Thottal Thodarum

Feb 4, 2012

மெரினா

Marina Movie Stills முதல் படத்திலேயே வெற்றி பெற்ற இயக்குனர்களில் வெற்றியை மட்டுமில்லாமல் அந்த வெற்றியின் மூலமாய் மரியாதையையும் தேடி பெற்றுக் கொண்டவர் இயக்குனர் பாண்டியராஜ். அவரது இரண்டாவது படமான வம்சம் பெரிதாக போகாததாலும், படத்திற்கு தயாரிப்பாளர் கிடைக்காததாலும், அடுத்த படத்திற்கு தானே தயாரிப்பாளராகி களமிறங்கியிருக்கிறார் மெரினாவில். எடுத்துக் கொண்ட களம் அருமையானது. ஒரு நாள் பீச்சுக்கு போய் நின்றாலே பல கதைகள் கிடைக்கக்கூடிய இடமது. மொத்த படமே அங்குதான் எனும் போது எதிர்ப்பார்ப்புக்கு அளவேயில்லை. டீசர் பாட்டும், ட்ரைலரும் கொடுத்த பெப் வேறு எக்ஸ்படேஷன் மீட்டரை ஏற்றிவிட்டிருந்தது.


Marina Movie Stills வந்தாரை வாழவைக்கும் சென்னையில், சித்தப்பாவின் இம்சை தாங்காமல் பட்டுக்கோட்டையிலிருந்து தப்பி வந்த அம்பிகாபதி எனும் சிறுவனை சுற்றியலைகிறது கதை. ஊரை விட்டு வந்தவன் சுற்றி பார்த்து அலுத்து வேலைக்கு அலைய கடைசியாய் செட்டிலாகும்  இடம் மெரினா கடற்கரையில், வாட்டர் பாக்கெட் விற்கும் தொழிலில். அவனைப் போன்றே இருக்கும் பசங்களைப் பற்றியும், மெரினாவையே தங்கள் வாழ்கையாக கொண்டவர்களைப் பற்றியும், வந்து போகும் காதல் ஜோடிகள் பற்றியுமானதுதான் மெரினா.
Marina Movie Stills படிப்பின் மீது ஆசை கொண்ட அம்பிகாபதி வேறு வழியேயில்லாமல் சுயமாய் சம்பாதித்து டுட்டோரியலில் படிக்க வேண்டும் என்று நினைப்பவன். மருமகள் தொல்லையால் அவர்களை பழிவாங்குவதற்காக வீட்டை விட்டு வெளியேறி பீச்சில் பிச்சையெடுக்கும் வெண் தாடிக் கிழவர். குதிரை ஓட்டிப் பிழைக்கும் மணி, எட்டு வயசு பெண்ணை வைத்துக் கொண்டு, டோலக் அடித்து பாட்டுப் பாடி, ஆட்டம் ஆடி பிழைப்பு நடத்தும் பாட்டுக்காரர். எப்படியாவது தங்களுக்கு என்று ஒரு வாடகை வீட்டிற்காகவாவது போய் விட வேண்டும் என்று ஆசைப்படும் அவரின் பெண். பெட்ரோல் திருடி விற்று பிழைப்பை நடத்தும் சிறுவன். இந்த சிறுவர்களுக்கெல்லாம் ஆபத்பாந்தவனாய் இருக்கும் போஸ்ட் மேன், அம்பிகாபதியின் நெருங்கிய நண்பனான கைலாசம். அவனைத் தேடியலையும் இரண்டு போலீஸ்காரர்கள். மனநிலை பாதிக்கப்பட்டவனாய் திரியும் இங்கிலீஷ் பேசும் ஆள். சைல்ட் ஹெல்ப் லைன் ஆபீசராய் வரும் ஜெயப்பிரகாஷ். பீச்சுக்கு வரும் காதல் ஜோடியான சிவகார்த்திகேயன், ஓவியா என ஏகப்பட்ட கேரக்டர்கள் இருந்தாலும், பெரிதாய் இம்ப்ரஸாவது காதல் காட்சிகளும் அம்பிகாபதி, கைலாசம், பிச்சைக்கார தாத்தா மட்டுமே.
