பஸ் தினம்
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதங்களில் இந்த கோலாகலம் ஆரம்பித்துவிடும். முக்கியமாய் அரசு கல்லூரிகளில் இந்த கொண்டாட்டம் கட்டாயம். பெரும்பாலும் மார்ச்சில் ஆண்டுத் தேர்வு இருக்குமாதலால் இந்த கொண்டாட்டம் பிப்ரவரியில் ஆரம்பித்து கடைசியில் முடிந்துவிடும்.
சரி பஸ் தினமென்றால் என்ன? தினமும் ஒவ்வொரு ஏரியாக்களிலிருந்து காலேஜிக்கு வரும் மாணவர்களுக்கும், பஸ் டிரைவர், கண்டர்களுக்குமான உறவை மேம்படுத்த, மேலும் உறவை பலப்படுத்த இந்நாளில் கல்லூரி மாணவர்கள் ஒரு ரூட் பஸ்ஸை முழுசாய் எடுத்துக் கொண்டு, அந்த டிரைவர் கண்டக்டரோடு, ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் ஒரு ஊர்வலம் போவதுதான் இந்த தினத்தின் முக்கிய நிகழ்வாகும். பெரும்பாலும் இது சென்னையில் தான் அதிகம் நடக்கும். அதுவும் அரசுக் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் தான் இதில் மிகவும் ஆர்வம் காட்டுவார்கள். இந்த நாளைத் தவிர மற்ற நாட்களில் பஸ் டிரைவர், கண்டக்டருக்கும், மாணவர்களுக்கும் பங்காளி சண்டைகள் தான் அதிகம் என்றாலும் இந்த நாள் அன்று மட்டும் படு பயங்கரமாய் கொஞ்சிக் குலாவுவார்கள். அன்றைய தினத்தில் குவாட்டர் பாட்டிலகளோடு, பரிசளிப்புகளும் உண்டென்பதால் அவர்களும் அட்ஜெஸ்ட் செய்து கொண்டு போய்விடுவார்கள்.
ஆரம்ப காலத்தில் ஒரு சந்தோஷ உலாவாக வலம் வந்த இந்த தினம் பின் வரும் காலங்களில் ஒரு துன்ப உலாவாக மாறத் துவங்கியது. ஒரே பஸ்சில் கொள்ளவுக்கு இரண்டு மடங்கிற்கு மேல் கூரை மேலெல்லாம் உட்கார்ந்து கொண்டும், ஆடிக் கொண்டும் பாடிக் கொண்டும் அளவிற்கு அதிகமாய் உற்சாகத்துடன் செய்யும் நிகழ்வுகள் சோகத்தில் முடிவதுண்டு. ஒரு சமயம் பஸ்சின் கூரை மேலிருந்து பஸ் டிரைவர் அடித்த ப்ரேக்கில் கீழே விழுந்து அடிப்பட்டதாகவோ அல்லது மரணமடைந்ததாகவோ ஒரு நிகழ்வு நடந்திருக்கிறது. இப்படிப்பட்ட பஸ்தினங்களில் பெரும்பாலும் நடு ரோட்டில் கூட்டமாய் ஓடிக் கொண்டோ, அல்லது பஸ்ஸின் கம்பிகளில் தொங்கிக்கொண்டோ, பஸ்ஸ்டாண்டில் நிற்கும் பெண்களை கிண்டல் செய்வது, மயிர்கூச்செறியும் வகையில் திடீரென கத்துவது என்று இவர்களின் ஆர்ப்பட்டம் அதிகமாக சில சமயங்களில் போலீஸாருக்கும், இவர்களுக்கும் தகராறு ஆகியிருக்கிறது. இப்போதெல்லாம் சில பல மாணவர்கள் குடித்துவிட்டு போடும் ஆட்டங்கள் படு மோசம்.
