சூப்பர் சிங்கர் ஜுனியர் 2வின் பைனல்ஸ் Y.M.C.A க்ரவுண்டில் லைவ்வாக நடைபெற இருக்கிறது. தொலைக்காட்சி ரசிகர்களிடையே மிகப்பெரிய ஆரவாரத்தை, ஆர்வத்தை, எழுப்பியிருப்பது நிஜம். நிகழ்ச்சியை பற்றி ஆயிரம் விமர்சனங்கள் ஆதரித்தும், எதிர்த்தும் இருந்தாலும், பெரு வாரியான மக்களால் பார்க்கப் படுகிற நிகழ்ச்சியாக இருக்கிறது என்பது உண்மை.
ஆரம்பித்த போது மிகவும் ஆவரேஜாக ஆரம்பித்த நிகழ்ச்சி, கொஞ்சம் கொஞ்சமாக சூடு பிடித்து, எலிமினேஷன் ரவுண்ட், வைல்ட் கார்டு ரவுண்ட், குவாட்டர் பைனல் என்று வர ஆரம்பித்தவுடன், போட்டியாளர்களீடையே, மிக கடுமையான போட்டியும், ரசிகர்களிடையே அந்த பெண், நன்றாக பாடினாள், ஸ்ரீகாந்த நல்லா பாடினான் என்று ப்ரியங்கா நல்லாத்தான் பாடினாள் என்று தங்கள் வீட்டு பிள்ளைகளை போல நினைத்து உரிமையுடன் பேச ஆரம்பித்தார்கள். வழக்கமாய் விஜய் டிவியின் விளம்பர இம்சை தாங்காமல் பார்ப்பதை தவிர்ப்பவன் நான். அதையும் மீறி சில சமயம் டிவியிலும், இணையத்தில் யூடூபிலும் தொடர்ந்து எல்லா நிகழ்ச்சியையும் பார்த்து வருகிறேன்.
நிறைய வீடுகளில் மாலை நேரத்தில் கடந்த ஒண்ணரை மாதமாய் விளம்பர இடைவேளையில்தான் மத்த நிகழ்ச்சிகளை பார்க்கிறார்கள். இதை என்னால் நிருபிக்க முடியும். அடிப்படையில் மக்களின் பல்ஸ் எனக்கு நன்றாக தெரியும். எப்படி தெரியும் என்பதை பிறகு சொல்கிறேன்.
இதனால் எப்படி சன் டிவியின் டி.ஆர்.பி குறைய ஆரம்பித்தது என்று கேட்கிறீர்களா? மாலை வேளை
ப்ரைம் டைம் எனப்படும் 7-9.30 வரையிலான நிகழ்ச்சிகளில் சன் டிவியின் நிகழ்ச்சிகள் மட்டுமே தமிழ் நாட்டில் 20 புள்ளிகளுக்கு மேலாக டி.ஆர்பி ரேட்டிங் வரும் நிகழ்ச்சிகளாகும். இது பல ஆண்டுகளாய் இருந்து வரும் உண்மை. மெட்டி ஒலி, அரசி, கோலங்கள் காலங்களில் எல்லாம் 29 புள்ளி வரை கூட டி.ஆர்.பி ஏறியிருக்கிறது. தன் ப்ரைம் டைம் நிகழ்ச்சிகளுக்கு ஏதாவது பிரச்சனை வந்தால் உடனடியாய் அதை கவனிக்க ஆரம்பித்துவிடும், ஒன்று அதே போல ஒரு நிகழ்ச்சியை கொண்டு வந்தோ, அல்லது.. பின் வழியாக போட்டியாளரை கவிழ்த்தோ என்பது வெளிப்படையாக எல்லோருக்கும் தெரியும்.
கலக்க போவது யாரு? என்ற நிகழ்ச்சியை ஆரம்பித்தது விஜய் டிவி, அதன் வெற்றியை பார்த்து இவர்கள் ஆரம்பித்தது அசத்த போவது யாரு? அதே போல் ஜோடி நெ.1., நடுவே சில இசை போட்டிகள், மானாட மயிலாடவுக்கு போட்டியாக நிகழ்ச்சிகள் என்று ஏதேதோ உட்டாலக்கடி அடித்து பார்த்தும், பெரியதாய் பப்பு வேகவில்லை. அதிலும், கலைஞரின் மானாட மயிலாடவுக்கும், சூப்பர் சிங்கர் ஜூனியர் 2வுக்கும் எதிராய் எதுவுமே செல்ப் எடுக்க வில்லை.
