சின்ன படங்கள் பல சமயங்களில் கண்களிலேயே படாமல் போய்க் கொண்டிருந்த காலத்தில் பளிச்சென்ற போஸ்டர்கள் அடிக்கடி கண்களில் படும்படியாய் ஒட்டி என்ன படம் இது என்ற ஆர்வத்தை ஏற்படுத்திய வகையில் மீராவுடன் கிருஷ்ணாவுக்கு வெற்றி என்றே சொல்ல வேண்டும்.
தனக்கு என்ன வரும் என்று தெரியாமல் நவரசங்களையும் பிழிய தயாராய் இருக்கும் புதுமுக இயக்குன நடிகர்கள் மத்தியில் தனக்கென்ன வரும் என்பதை ஓரளவுக்கு புரிந்து கொண்டு பாட்டுப் பாடாமல், பறந்து பறந்து சண்டைப் போடாமல் இருந்ததற்கே இயக்குனர் நடிகர் கிருஷ்ணாவுக்கு நன்றி சொல்ல வேண்டும்.சமூகத்தில் வெகுவாய் நடக்கும் கள்ளக்காதல் ப்ரச்சனை. மற்றும் சந்தேக வியாதியைப் பற்றிய களம் தான். ரொம்பவும் சீரியஸான கதை களனை மிக சிம்பிளாக பாக்யராஜ் தனமாய் சொல்ல முயற்சித்திருக்கிறார். தன் சிறு வயது ஆதர்ச நாயகனான தமிழ் வாத்தியாரின் வாழ்க்கை அவரது மனைவியின் துரோகத்தால் நசிந்து, பைத்தியக்காரனாகி திரிந்து இறந்து போனதால் ஹீரோ சந்தேகபுத்தியுடன் வளர, அதில் நெய்யூற்றியது போல அவர் திருமணம் செய்யும் பெண்ணைப் பற்றி அநாமதேய கால் வர ப்ரச்சனை பூதாகாரமாகிறது. அம்மா மீது மிகுந்த பாசம் வைத்திருக்கும் அவனால் மனைவியை ஏதும் செய்ய முடியவில்லை. இச்சமயத்தில் மனைவி கர்ப்பம் ஆகிறாள். அது தன் குழந்தை இல்லை என்று அதை அழிக்க முயற்சிக்கிறான் பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை.
நடிப்பு என்று பார்த்தால் ஓரளவுக்கு ஓகே தான். அடிக்கடி கிருஷ்ணா கண்ணாடியில் பார்த்து பேசுவது ஆரம்பத்தில் நன்றாக இருந்தாலும் போகப் போக போர் அடிக்கிறது. திரும்பத் திரும்ப ஹீரோ, ஹீரோயின், ஒரு காமெடியன் என்று வருவதாலும், சொன்னதையே சொல்லிக் கொண்டிருப்பதனாலும் ஜவ்வாய் இழுக்கத்தான் செய்கிறது. கதாநாயகி ப்ளம்மாக இருக்கிறார். ஓரிரு இடங்களில் முகத்தில் தெரியும் குறும்பு ஓகே. மற்றபடி படத்தில் கிருஷ்ணாவை சமாளிக்கு வேலையை சரியாய் செய்கிறார். கிருஷ்ணாவின் நடிப்பில், பாக்யராஜ், விஜயகாந்த் என்று பல பேரின் கலவையாய் இருக்கிறார். சில இடங்களில் மிமிக்கிரி செய்கிறார். கொஞ்சம் சிவாஜி போல அழுகிறார். முக்கியமாய் நம்மை இம்சை படுத்தாமல் நடிக்கிறார்.
இம்மாதிரி குறையெல்லாம் மீறி, டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் எடுக்கப்பட்ட, இத்திரைப்படத்தில் நல்ல விஷயங்களை சொலும் சிறந்த காட்சிகள் இருக்கவே செய்கிறது. ஆனால் அவை சரியாய் முன்வைக்கப்படவில்லை என்றே சொல்ல வேண்டும். முக்கியமாய் நண்பனின் மனைவி துரோகம் செய்வதை கண்டு பிடித்து, அதற்கு காரணமான விஷயத்தை சொல்லி, திருத்தும் இடம். அனாதை பிணங்களை தன் உறவாய் நினைத்து ஈடுகாட்டு செலவையும், காரியத்தையும் செய்வதற்கான காரணம் போன்ற காட்சிகளை சொல்லலாம். ஒளிப்பதிவும், இசை எல்லாமே படத்திற்கு பலமாய் இருந்திருக்கிறது. இரண்டாவது பாதியில் வரும் கணவன் மனைவிக்கான ப்ரச்சனைகளை வைத்து வரும் பாடல் நன்றாக இருக்கிறது. யாரிடமும் உதவியாளராய் இல்லாமல் தனக்கு தெரிந்ததை வைத்து படத்தை எழுதி தயாரித்து இயக்கியிருக்கும் கிருஷ்ணாவிற்கு அடுத்தடுத்த படங்களில் சினிமாவின் நான்சென்ஸுகளை தெரிந்து கொண்டுவிடுவார் என்றே தோன்றுகிறது. திரும்பத்திரும்ப நான்கு பேரை மட்டுமே வைத்துக் கொண்டு காட்சிகள் நகர்வதால் சலிப்புத் தட்டுவதும், பெரிய ட்விஸ்டு ஏதுமில்லாத திரைக்கதையால் இரண்டு மணி நேரப்படம் நிரம்ப நேரம் ஓடுவதாய் ஃபீல் வருவதையும் தவிர்க்க முடியவில்லை. கொஞ்சம் திரைக்கதையில் பட்டி பார்த்து டிங்கரிங் செய்து செப்பனிடப்பட்டிருந்தால் பழைய பாக்யராஜ் படம் பார்த்த திருப்தி கிடைத்திருக்கும்.
கேபிள் சங்கர்
Post a Comment
3 comments:
கணவன் மனைவி பிரச்னையை உளவியல் ரீதியா அணுகும் படங்கள் வர்றதில்லை...அப்படியே வந்தாலும் நீங்க சொல்றமாதிரி கொஞ்சம் கவனமில்லாம எடுத்துர்றாங்க!
//,, இயக்கியிருக்கும் கிருஷ்ணாவிற்கு அடுத்தடுத்த படங்களில் சினிமாவின் நான்சென்ஸுகளை தெரிந்து கொண்டுவிடுவார் என்றே..// சொல்ல வந்தது ‘nuances' என்று நினைக்கிறேன்! இல்லை ஏதேனும் உள்குத்தா? - ஜெ.
//,, இயக்கியிருக்கும் கிருஷ்ணாவிற்கு அடுத்தடுத்த படங்களில் சினிமாவின் நான்சென்ஸுகளை தெரிந்து கொண்டுவிடுவார் என்றே..// சொல்ல வந்தது ‘nuances' என்று நினைக்கிறேன்! இல்லை ஏதேனும் உள்குத்தா? - ஜெ.
Post a Comment