் செய்தேன் என்று தெரியவில்லை. மக்பூல் பார்த்த போதே விஷால் பரத்வாஜின் கதை சொல்லும் முறையில் இம்ப்ரஸானவன் நான். அதிலும் இப்படத்தில் விஷால், அஜய்தேவ்கன், சாயிப் அலிகான், கரீனாகபூர், விவேக் ஓபராய்,கொங்கனா சென் என்று நடிகர் பட்டாளம் அணிவகுத்திருக்கும் இப்படத்தை தியேட்டரில் பார்க்காமல் விட்டது ஆச்சர்யமாகத்தானிருக்கிறது.
ஷேக்ஸ்பியரின் ‘ஒத்தல்லோ”வை தழுவி எடுக்கப்பட்ட படம். ஓமி என்கிற ஓம்கார் உ.பியில் ஒரு தனி அரசாங்கத்தையே நடத்திவரும் ஒரு தலைவன். அவனுக்கு இடதும் வலதுமாய் லங்டாவாய் சாயிப் அலிகானும், கேசுவாக விவேக் ஒபராயும் இருக்க, ஓமி தன்னுடய கிராமத்தின் அடுத்த தளபதி போன்ற போஸ்டுக்கு கேசுவை தெரிவு செய்துவிடுகிறான். இதனால் அவன் மேல் பொறாமை பட ஆரம்பிக்கும் லங்டா, கொஞ்சம் கொஞ்சமாய் அவனை பற்றிய பல விஷயங்களை தவறாய் ஓமியிடம் போட்டு கொடுக்க ஆரம்பிக்க, ஓமியின் காதலியான டாலிக்கும், கேசுவுக்கும் இடையே காதல் என்கிற திரியை போட்டு கொளுத்த ஆரம்பிக்க, ஒமியின் குடும்ப நகையை, அதுவும் டாலிக்கு கொடுத்ததை, இந்து அதை திருடி கொண்டு விட, அதை வைத்து லங்டா பற்ற வைக்கும் திரி பற்றிக் கொண்டு ஓமிக்கும், டாலிக்கும் திருமணம் நடக்கும் நாளுக்குள் லங்டா நிருபிக்கவில்லையென்றால் அவனை கொன்று விடுவேன் என்று ஓமி சொல்லிவிட்டு போக, லங்டா, கேசுவின் காதலியான பிபாசாவிடம் அந்த நகையை கேசுவுன் மூலமாய் கொடுத்து அவள் மூலம் இவர்களின் எதிரியான ஒரு அரசியல் வாதியை கொலை செய்ய போகும் இடத்திற்கான தகவலை பெற கொடுக்க சொல்கிறான்.
தன் குடும்ப நகையை நடனமாடி பிழைக்கும் பிபாசுவின் இடுப்பில் பார்த்த ஓமிக்கு, கேசுவுக்கும் டாலிக்குமிடையே இருக்கும் காதல் தான் தன் குடும்ப நகையை கேசுவிடன் கொடுக்க வைத்திருக்கிறது என்று நம்ப ஆரம்பித்து திருமண நாள் அன்று இரவு லங்டா, பிபாசாவுடன் கேசுவின் வீட்டிற்கு போய் அவனை அழைத்துவந்து சுட்டு கொல்ல, அதே நேரத்தில் ஓமி தான் உயிருக்கு உயிராய் காதலித்த டாலியை அவளின் துரோக செயலுக்காக என்று முகத்தில் தலைகாணியை அழுத்து கொல்கிறான். அதை கண்ட லங்டாவின் மனைவி இந்துவுக்கு அந்த நகையை பற்றிய விஷயம் தெரிய வர அதை தான் தான் திருடினேன் என்றும் அநியாயமாய் ஒரு அப்பாவியை கொன்று விட்டாய் என்று கதறுகிறாள்.
கேசுவை கொன்று விட்டு வரும் லங்டாவுக்கு நிலைமை புரிய, என்ன சொல்வது என்று புரியாமல் நிற்க, தான் செய்த விஷயஙக்ளுக்கெல்லாம் கொஞ்சம் கூட குற்றா உணர்வு இல்லாமல் தன் நிலையை விளக்க முயற்சிக்க, அவனை வெளியேற்றுகிறான் ஓமி. தலைகுனிந்த நிலையில் வீட்டை நோக்கி வரும் லங்டாவை அவன் மனைவி இந்துவே கோடாலியால் அவனை வெட்டி கொல்கிறாள்.
அரைகுறையாய் சுடப்பட்ட கேசு பிழைத்தெழுந்து நேரே ஓமியின் வீட்டிற்கு வர, அங்கே கொல்லப்பட்டிருக்கு டாலியை பார்த்து கலங்கி நிற்க, தன் சந்தேகத்தால் எல்லாவற்றையும் இழந்த நிலையில் தன்னை சுட்டுக் கொண்டு இறக்கிறான் ஓமி.
படம் பூராவும் மனிதனின் அடிப்படை குணங்களான பொறாமை, துரோகம், காதல், வஞ்சம் என்று அக்குணங்களால் ஏற்படும் விபரீதங்களை கொண்ட திரைக்கதை. ஒத்தெல்லோவை இந்தைய கிராமத்தின் கதையாய் மாற்றியமைத்து கதை சொல்லியிருக்கும் விதம் அருமை. வழக்கமாய் விஷாலில் கதை சொல்லும் முறையில் இருக்கும் அதே பெர்பெக்ஷன் இதிலும்.
