Thottal Thodarum

Jan 30, 2011

நண்பனின்….

அன்புள்ள நண்பர் சங்கருக்கு..
உங்களின் கதைகளைப் படித்தேன். “மீண்டும் ஒரு காதல் கதை”யைப் படித்து முடித்தவுடன், மீண்டும் ஒரு முறை படிக்க தூண்டியது. மறுபடியும் படித்தேன். ‘ஷ்ரத்தா” கேரக்டர் அப்படியே என் மனதில் பதிந்துவிட்டது. சுஜாதாவின்”பிரிவோம்..சந்திப்போம்’ நாயகி மதுமிதா எவ்வளவு தூரம் மனதை பாதித்தாளோ.. அதே அளவு ஷ்ரத்தாவும் என் மனதை பாதித்துவிட்டாள். இப்படிஒருத்தியை வாழ்வில் சந்திக்க மாட்டோமா? என்ற ஏக்கம் வயதையும் மறந்து வருகிறது. (அப்படியொன்றும் வயதாகிவிடவில்லையே.. “நாமெல்லாம் இளைஞர்கள் தானே..”).

உங்களிடமுள்ள எழுதும் திறமையைப் பார்த்து பெருமையாகவும் வியப்பாகவும் இருக்கிறது. கண்முன்னே காட்சிகள் சினிமாவைப் போல ஓடுகிறது.  விறுவிறுப்பான காட்சிகளின் வேகமும், காதல் காட்சிகளில் கிறக்கமும் (சாண்டில்யன் கதைகளைப் போல), விவாதக் காட்சிகளில் பரபரப்பும் ஆங்காங்கே உங்கள் குசும்புகளும் (அடங்கவே முடியாதா.. நிச்சயமாய் நீங்கள் நினைப்பதில்லை, அவளுடய சுருள் முடியை). ஏன் சார்.. இவ்வளவு காலமாய் எங்கே மறைத்து வைத்திருந்தீர்கள் இத்தனை திறமைகளை?.

சினிமா, சீரியலில் நடிக்க, நாம் வாய்ப்பு தேடி அலைந்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன், தினமும் ஏவிஎம், அல்லதுபிரசாத் ஸ்டுடியோவில் சந்தித்து, அங்கிருந்து ஒவ்வொரு கம்பெனியாய் ஏறி இறங்குவோம். அப்போது போகும் இடங்களில் சற்று தெனாவெட்டாக நடந்து கொள்வீர்கள். நான் உங்களிடம் “சார்.. நாம வாய்ப்பு கேட்டு போகிறோம்.கொஞ்சம் தன்மையாக பணிவாக நடந்து கொள்ளுங்கள்” என்று சொன்னேன்.  சினிமா பாணியில் சொல்வதானால் கட் செய்தால் அடுத்து ஒரு கம்பெனிக்கு சென்ற போது, நாமிருவரையும் டிஸ்கஷன் ரூமில் கூப்பிட்டு உட்காரச் சொன்னார்கள். உள்ளே இயக்குனர், உதவி இயக்குனர்கள் இருந்தார்கள். நான் அவர்கள் அமர்ந்திருந்த மெத்தையில் அமர்ந்தேன். ஆனால் நீங்கள் அவர்கள் எவ்வளவோ சொல்லியும் மெத்தையில் உட்காராமல் தரையில் உட்கார்ந்து “பணிவு போதுமா?” என்பது போல பார்த்தீர்கள். தமிழ் திரையுலகம் ஒரு நல்ல நடிகரை இழந்துவிட்டது. ஆனால் இலக்கிய உலகம் ஒரு சிறந்த எழுத்தாளரை பெற்றுவிட்டது.

