நான்
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி கதாநாயகனாய் நடிப்பில் முதல் படமாகவும், இசையில் 25வது படமாகவும் வெளிவந்திருக்கும் படம். Identity Theft தான் படத்தின் கான்செப்ட். அதை புதிய இயக்குனர் ஜீவா சங்கர் சரியாக கையாண்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.
அப்பாவுக்கு துரோகம் செய்யும் அம்மாவை அப்பாவிடம் காட்டிக் கொடுக்கும் பையன், அதனால் தற்கொலை செய்து கொள்ளும் அப்பா, அதையும் மீறி தவறான பாதைக்கு போகும் அம்மாவையும், மாமாவையும் உயிரோடு வீட்டிற்குள் வைத்து கொளுத்தி கொல்லும் கார்த்திக் நல்ல புத்திசாலி. சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டு வளர்ந்தவன். வளர்ந்து வெளி வரும் போது கார்த்திக்காய் யாரும் ஏற்றுக் கொள்ளாத நிலையில், ஒரு பஸ் விபத்தின் போது உடன் பயணித்த பயணி இறந்துவிட அவனது அடையாளத்தை தன்னுடயதாக்கிக் கொண்டு கார்த்திக் முகமது சலீமாகிறான். முகமது சலீம் என்கிற் அடையாளத்தை காப்பாற்றிக் கொள்ள அவன் போராடும் போது, விபத்தாய் நடந்த விஷயம் கொலையாய் மாற, பின்பு அதை மறைக்க, மேலும் மேலும் தவறாய் செய்கிறான். பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை.
கார்த்திகாக விஜய் ஆண்டனி. வழக்கமான ஹீரோ மெட்டீரியல் கேரக்டர் இல்லை என்பதால் முதல் கண்டத்திலிருந்து தப்பிக்கிறார். என்னடா கொஞ்சம் முகம் முத்தலாயிருக்கிறதே இவரை எப்படி மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட்? என்று கேள்வி வரும் போது, ஏற்கனவே டிகிரி முடிந்து வந்தவன் என்று சொல்லிவிடுவதால் அதிலிருந்து தப்பிவிடுகிறார். எப்போதும் கொஞ்சம் பயந்த பார்வையும், அடிப்பட்ட குரல் பேச்சுமாய் இருப்பதால் ஓரள்வுக்கு கேரக்டர் ஜஸ்டிபிகேஷன் ஆகிவிட, பரவாயில்லையே என்று சொல்லும் அளவிற்கு அவரது நடிப்பு இருப்பது அவரது கேரக்டரினால். ஆனால் பெரும்பாலான காட்சிகளில் முக்கியமாய் அவர் முகமது சலீம் இல்லை என்பதை கண்டு பிடித்த சித்தார்த்திடம் போராடும் காட்சியில், கெஞ்சும் காட்சியில், அவர் கொலையான காட்சியில் எமோட் செய்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தும் தடுமாறியிருக்கிறார். பல காட்சிகளில் நீலன்.கே.சேகரின் வசனங்கள் நச்சென இருந்தாலும், அதை ப்ளாட்டாக மாடுலேஷன் இல்லாமல் பேசி அதன் அழகை குறைத்த பெருமை விஜய் ஆண்டனியை சேரும்.
ஆனந்த தாண்டவம் ஹீரோ சித்தார்த் இதில் முக்கிய பாத்திரத்தில் வருகிறார். நன்றாகவே செய்திருக்கிறார். ரூபா மஞ்சரிக்கு அழுத்தமான கேரக்டர் இல்லையென்றாலும் நிறைவாக செய்திருக்கிறார். குறிப்பாய் க்ளைமாக்ஸில். அனயா படத்தின் திடீர் எண்ட்ரி கொடுத்திருப்பது சுவாரஸ்ய திருப்பம். இவரது கேரக்டர் தான் படத்தின் சுவாரஸ்யத்தை கூட்ட ஏதுவாக அமைந்திருப்பது பலமும் கூட.
விஜய் ஆண்டனியின் இசையில் மகயாக சரியான் ஹிட். பாடலும், அதன் மேக்கிங்கும், எடிட் செய்த ஸ்டைலும் நன்றாக இருக்கிறது. வேறு ஒரு சிறிய பாடல் வருகிறது. பின்னணியிசையில் நன்றாக கவனம் செலுத்தியிருக்கிறார்.
ஒளிப்பதிவு செய்து எழுதி இயக்கியிருப்பவர் ஜீவா சங்கர். மறைந்த ஒளிப்பதிவாளர், இயக்குனர் ஜீவாவின் உதவியாளர் என்பதை படத்தின் ஒளிப்பதிவின் மூலம் நிருபித்திருக்கிறார். கதைக்கு என்ன தேவையோ அதை தன் ஒளிப்பதிவின் மூலம் வெளிப்படுத்தியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. அதே போல படத்தின் திரைக்கதையும் வசனமும் புத்திசாலித்தனமாய் அமைத்திருப்பது.குறிப்பிட்டு சொல்ல வேண்டிய இடம் என்றால் போலி அப்பாவையும், தகராறுக்கு வரும் சீனியர் மாணவனையும் பாரில் டீல் செய்யும் காட்சியும், சுன்னத் செய்யாத ஆணுறுப்பை வைத்து கண்டு முஸ்லிம் இல்லை என்று கண்டுபிடிக்கும் காட்சி ஆகியவை குறிப்பிடத்தகுந்தது. ஒரு த்ரில்லர் படத்திற்கு உண்டான அத்துனை களேபரங்களையும், குழப்பங்களையும் சரியான விகிதத்தில் கலந்து கொடுத்திருக்கிறார்கள். நல்ல ஒளிப்பதிவு, மேக்கிங் ஸ்டைல், ஸ்மார்ட் டயலாக்குகள், திரைக்கதை முடிச்சுகள் என்று இருப்பதால் பாஸாகிவிடுகிறார் இயக்குனர் ஜீவா சங்கர். மைனஸ் பாயிண்ட் என்று பார்த்தால் படம் ஆரம்பித்தது முதல் கொஞ்சம் மெதுவாக செல்வதும், ஆங்காங்கே சில பல இடங்களில் தொய்வடைவதும், அனயா கேரக்டரை வைத்து சொல்லப்பட்டிருக்கும் கதைக்கு பதில் இல்லாமல் அப்படியே விட்டிருப்பதை படம் முடியும்போது தொடரும் என்று போட்டதால் தப்பியிருப்பதும். ஏற்கனவே சமீபத்தில் வந்த “எப்படி மனசுக்குள் வந்தாய்?” பட கதை லைனும், இந்தக்கதை லைனும் ஒன்றாய் இருப்பது மட்டுமே.
கேபிள் சங்கர்
Comments
:-+