Marina Movie Stills என்னா மாதிரியான கதைக் களம் சும்மா ரவுண்டு கட்டி ஆடியிருக்க வேண்டிய படம். லேசாய் ஊறுகாய் போல தொட்டுக் கொண்டிருக்கிறார் இயக்குனர். நிஜத்தில் இம்மாதிரியான சிறுவர்கள் படும் வேதனைகளையும்,வலியையும், அவர்களின் சந்தோஷத்தையும் திரையில் சொல்லவேயில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவ்வளவு சீக்கிரம் ஒருவன் மெரினா போன்ற இடங்களில் அதுவும் சிறுவன் ஒரு தொழில் ஆரம்பித்துவிட முடியாது. மழை, வெய்யில், பனி, தூக்கம், அலி, செக்சுவல் தொல்லைகள், போலீஸ்கார ப்ரச்சனைகள், குடி, கஞ்சா, போன்ற லாகிரிகளுக்கு எக்ஸ்போஸ் ஆகுதல் என பெரிய ப்ரச்சனைகளின் லிஸ்டே உண்டு. ஆனால் இதில் என்னவோ ஏதோ ஊருக்கு வந்தவுடன், வயதான பிச்சைக்காரருடன் நட்பாகி, ஐம்பதுரூபாய் கேட்டவுடன், அவரும் தந்து தொழிலதிபர் ஆகிவிடுவதும், நினைத்த மாத்திரத்தில் மாங்காய் விழுவது போல பணம் சேர்த்து ஒரு படகை வாடகைக்கு எடுத்து செட்டிலாவதும்.  பெரிய ப்ரச்சனைகளே இல்லாமல் வாழ்க்கையை ஓட்டுவதுமாய் காட்டியிருப்பதை பார்த்தால் ஸ்கூலில் படிப்பு ஏறாமல் ஊரிலிருக்கும் சிறுவர்கள் எல்லாம் உடனடியாய் பஸ்சேறி சென்னைக்கு வ்ந்தால் செட்டிலாகிவிடலாம் என்று எண்ணம் தோன்றிவிடும் போலிருக்கிறது.  சொல்ல ஏகப்பட்ட கதையிருக்கும் போது தேவையேயில்லாமல் கைலாசத்தை போலீஸ்காரர்கள் தேடியலைவதை காமெடியாக்கியதும், ஏன் தேடியலைந்தார்கள் என்ற காரணம் அதை விட மொக்கையாய் போய்விடும் போது எரிச்சலாவதை தவிர்க்க முடியவில்லை. மெரினாவில் ஆணாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும் ஒரு நாள் இரவு முழுவதும் தங்கிப் பார்த்தாலே தெரியும் அங்கு நடக்கும் கூத்துக்களை.
Marina Movie Stills அம்பிகாபதியாய் நடித்த அந்த பக்கோடா பையனும் அவனின் நண்பனாக நடித்தவனின் நடிப்பும் இம்ப்ரசிவ். ஏற்கனவே சிறுவர்களை வைத்து படமெடுத்த பழக்கம் இதில் மேலும் இயல்பாய் கை கொடுத்திருக்கிறது. முக்கியமாய் பசங்களுக்குள் ரன்னிங் ரேஸ் நடக்கும் காட்சியில் கைலாசம் ஓவர்டேக் செய்து வரும் போது கூட ஓடிவரும் பையன்களின்  முகத்தில் அவன் தாண்டும் வரை தெரியும் ரியாக்‌ஷன்கள் அபாரம். அதே போல பரிசு கொடுக்க தங்களைத்தான் தெரிவு செய்வார்கள் என்று பெருமிதத்தோடு காத்திருக்கும் பெரியவரும், குதிரையோட்டியும், வெள்ளைக்காரிகளை வைத்து பரிசு கொடுக்கப்பட்ட போது சுணங்கி வருத்தப்பட்டு சமாளித்துக் கொண்டு போகுமிடம் ஒரு குட்டி சிறுகதை.

வீட்டை விட்டு ஓடி வந்த சிறுவர்கள், பெற்றோர்களாலேயே படிப்பை நிறுத்தி விட்டு சுண்டல் விற்கும் சிறுவர்கள். படிப்பு பிடிக்காமல், வாத்தியார் அடித்ததால் வேலை பார்ப்பவர்கள், காலையில் ஸ்கூலுக்கு போய்விட்டு, சாயங்காலம் பீச்சில் சுண்டல் விற்கும் பையன்கள், அநாதைகள் என்று பல காரணங்களால் படிக்க முடியாமல், போராடும் சிறுவர்களின் வாழ்க்கையை மெரினா பீச்சை விட்டு வெளியே போகாமல் கதை சொல்ல முயன்றதற்கு பாராட்ட வேண்டும்.