சார். உங்கள் எந்திரன் கதையில் வருவததைப் போல நானும் படம் முடிந்த பின் போடும் டைட்டிலில் வரும் பெயர்களை காண ஆவலோடு இருப்பேன். டைட்டில் ஓட ஆரம்பித்ததும் ஆப்பரேட்டர்கள் ஆப் செய்துவிடுவார்கள். உங்கள் வலைப்பதிவை திரை உலகத்தினர் அதிகம் பேர் படிக்கிறார்கள் என்பதால், பெரிய இயக்குனர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

ஒரு படத்தை நல்ல விதமாக எடுத்து முடிக்க அதில் பணிபுரியும் அத்தனை பேருடய உழைப்பும் வியர்வையும் அடங்கியுள்ளது. அப்படியிருக்க கதாநாயகன், கதாநாயகி, இசையமைப்பாளர் ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் சிலரது பெயர்களை மட்டும் படத்தின் ஆரம்பத்தில் போட்டுவிட்டு துணை நடிகர்கள், காஸ்ட்யூமர்கள், மேக்கப்மேன், உதவியாளர்கள் போன்றோரின் பெயர்களை படம் முடிந்த பின் போடுவது எந்த விதத்தில் ஞாயம்? ஒரு இரண்டு நிமிடங்கள் அதிகமாக ஓடுமா? ஓடட்டுமே? அனைவரது உழைப்பிற்கும் அந்த சில நிமிட வெளிச்சம் தான் அங்கீகாரம்.

சரி சார்.. உங்கள் கதைக்கு வருவோம், உன் கூடவே வரும் கதையில் அந்த கிரிவல வர்ணனை, ரொம்ப பிரமாதம். திருவண்ணாமலை சென்று வந்த உணர்வு. அப்துல்லா, சிவா, டேனியல் கதையில் அந்த ஆக்சிடெண்ட் ஆவதற்கு முன்னால் காரின் வேகத்திற்கு இணையாக இருந்தது உங்களின் விவரிப்பு. சிவாவுக்காக காத்திருப்பது அப்துல்லாவுக்கு புதிதல்ல என்ற வரியை படிக்கும் போது உங்களுக்காக நான் வழக்கமாய் காத்திருப்பது நினைவுக்கு வந்தது.

“எண்டார்ஸ்மெண்ட்” கதையில் அரசு அலுவலகங்கலில் நடக்கும் அவலங்களை அப்படியே எழுதியுள்ளீர்கள். ‘முற்றுப்புள்ளி” பூஜாவின் தவிப்பும், தடுமாற்றமும், அவஸ்தையும், அந்த முடிவும்  அவர்கள் தவறு செய்தார்களா? இல்லையா என்று சொல்லாமல் படிப்பவர்கள் யூகத்திற்கு விட்டு விட்டது. அந்த முடிவைப் பற்றி விவாதத்துடனேயே அடுத்த சிறுகதையான “தனுக்கு கொண்டாலம்மா” ஆரம்பிப்பது அருமை. தனுக்கு கொண்டாலம்மா படித்து முடித்தவுடன் “அடடா பாவம்டா” என்று சொல்ல வைத்தது. இன்னொரு சிறப்பான விஷயம், உங்கள் கதைகளை படித்து முடித்தவுடன், உடனேயே கதையின் ஆரம்ப வரிகளை மறுபடியும் படிக்கத் தோன்றும். கதையின் ஆரம்பத்திற்கும் முடிவுக்கும் அப்படி ஒரு தொடர்பு இருக்கும்.இலக்கிய உலகில் இன்னும் பல உயரங்களை எட்டவும் விரைவில் திரைப்பட இயக்குனராகவும் என்னுடய மனப்பூர்வமான வாழ்த்துக்களும் பிராத்தனைகளும்.
அன்புடன்
உங்கள் நண்பன்
T.சிவக்குமார்
9444073046.
கேபிள் சங்கர்

Post a Comment

5 comments:

மாணவன் said...

உங்களின் எழுத்துப்பணி மென்மேலும் சிறக்கவும் விரைவில் திரைத்துறையில் சாதிக்கவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் சார்....

சக்தி கல்வி மையம் said...

திரைத்துறையில் சாதிக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் சார்....

'பரிவை' சே.குமார் said...

இன்னும் சாதிக்க வாழ்த்துக்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

சாதிக்க பிறந்தவன் நீ,
வானம் தொலைவில் இல்லை
இதோ அதி விரைவில்
வானம் உன் வசப்படும்...

Pradeesh said...

Dear Shankar,

Please write a post about #tnfisherman campaign happening in twitter by tamil twitters. I hope u & jacky can reach to worldwide tamil people and make awarness to the people to join in this protest.

@gpradeesh