சாப்பாட்டுக்கடை - இட்லி விலாஸ்
தமிழனின் பாரம்பரிய உணவு. அதுவும் தென்னிந்திய உணவுகளில் மிகவும் பாதுகாப்பான, சுவையான, உடனடியாய் தயாரிக்கக்கூடிய, வேக வைத்த, உடல் நலத்திற்கு உகந்த என்று எல்லாவிதமான பாஸிட்டிவ் ரெகமெண்டேஷன்களை கொண்ட ஒரு அயிட்டம். தென்னிந்தியர்களுக்கு அவர்கள் வாழ்வில் ஒரு அங்கமான ஒன்று என்று தான் சொல்ல வேண்டும். இதைப் பிடிக்காதவர்கள் கூட வாழ்வில் ஏதேனும் ஒர் நிலையில் சாப்பிட்டுத்தான் இருப்பார்கள். சைடிஷ் ஏதுமில்லாமல் ஆரம்பித்து, சாம்பார், சட்னிகள், மிளகாய்ப் பொடி, நெய், எண்ணெய், நல்லெண்ணெய், மிளகாய் பொடியில் முழுக்க, அழுத்தி ஒர் அமுக்கில், சிக்கன், மட்டன், மீன், எரா, என்று நான் வெஜ் குழம்புகளுடன் வரிசைக்கட்டி குழைத்தடிக்கும் பாரம்பரியம் உள்ள தமிழனான நமக்கு இட்லி விலாஸ் என்ற பெயரைப் பார்த்ததும் ஏழாம் அறிவு போதிதர்மனின் தமிழுணர்வு பொங்க,ஆர்வம் தாங்காமல் கடைக்குள் நுழைந்தோம்.
ராத்திரி பத்தரை மணிக்கு இருந்த கூட்டமே கடையின் பெருமையை பறைச்சாற்ற, வாசலில் இருந்த போர்டு ஆனந்த அதிர்ச்சியை கொடுத்தது. பில்டர் காபி பத்து ரூபாய். மினி 5 ரூபாய். மினியே 25 கொடுக்கும் அண்ணாச்சியின் கடைக்கு பக்கத்தில், அதுவும் பில்டர் காபியின் சுவையை உள்நாக்கிலேயே வைத்துக் கொண்டலையும் மயிலாப்பூர்காரர்களின் இடத்தில் இந்த விலைக்கு தைரியமாய் போட்டிருக்கிறார்கள் என்றால் நிச்சயம் சபாஷ் சரியான போட்டிதான் என்று நினைத்தபடியே உள்ளே சென்று அமர்தோம்.
சின்ன இடம்தான். ஆனால் அம்சமாய் செட் செய்திருந்தார்கள். ஏசியோடு. உட்கார்ந்த மாத்திரத்தில் இலை போட்டு, தேங்காய், பொட்டுக்கடலை, புதினா, கார சட்னி வகைகளை வரிசையாய் வைத்துவிட்டு, என்ன வேண்டுமென கேட்டார் சப்ளையர். ‘வேறென்ன இட்லிதான்” என்று ஆளுக்கு ரெண்டு ஆர்டர் செய்துவிட்டு, சுத்தி எழுதப்பட்ட் மெனுக்களை படிக்க ஆரம்பித்தோம். அட அட அட இட்லியில் இத்தனை வகைகளா? என்று ஆச்சர்யப்படும் வகையில் இட்லி, காஞ்சிபுரம் இட்லி, நல்லெண்ணெய் இட்லி, ரவா இட்லி, குண்டூர் இட்லி, என்று லிஸ்ட் போய்க் கொண்டிருக்க, தோசை வகைகள், மசாலா தோசை வகைகள், ரவா, மற்றும் ஆனியன் தோசை வகைகள், நல்லெண்ணெய் தோசை, நெய், ஆலீவ் ஆயில் தோசைகள், வடை, ரசவடை, பூண்டு ரச வடை, சாம்பார் வடை, என்றொரு லிஸ்டு ஓட, இன்னொரு பக்கம் சப்ப்பாத்தி, சோளாபூரி, பொங்கல், கோதுமை ரவை பொங்கல் என்று புதிய லிஸ்ட் ஒன்று ஆரம்பித்திருக்க, இத்துணூண்டு ஹோட்டலில் இவ்வளவு அயிட்டங்களா? என்று வாய் பிளந்த சில நொடிகளில் சுடச்சுட ரெண்டு இட்லி இலையில் விழுந்தது. ஒரு விள்ளல் பிட்டு ஒவ்வொரு சட்னியாய் தோய்த்து, வாயில் வைத்ததும் கரைந்தது என்றால் மிகையில்லை. அம்மூட்டு சுவை என்றால் அம்மூட்டு சுவை. புளிக்காத, ரவையாய் இல்லாமல் அரைத்த மாவு இட்லி நன்றாக உள்ளங்கை அளவில் வாவ்...