சிவகார்த்திகேயன், ஓவியா போல பல ஜோடிகளை அங்கே நாம் காண முடிகிற ஒன்றுதான். அதனால் சீரியஸாய் இல்லாமல் காமெடிக்காக மட்டுமே அவர்களின் ட்ராக்கை பயன்படுத்தியிருப்பது புத்திசாலித்தனமான உத்தி என்றே சொல்ல வேண்டும். வெறுமையாய் போகும் படத்தை கொஞ்சமாவது தூக்கி நிறுத்த அவர்களின் பகுதிதான் பெரும் உதவி செய்திருக்கிறது. வெறும் எஸ்.எம்.எஸ்களை வைத்து நடத்தபடும் ஊடல்கள் சணடையாகி பிரிவது போவது கொஞ்சம் ஓவர் தான் என்றாலும்.. ப்ராக்டிகலாய் பசங்களை பெரும்பாலான பெண்கள் பைக்கில் சுற்றுவதற்கும், சாப்பிட வாங்கிக் கொடுப்பதற்கும்தான் பயன்படுத்துகிறார்கள் என்ற நிதர்சன உண்மையை சொன்னது சந்தோஷமே.தாத்தா கேரக்டர் மூலம் வீட்டை பழிவாங்குவதற்காக ஈகோவினால் வெளியே வந்து பிச்சையெடுக்கும் பல பேர்களில் ஒருவரை காட்டியிருப்பதும் பாராட்டுக்குறிய விஷயமே.

கேனான் 5டி,7டி ஆகிய கேமராவில் எடுக்கப்பட்ட விஷுவல்கள் க்யூட். டெக்னாலஜியை கைவரப் பெற்றிருக்கிறார் ஒளிப்பதிவாளர் விஜய். கதைக்கு தேவையான விஷுவல்களை கொடுத்திருக்கிறார். புதிய இசையமைப்பாளர் க்ரீஷின் இசையில் “வணக்கம் வாழ வைக்கும் சென்னை” இண்ட்ரஸ்டிங். மற்ற பாடல்கள் எல்லாம் மாண்டேஜில் வருவதால் உறுத்தாமல் செல்கிறது. பின்னணியிசை பற்றி சொல்வதற்கில்லை.
 marina-movie-stills 5 எழுதி இயக்கி தயாரித்திருப்பவர் பாண்டிராஜ். வசனகர்த்தாவாக பல இடங்களில் மிளிர்கிறார். சிவகார்த்திகேயனின் தத்துவ நண்பனின் மூலமாய் சொல்லப்படும் தத்துவங்கள் அட்டகாசம். “காதல் ஒரு நல்ல குரு. அது எல்லாரையும் சீடனா ஏத்துக்கிறதில்லை”. பிபிசி இண்டர்வியூவில் பைத்தியக்காரனிடம் “உங்க பெயர் என்ன?” “அன்புச்செல்வன் ஐ.பி.எஸ்” என்று ஆங்காங்கே சடால் சடாலென விழும் வசனங்கள், சுவாரஸ்யமாகவும், சிந்திக்க தூண்டுவதாகவும் இருக்கிறது. ஆனால் க்ளைமாக்ஸில் சைல்ட் ஹெல்ப் லைன் ஆபீசர் ஜெயபிரகாஷ் பேசும் வசனம் சவ சவ.. வாழ்க்கையை சமாளிக்க பணம் தேவை என்று புரிந்த சிறுவர்களிடம், கலாம், சச்சின், தோனி என்று பத்து நிமிஷம் பேசுவது மொக்கை.

