பதிவுகளை படித்துவிட்டு பல நண்பர்கள் போனில் உரையாடியதுண்டு. அதில் சிலர் என்னை நேரில் சந்தித்தே ஆகவேண்டும் ஆசைப்பட்டவர்களும் உண்டு. அப்படி என்னை நேரில் சந்தித்தே ஆக வேண்டும் என்றும், அதுவும் நான் முன்னமே எழுதியிருந்த 30 மினிட்ஸ் எனும் இடத்தில் சந்திக்கலாம் என்றும் நண்பர் ஹுசேன் போன் செய்தார். இவர் பர்மா பஜாரில் கடை வைத்திருக்கிறார். சில பல மாதங்களுக்கு முன் அவரும் அவரது நண்பர் சினிமாவில் ப்ரொடக்ஷன் மேனேஜராய் இருக்கும் அண்ணன் சாதிக்கும் என்னை வந்து சந்தித்தார்கள் ஒரு கிலோ ஸ்வீட் காரத்துடன். அதன் பிறகு வாரத்துக்கு ஒரு முறை பர்மா பஜாரிலிருந்து ஒரே நேரத்தில் நான்கைந்து நண்பர்கள் தொடர்ந்து ஒரு மணி நேரம் அவர்கள் கடையடைத்த பின்பு பேசுவார்கள். ஹுசேனும், அவரது நண்பர்களும் ரெகுலராக சாப்பாட்டுக்கடை பதிவுகளை படித்துவிட்டு அந்த கடைகளுக்குப் போய் சாப்பிடுகிறவர்கள். அவர்கள் போனில் பேசும் போது, பதிவுகளைப் பற்றியும், சாப்பாட்டுக்கடைகளை பற்றியும், இந்த கடையில் சாப்பிட்டிருக்கிறீர்களா? அந்தக் கடையில் சாப்பிட்டிருக்கிறீர்களா? என்றெல்லாம் சில கடைகளை என்னிடம் சொல்வார்கள். அதிலும் நண்பர் ஹுசேன் பாசக்கார மனிதர். வாய்க்கு வாய் ”என்ன தலைவரே.. வரவே மாட்டீங்குறியளே?” என்று ஒவ்வொரு முறையும் கூப்பிட்டுக் கொண்டேயிருப்பார். என்னவோ தெரியவில்லை முன்பெல்லாம் அடிக்கடி டிவிடி வாங்கவாவது பஜாருக்கு போவேன். தற்போது டவுன்லோடிக் கொண்டிருப்பதனால் அதற்கும் வாய்ப்பில்லாமல் போக, சென்ற மாதம் ஒரு மழை நாளில் அங்கே போகும் வேலையிருக்க, அண்ணன் ஹுசேனை அழைத்தேன். ”அண்ணே தொழுகைக்கு போறேன் அரை மணியில வர்றேன்”னு சொல்லிட்டு சரியா வந்திட்டாரு. உடன் நண்பர் பஷீரும் வந்தார். பஜாரில் ஐபோனில் என் பதிவுகளை படிக்கும் பெரிய நண்பர் குழாமேயிருக்கிறது. பஷீர் என்னைப் பார்த்ததும் மேலும் சில நண்பர்களை போனில் அழைத்து “கேபிள் வந்திருக்காரு” என்று பேச வைத்தார்கள். நிறைய நண்பர்கள் மாலை நேர கடையில் இருப்பதால் மாலையில் தான் வருவோமென்றும், இன்னொரு முறை வந்தால் மாலையில் வரும்படியும் சொல்லி அழைத்தார்கள். “எங்களுக்கு நீங்க கடை காட்டிட்டு இருந்தது போக, நாங்க உங்களுக்கு கடை காட்டப் போறோம் இப்ப” என்றார் ஹுசேன்.