வாவ்.. கடைசி ரவுண்டுக்கு அந்த அரைத்துவிடப்பட்ட சாம்பாரில் ஒரு முக்கு முக்கி சாப்பிட்ட டேஸ்ட் போதாமல் இன்னொரு ரவுண்ட் சாம்பாரை மட்டும் ஒரு ஸ்பூன் குடிக்க வேண்டும் போல் இருந்தது. இட்லி கடை என்று பெயர் வைத்து ஒரு இட்லி முப்பது ரூபாய்க்கு விற்கும் கடையெல்லாம் பிச்சை எடுக்க வேண்டும். இந்த இட்லிக்கு. அடுத்து குண்டூர் இட்லி. முழு இட்லியை இட்லி மிளகாய்ப் பொடியில் தோய்த்தெடுத்து ரத்த சிவப்பில் லேசாய் அதன் கொத்துமல்லி அரைத்த பொடியையும் தூவி பச்சை இலையில் சிவப்பு பொட்டாய் வைக்கிறார்கள். கலரைப் பார்த்து காரமாய் இருக்குமோ என்று பயந்தவர்களுக்கு இன்பம். நல்ல காரத்தை எதிர்பார்த்த என் போன்ற ஆர்வலர்களுக்கு கொஞ்சம் இன்பக்குறைவுதான்.
அடுத்ததாய் நண்பர் வெண்பொங்கல் சாப்பிடலாமா என்று கேட்டார். பத்து மணிக்கு வெண்பொங்கல் என்றதும் சரி என்றேன். நல்ல அம்சமான கப்பில் நடுவில் நெய்யோடு, ஒரு துளி கறிவேப்பிலையில் ஒரு முந்திரியை அழுத்தியபடி கொடுத்தார்கள். கவிழ்த்து ஒரு வாய் போட்டேன். வாவ்..வாவ்.. வாவ்.. வழுக்கிக் கொண்டு உள்ளே போனது. திகட்டாத நெய்யோடு, அட்டகாசமாய் நன்றாய் நொறுக்கி வெந்திருந்த பொங்கல். நிஜமாகவே டிவைன் சார்.. டிவைன். அடுத்த பொங்கலாய் கோதுமை ரவை பொங்கலை சொன்னோம். வழக்கமாய் சுகர் காரர்கள் விரும்பாமல் சாப்பிடும் பொங்கல். ஒரு முறை சாப்பிட்டுப் பாருங்கள் இதை சாப்பிட்டு சுகர் வந்தால் தினம் சாப்பிடலாம் என்று சாப்பிடுவீர்கள். அப்புறமாய் ஒரு தோசையை வாங்கி ஆளுக்கு கொஞ்சம் டேஸ்ட் செய்து விட்டு நண்பர் ரோஸ்மில்க் ஆர்டர் செய்ய, நான் பில்டர்காபி என்றேன்.
ரோஸ்மில்க் எசென்ஸ் அதிகமில்லாமல் அற்புதமான பால் காம்பினேஷனில் இருப்பதாய் சொன்னார். நான் பில்டர் காபியை வாங்கி சுகர் ப்ரீ போட்டு ஆத்தும் போது கை தவறி கீழே கொட்டிவிட, நொந்து போய் பார்த்துக் கொண்டிருக்கும் போதே இன்னொரு கப் காபி வந்த்து. பரவாயில்லை சார் என்று தவறாய் கொட்டிய எனக்கு இலவச காபியை கொடுத்தார். கொஞ்சம் திக்னெஸ் குறைவாய் இருந்தாலும் நிஜமாகவே சூப்பர் பில்டர் காபி. சாப்பிட்ட வரையில் சுவையில் எனக்கு அவ்வளவாக பிடிக்காதது புதினா சட்னி. லேசாய் கசக்கிறது. அதே போல குண்டூர் இட்லியில் காரம் குறைவு. மற்றபடி மயிலாப்பூரில் இம்பூட்டு சுவையோடு ஒரு அட்டகாசமான் உணவகத்தை நிச்சயம் மிஸ் செய்யவே கூடாது. அதுவும் மிக மிக சகாய விலையில், நாலு இட்லி, ரெண்டு பொங்கல், ஒரு தோசை, ஒரு குண்டூர் இட்லி, ஒரு ரோஸ்மில்க், ஒரு காபி, எல்லாம் சேர்த்து பில் எவ்வளவு தெரியுமா? வெறும் இருநூறு ரூபாய்கள்தான்.
