ரெண்டு மூன்று வருடமிருக்கும் குல தெய்வ கோயில் ஊரான கும்பகோணத்துக்கு போய். ரெண்டு வருடம் முன்பு போகவேண்டுமென்று ப்ளான் செய்த போது போக முடியவில்லை. அதற்குபிறகு அப்பாவின் மறைவினால் போகக் கூடதென்று சொன்னதால் இந்த வருடப் பயணம். குழந்தைகளின் விடுமுறையை முன்னிட்டு திடீரென கிளம்ப ப்ளான் செய்தாகிவிட்டது.
என் நண்பர்களின் புத்தக வெளியீட்டை மிஸ் செய்துவிட்டு போக வேண்டிய கட்டாயம். அன்றே என் புத்தக விமர்சனமும் கூட நிகழ்ந்தது. வேறு வழியில்லை. விழாக்களும், விமர்சனக் கூட்டமும் சிறப்பாக நடைப் பெற்றது என்றார்கள். பங்கு கொண்டு சிறப்பித்த நண்பர்கள், பதிவர்கள், வாசகர்களுக்கு மிக்க நன்றி.
நெடுந்தூர கார் பயணம் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் திண்டிவனம் ரோட்டில் போவதென்றால் அது ஒருவிதமான எக்ஸ்டஸி என்று கூட சொல்லலாம். மிதமான 80-100ல் அந்த நாற்கர சாலையில் இடதும் வலதுமாய் வேகம் குறைக்காமல் செல்வது மிகவும் உற்சாகத்தை தரும் விஷயம். காலை ஏழு மணிக்கு கிளம்பினேன். நடுவில் சேத்தியாத்தோப்பு போகும் வரை சுமார் 20 கி.மீட்டர் ரோடு அவ்வளவு நன்றாக இல்லை. சாப்பாடு, இயற்கை இம்சை, பையன்களின் அதை வாங்கு, இதை வாங்கு என்ற எல்லாவற்றையும் மீறி ஒரு மணிக்கு கும்பகோணம் போயாயிற்று. வழியெங்கு நீர் நிலைகளில் ஏகப்பட்ட தண்ணீர். மழை 21 நாட்கள் வெளுத்து வாங்கியிருக்கிறது. இதற்கு நடுவில் கும்பகோணம் வருவதை பற்றிய நான் பதிவில் எழுந்தியிருந்ததை பார்த்து அபி அப்பா வரும் போது மாயவரம் வழியா வாங்க.. நம்ம வீட்டுக்கு ஒரு நடை என்று அழைப்பு விடுத்தார். பிரபல பதிவர் ஜோசப் வேறு தஞ்சாவூர் வர வேண்டும் என்று கேட்டுக் கொள்ள எல்லாருக்கும் டைமிருந்தால் வருகிறேன் என்று சொல்லிவிட்டு கும்பகோணத்துக்குள் நுழைந்தால் ஒரே மூச்சடைத்து போயிருந்தது அந்த குட்டி ஊர்.
இருக்கிற குட்டி குட்டி ஓட்டலெல்லாம் ஃபுல். க்யூ, ஒரு ஹோட்டலில் கூட ரூமில்லை. எங்கு பார்த்தாலும் கார்கள், வேன்கள், சாதாரண ஓட்டலில் கூட ரூம் வாடகை 1000த்துக்கு மேல். ஒரு சில ஓட்டல்களில் முன்றாவது மாடியில் உள்ள ஓட்டலில் வேலை செய்யும் ஆட்களுக்கான ரூம்களையெல்லாம் வாடகைக்கு விட ஆரம்பித்துவிட்டார்கள். அவ்வளவு கூட்டம். வெக்கேஷன் சார்.. அதான் ஒரு பத்து நாளைக்கு அப்புறம் பழைய படிதான் என்றார் ஒரு ஹோட்டல் காரர். மாமி மெஸ்ஸில் ஒன்பது மணிக்கே கடை மூடிவிட்டார்கள். பக்கத்தில் வெங்கட்ரமணா என்று ஒரு கடை புதிதாய் ரெஸ்டாரண்டும், லாட்ஜிங்கும் திறந்திருக்கிறார்கள். சைக்கிள் கூட நிறுத்தி வைக்க வசதியில்லாத எடத்தில் எப்படி ஹோட்டல் கட்ட அனுமதித்திருக்கிறார்கள் என்றே புரியவில்லை. அங்கும் செம கும்பல். ஒரு வழியாய் பெரிய தெரு கே.வி.