தோனி
மனைவியை இழந்து, தன் இரண்டு குழந்தைகளோடு, ஒரு மிடில் க்ளாஸ் குடும்பஸ்தனின் அத்துனை அவஸ்தைகளோடு வாழ்க்கையை நடத்தும் சாதாரணன். பெண் சூட்டிகை. பையன் படிப்பில் மந்தம். ஆனால் கிரிக்கெட்டில் படு ஷார்ப். விளையாட்டு முக்கியமில்லை படிப்புத்தான் முக்கியம் என்று நினைக்கும் மிடில் க்ளாஸ் மெண்டாலிட்டியும், நூறு சதவிகித ரிசல்டுக்காக பையனை எதற்கு உதவாதவன் என்று சொல்லி வேறு ஸ்கூலுக்கு மாற்ற சொல்லவும், டெஷனாகி தன் மகனை முதல் முறையாய் அடிக்கிறார். அந்த அடி அவரின் வாழ்க்கையை திருப்பிப் போடுகிறது. அதன் மூலம் வாழ்கையின இன்னொரு பக்கத்தை, நம்முடைய கல்வி முறை எவ்வளவு தூரம் குழந்தைகளுக்கும், பெற்றோர்களுக்கும் சுமையாய் மாறியிருக்கிறது? இந்த சமூகம் அக்குழந்தைகளின் எதிர்காலத்தை எதை வைத்து நிர்ணையிக்கிறது என்பது தான் கதை.
கதையைக் கேட்டதும் ஏதோ பிரசாரப் படமாய் இருக்குமோ என்ற எண்ணம் தோன்றுவதை தவிர்க்க முடியாது. ஆனால் கொஞ்சமும் பிரசாரமில்லாமல், எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொண்டு தனக்கென சுயமில்லாமல் வாழ்க்கையை ஓட்டும் ஒரு மிடில் க்ளாஸ் மனிதர்களின் உள்ள குமுறலை மிக அழகாக சொல்லியிருக்கிறார்கள். தன் குழந்தைகளுக்கு சொத்து சேர்த்து வைக்க முடியவிட்டாலும், நல்ல கல்வியை தருவதற்காக தன் சக்திக்கு மீறிய பள்ளியில் படிக்க வைக்க, துண்டு விழும் பட்ஜெட்டை சமாளிக்க ஊறுகாய் விற்று சமாளிக்கும் சாமானியனை, அய்யோ பிள்ளையை புரிந்து கொள்ளாமல் இப்படி செய்துவிட்டோமே என்று குமுறி அழுது மன்னிப்புக் கேட்கும் பாசமுள்ள தகப்பனை, ப்ரச்சனை என்று வந்த பிறகு எழுந்து போராடும் ஒரு குடும்பத்தலைவனை கண் முன் உலாவ விட்டிருக்கிறார் ப்ரகாஷ்ராஜ் தன் நடிப்பின் மூலம்.

நீயா நானா நிகழ்ச்சியில் பேசுவதற்காக அழைத்தவுடன் மீடியாவின் வெளிச்சமே படாமல் இருக்கும் ப்ரகாஷ் வெட்கத்துடன் ஆரம்பிக்க, ப்ரச்சனையைப் பற்றி பேச்சு திரும்பியவுடன், தான் எங்கு இருக்கிறோமென்ற ஒரு உணர்வையும் மீறி உணர்ச்சிவசப்பட்டு, ஆசிரியர், பள்ளி, சமூகம் என எல்லாவற்றையும் சாடி இதனால் தன் மகனின் இன்றைய நிலையைச் சொல்லி அநாதரவாய் அழும் காட்சியில் நெகிழாமல் இருப்பவர்களை விரல்விட்டு எண்ணி விடலாம்.
பக்கத்து ப்ளாட் ராதிகா அப்தேவின் துணி மூட்டையில் தன் ஜட்டி மாட்டிக் கொண்டதும், அதை எப்படி கேட்பது என்று அல்லாடி, காமெடி செய்யுமிடத்தில், மிக எதார்த்தமாய் அறிமுகமாகும் ராதிகாவின் கேரக்டரை , அப்படியே தடாலடியாய் கால் கேர்ளாக வெளிப்படுத்துமிடத்தில் தூக்கி வாறிப் போடுகிறது. ஆனால் அவரின் கேரக்டருக்கு நியாயம் கற்பிக்காமல், யதார்த்தமாய் காரணம் சொல்லி, அதை உறுத்தாமல் நகர்த்தியிருப்பது இயக்குனரின் சாமர்த்தியம். என்னா கண்ணுடா இந்த பொண்ணுக்கு… இவரிடம் நடிப்பை வாங்க இன்னும் படம் வரவில்லை என்றே சொல்ல வேண்டும் இந்தப் படம் உள்பட.
பிரபு தேவா நட்பிற்காக ஒரு பாடலில் கடவுளாய் வருகிறார். ப்ரம்மானந்தம், சிங்கமுத்து, பசங்க சிவகுமார், தணிகல பரணி, நாசர் மேலும் ஒன்றிரண்டு தெலுங்கு பட பிரபல கேரக்டர் ஆர்டிஸ்டுகள் என எல்லோரும் தங்கள் பாத்திரங்களை உணர்ந்து செய்திருக்கிறார்கள்.