எங்கே ஜிடிவி தங்களுக்கு போட்டியாக வருமோ என்று நினைப்பதற்குள் அதன் சேனலை கொஞ்ச காலம் தங்களுடய நெட்வொர்கில் காட்டாமல் இருந்து, பின்பு கொஞ்சம் பின்னாடி வரும் நான் ப்ரைம் சேனல்களீல் ஒளிபரப்பி, அதனுடய ரீச்சை குறைத்தார்கள். சென்னை போன்ற நகரங்களில் செட்டாப் பாக்ஸுகளில் சிறிது காலம் கழித்தே ஒளிபரப்பினார்கள். அப்படி ஒளிபரப்பியும், தமிழ் சேனல்களின் தொகுப்பில் அது இடம் பெறாது. தனியே சம்மந்தமில்லாமல், ஸ்போர்ட்ஸ் சேனல் பேக்கேஜுக்கு பக்கத்தில் வரும். வழக்கமாய் தமிழ் சேனலை மட்டுமே பார்க்கும் பார்வையாளர்கள் கொஞ்ச காலம் தேடிவிட்டு, வழக்கமான சேனல்களில் செட்டிலாகிவிடுவார்கள். அது மட்டுமில்லாமல் இந்த நேரங்களில் சேனல் காரர்களும் சோர்ந்து போய் தங்கள் நிகழ்ச்சிகளின் தரத்தை மேம்படுத்தாமல் விட்டுவிட, சந்தைக் கடையில் ஒரு மந்தைக்கடையாய் விடுகிறது.
ஆனால் அந்த விஷயத்தில் விஜய் கொஞ்சமும் விடாமல் சீரியல்களில் கவனம் செலுத்தாமல் தங்களுடய வித்யாசமான கேம் ஷோக்களினால் மக்களிடையே கொஞ்சம், கொஞ்சமாய் நற்பெயர் எடுக்க ஆரம்பித்தது. இவர்களுடயை எல்லா நிகழ்ச்சிகளும் ஹிந்தி ஸ்டார் ப்ளஸின் தமிழாக்கம் தான் என்றாலும், நிகழ்ச்சியின் தரம் பாராட்டக்கூடியது. என்ன எழவு இந்த விளம்பர இம்சைதான் இருக்கிறதிலேயே பெரிய எழவு..
சன்னும் தனியா ஒரு டீமை ஏற்பாடு செய்து வெறும் கேம் ஷோக்களுக்காக ஒரு பெரிய குழுவை நிர்ணையித்திருப்பதாக கேள்வி, அதனுடய முதல் நிகழ்ச்சிதான் டீலா நோ..டீலா.. எனக்கு தெரிந்து அது பெரிய அளவில் செல்ஃப் எடுக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் சமீப கால சூப்பர் சிங்கர் ஜூனியர்2வின் ரீச் அபாரமாகி இவர்களுடய பல ப்ரைம் டைம் சீரியல்களின் டி.ஆர்.பியை பெரிய அளவில் டெண்ட் ஏற்படுத்தவே வேறு வழியில்லாமல், உடனடியாய் தங்களுக்கு சீரியல் தயாரிக்கும் தயாரிப்பாளர், இயக்குனர், எழுத்தாளர்களை அழைத்து, என்ன செய்வீர்களோ ஏது செய்வீர்களோ, கொஞ்சம் கூட நிகழ்ச்சியின் டெம்போவை குறைக்காமல் தயாரியுங்கள் என்று மீட்டிங் நடத்தும் அளவுக்கு போயிருக்கிறது. என்னதான் முதலிடத்தில் உள்ள சேனல் என்றாலும், கொஞ்சமும் சலைக்காமல் இப்படி போராடும் இவர்களுடய ஆட்டிட்யூட் என்னை அசர வைக்கிறது. I Like their Attitude..