ஆரில் இரண்டு சிங்கிள் ரூம் கிடைத்தது. கும்பகோணம் முழுவதும் எல்லா கோவில் சுவர்களிலும் நோட்டீஸ், போஸ்டர்கள். கும்பேஸ்வரர் கோயில் சுவற்றில் கொஞ்சம் அதிகமே. ஒட்டுபவர்களை போலீஸ் வசம் ஒப்படைக்கபப்டுவார்கள் என்று போட்டிருந்தார்கள். போஸ்டர் ஒட்டியிருந்த திமுக, அதிமுக,காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் எல்லாரையும் யார் போலீஸிடம் ஒப்படைப்பார்கள்?. அவர்களுக்கு தெரிய வேண்டும் அவர்கள் ஊரின் தொன்மையை பற்றி. அமெரிக்காவில் ஒரு மாநிலம் இருக்கென்று சொல்வார்கள் பெயர் மறந்துவிட்டது. பழம் பெரும் நகரமான அவ்வூரை இன்றளவில் அதன் தொன்மை கெடாமல் பாதுகாத்து வருகிறாகளாம். ஒரு போன் கனெக்ஷன், போஸ்ட் போடுவது போன்ற ஒவ்வொரு விஷயத்துக்கு யோசித்துதான் செய்வார்களாம். அவ்வளவு வேண்டாம் கோயில் சுவற்றையாவது விட்டு வைக்கலாம் இல்லையா..?
ஒரு தூக்கத்தை போட்டுவிட்டு நான்கு மணிக்காய் சுவாமிமலை வந்தோம். அருமையான அபிஷேக தரிசனம். பெரியவனை விட சின்னவனுக்கு படு உற்சாகம். அங்கிருந்த யானையை பார்த்து. பத்து ஒரு ரூபாய்க்கு யானையின் ஆசிர்வாதம். பழம், தேங்காய் கொடுத்தால் கிடையாது. அது சரி.. யானைக்கா பசி.
போன முறை சிறியவனுக்கு மொட்டை போடும் போது யானை கிட்டவே போக பயந்தவனுக்கு ஆச்சர்யமாயிருக்க, “டேய்.. அந்த யானை பக்கத்தில உக்காந்திருக்கிறாரே அந்த அங்கிள்.. கம்பால தும்பிக்கையா தொட்டாத்தான் யானை ஆசீர்வாதம் செய்யும் என்று ஆசிர்வாதத்தின் மீதான ஆச்சர்யம் விலகி யானை மீது மட்டுமான ஆர்வத்துடன் பெரியவன். அடுத்து ஒரு வாரிசு உருவாகிவிட்டது. அங்கேயே உட்கார்ந்து கோயில் பிரசாதத்தை வாங்கி சாப்பிடுவது எனக்கு மிகவும் பிடிக்கும் சக்கரைப் பொங்கல் தவிர ஏதுமில்லாததால் வாங்கினேன். ஸ்பூனில் கொடுத்துவிட்டு ஐந்து ரூபாய் என்றார்கள். சாயங்காலக் கொள்ளை. முருகன் கண்ணை குத்துவார். அப்பா எப்பவும் அப்படித்தான் ஒவ்வொரு முறை வரும் போது அந்த அந்த கோயில் பிரசாதங்களை கோயிலில் வாங்கி சாப்பிட்டுவிட்டுத்தான் கிளம்புவார். அடுத்த வாரிசு.. பாலோயிங்..
அங்கிருந்து திருக்கருக்காவூர். பாபநாசம் வழியாக போய் அங்கே போய் சேர்ந்த போது மார்கழி குளிரும், காற்றும் சில்லென அடிக்க இருட்டியிருந்தது. எட்டு மணிக்கு நடை சாத்திவிடுவார்கள் என்றார்கள். வழி கேட்க நின்ற இடத்தில் பூ விற்றுக் கொண்டிருந்த கிழவி. வழி சொல்லிவிட்டு உள்ளார கடை ஏதும் கிடையாது இங்கயே வாங்கிட்டு போயிருங்க. என்று அர்சனை தட்டுகளையும், மாலைகளையும் தர, வாங்கிக் கொண்டு கோயிலை அடைந்த போது வாசலில் பத்து கடைகள். ட்யூப்லைட் வெளிச்சத்தில் மின்னியது. கிழவியின் புத்தி சாதுர்யம் என்பதா? அல்லது திருட்டுத்தனம் என்பதா?. மிக அருமையான தரிசனம். வந்திருந்த எல்லாருக்கும் இவ்வூரை பற்றிய விஷேசத்தோடு விளக்கி சொல்லிக் கொண்டிருந்தார் அர்ச்சகர்.