கே.வி.குகனின் ஒளிப்பதிவு உறுத்தலில்லாமல் கதையோடு பயணிக்கிறது. பத்திரிக்கையாளர் த.செ. ஞானவேலின் வசனம் படத்திற்கு பெரிய பலம். பத்திரிக்கையாளர் என்பதால் சமூக கோபமும், சாமானியனின் இயலாமமை கலந்த வசனங்கள் நம்மை மேலும் படத்தோடு இணைந்து பயணப்பட ஏதுவாயிருக்கிறது. மகேஷ் மஞ்ச்ரேக்கரின் மராத்தி படத்தின் ரீமேக் தான். இசை இளையராஜாவாம். பாடல்களில் பெரிதாய் ஏதுமில்லை. ஏற்கனவே கேட்ட விஷயமாய்த்தான் இருக்கிறது. ”வாங்கும் பணத்துக்கும்” ”சின்னக் கண்ணிலே” பாடல் மட்டும் ரொம்பவே சுமாரன கேட்கும் ரகம். ராஜா வழக்கமாய் பின்னணியில் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். நிறைய ரிப்பிட்டீஷன்கள். இன்னும் இன்னும் நிறையவே எதிர்பார்க்கிறோம் ராஜா உங்களிடமிருந்து.
படத்தின் மைனஸ் என்றால் நாடகத்தனமான திரைக்கதை. கதையை ஜாலியாய் கொண்டு போக திணிக்கப்பட்ட கேரக்டர்கள் மூலம் பேசப்படும் ஜோக்குளை பேசும் காட்சிகள். நாடகத்தனங்களின் உச்சமாய் பைனான்ஸ் செய்யும் அஞ்சு வட்டி கனி தடாலடியாய் உருக்கமாய் வசனம் பேசி காமெடி பீஸாய் மாறுவது, க்ளைமாக்ஸ் ட்ராமா போன்ற ஒரு சில சின்னச் சின்ன குறைகளைத் தவிர, முழுவதுமாய் ஸ்கோர் செய்திருக்கிறார் இயக்குனர் ப்ரகாஷ்ராஜ்.
என்னதான் சமூகத்தையும், பள்ளிகளின் ஆட்டிட்டியூடையும் நாம் குறை சொன்னாலும், வெறும் கிரிக்கெட்டோ, அல்லது,மற்ற திறமைகளோ தங்கள் குழந்தைகளுக்கு சோறு போடாது என்ற நிதர்சனத்தை எதிர்க் கொள்ளும் போது இவ்வளவு சீரியஸாய் பேசுவது கொஞ்சம் ஓவராய் தெரிந்தாலும், இப்படி அடி மேல் அடி வைத்தால்தான் அம்மியும் நகருமென்பதால் அடி கொடுத்திருப்பதும் நல்லதுக்கே. அதை முதல்வர் கேரக்டர் பேசும் வசனம் மூலம் மாற்றம் நிச்சயம் வருமென்ற நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறார்கள். மாற்றமென்பது கேட்டால் மட்டுமே கிடைக்கும். இப்போது கேட்க ஆரம்பித்திருக்கிறார்கள் இனி கேட்கக் கேட்க நிச்சயம் கிடைக்கும்.
தனக்கு கணக்குத்தான் வரவில்லையே தவிர கிரிக்கெட் எவ்வளவு வரும் என்பதை சொல்ல டோனியின் கேரக்டர் ரெக்கார்டை சொல்லுமிடத்திலும், நீயா நானா நிகழ்ச்சி காட்சி, ராதிகாவுக்கும் உனக்கும் ஏதாவதா? என்று ரவுடி கனி அவ்வப்போது கண்களாலேயே கேட்கும் காட்சி, ஸ்கூலில் பதினேழாம் வாய்ப்பாடு பற்றி டீச்சரிடம் கேட்டு பதில் சொல்லாததால் பெஞ்சு மேல் நிற்கச் சொல்லுமிடம், கோமாவிலிருக்கும் மகனிடம் மன்னிப்பு கேட்டு உருகுமிடமென்று நெகிழ வைக்கும் பல விஷயங்களை மிக அழகாக கையாண்டிருக்கிறார் ப்ரகாஷ்ராஜ்.
