Thottal Thodarum

Aug 2, 2012

மதுபானக்கடை

தமிழ் திரையுலகில் டிஜிட்டல் புரட்சி ஏற்பட்டு, வெகு சில நல்ல படங்களும், பல மொக்கை படங்களும் வந்து கொண்டிருக்கும் காலத்தில்,  அட இந்த டெக்னாலஜியினால் இம்மாதிரி படங்களும் வரும் என்றால் அவற்றை சகித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தை ஏற்படுத்திய படம் இது.


தமிழ்நாட்டின் வருமானத்திற்கான முதுகெலும்பே குடி என்றாகிவிட்டிருக்கும் நிலையில், அதையே கதைக் களனாய் அமைத்து படம் பண்ணியிருப்பது பாராட்டுக்குரிய விஷயமே. காபி ஷாப்பில் வைத்து நடைபெறும் சம்பவங்களை வைத்து சென்ற வாரம் “மாலை பொழுதின் மயக்கத்திலே” வெளியானது. இந்த வாரம் இந்தப்படம்.

அவனவன் கதையே இல்லாமல் மூன்று பேர் சேர்ந்து எழுதிய கதை என்று டைட்டிலில் போட்டுக் கொண்டு இரண்டரை மணி நேரம் நடக்க வைத்தே படமெடுத்துக் கொண்டிருக்கும் நாளில், இப்படத்தில் கதை என்று ஒன்று இருந்தால் கண்டுபிடித்து சொல்லுங்கள் என்று தைரியமாய்  முதல் கார்டிலேயே சொல்லியிருக்கும் இயக்குனர் கமலக்கண்ணனுக்கு மகா கெத்துதான். 
ஒரு டாஸ்மாக் பார், அந்த பாரை நடத்தும் ஓனர் பெண்ணுக்கும், கடையில் சப்ளை செய்யும் பையனுக்கும்  காதல், அதை வேண்டாம் என்று எச்சரிக்கும் இன்னொரு சப்ளையர், அதனால் அவர்களுக்குள் ஏற்படும் சண்டை, கைகலப்புகள், வயதான சப்ளையர், பார் ஓனர், பாருக்கு இடத்தை விற்றுவிட்டு பைத்தியமாய் திரியும் குடிகார லேண்ட் ஓனர், ரெகுலர் கஸ்டமரான பெட்டிசன் மணி, பாட்டு பாடும் ராமு, கடை திறப்பதற்காக காத்திருக்க முடியாமல் டென்ஷனாகும் கஸ்டமர், ராமர், சீதை வேடம் போட்டு காசு சம்பாரிக்கும் வேஷக்காரர்கள், காதல் தோல்வி இளைஞன், ஜாதி ஏத்தம் கொண்டவன், மலம் அள்ளும் கார்பரேஷன் ஆட்கள், தொழிலாளிகள், பார் வாசலில் பெட்டிக்கடை வைத்திருக்கும் ஆள், என்று பல தரப்பட்ட  டாஸ்மாக் கஸ்டமர்களையும், டாஸ்மாக்கில் பிழைப்பும் ந்டத்தும் கேரக்டர்களையும்  வைத்து அவர்கள் வாழ்வில் நிகழ்பவைகளை தொகுத்து இருக்கும் படம் தான் டாஸ்மாக்.