அங்கப்பன் நாயக்கன் தெரு, 2வது சந்தில் உள்ள பிஸ்மி என்ற ஒரு ஓட்டலுக்கு கூட்டிக் கொண்டு போனார். ஹோட்டலின் வாசலில் போன போதே தெரிந்தது படு பிரபலமான ஓட்டல் என்று. தர்காவின் மிக அருகில் கடை அமைந்திருந்தது. சின்ன சந்தில் தான் கடை என்றாலும் பார்சலுக்கு நல்ல கூட்டம். “அண்ணே நெய்ச் சோறு சாப்டு இருக்கீகளா? இல்லையினா இன்னைக்கு ஒரு கட்டு கட்டுங்க” என்று உட்கார்ந்ததும், ஒர் பேசின் நிறைய சாதத்தை எடுத்து வந்து வைத்தார்கள். அதை பார்த்ததும் நான் அவர்களைப் பார்க்க, “எவ்வளவு வேணுமின்னாலும் சாப்பிடலாம்” என்றபடி “ஒரு சிக்கன், ஒரு மட்டன், ஒரு பிஷ்” என்று சகட்டு மேனிக்கு ஆர்டர் செய்ய, அவர்கள் சொல்லும் போதே வயிறு நிறைந்தார் போல ஆனது. சாப்பிட ஆரம்பித்ததும் தான் ருசி தெரிய ஆரம்பித்தது. நல்ல அரிசியில் நெய்யில் புரட்டப்பட்ட சாதமும், அதற்கு ஈடாக, தால்சாவும், கூடவே சிக்கன், மட்டன், மீன் கிரேவியுடன் சாப்பிட, சாப்பிட அடிதூள். அதுவும் சூடான ரைஸுக்கும், அந்த கிரேவிகளுக்கும் ஆன டேஸ்ட் இருக்கிறது அதை சாப்பிட்டு பார்த்தால் தான் தெரியும். எனக்கு மீன் அவ்வளவாக பிடிக்கவில்லை. ஆனால் மட்டனும், சிக்கனும் அடடா.. ஒரு முறை வாங்கி விட்டால் மீண்டும் எவ்வளவு முறை கிரேவி கேட்டாலும் அதே திக் கிரேவியை வாரி வழங்குகிறார்கள். செம டேஸ்டு. ஹுசேனும், பஷூரும் சாப்பாட்டை மட்டுமல்ல, அவர்களின் அன்பினாலும் என்னை திக்குமுக்காட வைத்துவிட்டார்கள். இவர்களுக்கு மேல் அந்தக் கடைக்காரர்கள். ஒழுங்காக சாப்பிடவில்லையென்றால் ஊட்டி விட்டு விடுவார்கள் போல… “அத்தா… என்னத்த சாப்பிடுறீய..? நல்லா சாப்பிடுங்க” என்று சும்மா அள்ளி அள்ளி வைத்த அன்பு இருக்கிறதே அடடா.. இரவில் பரோட்டா மிகவும் பேமஸாம். அதற்கு ஒரு நாள் வாங்க என்றார்கள் இருவரும்.வெளியில் வந்ததும் வெகு நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுத்தான் கிளம்பினோம். நெய் சோறு சாப்பிட்டும் கொஞ்சம் கூட திகட்டவில்லை. நண்பர் ஹுசேன், பஷீரின் அன்பைப் போல.. நன்றி நண்பர்களே.. மீண்டும் சந்திப்போம்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Post a Comment
19 comments:
kandippa poga venum thala... Next time try panren
கேபிள்,
என்ன செய்ய உங்க சாப்பாடு கடைப்பதிவுலவும் நான் பின்னூட்டம் போட வேண்டியதாக இருக்கே! :-))
//தர்காவின் மிக அருகில் கடை அமைந்திருந்தது. சின்ன சந்தில் தான் கடை என்றாலும் பார்சலுக்கு நல்ல கூட்டம். “அண்ணே நெய்ச் சோறு சாப்டு இருக்கீகளா? இல்லையினா இன்னைக்கு ஒரு கட்டு கட்டுங்க” என்று உட்கார்ந்ததும், ஒர் பேசின் நிறைய சாதத்தை எடுத்து வந்து வைத்தார்கள்.//
அதெல்லாம் முழுக்க நெய் கிடையாதுங்க மாட்டு கொழுப்பு, மாடு வெட்டும் போது கொழுப்ப மட்டும் தனியா எடுப்பாங்க அதை உருக்கினா நெய்ப்போல வரும் சூட்டில! வட சென்னைல பிரியாணி சாப்பிடனும்னாலே கவனமா இருக்கணும், மலிவா கிடைக்கும் எல்லாம் மாடு தான் !
அங்கப்ப நாயக்கன் பெரிய பள்ளிப்பக்கம் போய் இருக்கிங்கனு தெரியுது அப்படியே அந்த தெரு அடுத்த முனைப்போனா ஒரு தந்தூரி சிக்கன் கடை இருக்கும் மலிவா சிக்கன் கிடைக்கும்(ஆனா அதிலும் கலப்படம் முட்டைக்கோழி வறுத்து கலந்து கொடுப்பாங்க)
லேயர் பர்டு, பிராய்லர் ன என்னானு தெரிந்தவர்களை கேட்கவும்!
பர்மாபஜாருக்கு வரும் போது நானும் ஒரு கட்டு கட்டுவேன்.
மாட்டுக்கொழுப்போ...நெய்யோ...அதன் சுவைக்காக சொத்தை எழுதி கொடுக்கலாம்.
