Thottal Thodarum

Feb 26, 2012

காதல் பாதை, விருதுநகர் சந்திப்பு, உடும்பன்

சினிமா விமர்சனங்கள் என்று வரும் போது நான் ஒவ்வொரு படத்தையும் சீரியசாய் விமர்சித்தே பழக்கம். ஆனால் சமீப காலமாய் வரும் சின்ன பட்ஜெட் படங்கள் எல்லாம் படு சொதப்பலாய் அமைந்து விடுகிறது. படங்கள் ஓடவில்லை. சினிமா செத்துவிட்டது என்ற கூக்குரல் ஒலிக்கும் போதெல்லாம் கொஞ்சம் கவலையாய்த்தானிருக்கிறது என்றாலும், இம்மாதிரி படங்களை பார்க்கும் மக்கள் அடுத்து வெளியாகும் சின்ன பட்ஜெட் படங்கள் என்றாலே அஸ்தியில் ஜுரம் வந்து, தியேட்டருக்கு போகாமல் இருப்பதில் ஒன்றும் ஆச்சர்யமில்லை என்றே சொல்ல வேண்டும்.



விருதுநகர் சந்திப்பு
image_thumb[2] 
இந்தப் படத்தைப் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை. பட்ஜெட் என்றால் அவ்வளவு குறுகிய பட்ஜெட் என்று ஒவ்வொரு ப்ரேமிலும் தெரிகிறது.  அரத பழசான கதை. அதை விட பழமையான திரைக்கதை. டெம்ப்ளேட் பாடல்கள். அப்பா ஜெயில் பத்து வருஷத்துக்கு மேல் இருப்பதை பற்றி மகளுக்கு தெரியவே தெரியாதாம். ஆனால் ஊரே பயப்படுமாம். இது ஒரு சாம்பிள் லாஜிக் மிஸ். இப்படி பல சொதப்பல்கள் காரணமாய் படு மொக்கையாய் இருந்தாலும் முழுசாய் படம் பார்க்கும் நான் நொந்து போய் எழுந்து வந்த மிகச் சில படங்களில் ஒன்றாய் அமைந்தது.


உடும்பன்
Udumban Stills

நாட்டில் நடக்கும் கல்விக் கொள்ளையை பற்றிக் கிண்டலாய் சொல்லும் கதை. ஆனால் அதை சொன்ன விதத்தில் தான் படு அமெச்சூர் தனம். கன்னம் வைத்து கொள்ளையடிப்பதை விட, பள்ளிக்கூடம் திறந்தால் வெளிப்படையாய் கொள்ளையடிக்கலாம் என்பதை ஆணித்தரமாய் சொன்னவர்கள். அதற்கான திரைக்கதை, மற்றும் இத்யாதிகளையும் ஓரளவுக்கு சரியாய் சொல்லியிருந்தார்களானால் வெற்றி பெற்றிருப்பார்கள். சாதாரண திருட்டு கேஸில் ஜெயிலுக்கு போய் வரும் காலத்தில் சாதாரண பள்ளி, அரணமனைப் போன்ற பள்ளியாக மாறியதும், கண்ணாடி போட்டால் ஒர் கெட்டப், கண்ணாடி போடாவிட்டால் ஒரு கெட்டப் என்பது தான் மாறு வேஷம் என்று அவர்கள் நம்பியதுமில்லாமல், அதை மக்களிடம் நம்ப வைக்கவும் ஒரு காட்சியில் பிரயத்தனப் பட்ட விஷயத்தை பார்க்கும் போது பாவமாய் இருக்கிறது. காமெடி என்கிற பெயரில் ஒருவர் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருக்கிறார். முடியல. ஒரு இன்ஸ்பெக்டர் திருடன் வீட்டின் அருகிலேயே இருப்பது, போன்ற சுவாரஸ்யங்கள் ஓகே. இவ்வளவுக்கும் நடுவே மேல் பார்வை பார்த்தபடி ஒரு அண்ணன் கேரக்டர் வருகிறார். அவர் தான் வில்லனாம் தாங்கலைடா சாமி. உடும்பை வைத்து ஒரு ஷாட்டில் கயிறு கட்டி ஏறவும், க்ளைமாக்ஸில் உடும்புக் கறி சமைக்கும் காட்சிக்கும், ஹீரோவுக்கு உடும்பன் என்று கூப்பிடுவதற்கும் மட்டுமே அந்த சிஜி உடும்பு பயன்பட்டிருக்கிறது.