டாஸ்மாக்கில் வேலை செய்யும் இளைஞர்களின் வாழ்க்கை, அவர்களின் அன்பு, கோபம், ஆகிவற்றை காதலிக்கும் இளைஞனை வைத்தும், அதை எச்சரிக்கும் இளைஞனை வைத்தும் சொல்லியிருப்பது அழகு. ராமர் லஷ்மணன் வேஷம் போடும் இளைஞர்கள் அதே வேஷத்துடன் சரக்கடிக்க வருவது நகைச்சுவை என்றால், அவர்களின் பின்னால் இருக்கும் சோகம் அழுத்தம். காதல் தோல்வியினால் முதல் முதலாய் சரக்கடிக்க வரும் இளைஞன் எல்லோரையும்  எப்போதும் டார்சர் பண்ணும் பெட்டிஷன் மணியை கலாய்க்கும் இடம் செமையான நகைச்சுவை.  டீசெண்டாய் டக்கின் பண்ணிக் கொண்டு, பர்ஸை தொலைத்துவிட்டதாய் சொல்லிப் பிச்சை எடுத்தக் காசைக் கொண்டு, கட்டிங் அடித்துவிட்டு உட்கார்ந்த படியே மட்டையாகி, இரவு கடை மூடும் வரை கிடைக்கும் இடத்திலெல்லாம் ஆட்டையைப் போடும் படித்த இளைஞன். ஓசிக் குடிக்காக பாட்டெல்லாம் பாடி கெஞ்சி கூத்தாடும் பாட்டுக்கார கேரக்டர், கண்டிப்பும், கணீர் குரலுமாய் அழுகிப் போன காய்கறிகளைக் கொண்டு  சமைக்கச் சொல்லும், பார் ஓனர்.   பார் ஓனர் பெண்ணுக்கும் அவன் காதலனுக்குமான பார் சந்து காதல் காட்சியும், அந்த முத்த களேபரங்களும் இளமையான சுவாரஸ்யங்கள்.
கேனான் 7டியில் எடுக்கப்பட்ட இப்படம் டிஜிட்டல் படம் என்ற எண்ணத்தையே ஏற்படுத்தாத வண்ணம் அருமையாய் அந்த பாரின் காலை, பகல் இரவு நேரத்தை அப்படியே நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார். இசையமைப்பாளர் வேத்சங்கரின் இசையில் மூன்று பாடல்கள் நச். அதிலும் குடியின்றி அமையாதுலகடா.. சூப்பர். பின்னணியிசையும் இரைச்சல் இல்லாமல் நீட்டாக இருக்கிறது.
எழுதி இயக்கியவர் கமலக்கண்ணன். டைட்டில் காட்சியில் ஆரம்பித்து க்ளைமாக்ஸ் வரை இயல்பாய் பல கேரக்டர்களை அழைத்து வந்து கொஞ்சம் கொஞ்சமாய் அக்கேரக்ட்ர்கள் மூலம் நிஜ டாஸ்மாக்கில் நாம் பார்த்து பழகிய ஆட்களை நம் நினைவுக்கு கொண்டு வந்ததிலிருந்தே அவரின் உழைப்பு தெரிகிறது. மிக இயல்பான வசனங்கள் படத்திற்கு பலம். நடிகர்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கப்பட்டிருப்பதும், ஒளிப்பதிவிலாகட்டும், எடுத்த விதத்திலும் நேர்த்தியாய் செயல்பட்டிருக்கிறார்.

மைனஸ் என்று பார்த்தால் பெட்டிஷன் மணி போன்ற கேரக்டர்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்திற்கு பதிலாய் இன்னமும் பல வித்யாசமான கேரக்டர்களை மதுபானக்கடைகளில் பார்த்து அவதானித்திருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும். அதே போல ஒரு அழகான காதல் கதையை கதைக்குள் தெரிந்தோ தெரியாமலோ வைத்துவிட்டு, அதை சரக்குக்கு ஊறுகாய் போல தொட்டுக் கொண்டிருப்பதால் வெறும் ஊறுகாய் கொடுக்கும் விறுவிறுப்பு மட்டுமே நமக்கு கிடைக்கிறது. கொஞ்சம் நன்றாய் ஊறப்போட்டிருந்தால் நல்ல சரக்காகி ஜிவ்வென ஏறியிருக்கும். இதுதான் ஆரம்பம் இதுதான் முடிவு என்று இல்லாமல் கொஞ்சம் ‘கல்ட்”டான படமாய் அமைந்திருப்பது ஒரு வகையில் சுவாரஸ்யம் என்றாலும் அவை எல்லாவற்றையும் இணைக்கும் வகையில் திரைக்கதை இல்லாதது ஒரு பெரிய குறை தான். டாஸ்மாக்கில் என்றாவது ஒரு நாள் நுழைந்தவனுக்கும், அடிக்கடி நுழைபவனுக்கும் இப்படத்தில் வரும் கேரக்டர்களில் ஒருவனையாவது அவர்தம் வாழ்கையில் பார்த்த கேரக்டருடன் ஒப்பிடக்கூடிய வகையில் இருப்பது இப்படத்தின் வெற்றி. இம்மாதிரியான கல்ட் பட முயற்சிகளுக்கு நம் ஆதரவை நல்குவது தமிழ் சினிமாவிற்கு நல்லது.
கேபிள் சங்கர்


Post a Comment

28 comments:

கோவை நேரம் said...

வணக்கம்..ரொம்ப முன்னதாகவே டாஸ்மாக் போய்டீங்க போல..(அய்யய்யோ...வார்த்தை தவறி விட்டதே...) சிபி ய விட ரொம்ப பாஸ்டா விமர்சனம்...ரொம்ப நன்று..படம் வெளியான தேதியே தெரியவில்லை...

கோவை நேரம் said...

