நல்லதை மட்டுமே பார்ப்பவர்கள், நல்லதை மட்டுமே பேசுபவர்கள், நல்லதை மட்டுமே கேட்பவர்கள் தயவு செய்து, கலாச்சார காவலர்கள், இந்த விமர்சனத்தையும், படத்தையும் பார்க்காமல் வேறு ஏதாவது உருப்படியான வேலை எதுவும் பார்க்கலாம். இன்னும் சில நாட்களுக்கு, பத்திரிக்கைகளுக்கும், பதிவுகளிலும், சும்மா பின்னி பெடலெடுக்கப் போகும் அவலாய் இப்படம் இருக்கப் போகிறது. அதையும் மீறி நிச்சயமாய் நீங்கள் 18 ப்ளஸ் ஆளாகவும், மன முதிர்ச்சியுடைவராகவும் இருந்தவர்களானால் தொடரவும்.
ப்ளஸ் டூவில் முதல் மாணவனாக வரும் அன்புவின் தந்தை ஒரு இராணுவ வீரன். நாட்டுக்காக எல்லைப் பகுதியில் போராடும் வேளையில் காலில் குண்டடிப்பட்டு வி.ஆர்.எஸ் வாங்கிக் கொண்டு திரும்ப ஊருக்கு வருகிறார். மகன் மேல், மனைவி மேல்மிகவும் பாசமுள்ள ஒரு அன்பான தகப்பனாய் வாழ்கிறார். என்னதான் அன்பான அப்பாவாக இருந்தாலும், இளமைக் காலத்தை இராணுவத்திலேயே செலவிட்டு, மீண்டும் வந்து வசந்த காலத்தை பார்க்க முயலும் போது மனைவி பாம்பு கடித்து இறக்கிறார். அப்பாவும் பிள்ளையும் தனிமரமாகிறார்கள்.
அன்புடன் படிக்கும் சுந்தரியிடம் காதல் பிறக்க, பள்ளி படிப்பு மட்டுமே முடித்திருக்கும் அன்புவின் காதலை பார்த்து, அவனின் தந்தை அவர்களின் காதலை புரிந்து திருமணம் செய்து வைக்கிறார். அதற்கு இன்னொரு காரணம் அவருக்கு இதன் நடுவில் ஆக்சிடெண்ட் ஆகி ஆறு மாசத்திற்கு நடக்க முடியாமல் போய்விட்டதால் வீட்டை பார்த்துக் கொள்ளவும் மகனின் காதலை நிறைவேற்றவும் திருமணம் நடக்க, நான்கு நாட்களில் அது முடிந்ததும் அன்புவின் அம்மா சொன்னபடி டீச்சர்ஸ் ட்ரைனிங் படிக்க போய்விடுகிறான்.
அதன் பிறகு மாமனாரின் உணர்வுகளை தூண்டும் விதமாய் நிகழ்வுகள் நடக்க, தன்னை கட்டுப் படுத்த முடியாமல் தள்ளிப் போட்டு, தள்ளிப் போட்டு ஒரு கட்டுப்படுத்த முடியாமல் நட்ட நடுக் கடலில் எது நடக்கக்கூடாதோ அது நடந்தேறி விடுகிறது. இதன் பிறகு நடக்கும் விஷயங்கள் அத விட அதிர்ச்சி. மருமகளே ஒரு கட்டத்தின் தன் உடலின் வேட்கையை தாங்க முடியாமல் மாமனாருடன் உறவு கொள்ள, ஒரு கட்டத்தில் இருவரும் கணவன் மனைவியாகவே காமமும், காதலுமாய் கொழிக்க, மகன் திரும்பும் போது அவனுக்கு சந்தேகம் வருகிறது. பிறகு என்ன ஆனது என்பதுதான் கதை.
கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக காட்டினால் பிட்டு படமாகிவிடக்கூடிய ஒரு கதைக் களன். ஆனா அந்த கதைக் களன் தான் ஆபாச, வக்கிர உணர்வுகளின் உச்சமாய் இருப்பதால் காட்டினாலும் காட்டாவிட்டாலும் மேற்சொன்ன உணர்வுகள் எழாமால் இருக்க முடியாது. ஆனால் முடிந்த வரை காட்சிகளில் ஆபாசம் இல்லாமல் படமாக்கியிருக்கிறார் இயக்குனர் சாமி.
எடிபஸ் காம்ப்ளெக்ஸ், போன்ற பல விஷயங்களை விஷுவலிலும், காட்சிப்படுத்துதலிலும் முயன்றிருக்கிறார்.ஆனால் என்னதான் முயன்றாலும், கதைப் போக்கும், அதற்கான காட்சிகளும், மிகவும் திணிக்கப்பட்டதாகவே இருக்கிறது. உதாரணமாய் மகனுக்கு பதினெட்டு வயதில் திருமணம் செய்து வைப்பது, அந்த யாருமேயில்லாத ஒரு கடலோர தனி வீடு, நடுராத்திரி யானை, என்று விதியோ, அல்லது சதியோ, மருமகளுக்கும், மாமனாருக்கும் இடையே நடக்கும் சம்பவங்கள் இயல்பில்லை. எப்போது வரும் சீன் என்று காத்திருப்பவர்களுக்கான காட்சிகளாகவே இருக்கிறது. என்ன தான் முடிவில் நீதி சொன்னாலும், இம்மாதிரி திணிக்கப்பட்ட காட்சிகளால் படத்துடன் ஒட்டவே முடியாமல் போகிறது. க்ளைமாக்ஸ் காட்சி இன்னும் அதிர்ச்சியோ அதிர்ச்சி.