வவ்வால்.. சல்லீசான சாப்பாடெல்லாம் இல்லீங்க.. இருநூறு ரூபாய் இல்லாம சாப்பிட முடியாது. ஸோ. என்னை கூட்டி போனவர்கள்.. என்னை விட சாப்பாட்டு விஷயத்தில் அதிலும் மாட்டு கொழுப்பு மேட்டரில் உஷாரானவர்கள்..
தகவலுக்கு ரொம்ப நன்றி.
வாய்ப்பு கிடைத்தால் கொத்திட வேண்டியதுதான்
நல்ல சாப்பாட்டுடன் அன்பான நண்பர்களையும் அறிமுகபடுத்தி உள்ளீர்கள்
கேபிள்,
இரவு பிஸ்மி கடையில் புரோட்டா சூப்பராய் இருக்கும்..
சூடாய் போட்டு கொண்டே இருப்பார்கள்..
உம்மையெல்லாம் சுண்ணாம்புக் காளவாயில வச்சு சுடணும். வயசான காலத்துல வெறும் சாப்பாடே செரிக்க மாட்டேங்குது. நீரு நெய்ச்சாப்பாட்டப் பத்தி, பத்தி, பத்தியா எழுதீட்டிருக்கீங்க? நாங்க என்ன பண்ணுவோம்னு கொஞ்சமாச்சும் நெனச்சுப் பாக்கவேண்டாம்?!
கேபிள் அண்ணே,
நானும் சில முறை பிஸ்மி ஹோட்டலில் சாப்பிட்டது உண்டு. நெய் சோறு எப்படின்னு தெரியல, ஆனால் சாதா சாதம் ஒன்றும் அவ்வளவு பிரமாதமாய் இல்லை. சைடு டிஷ் ரொம்ப
நல்லா இருக்கு. ரசம் மிகவும் அருமை. ஆனால் விலை.... அந்த ரேஞ்சு ஹோட்டலுக்கு ரொம்ப ரொம்ப அதிகம். மற்றபடி மாட்டு கொழுப்பெல்லாம் சேர்க்க வாய்ப்பே இல்லை.
அப்படி இருந்தா நம்ம மாப்ளைகள் எல்லாம் கைமா பண்ணிருவாங்க.
சிராஜ்
இப்படி நண்பர்கள் கிடைக்க கொடுத்து வைக்கணும். உங்களை போல் எழுத தெரியவில்லையே என்று பொறாமையாக இருக்கிறது.
கேபில்ஜி,
//வவ்வால்.. சல்லீசான சாப்பாடெல்லாம் இல்லீங்க.. இருநூறு ரூபாய் இல்லாம சாப்பிட முடியாது. //'
அப்போ சரி, விலை அதிகமாக இருந்தா அதுக்கு ஏத்த தரமும் இருக்கவே செய்யும், நீங்க பதிவில விலையை பத்தி சொல்லவே இல்லை, நல்ல வேளை கம்மியான காசோடு போய் மாட்டிக்காம தப்பிச்சேன்.
அந்த பக்கம் எல்லாம் பிரியாணியே கிலோ கணக்கில் விற்கும் ஹோட்டல்களும் உண்டு(மண்ணடி,புரசை), ஒரு கிலோ 100-150 ரேஞ்சில தான் அப்போலாம் இருக்கும்.
மாட்டுக்கொழுப்ப நெய்க்கு பதிலாக அல்லது கலப்படமாக பயன்ப்படுத்துவது பிரியாணி ஹோட்டல்களில் சகஜமான ஒன்று. பெரும்பாலும் மலிவான ஹோட்டல்களீல் வழக்கமான ஒன்று.
அந்த பிஸ்மி ஹோட்டல் கரெக்டா எங்க இருக்குன்னு சொன்னீங்கன்னா புண்ணியம்மா போகும் உங்களுக்கு
கேபிள் சார்,
பிஸ்மி ஹோட்டலுக்கு நாங்க போனா எங்களுக்கும் இதே ராஜ உபசாரம் கிடைக்குமா?!
நன்றி!
சினிமா விரும்பி
மிகவும் நன்றி எனக்கும் அந்த அனுபவம் உண்டு சுவையாகவும் இருக்கும் ஒரு சின்ன திருத்தம் தர்கா அருகில் அல்ல அங்கப்ப நாயக்கன் தெரு பெரிய மசூதி அருகில், மசூதி இறைவனை வண்ங்கும் இடம், தர்கா என்பது சமாதி செய்யப்பட்ட இடம்.
ASSLAMU ALAIKKUM
thanks anna for the information
ghee rice available only on sundays and fridays
My fav one. It's my Saturday lunch to have the food I travel from nandanam to Paris while going to home at villivakkam. Really missing bismi mess
Post a Comment