படம் முழுக்க ஓமியாகவும், லங்டாவகவும் அஜய் தேவக்னும், சாயிப் அலிகானும் வாழ்ந்திருக்கிறார்கள். அஜ்யின் ஆரம்ப காட்சிகளில் அவர் ஒரு பெரிய குழுவின் தலைவன் என்பதை உணர்த்தும் காட்சிகளில் இருக்கும் பாடிலேங்குவெஜ் அருமை. டாலிக்கும் அவருக்குமான காட்சிகளில் அவர்களூடே இருக்கும் ஒரு இயல்பான ரொமான்ஸ் கொள்ளை அழகு. லங்டாவாக வரும் சாயிப்பின் நடிப்பும் அபாரம். ஒற்றைகாலை சற்றே தாங்கி, தாங்கி நடக்கும் நடையாகட்டும், கேசுவின் மேல் பொறாமை கொண்டு மெல்ல அது பழிவாங்கு உணர்வாய் மாறும்மிடத்தில் அவரது நடிப்பாகட்டும், முக்கியமாய் டாலிக்கும், கேசுவுக்கு இடையே ஏதோ என்று ஓமியின் மனதில் உருவேற்றும் காட்சிகள் என்று தன் அபாரமான நடிப்பை வெளிபடுத்தியிருக்கிறார்.
டாலியாக கரீனா, எனக்கு அவ்வளவாக பிடிகாத நடிகை. ஆனால் இப்படத்தில் என்னை கவர்ந்துவிட்டார். குடும்ப நகையை இடுப்பில் கட்டிக் கொண்டு வ்நது ஓமியின் முன்னால் வெட்கத்துடன் நிற்கும் காட்சி, ஓமியின் மேல் கண்மூடித்தனமான காதலை வெளிப்படுத்துவதற்காக டைட்டானிக் பாடலை கற்றுக் கொண்டு அவனுக்காக பாட முயற்சிக்கும் காட்சி, அவர்களுக்குள் நடக்கும் அனல் பறகும் உடலுறவு காட்சி, முதல் முதலாய் தன்னை அடித்த ஓமியை நினைத்து அழுது கொண்டிருக்க, அதை பார்த்த இந்து என்னவேன கேட்க, சற்றே அழுது ஓமி தன்னை அடித்ததாய் சொல்லிவிட்டு மீண்டும் சமாளித்து, காதலின் போது என்று சொல்லுமிடம். கடைசி முதலிரவு காட்சியில் அவளை சந்தேகப்பட்டு ஓமி கேட்கும் கேள்வியின் சூடு தாங்காமல் கலங்கி போய் அவனை எப்படி நம்ப வைப்பது என்றறியாமல் அவனை அணைத்து அழும் காட்சி, தன் கணவனாலேயே அவள் கொல்லப்படும் காட்சி மயிற்கூசெரிய வைக்கும் நடிப்பு. கலக்கிட்டீங்க கரீனா.
இந்துவாக வரும் கொங்கனாவின் நடிப்பும் அருமை. இவர் வரும் காட்சிகள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் கதை சொல்லும் அடுத்த நிகழ்வுக்கு லிங்க் இருப்பதால் இவரது நடிப்பு மிகவும் பிடிக்கிறது. அதிலும் சாயினுடன் இவர் உறவு கொள்ளும் காட்சியில் இவரது முகத்தில் தெரியும் வெட்கத்தை பாருங்கள் .. அய்யடா.. அட்டகாசம்.
அரசியவாதி நஸ்ரூதீன் ஷா, கேசுவாக வரும் விவேக் ஓபராய்,கேசுவின் காதலியான பிபாசு பாசு,ராஜ்ஜூவாக வரும் தீபக் என்று படத்தில் வரும் அத்துனை கேரக்டர்களும் தனித்துவமாய் இருக்கிறார்கள்.
தஸ்டக் ஹுசேனின் ஒளிப்பதிவு அட்டகாசம், ஒரு சில லோ லைட் காட்சிகளை தவிர. அதே போல் வசனங்கள் மிக நுணுக்கமான் யோசித்து எழதப்ப்ட்டிருக்கிறது. “ஒரு மகளாய் தகப்பனுக்கு உண்மையாய் இருக்க முடியாதவள், காதலுக்கு உண்மையாக இருப்பாள் என்று என்ன நிச்சயம்” என்பத் போன்ற வசனங்களின் ஆழம் அதிகம்.
விஷால் பரத்வாஜின் இசையில் வரும் பாடல்கள் ப்டத்தோடு வருவதால் நெருடவில்லை. பின்னணி இசை எங்கே போடவேண்டும் என்று தெரிந்து சரியான இடத்தில் போட்டிருக்கிறார். இவரது திரைக்கதை ஆங்காங்கே மெதுவாக சென்றாலும், கதை சொல்லும் போது ஏற்படும் அத்துனை தாக்கங்களையும் நம்முள்ளே கொண்டு செல்ல அதுவே ப்ளஸ் பாயிண்டாகி விடுகிறது. பல நுணுக்கமான காட்சிகளை படமாக்கியிருக்கும் விதத்தில் இயக்குனர் பளிச்சிடுகிறார்.
OMKARA – A BRILLIANT FILM TO WATCH
கேபிள் சங்கர்