புதுமுகம் அனயா கருப்பாக இருந்தாலும் களையாய் இருக்கிறார். அழும் காட்சிகளில் தான் பாவம் கொடுமையாய் இருக்கிறார். அப்பாவாக வரும் கஜினிக்கு அவரது மிலிட்டரி உடற்பயிற்சி உடல் போலவே நடிப்பும் கெட்டியாய், கல்லு போல் இருக்கிறார்.ஹரீஷுகு ஒன்று பெரிதாய் சொல்லிக் கொள்கிறார் போன்ற ஒரு கேரக்டர் இல்லை. ஆரம்பத்தில் ரெண்டு பாட்டு பாடி, கட்டிலில் புரண்டு, கடைசி காட்சியில் நீதி வழங்கிவிட்டு போவதுதான். சுந்தர் சி. பாபுவின் இசை ரொம்பவும் இறைச்சலாய் இருக்கிறது. ஒரு வேளை நான் பார்த்த ஏவி.எம்.ராஜேஸ்வரி தியேட்டர் காரணமாய் இருக்கலாம். அதனால் ஒன்றுமே புரியவில்லை.ஒளிப்பதிவு ஓகே. திரும்ப திரும்ப, வீட்டை ஒரு ரவுண்ட் நாலைந்து எபெக்டுகளில் சுற்றி காட்டுவது முதலில் நன்றாக இருந்தாலும், சலிப்படைய வைக்கிறது. தோட்டா தரணியின் அந்த வீட்டு செட் அட்டகாசம்.
படத்தில் வரும் கஞ்சாகருப்பு காமெடிக் காட்சி படு மொக்கை. ஆனால் அவரை வைத்து கிருஸ்துவ பாதிரியார்கள் செய்யும் கில்மா வேலைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். முதல் பாதி அரைகுறையாய் ஏதோ ஒட்ட வைத்த காட்சிளுடனே நகர்ந்து எப்படா கதைக்கு வருவார்கள் என்று ஆகிவிடுகிறது.
இம்மாதிரியான கதைகளை செக்ஸுவலான காட்சிகள் இல்லாமல் பழைய மலையாள இயக்குனர்கள் பத்மராஜன், பரதன் போன்றவர்கள் மனித உணர்வுகளின் ஊடே கலந்து அதன் பிரச்சனைகளை கொண்டு படமெடுத்திருக்கிறார்கள்.
அதிகம் பேர் செக்ஸ் காமெடி, செக்ஸுவலான காட்சிகள், நடனங்கள் என்று வக்கிரத்தை படமாக்கி யூ சர்டிபிகேட்டில் படமெடுக்கும் நேரத்தில் தைரியமாய் யாரும் எடுக்க யோசிக்கும் கதைக்களனில் பயணித்து, சாதாரண படங்களில் வரும் க்ளிவேஜ் காட்சிகள் கூட இல்லாமல் மிக மன உணர்வுகளையும், அதன் பிரளயங்களையும், முக்கியமாய் சுந்தரி தன் மாமனாரிடம் ஈடுபாடு கொள்வதற்கான காட்சிகள் நிஜமாகவே நன்றாக படம்பிடித்திருக்கிறார். தொடர்ந்து இம்மாதிரியான கதைக் களன்களில் பயணிக்க இயக்குனருக்கு தைரியம் தான்.
தினமும் தினசரிகளில் நாம் பார்க்கிற கள்ளக்காதலுக்காக மகனையும், கணவனையும், கொல்லும் பெண்களை பற்றியும், மகளையும், மனைவியையும் கொல்லும் ஆண்களை பற்றியும் வருகிற, மற்றும் முறை தவறுகிற உறவுகளை பற்றியும் நாம் படிக்கும், நடக்கும் விஷயங்களை தான்
நிச்சயம் வருகிற வாரங்களுக்கு மீண்டும் சொல்கிறேன் இப்படம் எல்லோருக்கும் அவலாய் மாறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தர போகிறார்கள். பதிவர்களும், பத்திரிக்கையாளர்களும், இதை ஆதரித்தும், எதிர்த்தும், போராட்டங்கள் நடக்கப் போகிறது. இதனால் நிச்சயம் இப்படம் தயாரித்தவர்களுக்கு லாபம் தான். இதை ஆதரிக்ககூடாது என்று நினைக்கும் நண்பர்கள், கலாச்சார காவலர்கள் எல்லோரும் தயவு செய்து புறக்கணீக்க வேண்டுமென்றால் இதை பற்றி யாரும் பேசாமல், எழுதாமல் இருந்தால் தான் நல்லது. இந்த விமர்சனத்தை எழுதியதற்காக என்னையும் சேர்த்து வக்கிரம் பிடித்தவன் என்று திட்டுபவர்களுக்கு தயவு செய்து முதல் பாராவை படித்துவிட்டு செல்லவும்.
சிந்து சமவெளி – நிச்சயமாய் 18+ மற்றும் முதிர்ச்சியடைந்த மனநிலை உள்ளவர்களுக்கு மட்டும்.
கேபிள் சங்கர்