கேபிள் சங்கர்
இட்லி விலாஸ்
121, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை.
மியூசிக் அகாடமியின் எதிர்புறம்.
படங்கள் : கூட வந்து வாங்கிக் கொடுத்த நண்பர் இயக்குனர் கேபிபி.நவீன்.:))
Comments
நன்றி.
Ungalukku tifan vaangi kuduththu photo vera eduthu tharraanga :)
உடனே பெண்களிடமிருந்து வரும் கிண்டலான வார்த்தை,
// நாக்கை அறுத்து நாயிடம் போட; //
:)))
அப்ப டிவைன் மட்டும் சொன்னது எல்லாம் பொய்யா . .?
அண்ணே வவ்வால் அண்ணே எங்கண்ணே . .
நல்ல பகிர்வு
நன்றி
//
இட்டிளியில் இந்தனை வகைகளா ?
சாப்பாட்டுக்கடை அறிமுகத்திலேயே பயனுள்ள அறிமுகம் இது தான் , மலிவான விலையில் இருக்கும் ,தரமான உணவங்கள் தான் நமக்கு தேவை.
மினி காபி 5 ரூ நம்ப முடியாத விலை என்றே சொல்லலாம், சின்ன காபி கடையில் கிடைக்குது அது வேற ,உணவகமா நடத்தும் இடத்தில் ஆச்சரியம் தான்.
//நான் பில்டர் காபியை வாங்கி சுகர் ப்ரீ போட்டு ஆத்தும் போது //
இனிப்பு உடம்புக்காரர்னு வெளிச்சம் போட்டுக்காட்டிங்களே :-))
அதுவும் கீழ ஊத்தினதுக்கு இலவசமா மீண்டும் காபி கொடுத்தாங்களே அங்கே தான் கடைக்கார் நிக்கிறார் !
அனேகமா கடைக்காரர் எங்க மாவட்டமா இருக்கணும் :-))
எங்க ஊரில அப்படி கை தவறி ஊத்தி மீண்டும் கொடுத்து இருக்காங்க, சென்னையில அந்த நல்லக்குணம் இப்போ தான் கேள்விப்படுறேன்.
----
ஒரு டவுட்டு:
விலை எல்லாம் மலிவுன்னு சொல்றிங்க,ஆனாலும் 200 ரூ பில்லு வந்திருக்கே ,அப்போ காபி மட்டும் தான் மலிவா?
ஹி..ஹி கேள்விக்கேட்காம இருக்க முடியலை ...ஆர்வக்கோளாறு தான் போல!
---------
கு.பெ,
என்னை கோர்த்து விடணும்னு கங்கணம் கட்டிட்டு திறியறாப்போல தெரியுதே ?
ஏன் ...ஏன் இந்த கொல வெறி! ஏற்கனவே தலைவர் நெற்றிக்கண்ணை திறக்கலாமானு இருக்கார் , இதுல நீர் வேற ஊடால ஊதி விடுறீர், மி தி எஸ்கேப்பு :-))
//
நாலு இட்லி, ரெண்டு பொங்கல், ஒரு தோசை, ஒரு குண்டூர் இட்லி, ஒரு ரோஸ்மில்க், ஒரு காபி, எல்லாம் சேர்த்து பில் எவ்வளவு தெரியுமா? வெறும் இருநூறு ரூபாய்கள்தான்.
நான் எப்ப சென்னை வர்றது ? ம்யூஸிக் அகாடமி எதிர்ல போய் இட்லி சாப்பிடறது ??