சிவகார்த்திகேயனின் காதலுக்கான அந்த பைக் முயற்சிகள், காதல் தோல்விக்கு பிறகு அவர் கொரியரில் தொடர்ந்து அனுப்பும் ஆப்பு மற்றும் ரிவிட் ஐடியாக்கள். படிக்க ஆசைப்பட்டு சுண்டல் விற்றுக் கொண்டே படிக்கும் மாணவன், அந்த ஈகோ தாத்தா, குதிரைக்கார மணி, படத்தின் ஆரம்பக் காட்சியில் காட்டப்படும் சின்னச் சின்ன மெரீனா பீச்சின் காலை நேர காட்சிகள்,  டோலக் அடித்து பாடும் பாடகராகும் அசையில் அலையும் சின்னப் பெண்ணின் அப்பா,  தபால் காரர் மூலம் பொங்கலுக்கு வாழ்த்து அட்டையும், ஐம்பது ரூபாய் அன்பளிப்பும் கொடுக்கும் இடமும், இம்மாதிரி அலையும் குழந்தைகளுக்கு நிச்சயம் படிப்பு தேவை அதை கொடுப்பது நம் கடமை என்பதையும்,  சரியான கேஸ்டிங்கின் மூலமாய் கேரக்டர்களை கண் முன் உலவ விட்டிருப்பதில் இயக்குனராக வெற்றி பெற்றிருக்கிறார்.marina-movie-stills
ஆனால் சொல்ல எவ்வளவோ விஷயங்கள் இருந்தும், எதையும் பெரிதாய் இணைக்க முடியாத திரைக்கதை மிகப் பெரிய மைனஸ். சிவகார்த்திகேயன் காதல் எபிசோட் மட்டும் இல்லையென்றால் படம் முழுக்க முழுக்க, டாக்குமெண்டரியாய் உணரப் பட்டிருக்கும். இம்மாதிரியான சிறுவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல்கள், அவர்களது வாழ்க்கையை வாழ அவர்களுடய போராட்டம், மெரினாவின் இரவு வாழ்க்கை, சமூக விரோத ப்ரசனைகளில் இச்சிறுவர்கள் எப்படி மாட்டிக் கொண்டு, எக்ஸ்போஸ் ஆகிறார்கள்?. மழை பெய்தால் இவர்களின் வாழ்விடத்திற்கான ப்ரச்சனைகள். ப்ளாட்பாரத்தில், பீச்சில் தூங்கும் ஆட்களை தொந்தரவு செய்யும் போலீஸ், அவர்களின் காதல், காமம், என இவர்களின் நிதர்சன வாழ்க்கையை தொகுத்து அழகாய் சொல்லியிருந்தால் டேனி பாயலின் ஸ்லம் டாக் மில்லியனரைப் போன்றோ, மீரா நாயரின் சலாம் பாம்பே போலவோ இருந்திருக்கும். பட் பாசிட்டிவான விஷயங்களையும், சாதாரண தாத்தா, நட்பு செண்டிமெண்டையும் சொல்ல எபிசோட் எபிசோடான திரைக்கதையினால் ஒட்டாமல், அச்சிறுவர்களின் வாழ்க்கையை படம் பார்க்கும் நமக்குள் கடத்தாமல் போய் விடுகிறது.

சமீப காலமாய் படிப்பு, விவசாயம், போன்ற சமூகத்தின் முக்கிய ப்ரச்சனைகளை முன்வைத்து வாகை சூடவா, தேனி மாவட்டம், போன்ற படங்கள் வருவது சந்தோஷமாய் இருந்தாலும், வெறும் கனவாய் கற்பனையாய் அவ்விஷயங்களை அணுகுவதாலும், படம் நெடுக காதல், ஹீரோயிசம் போன்றவற்றை மட்டும் சொல்லி, கடைசி ஒரு ரீலில் கருத்து சொல்லும் போது சொல்ல வந்த விஷயங்கள் எதுவும் ஏறாமல் போன அபாயம் இப்படத்தில் இல்லை. இவர் சொல்ல வந்த சிறுவர்களுக்கு படிப்பு எவ்வளவு அவசியம் அதை கொடுப்பதற்கு அரசாங்கம் எவ்வளவு தூரம் செயல் படுகிறது. அது ஏன் இவர்களை சென்றடையவில்லை, அச்சிறுவர்களின் வாழ்க்கை என்பது போன்ற பல விஷயங்களை சீரியஸாய் தொட்டு சொல்ல முயன்று அதை ஆவணப்படுத்த செய்த முயற்சிக்கு இயக்குனர் பாண்டியராஜை பாராட்ட வேண்டும்.
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

டிஸ்கி: படம் ரோலிங் டைட்டிலின் போது தமிழ்தாய் வாழ்த்தை போட்டிருந்தார்கள். நான் மட்டுமே நின்று கொண்டிருந்தேன். 

Post a Comment

15 comments:

ஹாலிவுட்ரசிகன் said...

வழக்கம் போல அருமையான விமர்சனம் கேபிள் சார்.

// டிஸ்கி: படம் ரோலிங் டைட்டிலின் போது தமிழ்தாய் வாழ்த்தை போட்டிருந்தார்கள். நான் மட்டுமே நின்று கொண்டிருந்தேன். //
ஹாட்ஸ் ஓவ். நான் கூட இதை செய்திருப்பேனோ தெரியாது.

இது தமிழ் said...