ரொம்ப நாள் குழந்தையில்லாமல் இருக்கும் தம்பதிகளுக்கு அங்கு பூஜித்து மந்திரிக்கப்பட்ட நெய்யும், எண்ணெய்யும் தருகிறார்கள். அதை 41 நாள் கணவனும், மனைவியும் தினமும் உள்ளுக்குள் ப்ரீயட் நாட்களை தவிர உட்கொண்டால் நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்குமென்பது நம்பிக்கை. அது மட்டுமில்லாமல் நல்ல படியாய் குழந்தை பிறக்க, பிறந்த குழந்தைக்கு பால் சுரக்க என்று பல நம்பிக்கைகள். கண்களில் ஒரு வித சோகத்தொடு வந்திருந்த தம்பதிகளையும், கர்பிணிகளையும், அம்மன் சந்நிதியில் அவளின் ஆசியால் பிறந்த குழந்தைகளை தொட்டிலிட நேரம் கேட்டும் நிற்கும் பெற்றோர்கள். அமெரிக்காவிலோ, ஐரோப்பவிலோ வாழும் தங்கள் குழந்தைகளுக்கு ஒரு குழந்தை பிறக்க, அவர்கள் சார்பாய் வந்து நெய்யும் எண்ணெய்யும் வாங்கிப் கொரியரில் அனுப்பப் போகும் பெரியவர்கள். என்று ஒரு விதமான உணர்ச்சி களவையாக இருந்தது அக்கோயில். என் முதல் மகன் ஒரு அவசரக்காரன். ஏழரை மாதத்தில் பிறந்தவன். அவனின் பிறப்புக்காக வேண்டிக் கொண்டு போக தள்ளிப் போட்டுக் கொண்டுவந்த விஷயம் இம்முறை நிறைவேறியது. சக்தியின் நிதர்சனம்.
நண்பர் வாசகர் முத்து பாலகிருஷ்ணனும் தூத்துக்குடியிலிருந்து கும்பகோணம் வந்திருந்தார். என் பதிவை மொபைலில் பார்த்துவிட்டு போன் செய்தார். முடிந்தால் சந்திப்போம் என்றேன். முடியவில்லை. சாரி நண்பரே..
காலையில் குலதெய்வக் கோவிலில் அபிஷேகம் ஆராதனை என்று எல்லாம் அவள் அருளில் சிறப்பாக நடந்தது. மனதில் ஒரு பெரிய நம்பிககை வந்தது. அடுத்த சில மாதங்களுக்கான எனர்ஜியை பெற்றுக் கொண்டது போலிருந்தது. பூசாரி… சில விஷயங்களை கோவிலுக்கு செய்ய வேண்டுமென்றார். நிச்சயம் செய்வோம் என்ற போது என் தாத்தா, அப்பாவோடு போய் வந்த போது இலலாத ஒரு உணர்வு இப்போது வேறு மாதிரியாய் இருந்தது. என் மகன்களிடம் கோவிலை பற்றிச் சொல்லும் போது. கடவுளுக்கும் நமக்குமான நெருக்கம் அதிகமானது போலிருந்தது. பொறுப்பு அதிகமானது போலிருந்தது. என் அடுத்த தலைமுறைக்கான செய்தி கடத்த வேண்டிய கடமை தெரிந்தது. பெரியவன் சர்வேஷிடம் பேசும்போது ஏனோ என் குரல் அப்பாவின் குரல் போலிருந்தது. நிச்சயம் அவள் அருளில் அவளின் கோயிலுக்கு ஏதாவது செய்ய வேண்டும். அது அவள் கையில் தான் இருக்கிறது.