காதல் பாதை.
Kaadhal Paadhai (44)
காதலுக்கு கண்ணில்லை. அதற்கு ஏழை பணக்காரன் என்கிற பாகு பாடு இல்லை என்பது போன்ற தொல்பொருள் ஆய்வுக்கு உட்பட்ட கதைக் களன். காதலியை சைக்கிளிலேயே கொடைக்கானலில் இருந்து ஆக்ராவுக்கு அழைத்துச் செல்கிறான். அவள் ஆசைப்பட்டாள் என்பதற்காக. அவள் ஆசைப்பட்டாள் என்பது கூட க்ளைமாக்ஸில் தான் தெரிய வருகிறது.  இவர்கள் காதலுக்கு வில்லனாய் பெண்ணின் அப்பா, பின்பு ஒரு ரவுடி என ஹைவேஸில் டீசல் போட்டு துரத்துகிறார்கள். ஹீரோவின் அப்பாவாக மன்சூர் அலிகான். செருப்பு தைக்கும் குடிகார மன்சூர் எப்பப் பார்த்தாலும் ஷேக்ஸ்பியரை உதாரணம் சொல்லி பேசிக் கொண்டேயிருக்கிறார். முடியலை.  சரி இவர் தான் பேசுகிறார் என்றால் ஆளாளுக்கு பேசிப் பேசி மாய்கிறார்கள். ஹீரோ ரொம்ப நல்லவன் என்பதைக் காட்ட இதை விட புதிதாய் காட்சிகளை யாரும் யோசித்து விட முடியாது.

படத்தின் ஒரே ஆறுதல் ரவி ஸ்ரீநிவாஸின் ஒளிப்பதிவு. சோனி ஈ.எக்ஸ்.த்ரீ டிஜிட்டல் கேமராவில் படம்பிடித்திருக்கிறார்கள். துல்லியம். கொடைக்கானல் காட்சிகளாகட்டும், இரவு நேரக் காட்சிகளாகட்டும் நல்ல உழைப்பு. குறையாய் சொன்னால் ஒரு சில ப்ளீச் காட்சிகள், மற்றும் சில வைட் ஷாட்டுகள் என்று சொல்ல வேண்டும். ஹீரோயின் புதுமுகம். அழகாய் இருக்கிறார். சிவகுமார் என்கிற பிரபல டிவி நடிகர் வீணடிக்கப்பட்டிருக்கிறார். எஸ்.எஸ்.குமரனின் இசையைப் பற்றி பெரிதாய் சொல்ல முடியவில்லை.  
கேபிள் சங்கர்

Post a Comment

9 comments:

Anonymous said...

அம்புடுதேன். நீங்க மூணு படத்தையும் ஒரே பதிவுல விமர்சித்துவிட்டீர்கள். நான் அதை இரண்டு நிமிஷத்துல படிச்சு முடிச்சுட்டேன்.முடிஞ்சு போச்சு. நாட்டுல 90% மேல மக்களுக்கு இப்படி படம் வந்ததே தெரிஞ்சு இருக்காது. மூணு தோல்விப்படம் இந்த வருஷ கணக்குல.விளங்கிரும் த.சினிமா!

sugi said...

எப்படி தான் டைம் கிடைக்குதோ ஷங்கர் உங்களுக்கு?

முரளிகண்ணன் said...

தங்கள் சேவை எங்களுக்குத் தேவை

Krishna said...

Unga Kadamaiya ninaitha kaan kalungathu
Really you are "Karma Yogi"

Krishna said...

Unga Kadamaiya ninaitha kaan kalungathu
Really you are "Karma Yogi"

Sivakumar said...

சகிப்புத்தன்மையின் எவரஸ்டே வாழி!!

arul said...

hi sagipputhanmai ungalukku romba athigam

Ravikumar Tirupur said...

ரொம்ப அருமை சார். இந்த படங்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டுமென்று நினைத்துக்கொண்டே இருந்தேன் அது உங்களால் நிறைவேறியது போங்கள்...

aotspr said...

விமர்சனம் நன்று....


"நன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com"