//பெரிய ப்ரச்சனைகளே இல்லாமல் வாழ்க்கையை ஓட்டுவதுமாய் காட்டியிருப்பதை பார்த்தால் ஸ்கூலில் படிப்பு ஏறாமல் ஊரிலிருக்கும் சிறுவர்கள் எல்லாம் உடனடியாய் பஸ்சேறி சென்னைக்கு வ்ந்தால் செட்டிலாகிவிடலாம் என்று எண்ணம் தோன்றிவிடும் போலிருக்கிறது.//

ம்ம்.. எனக்கும் இதே தான் தோன்றியது.

- தினேஷ்.

Rajan said...

//பாசிட்டிவான விஷயங்களையும், சாதாரண தாத்தா, நட்பு செண்டிமெண்டையும் சொல்ல எபிசோட் எபிசோடான திரைக்கதையினால் ஒட்டாமல், அச்சிறுவர்களின் வாழ்க்கையை படம் பார்க்கும் நமக்குள் கடத்தாமல் போய் விடுகிறது. // நானும் நேற்று படம் பார்த்தேன். நான் நினைத்ததும் இதுதான்... நல்ல விமர்சனம்..

Vediyappan M said...

முதல் பாதி படிக்கும்போது படம் படு மொக்கை என்பதுபோல தெரிகிறது. நடுப்பகுதியில் படம் சூப்பர் என்பதுபோல தோன்றுகிறது. மீண்டும் கடைசியில் அந்த எண்ணம் உடைந்து விடுகிறது. படத்திலிருக்கும் திரைக்கதைப் பிரச்சினை உங்கள் விமர்சன நடையிலும் இருக்கும் என்று தோன்றுகிறது.

Ravikumar Tirupur said...

படம் செலவு குறைவு என்பதால் கணிசமாக ஓடினாலும் வெற்றிப்படம்தான்

சே.கு. said...

பொதுவாகவே எந்த ஒரு படைப்பு ஆனாலும் அதை படைத்தவனுக்கு அதில் பெருமை இருக்கவே செய்யும். அந்த படைப்பை யாராவது குறை சொன்னால் அவன் மனம் நோகும். எனவே படைப்பாளியை பாராட்டும் அதே நேரத்தில் விமர்சனத்தையும் நோகாமல் தரவேண்டும். ஆனால் மெரினா படத்திற்காக பாண்டிராஜை எவ்வளவு வேண்டுமானாலும் மட்டமாக விமர்சிக்கலாம். நாம எடுக்கிறத்தான் இவிங்க பார்க்கணும், இவிங்களுக்கு இதுக்கும் மேல எல்லாம் எடுத்தா புரியாது என்ற ஆணவமா அல்லது பசங்க படத்துடன் கைவசம் இருந்த சரக்கு எல்லாம் தீர்ந்த்விட்டதுதான் காரணமா எனத்தெரியவில்லை. மகா மட்டம். பொதுவாகவே நான் தியேட்டருக்கு போய் அதிகம் படம் பார்ப்பவனில்லை. ஆனால் மெரினாவுக்கு முதல் நாள் ஷோவிற்கே சென்றேன். நொந்தேன். இந்தப்படம் தோல்வியடைவதன்மூலம் மட்டுமே அடுத்த இயக்குனர்கள் பாடம் கற்றுக்கொள்ளமுடியும். இந்த்ப்படம் ஓரளவிற்கு வெற்றியடைந்தாலே இதுபோல நிறைய குறைபிரசவங்கள் அடிக்கடி நிகழும். ராஜபாட்டைக்கும் மெரினாவுக்கும் செம போட்டி, மட்டமான படங்களில் இடம்பிடிக்க.

Gunalan Lavanyan said...

’’டிஸ்கி: படம் ரோலிங் டைட்டிலின் போது தமிழ்தாய் வாழ்த்தை போட்டிருந்தார்கள். நான் மட்டுமே நின்று கொண்டிருந்தேன்.’’
- மத்தவைங்கள்லாம் தமிழைங்கெலா, திமிங்கிலங்கெலா...

Thava said...

என் இனிய வணக்கம்,
இப்ப இந்த படம் ரொம்ப நல்லா இருப்பதாகக சொல்லி நிறைய விமர்சனங்கள் வருது..ஆனால், வழக்கமா இந்த படமும் பார்க்க முடியுமானு சந்தேகம்தான்.
விமர்சனம் அருமை சார்..சிறப்பாக எழுதியுள்ளீகள்.