இந்த படம் டிரைலர் பார்க்கும் போதே ரொம்ப வித்தியாசமா இருந்துச்சு...அதுவுமில்லாம நம்ம சொந்தகாரங்க (குடிமகன் ) படம்...பார்த்தே ஆகணும்

rajamelaiyur said...

//
அவனவன் கதையே இல்லாமல் மூன்று பேர் சேர்ந்து எழுதிய கதை என்று டைட்டிலில் போட்டுக் கொண்டு இரண்டரை மணி நேரம் நடக்க வைத்தே படமெடுத்துக் கொண்டிருக்கும் நாளில்,
//

ஆகா .. அது தலையை கிண்டல் பன்றாபோல இருக்கே ?

rajamelaiyur said...

இன்று

விஜய் : TOP 5 படங்கள்

saravana karthikeyan said...

படம் பார்த்திட்டு வெளியே வரும்போது சும்மா ஜிவ்வுன்னு இருக்கா?

Cable சங்கர் said...

இன்று வெளியாகிறது கோவை நேரம். நான் இரண்டு சினிமா விநியோக நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருப்பதால் நிறைய படங்களை பல மாதங்கள் முன்னதாகவே பார்க்கும் வாய்ப்பு கிடைத்துவிடும். அப்படி பார்த்த படம் தான்.

உலக சினிமா ரசிகன் said...

கோவையில்...கோயம்புத்தூர் பிலிம் கிளப் பெயரில் பிலிம் சொசைட்டி நடத்தி வரும் கமலக்கண்ணன் இப்படத்தை இதயாரித்து இயக்கி உள்ளார்.இப்படத்தின் வெற்றி இது போன்ற பிலிம் சொசைட்டி நடத்துபவர்கள் திரைப்படம் எடுக்க முன் வருவார்கள்.

உங்கள் விமர்சனம் படத்தின் மீது நம்பிக்கை வரவழைக்கிறது.
எனது நண்பர் கமலக்கண்ணன் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

உறுதுணையாக வந்திருக்கும் உங்கள் விமர்சனத்திற்கு நன்றி.

naren said...

Big Brother Cable ji,

What happened to, earlier "Nambikkai" Kadhal kadhai Post. Was there any problems?

shortfilmindia.com said...

No I never keep my stories inmy blog

shortfilmindia.com said...

No I never keep my stories inmy blog

shortfilmindia.com said...

No I never keep my stories inmy blog

Balaganesan said...

a reading ur review i hav planned to watch it...........//இம்மாதிரியான கல்ட் பட முயற்சிகளுக்கு நம் ஆதரவை நல்குவது தமிழ் சினிமாவிற்கு நல்லது.//

sathish said...

குட் டெசிசன் கேபிள்.

Gopi said...

பட தயாரிப்பு செலவு குறைந்து வரும் இந்நாளில், தியேட்டர் டிக்கட் விலையும் குறைந்தால், நல்ல படங்களும் வரும், தயாரிப்பாளர்களுக்கு நஷ்டமும் வர வாய்ப்பு குறைவு. இது போன்ற படங்களுக்காகவே, மினிமம் வசதிகள் கொண்ட சிறிய தியேட்டர்கள் மற்றும் புதிய முறையிலான விநியோக வர்த்தகமும் தேவை.

shortfilmindia.com said...

Milaka unnakka ellam naan mathichi edutukka matten .

வவ்வால் said...

கேபிள்ஜி,

விமர்சனம் சரியாண கோணத்தில் இருக்கு ,முக்கியமா இதனை இணைச்சினிமா வகையில் வைக்கலாம். அழுக்கா அசிங்கமா தான் பாரில் வேலை செய்பவர்கள் இருப்பாங்க என்பது போல கதாப்பாத்திர தேர்வு இருப்பது மட்டும் கொஞ்சம் டெம்ப்ளேட்டாய் இருக்கு. நிறைய பாரில்"பளிச்" பசங்களும், நெற்றில் பட்டை அடிச்சு,பொட்டு வச்சுகிட்டு திவ்யமான பெரியவர்களும் வேலை செய்றாங்க.அவங்க கிட்டே தான் நான் பெரும்பாலும் ஆர்டர் கொடுப்பேன்.வேற யாராவது ஆர்டர் எடுக்க வந்தாலும் பேரை சொல்லி அவங்க எங்கேனு கேட்டு வர வைத்துவிடுவேன் :-))