அப்படிப்பட்ட ஒரு நிகழ்வுதான் நேற்று கல்லூரி மாணவர்களுக்கும் போலீஸாருக்கும் நடந்த வன்முறை. இவர்களது ஆர்பாட்டத்திற்கும், அட்டகாசத்திற்கும் வேறு வழியில்லாமல் பாதுகாப்பிற்க்கு உடன் இருந்த போலீஸார்கள், பஸ் தினம் முடிந்து ரோட்டில் கும்பலாய் நின்றவர்களை உள்ளே போகச் சொன்ன போது இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு கற்களாலும், ட்யூப்லைட்டாலும், மற்றும் கல்லூரி வளாகத்தில் கிடந்த கம்புகளாலேயும் போலீஸாரை தாக்கியுள்ளார்கள். இதில் சில போலீஸ் கான்ஸ்டபிள்களும், பெண் ஏசியும் படுகாயமடைந்திருக்கிறார்கள். கல்லூரி வளாகத்திற்குள் போலீஸார் போக முடியாது என்கிற தைரியத்தில் இந்த வன்முறையை அவர்கள் கையிலெடுத்திருக்கிறார்கள். உள்ளே நுழையாமல் வெளியிலிருந்து போராடியதிலேயே இந்தனை பிரச்சனைகள்.
அரசு இதில் உடனே தலையிட்டு இனிமேல் பஸ்தினமென ஒரு தினத்தை கொண்டாட, அதுவும் பொது மக்களுக்கு இடையூறாக இருக்கும் இவ்விழாவை அனுமதிக்க கூடாதென வேண்டுகோள் விடுக்கிறேன். இதனால் ஏற்படும் பிரச்சனைகளுக்கான நல்லது கெட்டது அனைத்தும் நம் போலீஸார் தலையிலும் அரசின் தலையிலும்தான் விடியும். மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கும் இம்மாதிரியான நிகழ்வுகள் நல்லதற்கில்லை. தேவையில்லாத ஒரு வன்முறை வழியை நோக்கி போக வைத்துவிடும். அரசிற்கும் இது ஒரு வகையில் சங்கடமான விஷயம்தான். இவ்விழாவின் போது இவர்களால் பஸ்கூரைகள் நாசமாகின்றன. கண்ணாடிகள், கைப்பிடி கம்பிகள் எல்லாம் ஒடிக்கப்பட்டு, மீண்டும் ரெடி செய்த பிறகு தான் வண்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு இவர்களை அனுமதித்துவிட்டு அவர்களின் இளமைத் துள்ளலுக்கும், ஆட்டத்திற்கும் பாட்டத்திற்கும் கண்மூடிக் கொண்டு பாதுகாப்பு வேறு கொடுக்க வேண்டியிருக்கிறது.மீறி இவர்கள் வன்முறையில் ஈடுபட்டால் அவர்களை தண்டிக்கவும் முடியவில்லை. தேவையில்லாமல் மாணவர்களை சீண்டிப் பார்த்ததாய் ஆகிவிடுமென யோசிக்க வேண்டியிருக்கிறது. எனவே இவ்விழாவை அனுமதிக்காமல் இருப்பதிலேயே எல்லா பிரச்சனைகளுக்கும் முடிவு வந்துவிடும். இதையேத்தான் கமிஷனர் நேற்றைய விவேகானந்தா கல்லூரி பஸ் டேவின் முடிவில் தெரிவித்துள்ளார்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)
why don't the Chennai police try the same.
எந்த முன்னேறிய சமூகத்திலாவது இப்படி நடக்குதா சொல்லுங்கள் ...
நாகரிகம் என்பதும் பண்பாடு என்பதும் வல்லரசு என்பதும் அனைத்துவிதத்திலும் ஒழுக்கமும், கண்ணியமும் குறைந்தது பொது இடத்திலாவது இருத்தல் வேண்டும்.
இப்படி பொது இடத்தில் செய்வதும் பேருந்தினை மடக்கி ஆட்டம் போடுவதும் தடை செய்யப்பட வேண்டியவைகள். தமிழக அரசும் சரி ! இந்த மாணவர்களும் சரி ! இதனைத் தட்டிக்கேட்க தயங்கும் பேடிகளான பயணிகளும் சரி காட்டுமிராண்டிச் சமூக மனநிலையில் இருக்கின்றார்கள். ஜீன்ஸ் பேன்ட் போடுவதாலும், பெல்பேசி வைத்திருப்பதாலும் ஒன்றும் நாகரிகம் வளராது... இப்படியான சமூக ஒழுக்கம் சீர்படும் போது தான் அது நாகரிக சமூகம்.........
அருமை...அருமை....
இதை வலியுறுத்தி நான் எழுதிய ஒரு பதிவு இதோ :
"பஸ் டே” - அராஜக கொண்டாட்டங்கள் http://jokkiri.blogspot.com/2011/02/blog-post_23.html