அலைகள் said...

padam parkalama vendama

சாவி said...

//பெரிய ப்ரச்சனைகளே இல்லாமல் வாழ்க்கையை ஓட்டுவதுமாய் காட்டியிருப்பதை பார்த்தால் ஸ்கூலில் படிப்பு ஏறாமல் ஊரிலிருக்கும் சிறுவர்கள் எல்லாம் உடனடியாய் பஸ்சேறி சென்னைக்கு வ்ந்தால் செட்டிலாகிவிடலாம் என்று எண்ணம் தோன்றிவிடும் போலிருக்கிறது.//

என்கிற படத்திலும் இப்படி சில காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்ததை இங்கே நினைவூட்டுகிறேன்.

தமிழ் சினிமா உலகம்

மெரினா: 03.02.2012 - திரைவிமர்சனம்!

சாவி said...

//பெரிய ப்ரச்சனைகளே இல்லாமல் வாழ்க்கையை ஓட்டுவதுமாய் காட்டியிருப்பதை பார்த்தால் ஸ்கூலில் படிப்பு ஏறாமல் ஊரிலிருக்கும் சிறுவர்கள் எல்லாம் உடனடியாய் பஸ்சேறி சென்னைக்கு வ்ந்தால் செட்டிலாகிவிடலாம் என்று எண்ணம் தோன்றிவிடும் போலிருக்கிறது.//

180 என்கிற Mega Hit படத்திலும் இப்படி சில காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்ததை இங்கே நினைவூட்டுகிறேன்.

தமிழ் சினிமா உலகம்

மெரினா: 03.02.2012 - திரைவிமர்சனம்!

Thamira said...

உங்களைப் பொறுத்தவரை இது ஒரு மோசமான விமர்சனம். நிறைய தடுமாற்றம் தெரிகிறது. எதையாவது பாராட்டியாகணுமே என்று மெனக்கெட்டு ஒரே விஷயத்தை 3 பாராக்களில் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

சிம்பிளான கதை, கதைக்கு முக்கியத்துவம் இல்லாமை- இவற்றைத்தான் நாம் பொதுவாக ’படத்தில் கதையே இல்லை’ என்று குறிப்பிடுவதுண்டு. சாம் ஆண்டர்சன், டாக்டர் சீனிவாசன் போன்றோர் படங்கள் கூட பிற விஷயங்களில்தான் கொஞ்சம் கோளாறு இருக்குமே தவிர ஒரு அடிப்படையான கதை என்ற ஒரு விஷயத்தை செய்திருக்கத்தான் செய்வார்கள். ஆனால் நான் பார்த்தவரை கதையே இல்லாமல், அது எதற்கு என்ற அலட்சியத்துடன் எடுக்கப்பட்ட முதல் தமிழ்ப்படம் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

இசையைப்பற்றிய அறிவில்லாத எனக்கே இவ்வளவு மகா மட்டமான ஒரு பின்னணி இசை இதற்கு முன் எந்தப்படத்திலும் வந்திருக்குமா என்று தோன்றியது.

ஒன்றிரண்டு நகைச்சுவை, வசனங்களுக்காக மட்டுமே மொத்த படத்தையும் என்னால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

மொத்தத்தில் திராபை.

Cable சங்கர் said...

ஆதி.. பாண்டியராஜ் ஏதோ ஒலக படம் எடுத்திருக்கார்ன்னு சொன்னாய்ங்களேன்னு யோசிச்சு யோசிச்சு எழுதுன விமர்சனம். அதான் நிறைய மொக்கை வாங்கியிருக்கேன்னு நினைக்கிறேன் .நீர் இலக்கியவாதி.. அதனால.. சட்டுன்னு சொல்லிட்டீரு..:))

திருநெல்வேலி வெங்கட்ராமன் said...
This comment has been removed by the author.
திருநெல்வேலி வெங்கட்ராமன் said...

நல்ல விமர்சனம் சார், டைம்பாசுக்காக நாம் சென்று வரும் மெரினாவில் பாஸாககவேண்டிய பலபேரின் வாழ்க்கை உள்ளது என்பதை படம் பிடித்த் காட்டிய இயக்குனர் பாண்டியராஜின் முயற்சிக்கும் அதையும் வேறு ஒரு தயாரிப்பாளரின் தலையில் கட்டமால் தானே ரிஸ்க் எடுத்து தயாரித்து வெளியிட்டதற்கும் மனமார்ந்த பாரட்டுக்கள் சொல்லலாம்,