காலையிலேயே விசேஷம் எல்லாம் முடிந்ததால் ஜோசப்பை சென்னையில் பார்பதாய் சொல்லிவிட்டு, மாயவரத்தில் அபி அப்பாவை சந்தித்தோம். ஒல்லியாக நாகேஷ் போலிருந்தார். அபியை பார்த்தேன். அமைதியான பெண். அபி அப்பா, அவரது தம்பி செளம்யன் ஆகியோருடன் ஒரு அருமையான அரட்டைக் கச்சேரி எல்லாம் முடித்து கிளம்பினேன். அபி அப்பா, செளம்யன் நிச்சயம் இன்னொரு மீட் போடுவோம். செம இண்ட்ரஸ்டிங் அரட்டை. கிளம்பும் போது உங்க ஊர்ல யாராவது சினிமா அர்வமுள்ள தயாரிப்பாளர் இருந்தா சொல்லுங்க என்று சொல்லிவிட்டு வந்தேன். செளம்யனிடம் ஒரு ஒளி தெரிந்தது. திருபுவனம் வருகையில் சரியாய் ஒரு போன் அபிஅப்பாதான். “தலைவரே.. இவ்வளவு தூரம் வர்றீங்க.. நீங்க இப்ப சரியா திருபுவனத்திலதான் இருப்பீங்க.. அங்க சரபேஸ்வரர் ரொம்ப பிரஸித்தம். இவரை பார்த்துட்டா எல்லாமே ஓக்கே.. உடனே ஒரு நட போயிட்டு வந்துருங்க” என்று போன் அடித்தார். நான் அவர் போனை அட்டெண்ட் செய்ய காரை நிறுத்திய இடம் சரபேஸ்வரர் கோயிலுக்கு திரும்பு அந்த ரோட்டின் முனையில். எல்லாம் அவன் செயல்.
மாயவரம், சிதம்பரம், நன்னிலம் என்று வளைந்து, வளைந்து செல்லும் சாலையின் வழியாய் வரும்போது தஞ்சை மண்ணின் பசுமை தெரிந்தது. ஊரெங்கும் கிடைக்கும் பவண்டோவின் ஆதிக்கம் சந்தோஷம் கொடுத்தது. எல்லாவிடங்களிலும் இலவசத் தொலைக்காட்சி சரியாக ரீச் ஆகியிருக்கிறது. ரோட்டோர எல்லாக் கடைகளில் தொலைக்காட்சிபெட்டி ட்ரான்ஸிஸ்டரை ரீப்ளேஸ் செய்திருந்தது. மழை மாவட்டத்தின் வளர்ச்சியை மூழ்கடித்திருக்கிறது. மக்கள் அரசிடம் அதிகம் எதிர்பார்க்கிறார்கள் நிவாரணமாக.
வழியில் பாண்டி வந்து மதர் செண்டரை அடைந்து அங்கு ஒரு விசிட் முடிந்ததும், அங்கிருந்து திண்டிவனம் ரோடு பிடித்து சென்னைகான பயணம் சந்தோஷமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஒரு மணி நேரம் வரை. அதற்கு பிறகு கொடுமையான ட்ராபிக் ஜாம். விடுதலை சிறுத்தைகளில் தமிழுணர்வு இயக்க கூட்டமாம் மறைமலைநகரில். எங்கு பார்த்தாலும் குடித்துவிட்டு நடு ரோட்டில் ஆடிக் கொண்டிருக்கும் தோழர்களும், பக்கத்து வண்டியில் இருக்கும் பெண்களை பார்த்ததும் எக்ஸ்ட்ராவாக அட்ரிலின் ஏறி அசிங்க வார்த்தைகளின் ஆர்பரிப்பும், அவர்கள் வண்டியை யார் முந்த முயற்சித்தாலும் அதிரடியாய் உள்நுழைந்து பதற வைப்பதுமாய் வந்தது. மிக அருமையான பயணமாய் ஆரம்பித்து மிகக் கொடுமையான பயணமாய் அமைவதந்தற்கான காரணம் திருமாவளவனார். அரசு இம்மாதிரியான விஷயங்களுக்கு முன்னெச்செரிக்கையாய் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டாமா?. பல இடங்களில் போலீஸ் ஆளுங்கட்சி ஆதரவு என்பதற்காக எதுவும் செய்யாமல் இருந்தது அவர்களின் ஆட்டத்தை அதிகப்படுத்தியது. எந்த ஒரு காரணத்துக்காக நிற்கிறோம் என்று தெரியாமல் மணிக்கணக்கால் நிற்பது போன்ற கொடுமையை அனுபவித்தால்தான் தெரியும். பாண்டியிலிருந்து சென்னை வர.. ஆறு மணி நேரம் ஆனது.