// டாஸ்மாக்கில் என்றாவது ஒரு நாள் நுழைந்தவனுக்கும், அடிக்கடி நுழைபவனுக்கும் இப்படத்தில் வரும் கேரக்டர்களில் ஒருவனையாவது அவர்தம் வாழ்கையில் பார்த்த கேரக்டருடன் ஒப்பிடக்கூடிய வகையில் இருப்பது இப்படத்தின் வெற்றி.//

ஹி...ஹி நீங்க சொன்னது சரி தான், இதில் வரும் பல கேரக்டர்களை ஒத்தவர்களுடன் நேரடியாக பழகி இருக்கிறேன். முக்கியமா பாட்டுப்பாடும் கேரக்டர், நானே சரக்கு வாங்கிக்கொடுத்து ஒரு பாட்டுப்பாடுங்கண்ணேனு கேட்டுப்பாட வைப்பேன், டி.எம்.ஸ் குரலில் கொஞ்சம் பிசிறோட பாடுவார்.

// அதே போல ஒரு அழகான காதல் கதையை கதைக்குள் தெரிந்தோ தெரியாமலோ வைத்துவிட்டு, அதை சரக்குக்கு ஊறுகாய் போல தொட்டுக் கொண்டிருப்பதால் வெறும் ஊறுகாய் கொடுக்கும் விறுவிறுப்பு மட்டுமே நமக்கு கிடைக்கிறது. கொஞ்சம் நன்றாய் ஊறப்போட்டிருந்தால் நல்ல சரக்காகி ஜிவ்வென ஏறியிருக்கும். //

அதையே டெவெலப் செய்ய்திருந்தால் இன்னொரு "காதல்" படமாக போயிருக்கும் அபாயம் இருப்பதால் இயக்குனர் தவிர்த்திருக்க கூடும்.

// கண்டிப்பும், கணீர் குரலுமாய் அழுகிப் போன காய்கறிகளைக் கொண்டு சமைக்கச் சொல்லும், பார் ஓனர்.//

பாருக்கு வெங்காயம்,பச்சை மிளகாய்,காலிப்பிளவர், தக்காளிக்கு மேல காய்கறி தேவை இருக்காதே. ஆனால் சிக்கன்,மட்டன்,பீஃப்,மீன் போன்ற அசைவ உணவுகள் விற்காத கழிவு ஐடெம் தான் சப்ளை ஆகும். இதனை சப்ளை செய்ய என தனியே ஆட்கள் இருக்காங்க.

ஆனாலும் பெண்கள்,குடும்பஸ்தர்களுக்கு பிடிக்காமல் போகும் வாய்ப்புள்ளது.

"மது பழக்கம், புகைப்பிடித்தல் தீங்கானது "என எச்சரிக்கை வாசகம் படத்தில் சப்-டைட்டில் போல படம் முழுக்க ஓடுமோன்னு கவலையாய் இருக்கு :-))

மருத்துவர் தமிழ்குடிதாங்கி வகையறாக்கள் என்ன கலாட்டா செய்யப்போகுதோ,பொட்டியை தூக்குடா என கிளம்பாமல் இருந்தால் சரி தான் :-))

sathish said...

mannu ottavillai ;-)

sathish said...

வவ்வால்ஜி,

இது போன்ற கதைக்கு, முக்கால்வாசிக்கு அதிகமான பாரில் ஆட்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை பொறுத்தே கதாபாத்திரம் பண்ண முடியும். நீங்கள் சொல்வது போல் பட்டை நாமம் போட்டவர்களை போட்டிருந்தால் படத்தின் சுருதி குறைந்து விடும்.

”தளிர் சுரேஷ்” said...

சிறப்பான விமரிசனம்! இதுமாதிரி நல்ல படங்களை ஆதரிக்க வேண்டும்!

இன்று என் தளத்தில் நான் ரசித்தசிரிப்புக்கள்!, சமூக சிலந்தி வலை!
http: thalirssb.blogspot.in

வவ்வால் said...

மிளகாய்,

பச்சை மிளகாய் அல்லது காய்ந்த மிள்காய்? :-))

இன்னும் படம் பார்க்கவில்லை, பார்த்துவிட்டு சொல்கிறேன், மேலும் சில வித்தியாசமான கதாப்பாத்திரங்களையும் அறிமுகப்படுத்தனும் என்பதால் சொன்னது.

ஒரு பாரில் ஒரு பெரியவர் வேலை செய்கிறார்,சீசனுக்கு தவறாமல் மலைக்கு மாலைப்போடுவார், பாரில் வேலை செய்தும் குடிக்க மாட்டார், ஒருத்தருக்கு 1/2 க்கு மேல் சப்ளை செய்ய மாட்டார், கேட்டால் லிமிட் போதும் கிளம்புங்க என கிளப்பிவிடுவார்.

