Thottal Thodarum

Aug 31, 2012

சினிமா வியாபாரம் -2- என்று தணியும் இந்த ரிலீஸ் தாகம்

கடந்த சில வருடங்களுக்கு முன் எல்லோரும் பேசிக் கொண்டிருந்த, குற்றம் சாட்டிக் கொண்டிருந்த விஷயம் சிறு முதலீட்டு படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை. எல்லா தியேட்டர்களையும் முதல்வரின் குடும்பமே தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என்றார்கள். ஆனாலும் அன்றைய காலத்திலும் வாரத்திற்கு எட்டு படங்கள் எல்லாம் ரிலீஸாகிக் கொண்டுதானிருக்கிறது.  சரி அதுதான் ஆட்சி மாறிவிட்டதே சிறு முதலீட்டு படங்களுக்கு தியேட்டர் கிடைக்கிறதா? என்று கேட்பவர்களுக்கு, கிடைக்கிறது சென்ற ஆட்சியில் கிடைத்தது போலவே பெரிய படங்களுக்கு நடுவில் இரண்டு காட்சிகளோ, ஒரு காட்சியோ, அல்லது மொத்தமாய் ஒரு நாளோ ஓடுகிறார்ப் போல கிடைக்கிறது. சென்ற ஆட்சியில் ஒரு குடும்பமே ஆக்கிரமித்திருந்தது என்று சொன்னவர்கள் இன்று யாரைச் சொல்வது என்று புரியாமல் குழம்பிப் போய் இருக்கிறார்கள்


முன்பு உதயநிதி, கலைஞர், தயாநிதி, சன் என்று இவர்கள் தான் படமெடுத்து ரிலீஸ் செய்தார்கள். ஆனால் இன்றோ, அவர்களுக்கு பதிலாய் ஸ்டூடியோகிரீன், வேந்தர், சாக்ஸ், அய்யப்பன், அபிராமி மால், மீடியா ஒன் என்று பெரிய கம்பெனிகள் மட்டுமே தொடர்ந்து படம் வெளியிட்டுக் கொண்டிருக்கிறது. முன்பு குடும்பமாய் எடுத்தவர்களுக்கு பதிலாய் வேறு குடும்பம், வேறு குரூப் என்று மாறியிருக்கிறதே தவிர புதியதாய் ஏதும் நடந்துவிடவில்லை. இதைத்தான் அன்றைய பதிவுகளில் எழுதும் போது எல்லா காலகட்டத்திலும் யாராவது ஒரு நாலு பேர் தான் சினிமாவில் கோலோச்சிக் கொண்டிருப்பார்கள் என்று எழுதியிருந்தேன். 

சரி ரிலீஸ் மேட்டருக்கு வருவோம். ஒவ்வொரு வாரமும் சுமார் மூன்றிலிருந்து நான்கு சிறு முதலீட்டு படங்கள் வெளியாகிக் கொண்டேயிருக்கிறது. இந்த படங்களின் வாழ்நாள் ஈசலின் வாழ்நாளைவிடக் குறைவாய் அமைந்து கொண்டு வருகிறது. எங்கிருந்தோ சின்ன பட்ஜெட் படமெடுக்க வீட்டை விட்டு, நிலத்தை விற்று, ரியல் எஸ்டேட் செய்து படமெடுக்க வரும் பலருக்கு சினிமா எடுத்து முடித்துவிட்டால் அதை ரிலீஸ் செய்தால் போதும் ஓடிவிடும் என்று நினைத்துக் கொண்டு இருப்பவர்கள் பெரும்பாலோர். மற்ற தொழில்களுக்கு எல்லாம் அதன் அடிப்படை தெரிந்து கொண்டு வருபவர்கள் இந்த தொழிலுக்கு மட்டும் கையில் காசிருந்தால் போதும் என்று தொழில் தெரியாமல் வந்து சம்பாதித்ததை படத்தில் வேறு சில பந்தாக்களிலும் விட்டு போனவர்கள் தான் அதிகமாய் இருக்கிறார்கள். இப்படி அவசரப்பட்டு இப்படி ஒரு படம் வெளிவருகிறது என்றே வெளியே தெரியாமல் ரிலீஸ் செய்து என்ன பயன்? 