Post a Comment
52 comments:
Nice one.
Ananth
Chicago
மாறுபட்ட (அனுபவ) பதிவு நல்லா இருக்கு சார்.
அருமையான பகிர்வு சங்கர். எனக்கு மிகவும் பிடித்த ஊர்களில் ஒன்று கும்பகோனம், திருகருகாவூருக்கு இன்னமும் ஆற்றை மரப்பாலத்தில கடந்து தான் போக வேண்டி இருக்கிறதா?
Thirumavalavan ithai gavanipparaga..ennoda nanbanum netru thiruvannamalai lirunth varumbothu maatikondaan..Sendhil
//மாயவரம், சிதம்பரம், நன்னிலம் என்று வளைந்து, வளைந்து செல்லும் சாலையின் வழியாய் வரும்போது தஞ்சை மண்ணின் பசுமை தெரிந்தது.//
அடிங்க! மாயவரம், சிதம்பரம் ரோட்டில் எங்கிருந்து நன்னிலம் வந்துச்சு? அங்க எப்ப தஞ்சாவூர் வந்துச்சு....
yoov..ஒரு பேச்சுக்கு தஞ்சை மண் என்று சொன்னேன்.. வர்ற வழியில ஒரு நன்னிலம்னு ஒரு சிறு ஊர் வந்திச்சு.. இதையாராவது கேட்பீங்கனுதான் வெயிட் பண்ணேன். ஹி..ஹி.
தங்களின் கும்பகோணம் விஜயத்தின் போது நான் ஊரியில் இல்லை. இருந்திருந்தால் சந்தித்திருக்கலாம்.
=இஸ்மாயில் கனி
கும்பகோண வாசி
(தற்சமயம் சவுதியில்)
http://kaniraja.blogspot.com
//நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்குமென்பது நம்பிக்கை//
புக்கு மேல புக்கு ரிலீஸ் செய்யும் கேபிளின் அடுத்த ரிலீஸ்க்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள். உங்கள் பிராத்தனை பலிக்கட்டும் பாஸ்!
//yoov..ஒரு பேச்சுக்கு தஞ்சை மண் என்று சொன்னேன்..//
உட்டா சென்னை மண் என்றும் சொல்வீங்க போல...நன்னிலம் எங்க இருக்கு? தஞ்சாவூர் எங்க இருக்கு? பேச்சுக்கு சொன்னாராம் பேச்சுக்கு. தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து நாங்க பிரிஞ்சு ஒரு மாமாங்கம் ஆச்சு...இப்ப நாங்க திருவாரூர் மாவட்டம் பாஸ்ஸ்ஸ்ஸ்!
//தங்களின் கும்பகோணம் விஜயத்தின் போது //
என்ன ஒய்ய்ய்ய் உங்களை லேகியம் விக்கும் டாக்டர் ரேஞ்சுக்கு கொண்டுவந்துட்டாரு...நம்ம இஸ்மாயில்!
//=இஸ்மாயில் கனி
கும்பகோண வாசி
//
மேலக்காவேரியா பாஸ்???
குசும்பன் சார், ஆமாம் மேலக்காவேரி தான்.
=இஸ்மாயில் கனி
நிச்சயமாக 2011 ல் நீங்க படங்கள்(ஒன்றுக்கு மேற்பட்ட)பண்றிங்க ஜி.என் உறவினர் ஒருவர் புதிதாக பட விநியோகத்தில் இறங்கியுள்ளார்.விருத்தகிரி விழுப்புரம் மாவட்ட உரிமை அவர்தான் வாங்கியுள்ளார் அவரிடம் உங்களை பற்றி கூறினேன் பாக்கலாம் என கூறியுள்ளார் ஜி.காத்திருப்போம் நபிக்கையோடு.
// கிழவியின் புத்தி சாதுர்யம் என்பதா? அல்லது திருட்டுத்தனம் என்பதா?//
உங்களின் ஏமாளித்தனம்ன்ன்னு கூட சொல்லலாம் :)
எந்திரன் படம் நன்றாக உள்ளதுன்னு எழுதினவன் தான நீ... அப்ப இந்த கஷ்டத்த படத்தான் வேணும்....