சிலப்பசங்க இருக்காங்க பொறுப்பா வந்து ஆட்டோலாம் பிடித்துக்கொடுப்பாங்க.

இது போன்று இருக்கும் வித்தியாசங்களும் பதிவாக்கப்படனும் என்பது என் ஆசை அதை சொன்னேன்.

sathish said...

பச்சை...இன்னும் காயவில்லை. :-)

நீங்கள் சொல்வது போன்ற கேரக்டர்களை, டாஸ்மாக்கை தீவிரமாய் விமர்சிக்காத படத்தில் புகுத்தலாம் என்பது என் கருத்து.

இங்கிருக்கும் டாஸ்மாக் கடைகளில் உள்ளே நுழைந்தாலே, சும்மா அடிக்காமலே தூக்க வேண்டும்.
இடம், அங்கிருக்கும் ஆட்கள் என எல்லாமே கலீஜின் பிறப்பிடம்.

இந்தியா ஒரு கலீஜ் 'கன்ட்'ரி.

Unknown said...

மிளகாய் said...
பச்சை...இன்னும் காயவில்லை. :-)

இந்தியா ஒரு கலீஜ் 'கன்ட்'ரி.


Y this kolaiveri ...

வவ்வால் said...

மிளகாய்,

கலீஜ்னு ஒரு மட்டமான அர்த்தத்தில் சொல்லிக்கிட்டு இருக்கீர்,இது உண்மையான பொருள் தெரிஞ்சா இஸ்லாமியர்களே சண்டைக்கு வருவாங்க.

khalij=gulf countries, khaliji என்பது அரபில ஒரு பேச்சு மொழி, அவங்க தான் கலீஜ் மக்கள், அப்போ இந்தியாவில் குடிப்பெயர்ந்த முஸ்லீம்களை கலீஜ் மக்கள் என வகைப்படுத்தி பின்னடி எப்படியோ நீர் நினைக்கிற கலீஜ் ஆகிடுச்சு :-))

நம்ம நாட்டில பல அரபிக் வார்த்தைகள் தமிழா மாறி உலவிக்கிட்டு இருக்கு ,பெரும்பாலான உணவகத்தில் சாப்பாடு தயார்னு போர்டு வச்சிருப்பாங்க, அதில் தயார் என்பது பெர்சியான். ஆயத்தம் என்பதே தமிழ்.

இப்போ யாரு கலீஜ் மக்கள்னு சொல்லுங்கய்யா :-))

sathish said...

கலீஜ் என்பதற்கு உகாண்டா நாட்டு மொழியில் நறுமணம் என்று அர்த்தம்.

அதை வைத்து தான் கலீஜ் என்று குறிப்பிட்டேன்.

வவ்வால், நீ விவகாரமான ஆளுய்யா!


பீ கேர் புல். (நான் என்னை சொன்னேன்)

Unknown said...

Thavarana vimarsanam pani billa 2va flob akitinka..inimeyavathu vittu vainkada

எஸ்.ஏ.சரவணக்குமார் said...

// ...கண்டுபிடித்து சொல்லுங்கள் என்று தைரியமாய் முதல் கார்டிலேயே சொல்லியிருக்கும் இயக்குனர் கமலக்கண்ணனுக்கு மகா கெத்துதான்//

எப்படிப்பட்ட படமானாலும் முதல் நாளே "ரிஸ்க்" எடுக்குற உங்க கேத்தவிடவா? விமர்சனம் "நச்"!

Unknown said...

ஒரு மது பானக்கடையின் நிகழ்வுகளை சமூக உணர்வுடன் - இயல்பாக யதார்த்தமாக - நகைச்சுவையுடன் காட்டியிருக்கும் மிகச் சிறந்த தமிழ்த் திரைப்படம் "மது பானக் கடை". ஒரு சிறந்த - இயல்பான சிறு கதை போன்ற படம். இந்தப் படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய மைல் கல். ஆண்களின் மதுப் பழக்கத்தால் பெரிதும் பாதிக்கப்படும் பெண்கள் இப்படத்தை பார்க்க வேண்டும் - பார்ப்பார்கள் என்றே நினைக்கிறேன். ஆண் - பெண் இரு பாலாரும் பார்க்கும் வகையில் இந்தப் படத்தை இயக்குனர் கமலக் கண்ணன் சிறப்பாகவே இயக்கியுள்ளார்.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கூடிய சீக்கிரம் தொலைக்காட்சியில போடுவான் அப்பா பாத்துக்கலாம்.