தங்கள் நிகழ்ச்சியின் பார்வையாளர்கள் குறைய ஆரம்பித்ததனால் நிறைய சீரியல்களில் திடீர் திருப்பஙக்ளை எல்லாம் 17ஆம் தேதிக்கு பிறகு வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்து இருக்கிற ஒரு வாரத்தை எப்படி கழிப்பது என்று புதிதாய் சிந்தித்து ஒப்பேற்றி வருவது சன்னுக்கு தெரிந்தே இந்த் மீட்டிங்.. அவர்களுக்கு தங்கள் சேனல் டி.ஆர்.பி குறைகிறதே என்று அல்லாட்டம். இவர்களுக்கு காசு போகுதே என்ற கவலை. டி.ஆர்.பி. குறைந்தால் விளம்பர வருமானம் குறைந்து விடும். விளம்பர வருமானம் குறைந்தால் தயாரிப்பு செலவில் அடிபடும். என்று சங்கிலித் தொடர் பிரச்சனைக்ள் ஏராளம். சன் நிகழ்ச்சிகளை குவாலிட்டியை பற்றி பேசுமே தவிர, அவர்கள் கட்டும் ஸ்லாட் பீஸில் ஏதும் சலுகை தராத பட்சத்தில் தயாரிப்பாளர்கள் ஒரு வாரத்தை ஓட்டுவதை தான் செய்ய நினைப்பார்கள்.
ஆனால் அதே வேளையில் இவர்களது பேக் டோர் விஷயத்தை பற்றியும் சொல்லித்தான் ஆக வேண்டும். வழக்கப்படி திடீரென விஜய் டிவி சேனல் செட்டாப்பாக்ஸில் தமிழ் தொகுப்பிலிருந்து காணாமல் போய், ஜீ தமிழுக்கு செய்தது போல தனியாக சம்மந்தமில்லாத ஒரு பொக்கேவுக்கு முன்னால் போடப்பட்டது. மக்களின் பல்ஸ் எனக்கு தெரியும் என்றேனே.. அது இப்படித்தான் ஒரே நாளில் ஏகப்பட்ட போன்கள் மக்கள் ஏன் விஜய் டிவி வரவில்லை என்று.. உடனடியாய் நாங்கள் தேடிப்பார்க்க, தள்ளிபோடப்பட்டிருப்பது தெரிய வந்தது. உடனடியாய எந்த சேனலி வருகிறது என்று போன் செய்யும் மக்களுக்கு தெரிய படுத்தினோம். இம்மாதிரியான முயற்சியெல்லாம் கல்யாணத்தின் போது சீப்பை ஒளித்து வைப்பதற்கு சமம் என்றாலும் இதையும் விடாது செய்யத்தான் செய்கிறார்கள்.
வழக்கமாய் மக்களிடையே பைனல்ஸுக்கும், வைல்ட் கார்டுக்கு மட்டுமே மக்களீடையே ஓட்டு பெறும் முறை இருந்த நிலையில், இம்முறை நிகழ்ச்சியின் வெற்றியை தக்க வைக்க, மேலும் பார்வையாளர்களை பங்கு பெற செய்து, நிகழ்ச்சியின் பார்வையாளர்களை தக்க வைத்து கொண்டது விஜய் டிவியின் மார்கெட்டிங் குழு.
இவ்வாறு செய்வதால் எஸ்.எம்.எஸ் மூலமாய் வருமானத்துக்கு வருமானம். பார்வையாளர்களும் குறைய மாட்டார்கள். இன்றைக்கு இரவு ஒளிபரப்பப்படும், நிகழ்ச்சி, மறுநாள் மதியம் மறு ஒளிபரப்பும் செய்கிறார்கள். இதற்கும் குறிப்பிடத்தக்க பார்வையாளர்கள் இருக்கவே.. செய்தது.
ஒரு பக்கம் போட்டி சேனல்கள், மறுபக்கம் அவர்களை எதிர்கொள்ளும்படியான நிகழ்ச்சிகளை தயாரிகக் வேண்டிய கட்டாயம், என்று பயங்கரமான வியூகத்தில்தான் சன் இப்போது புதிய இசை நிகழ்ச்சியை வழங்க இருக்கிறது. இது கூட ஹிந்தியில் ஸ்டாரில் மியூசிக் கா முக்காப்லா என்கிற நிகழ்ச்சியின் உட்டாலக்கடிதான். வருகிற 26ஆம் தேதி முதல் சன் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. சின்மயி தொகுத்து வழங்கப்போகும் நிகழ்ச்சி, அடுத்து விஜய் ஆரம்பிக்கும் சூப்பர் சிங்கருக்கு இது சரியான பதிலடியை தருமா? என்று பார்போம். இமமாதிரியான குவாலிட்டியான போட்டியில் ஈடுபடுவதை விட்டு விட்டு டி.ஆர்.பிக்காக இரண்டாம் நிலை முயற்சிகளுக்கு கீழிறங்க வேண்டுமா..?
கேபிள் சங்கர்