குசும்பரே! நீரு திருவாரூரா இல்ல பக்கத்துலயா? நான் வேதாரண்யத்தான் (பக்கத்துல கிராமம்)
அருமையான பகிர்வு.
wonderful comment...... am your big fan cable ji
பயணங்களும் புத்தகங்களும் மட்டுமே மனிதனை பண்படுத்தும் . தங்களின் பயண அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
தலைவா !
\\விடுதலை சிறுத்தைகளில் தமிழுணர்வு இயக்க கூட்டமாம் மறைமலைநகரில். எங்கு பார்த்தாலும் குடித்துவிட்டு நடு ரோட்டில் ஆடிக் கொண்டிருக்கும் தோழர்களும், பக்கத்து வண்டியில் இருக்கும் பெண்களை பார்த்ததும் எக்ஸ்ட்ராவாக அட்ரிலின் ஏறி அசிங்க வார்த்தைகளின் ஆர்பரிப்பும், அவர்கள் வண்டியை யார் முந்த முயற்சித்தாலும் அதிரடியாய் உள்நுழைந்து பதற வைப்பதுமாய் வந்தது. மிக அருமையான பயணமாய் ஆரம்பித்து மிகக் கொடுமையான பயணமாய் அமைவதந்தற்கான காரணம் திருமாவளவனார்.//
இந்த லட்சணத்துல 2011 வி.சி. ஆண்டாம்.. அந்த புண்ணியவான்களே சொல்லிக்கொள்கிறார்கள். நம்மள அந்த ஆண்டவன் தான் காப்பாத்தனும்.
@குசும்பன்,
பழைய தஞ்சை மாவட்டம் இப்ப நாகை, திருவாரூர்னு தனி மாவட்டங்களா இருந்தாலும் இப்பவும் அத தஞ்சை மண்ணுன்னு தான் சொல்லுவாங்க.
அப்டி தான் சொல்லனும்.
நாமல்லாம் ஒரு ஊருகாரனுங்கடே.
Boss athu //திருமையத்திலதா// I think that is thirubhuvanam
not thirumayam
\\மாமி மெஸ்ஸில் ஒன்பது மணிக்கே கடை மூடிவிட்டார்கள். பக்கத்தில் வெங்கட்ரமணா என்று ஒரு கடை புதிதாய் ரெஸ்டாரண்டும், லாட்ஜிங்கும் திறந்திருக்கிறார்கள். \\
வெங்கட்ரமணா ரொம்ப வருஷமா இருக்கு.
காந்தி பார்க் பக்கத்துல இருக்கிற வெங்கட்ரமணாதானே நீங்க சொல்றது? வேற ஏதாவது புதுசா வந்திருக்கா?
illai thalaivaree.. ithu pudhusu.. avangale sonnaanga..
big street endla..
i think you got Good Experience. good .
பழைய ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் இப்போது மூன்றாக பிரிக்கப்பட்டாலும் நாங்கள் எப்போதும் தஞ்சாவூர்க்காரர்கள்தாம்...
சும்மா வழுக்கிக் கொண்டு ஓடும் நடை ஜி! (மழை காரணமாக இருக்கலாம் என்பார் குசும்பன் வந்து.)
மொத்த இடுகையும் superb!
அருமையான பதிவு..அதுசரி, வேரைத் தேடிப் போனீங்களே, கடைசிவரைக்கும் வேர் கிடச்சுதா இல்லையான்னு சொல்லவேயில்லையே..இது நியாயமா கேபிள்ஜி?
// வர்ற வழியில ஒரு நன்னிலம்னு ஒரு சிறு ஊர் வந்திச்சு..//
நன்னிலம் சின்ன ஊருதான். ஆனால் நீங்கள் செல்லும் வழியில் நன்னிலம் வராது. நான் தற்போது நன்னிலத்தில் தான் இருக்கிறேன். மேலும் திருக்கருக்காவூர் போன்று கும்பகோணம் மருதநல்லூர் அருகில் கருவளர்சேரி என்று ஒரு கோயில் உள்ளது.
குசும்பன் நீங்கள் எந்த ஊர் ? நன்னிலம் பகுதியில் தற்போது இருந்து பதிவு இடுபவராக இருந்தால் எனக்கு கட்டாயம் மெயில் அனுப்பவும்.
