கடந்த சில வருடங்களாய் எந்த சேனலைத் திறந்தாலும் ஏதாவது ஒரு டேலண்ட் ஹண்ட் நிகழ்ச்சி பெரும்பாலும், பாட்டு சம்பந்தப்பட்ட நிகழ்ச்சி ஓடிக் கொண்டிருக்கிறது. சூப்பர் சிங்கர், டான்ஸர், போன்ற நிகழ்ச்சிகள் எடுபட்ட அளவிற்கு மற்ற டேலண்ட் ஹண்ட் நிகழ்ச்சிகள் எடுபடவில்லையென்றே சொல்ல வேண்டும். சங்கரா சேனல் ஒரு வித்யாசமான டேலண்ட் ஹண்ட் நிகழ்ச்சியை துவங்கியிருக்கிறது. நிகழ்ச்சி பெரும்பாலும் எல்லோராலும் வரவேற்கப்படும் பாட்டு சம்பந்தப்பட்டதாய் இருந்தாலும் அதில் ஆன்மீக சுவாரஸ்யமாய் பஜன்களை வைத்து நடத்தி வருகிறார்கள். பஜன் சாம்ராட் என்கிற இந்த நிகழ்ச்சியின் ஆரம்ப நிகழ்வை பார்த்தேன். நன்றாகவேயிருந்தது. பஜனை பாடல்கள் என்பது பக்த்தியை வெளிப்படுத்த உதவும் ஆன்மீக வழி. அதிலும் சில பல சூட்சமங்களும்,சுவாரஸ்யங்களும், இசையறிவும், நெளிவு சுளிவுகளும் இருக்கத்தான் செய்கிறது. செளம்யா, குசுமா ஆகியோர் நடுவர்களாய் இருக்க, வெற்றி பெரும் குழுவினருக்கு ”பஜன் சாம்ராட்” பட்டமும், பத்து லட்சம் ரூபாய் பரிசும் அளிக்கிறார். பஜன் பாடல்களுக்காக இவ்வளவு பெரிய கேம்பெயின், கொஞ்சம் ஆச்சர்யமாக இருக்கிறது.