முதல் போட்டு படமெடுத்தாயிற்று, பின்பு அதை விநியோகஸ்தர்களுக்கு போட்டுக் காட்ட ப்ரிவியூ தியேட்டருக்கு ஆகும் செலவு கூட பெரிய பட்ஜெட்டாய் நினைக்கும் கம்பெனிகள் தான் அதிகம். அப்புறம் அங்கே திரட்டி இங்கே திரட்டி ஒரு வழியாய் சொந்த செலவில் சூனியமாய் விநியோகஸ்தர்களின் மூலமாய் தியேட்டர் மட்டும் பிடித்து தினத்தந்தியில் ஒன்று, தினகரனின் ஒன்று என்று முதல் ரெண்டு நாளைக்கு விளம்பரம் கொடுத்துவிட்டு, அடுத்த ஐந்து நாளுக்கு ஏதாவது ஒரு பேப்பரில் விளம்பரம் கொடுக்ககூட காசில்லாமல் முதல் நாள் ரெண்டாவது ஷோவிலேயெ போஸ்டர் அடித்த செலவுக்கு கூட வருமானம் வராமல் தூக்கப்பட்ட படங்கள் அதிகம். இப்படி பல சிறு மூதலீட்டுப் படங்கள் இக்கட்டில் மாட்டிக் கொண்டு இருக்க, வழக்கம் போல தயாரிப்பாளர் சங்கம் அவ்வப்போது அறிக்கை விட்டுக் கொண்டு சிறு முதலீட்டு தயாரிப்பாளர்களை காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துக் கொண்டு இருக்கிறது. ஆனால் இந்த தயாரிப்பாளர்களிடமிருந்து ஒரு லட்ச ரூபாய் வாங்கிக் கொண்டு தங்களுடன் பதித்துக் கொள்ளும் இந்த சங்கம் அவர்களுக்காக ஒத்தை ரூபாயைக் கூட சம்பாதிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்காது என்பது படு கொடுமை. இம்மாதிரியான சிறு முதலீட்டு படங்கள் எப்படி ஆரம்பிக்கப்படுகிறது. வியாபாரச் சூட்சம ஆழம் தெரியாமல் அவர்கள் மாட்டிக் கொண்ட கதியென்ன? என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

Post a Comment

7 comments:

Unknown said...

முகமூடி இவ்வளவு மொக்கையாக இருக்குமென்று நான் நினைக்கவேயில்ல. முதல் பாதியாவது பரவாயில்லை ரெண்டாவது பாதி செம மொக்கை. படம் கொஞ்சம் கூட மனசுல ஒட்டவேயில்லை.

வவ்வால் said...

கேபிள்ஜி,

//மற்ற தொழில்களுக்கு எல்லாம் அதன் அடிப்படை தெரிந்து கொண்டு வருபவர்கள் இந்த தொழிலுக்கு மட்டும் கையில் காசிருந்தால் போதும் என்று தொழில் தெரியாமல் வந்து சம்பாதித்ததை படத்தில் வேறு சில பந்தாக்களிலும் விட்டு போனவர்கள் தான் அதிகமாய் இருக்கிறார்கள். //

அவங்களேவா படம் இயக்கி ,தயாரித்தாங்க, அதைப்போல ஆளுங்களுக்கு இயக்கவே மாட்டேன்னு இயக்குனர்கள் சொல்லி புறக்கணிக்கலாம்ல.

யாரோ ஒரு மஞ்சமாக்கான் தயாரிப்பாளர் சிக்கிட்டான்னு மொட்டை போடுறதே முதல் படத்துக்கு தயாரிப்பாளர் தேடும் இயக்குனர்கள் தான் :-))

அதை சொல்லாமல் ஏன் ஒன்னும் தெரியாம படம் எடுக்க வந்தீங்கன்னு , அறிவுறை சொல்லுங்க :-))

இதே முதல்ப்படம் வாய்ப்பு தேடும் இயக்குனர்களை ஒரு ஹிட் கொடுத்துட்டு வா அப்புறம் பார்ப்போம்னு அந்த தயாரிப்பாலர் சொன்னா என்ன சொல்வாங்க?

ஹிட் குடுத்தா நான் ஏன் உன்னை பார்க்க வரப்போறேன் சொல்வாங்க :-))

rajamelaiyur said...

தொடருங்கள் ....

rajamelaiyur said...

இன்று

வெற்றி மேல் வெற்றி

Dwarak R said...

cableji, I see you have good insights in this business. Have you thought about arriving business model of this small / medium budget films? A Consultancy kind of thing could work?

விஜய் said...

கேபிள் அண்ணா... இன்னும் எத்தனை நாள் தான் இந்த வேகாத கலைஞர் குடுப்ப காரணத்தையே சொல்லுவீங்க... புரியாத மாதிரியே எவ்வுளவு நாள் தான் நீங்க நடிக்க முடியும்... என்னமோ போங்க...

தமிழ் பையன் said...

சினிமா வியாபாரத்தில் கறுப்புப் பணம் எப்படி வெள்ளையாகிறது, எத்தனை பேர் ஊழல் செய்து சம்பாதித்த பணத்தை இப்படி சினிமாவில் செலவு செய்து வெள்ளை ஆக்குகிறார்கள் என்றெல்லாம் எழுதுங்களேன். கறுப்புப் பணத்தைக் கணக்கில் பார்த்தால்தான், ஏன் பல தோல்விப் படங்களும், அப்படி ஒன்றும் தோல்வி அல்ல என்று தெரிய வரும், சரியா?