//விந்தைமனிதன : குசும்பரே! நீரு திருவாரூரா இல்ல பக்கத்துலயா? நான் வேதாரண்யத்தான் (பக்கத்துல கிராமம்)//
நீங்கள் ஆயகரன்புலமா ?
மிக உயர்வான பதிவு
வேற(ர) எதையோ தேடி போயிருந்தீங்களோன்னு நினைச்சேன்
//குசும்பன் said...
//நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்குமென்பது நம்பிக்கை//
புக்கு மேல புக்கு ரிலீஸ் செய்யும் கேபிளின் அடுத்த ரிலீஸ்க்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள். உங்கள் பிராத்தனை பலிக்கட்டும் பாஸ்!//
ஒரு பெரிய ரிப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு
//குசும்பன் said...
//நிச்சயம் குழந்தை பாக்கியம் கிடைக்குமென்பது நம்பிக்கை//
புக்கு மேல புக்கு ரிலீஸ் செய்யும் கேபிளின் அடுத்த ரிலீஸ்க்கு அட்வான்ஸ் வாழ்த்துக்கள். உங்கள் பிராத்தனை பலிக்கட்டும் பாஸ்!//
ஒரு பெரிய ரிப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்பீட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு
@மன்னார் & கம்பெனி
//நீங்கள் ஆயகரன்புலமா ? //
பக்கத்துல பஞ்சநதிக்குளம்... சின்ன வயசுல நாலாங்கிளாஸ் வரை வளந்தது ஆயக்காரன்புலம் நாலாம்சேத்தி. ஹையர் செகண்டரி ஆயக்காரன்புலம் ஸ்கூல்ல...
ஆமா...நீங்க?
// எங்கு பார்த்தாலும் குடித்துவிட்டு நடு ரோட்டில் ஆடிக் கொண்டிருக்கும் தோழர்களும், பக்கத்து வண்டியில் இருக்கும் பெண்களை பார்த்ததும் எக்ஸ்ட்ராவாக அட்ரிலின் ஏறி அசிங்க வார்த்தைகளின் ஆர்பரிப்பும், அவர்கள் வண்டியை யார் முந்த முயற்சித்தாலும் அதிரடியாய் உள்நுழைந்து பதற வைப்பதுமாய் வந்தது. மிக அருமையான பயணமாய் ஆரம்பித்து மிகக் கொடுமையான பயணமாய் அமைவதந்தற்கான காரணம் திருமாவளவனார்.//
அவங்க தலைவர் தொல்.திருமா அடங்கமறு அத்துமீறுன்னு சொல்ற ஸ்லோகனுக்கு இதுதான் அர்த்தம் போலிருக்கு... கேட்கிறதுக்கு ஆள் இல்லாம போச்சு...
தல.. பை தி வே.. நானும் கும்பகோணம்தான்...
பெரியத்தெரு கடைசில காந்திபார்க் எதிரே இருக்கும் வெங்கட்ரமணா? அது பழைய ஹோட்டல். வெண் பொங்கலும்(முந்திரிபருப்பு இருக்கும்),காபியும் அமிர்தம் போல இருக்குமே. அந்த ஹோட்டல் எதிரே இருக்கும் டவுண் ஹைஸ்கூலில்தான் நான் படித்தேன் தலைவரே... :)
கும்பகோணம் to சாக்கோட்டை, வலங்கைமான், மன்னார்குடி நாகபட்டிணம் போற வழில நன்னிலம் இருக்கு.
திருவாரூர் மாயவரம் வழில இருக்குய்யா அந்த நல்ல நிலம்!
கேபிளார் வேரைத்தேடி-ன்னு ஒரு பதிவ போட்டாலும் போட்டார், கும்பகோணத்தை சுற்றி உள்ள அத்துனை பதிவரும் உங்க ROOT-ஐ போட்டு தாக்குறீங்களே, பின்னூட்டம் வேரைத்தாண்டி...அருமை
நேத்து முதல் பின்னூட்டம் போடனும்னு இருந்து இப்ப தான் முடிஞ்சுது கேபிள்ஜி!
ஒரு அருமையான குடும்ப சந்திப்பு. பசங்க ரொம்ப என்ஜாய் பண்ணினாங்க. இன்னும் ஒரு இரண்டு மணி நேரம் இருந்துட்டு போயிருக்கலாமோன்னு நீங்க போன பின்னே வீடே வெறுமையாக இருந்தது. அடுத்த முறை கண்டிப்பா வாங்க. நிறைய பேசலாம். அருமையான விவரன கட்டுரை!
