இந்த வருடத்தின் கடைசி கொ.பரோட்டா. டெல்லி பெண்ணின் மரணம் காரணமாய் மனம் முழுவதும் சோகம் அப்பியபடியே எழுத வேண்டியிருக்கிறது. அப்பெண்ணின் மரணத்தினால் எழுந்த சோகத்தை விட, தொடர்ந்து தமிழகத்தில் மட்டுமில்லாது இந்தியாவெங்கும் பெண்கள் மீது நடக்கும் பாலியல் வன்முறைகளைப் பற்றி தெரியவரும் போது மேலும் மனம் துன்பப்படுகிறது. இவ்வளவு எதிர்ப்பும், ஆதரவும் டெல்லி பெண்ணுக்காக மட்டுமில்லாமல் இம்மாதிரியான பாலியல் வன்முறையினால் பாதிக்கப்படும் எல்லா பெண்களுக்கு எதிராகவும் இருக்க வேண்டுமென மனம் விரும்புகிறது. எல்லா சமூக வலைத்தளங்களிலும், என்ன ரெண்டு நாள் அழுதுவிட்டு, ஸ்டேடஸ் போட்டு விட்டு கிரிக்கெட் மேட்ச் பார்க்க போய்விடுவீர்கள் என்று புலம்புகிறார்கள். சுனாமியில் குடும்பத்தையே பறிகொடுத்து அநாதையாய் இருப்பவர்கள் கூட சோகங்களைக் கடந்து அவர்தம் வாழ்கையை வாழ்ந்து கொண்டுதானிருக்கிறார்கள். குடும்பத்தை இழந்ததால், சாப்பிடாமலோ, சிரிக்காமலோ, காதலிக்காமலோ, கல்யாணம் செய்யாமலோ இல்லை. வாழ்க்கை அதன் பாட்டிற்கு ஓடும். ஓடித்தான் ஆகவேண்டும். எனவே இது பற்றி தினம் புலம்ப வேண்டும், ஸ்டேடஸ் போட வேண்டும் என்று நினைக்காமல் இனி வரும் காலங்களில் பெண்களையும் வெறும் சதை கோளங்களாய் பார்க்காமல், அவர்களுக்கும் மனதுண்டு, ஆசாபாசங்கள் உண்டு, வலி உண்டு என்பதை புரிந்து அவர்களை சக மனுஷியாய் மதிக்கும் பண்பை வளர்க்க பாடுபடுவோம்.
@@@@@@@@@@@@@@@@@@@@