தோனி- நிஜமாகவே நாட் அவுட்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்
Comments
இந்த லைனில் கடந்த மூன்று மாதத்தில் வரும் மூன்றாவது படம் இது, மற்ற இரண்டு "மயக்கம் என்ன?" & நண்பன்
அப்ப அஞ்சலி கதி? :)))
***
நிச்சயம் பார்க்க வேண்டிய படம் தான். விரைவில் பார்ப்பேன்
பாடல்களுக்கான சூழல்களைப் பாருங்கள்…
பொருளாதார கஷ்டம். ஆனால் பருவம் காத்திருக்குமா… தாயில்லாத மகள் வயசுக்கு வந்துவிடுகிறாள். தந்தைக்கு அவசரமாக தகவல் போகிறது பக்கத்து வீட்டிலிருந்து. விஷயம் தெரியாமல் அரக்கப் பரக்க வரும் அப்பாவுக்கு விஷயத்தைச் சொல்கிறார்கள். பெரும் தவிப்பு, கவலை, பாசத்துடன் கதவோரமாய் எட்டிப் பார்க்கிறார்… வெள்ளந்தியான ஒரு பூ மாதிரி உட்கார்ந்திருக்கும் மகள் மீது அவர் பார்வை பதிய… ஒரு இசைமேகம் மெதுவாக பொழிய ஆரம்பிக்கிறது… மளுக்கென்று கண்ணீர் எட்டிப் பார்க்கிறது நம் கண்களில்… அதுவே ‘வெளையாட்டா படகோட்டி…’ என பருவமடைந்த மகளுக்கான தாலாட்டாய் நீள்கிறது. ராஜாவின் மிகச் சிறந்த பாடல்களில் நிச்சயம் இதற்கும் இடமுண்டு!
நினைவின்றி வீல்சேரில் மகன்… அய்யோ மகனைப் புரிந்து கொள்ளாமல் அடித்துவிட்டோமே என்ற ஆற்றாமை… காயப்பட்ட ஒரு நெஞ்சுக்கு ஆறுதலாய்… ‘தாவித் தாவி போகும் மேகம்…’ என இசைஞானி பாட, மனம் எல்லையற்ற பரவசத்தில் தளும்புகிறது.
இசையிலிருந்து எந்தக் காட்சியையும் பிரித்துப்பார்க்க முடியாத அளவு அப்படி நெய்திருக்கிறார் பின்னணி இசையை. படிக்க மறுத்த மகனை திட்டும்போது வேக வேகமாக உச்சத்துக்குப்போகும் இசை, அவன் அடிபட்டு மருத்துவமனையில் கிடக்கும்போது, கதறுகிறது… கண்ணீர் வடிக்கிறது. இந்த காட்சிகளில் ஒரு சின்ன வார்த்தை கூட கிடையாது. இயக்குநர், வசனகர்த்தா என அத்தனை பேரையும் ‘கொஞ்சம் சும்மா இருங்க’ என சொல்லிவிட்டு இசை ஆட்சி செய்கிறது!
2012-ம் ஆண்டின் துவக்கம் மிக மிக அருமையாய் அமைந்திருக்கிறது தமிழ் சினிமா இசைக்கு
"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"
"படத்தின் மைனஸ் என்றால் நாடகத்தனமான திரைக்கதை. "
முரணான தர்ம விமர்சனம் . . .
படம் எப்படியோ . . .
உங்க விமர்சனம் ரன் அவுட்
நன்றி
Disappointed with such silly mistakes.
பெற்றோர்களும் ஆசிரியர்களும் பார்க்க வேண்டிய படம். ஆனால் பள்ளிப் படிப்பில் உள்ள பிள்ளைகளுக்கு உகந்த படமாகத் தெரியவில்லை.
ஐந்தாம் வகுப்புப் படிக்கும் எங்கள் பாப்பாவிடம் 17 x 8 எவ்வளவு என்று கேட்டேன். அவள் சத்தமாக, 8 x 10 = 80; 8 x 7 = 56; 80 + 56 = 136 என்றாள். (இவளை எந்தப் படத்துக்கும் கூட்டிக்கொண்டு போகாமல் இருந்ததில்லை. இந்தப் படத்தையும் காட்டுவோம்தான்.) இந்தப் படம் இவளுக்கு எதிர்மறை உணர்வுகளை உண்டாக்கிவிட்டால் என்ன செய்வது என்கிற கவலை எனக்குள் எழாமல் இல்லை.
ஆனால் இது சினிமாக் காரர்களின் ஈகோவுக்குப் பொருத்தமான படம். படிப்பறிவால் அல்ல, திறமைகளால் பிழைப்பவர்கள் அவர்கள். 'வெளிச்சொல்ல முடியாத சம்பாத்தியம் அல்ல, பிள்ளைகளைச் சிறந்த பள்ளிகளில் படிக்க வைக்கிறோம் என்பதே மதிக்கப்பட வேண்டியது' என்பதும் அவர்களுக்குப் பொருந்த வருவதுதான்.
'படிக்கிற பிள்ளைகள் படிக்கட்டும்; படிக்காத பிள்ளைகளை வேறு திறமைகளில் பழக்குங்கள்' என்று தெளிவுபடுத்தியிருக்க வேண்டும். கல்வியாளர்கள் அப்படி என்றால் திறமைசாலிகள் (சினிமாக் காரர்கள்) இப்படி! முயலுக்கு மூணுகாலுதான்.
Isai Ilayarajavaam........trying to be sarcastic, uh?
முதன்முறையாக உங்கள் விமர்சனத்தில் இருந்து முரண்படுகிறேன்.
இந்த படத்துக்கு இவ்வளவு பாராட்டு கொஞ்சம் அதிர்ச்சியாக இருக்கிறது.
//நிச்சயமாக நாட் அவுட்/////அருமை!!