
தெய்வம் மனுஷ ரூபேனா..என்று சொல்லிக் கேட்டிருப்பீர்கள். அதை மையமாய் வைத்து எடுக்கப்பட்ட படம். மலையாளத்தில் நந்தனம் என்கிற பெயரில் வெளிவந்து இன்றளவில் க்ளாசிக் வரிசையில் ஹிட்டான படம். வழக்கமான காதல் கதையில் கொஞ்சம் பக்தி மூலாம் பூசப்பட்ட கதையை அங்கே படத்தின் பாடல்களின் ஹிட்டாலும் இயக்குனர் ரஞ்சித்தின் பிரபல்யத்தாலும் ஓடியது. அதை தமிழில் செய்யப் போகிறார்கள் என்று நினைக்கும் போதே.. எப்படி இருக்குமோ என்று யோசித்தேன். யோசித்தது சரிதான் என்று தெரிகிறது.

பழனியில் ஒரு அரண்மனையில் வயதான பாட்டி ஒருத்தி மட்டும் இருக்க, அவளை பார்த்துக் கொள்ள மேலும் ரெண்டு பாட்டிகளும், ஒரு அழகிய இளம் வேலைக்காரியான மகாலஷ்மியும் இருக்கிறார்கள். மகாலஷ்மிக்கு பக்கத்திலிருக்கும் பழனி மலை முருகன் கோயிலுக்கு போகக்கூட முடியாத அளவுக்கு மூன்று கிழவிகள் இருக்கும் வீட்டில் வேலை. அவளுடய ஒரே தோழி பக்கத்து வீட்டு மாமி மட்டும்தான். பாட்டியின் ஒரே பெண்ணின் பேரன் லண்டன் போவதற்கு முன் பாட்டியை பார்க்க வீட்டிற்கு வர, பார்த்த மாத்திரத்தில் காதல் கொள்கிறார்கள். மகாலஷ்மிக்கும் தான் அந்த வீட்டு வேலைக்காரி என்று தெரிந்தாலும், காதல் அவளை ஆக்ரமிக்கிறது. ஆனால் பேரனின் அம்மாவோ.. தன்னுடய பையனுக்கு லண்டனிலிருக்கும் தன் தோழியின் மகளை தேடிப் பிடித்து திருமணம் செய்ய நினைக்கிறாள். தன் மகனுக்கும்,மகாவுக்குமான காதல் தெரிந்தும். அப்போது வருகிறான் மடப்பள்ளியில் சமையல்காரனாய் இருக்கும் சரவணன் என்கிற சமையல்காரன். சரவணன் வந்த பிறகு நடக்கும் நிகழ்வுகள் காதலர்களை சேர்த்து வைத்ததா? என்பதை .. வேறென்ன.. பார்த்துக் கொள்ளுங்கள்.

படத்தை என்னதான் தமிழ்க்கடவுள் முருகனின் வீடான பழனியை களமாய் வைத்திருந்தாலும், முழுக்க, முழுக்க தரவாட்டு வாடை. ஒரு கதையை அந்த அந்த களத்திற்காகவே ரசிக்கலாம். தரவாடு, வயதான பாட்டி, குருவாயூரப்பன் கோயில் என்று மலையாள படமாய் ரசிக்க முடிந்ததை, அப்படியே தமிழில் பார்க்க ஒட்டவேயில்லை. அதிலும் ஒரு காட்சியில் ஹீரோ சொல்லுவார் பொதுக் குளத்தில் இருக்கிற தண்ணீரைப் பற்றி.. நீ தெனமும் குளிப்பதால் சுவையாய் இருக்கிறது என்று. மலையாளத்தில் தரவாட்டு வீடுகளில் குளிப்பதற்கு குளம் இருக்கும் அதனால் அந்த வசனம் சரி. அதையே இங்கேயும் பேசும் போது செம காமெடியாய் இருக்கிறது. முக்கியமாய் காதல் ஜோடிகளுக்குள் எந்த விதமான கலா மாஸ்டரும் இல்லை (அதாங்க.. கெமிஸ்ட்ரி). கிட்டத்தட்ட ஆளாளுக்கு பேசினதையே பேசிக் கொண்டிருக்கின்றார்கள் டிவி சீரியல் போல. இரண்டு மணி நேர படமே போட்டு தாக்குது. இதில நம்ம தினாவின் பாடல்கள் வேறு. தனுஷ் பாடும் சமையல் பாட்டைத் தவிர பெரிதாய் ஏதும் இப்ரஸ் செய்யவில்லை.
இடைவேளையின் போது தனுஷ் வருகிறார். ஆல்மோஸ்ட் கடவுளுக்கான பில்டப்புடன். க்ளைமாக்ஸுக்கு முன் திடீரென காணாமல் போய்விடுகிறார். என்னமோ ஏதோ நடக்கப் போகிறது என்று நினைத்துக் கொண்டிருந்த போது, விவேக்கை வைத்து ஜாதகம் சரியில்லை என்று சொல்ல வைத்ததை தவிர வேறு என்ன மாபெரும் விஷயத்தை செய்துவிட்டார் என்று தெரியவில்லை. நியாயமாய் பார்த்தால் இந்த கேரக்டருக்கு இவ்வள்வு பில்டப் தேவையேயில்லை. விவேக் சார். வர வர முடியல. பார்த்துக்கோங்க.
சுஹாசினி, ரெண்டு கிழவிகள்,பொண்வண்ணன் ஆகியோரும் இருக்கிறார்கள். ஹீரோ கிருஷ்ணாவுக்கு நடிப்பில் ஏ கூட வரவில்லை. படத்தை பார்க்க வைக்க முயல்பவர்கள் இரண்டுபேர். ஒருவர் அனன்யா, இன்னொருவர் தனுஷ். ரெண்டு பேரும் நல்ல துறுதுறுப்பான நடிப்பு. மலையாளத்தில் க்ளைமாக்ஸ் டிவிஸ்ட் பொயட்டிக்காக இருக்கும்.
அதன்பிறகு வசனங்கள். இதில் எல்லாமே மிஸ். பழைய டிவி சீரியல் பார்த்த எபெக்ட் வருகிறது. கொஞ்சம் கூட காலத்திற்கும், நம்மூரின் கலாச்சாரத்திற்கும் கொஞ்சமும் பொருந்தாத கதையை பழைய சூப்பர் குட் சௌத்ரியின் பார்ட்னரான குட்நைட் மோகனின் மகன் தயாரித்திருக்கிறார்.குட்நைட் காயில்களின் விளம்பரம் ஆங்காங்கே வருகிறது. இடைவேளைக்கு அப்புறம் வருவான் வடிவேலன் வாசனை வருவதை தடுக்க முடியவில்லை. ஆங்காங்கே சின்ன சின்ன காட்சிகள் முக்கியமாய் வெள்ளைப் புடவையில் மயில் டிசைன் காட்சிப் போல ஓரிரு இடங்கள் வருவதை தவிர பெரிதாய் சிலாகிக்க ஏதுமில்லை.
சீடன் – உம்மாச்சி படம்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
---
ummachiya nakal panrele.. unga kanna ummachi kutha porar parthu :)
I am waiting for the review of Fighter from you.