//கும்பகோணம் to சாக்கோட்டை, வலங்கைமான், மன்னார்குடி நாகபட்டிணம் போற வழில நன்னிலம் இருக்கு.//
//கேபிளார் வேரைத்தேடி-ன்னு ஒரு பதிவ போட்டாலும் போட்டார், கும்பகோணத்தை சுற்றி உள்ள அத்துனை பதிவரும் உங்க ROOT-ஐ போட்டு தாக்குறீங்களே, பின்னூட்டம் வேரைத்தாண்டி...அருமை //
யாரும் நம்ம ப்ளாக் பார்த்து பயணம் கிளம்பிவிடதீர்கள். கடைசியில் இலங்கையில் தான் போய் நிற்கிறமாதிரி இருக்கும். நன்னிலம் exact ரூட் கும்பகோணம் - நாச்சியார்கோயில் - மாத்தூர் (turn left ) perapadi - வாழ்க்கை - நன்னிலம்
another ரூட் மாயவரம் - பேரளம் - பூந்தோட்டம் - சன்னாநல்லூர்- நன்னிலம்
இனிமேல் எந்த ஊர் போய் வந்தாலும் ரூட்ட சொல்லுவாரா, பார்போம்
@விந்தைமனிதன்
//பக்கத்துல பஞ்சநதிக்குளம்... சின்ன வயசுல நாலாங்கிளாஸ் வரை வளந்தது ஆயக்காரன்புலம் நாலாம்சேத்தி. ஹையர் செகண்டரி ஆயக்காரன்புலம் ஸ்கூல்ல...
ஆமா...நீங்க? //
நான் வேதாரணியம் கிரேட் higher secondary ஸ்கூல். இப்போது நீங்கள் பஞ்சநதிகுளம் பகுதியில் இல்லை என்று நினைக்கிறன்.
>>நன்னிலம் exact ரூட் கும்பகோணம் - நாச்சியார்கோயில் - மாத்தூர் (turn left ) perapadi - வாழ்க்கை - நன்னிலம்
another ரூட் மாயவரம் - பேரளம் - பூந்தோட்டம் - சன்னாநல்லூர்- நன்னிலம் <<
--
வணக்கம்.
குடந்தைலிருந்து கிழக்கே ஸீரிகண்டபுரம், கொல்லுமாங்குடி, "பேரளம்", நன்னிலம் என்றும் போகலாமே, தற்போது இல்லையா..?
அரசலாறு கூடவே ஒடிவரும்.
@இஸ்மாயில் மேலக்காவேரியில் இருக்கும் நண்பர் ஜிர்ஜிஸ் வீட்டுக்கு அடிக்கடி வருவேன்(செல்வம் தியேட்டர் மேனேஜர் பையன்), நம்ம ஊரு குடவாசல்.
மன்னாரன்& கம்பெணி வுடாதீங்க போட்டு கும்முங்க.
//கும்பகோணம் to சாக்கோட்டை, வலங்கைமான், மன்னார்குடி நாகபட்டிணம் போற வழில நன்னிலம் இருக்கு. //
அடங்கொன்னியா இதுக்கு கேபிளே தேவலாம் போல இருக்கே!
ஆமாம் ஆமா டெல்லியில் இருந்து சென்னை போறவழியில் தான் கென்யா இருக்கு...
டெல்லி - இஸ்தான்புல்- மான்செஸ்டர்-கென்யா- சென்னை. இப்படி போறவழியில் கென்யா வந்துச்சா இல்லையா? ரைட்டு வுடு!:)))
உங்கள் travel பதிவுக்கு நன்றி
கொடுமையான return!?
Sir ,
Good post . when u reached Kumbakonam on that day ? no need sorry .
Tirunelveli .
மிகவும் அனுபவித்து எழுதி இருந்தீர்கள். உங்க கூட நானும் காரில் உக்காந்து வந்தது போல இருந்தது.
//
என் அடுத்த தலைமுறைக்கான செய்தி கடத்த வேண்டிய கடமை தெரிந்தது. பெரியவன் சர்வேஷிடம் பேசும்போது ஏனோ என் குரல் அப்பாவின் குரல் போலிருந்தது.
//
நெகிழ்ச்சியான வரிகள்.....
Post a Comment