Thottal Thodarum

Sep 18, 2012

நெல்லை சந்திப்பு



ரத்தத்தை பார்த்தாலே மயங்கி விழும் ஒருவன் மூன்று பேரை கொல்லும் அளவிற்கு மாறுகிறான். அதற்கு காரணம் என்ன? யார் அவனை இந்த நிலைமைக்கு துரத்தியது. நட்ட நடு ரோட்டில் அஸிஸ்டெண்ட் கமிஷனர் ஒருவனை என்கவுண்டர் செய்வதில் ஆரம்பிக்கிறது படம். இன்னொரு பக்கம் அம்மா, அப்பா, அக்கா, அக்காவுக்கு நிச்சயம் செய்யப் பட்டிருக்கும் மாமா, என்று அற்புதமான குடும்பம் கொண்ட ஹீரோ. அஸிஸ்டெண்ட் கமிஷனரின் கீப்புக்கு பிறந்த பெண் தான் ஹீரோவின் காதலி. இப்படியாக போகும் கதையில் என்கவுண்டரினால் ஒரு திடீர் திருப்பம் ஏற்படுகிறது. அதை இரண்டு மணி நேரப் படமாய் பரபரப்பாய் சொல்ல முயற்சித்திருக்கிறார் புதுமுக இயக்குனர் நவீன். கே.பி.பி.


தயாரிப்பாளர் தேனப்பன், இய்க்குனர் சரவண சுப்பையா, இயக்குனர் ராஜா, மீரா கிருஷ்ணன் ஆகியோரைத் தவிர எல்லோருமே புதுமுகங்கள். தேனப்பன் அவர்களின் நடிப்பை விட அவரது டப்பிங் குரல் கொடுத்தவரின் குரல் நடிப்பு அருமை. சரவண சுப்பையா படம் முழுக்க, எரிச்சல் கொண்டவராகவே பேசுகிறார். அவரும் அவர்கூட வரும் இன்னொரு நடிகரும் நொடிக்கொருதரம் “ஏஸிக்கு போனைப் போடுய்யா” என்று மறுக்கா மறுக்கா சொல்லியே எரிச்சலூட்டுகிறார்கள். 

அம்மாவாக வரும் மீரா கிருஷ்ணனின் நடிப்பும், அப்பா இயக்குனர் ராஜாவின் நடிப்பும் ஆஃப்டாக இருந்தாலும் பாசக்காட்சிகளில் கொஞ்சம் அதிகமாகவே நெஞ்சை நக்குவதாகவே படுகிறது. வீட்டின் கடைக்குட்டியாய், செல்லப்பிள்ளையாய், வலம் வரும் போது இருக்கும் ஒரு இன்னொசென்சுக்கு  ஹீரோ செட்டானாலும் போகப் போக கதை போகும் போக்கிற்கு அவரால் ஈடு கொடுக்க முடியவில்லை என்றே சொல்ல வேண்டும். அக்காபுருஷனாய் வருபவரும் அஃதே. ஹீரோவின் காதலியாய் வருபவர் மட்டும் கொஞ்சம் ஆங்காங்கே க்யூட்டாக இருக்கிறார்.
ஒளிப்பதிவு செவிலோராஜா. கிடைத்த பட்ஜெட்டுக்கு உழைத்திருந்தாலும் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். நிறைய இடங்களில் கொஞ்சம் அவுட்டாப் ஃபோகஸ் இருக்கிறது. இசை யுகேந்திரன். இது தானே எங்கள் வீடு பாடல் மட்டும் ரீங்காரமிடும். ஆங்காங்கே பளிச் வசனங்கள் தெரிந்தாலும் பல இடங்களில் பேசியதையே பேசிக் கொண்டிருப்பதை வசனகர்த்தா எம்.ஜி.கன்னியப்பன் தவிர்த்திருக்கலாம். 

திரைக்கதை அமைத்து இயக்கியவர் கேபிபிநவீன். கே.எஸ்.ரவிகுமாரின் சீடர். அவரைப் போன்றே கமர்ஷியலான ஒரு கதையைத்தான் கையில் எடுத்திருக்கிறார். நல்ல விறுவிறுப்பாக போக வேண்டிய கதையை முதல் பாதியில் ஓவர் செண்டிமெண்ட்டினால் சுருதி குறைவாக ஆக்கிவிட்டிருக்க வேண்டாம். அதற்கு ஈடாக இரண்டாம் பாதியில் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறார். க்ளைமாக்ஸை இன்னும் கொஞ்சம் யோசித்து செய்திருக்கலாம். பாவம் என்ன பட்ஜெட் ப்ரச்சனையோ?
கேபிள் சங்கர்

Post a Comment

2 comments:

கார்த்திக் சரவணன் said...

:)

Unknown said...

கே.எஸ்.ரவிக்குமாரின் சீடர்களுக்கு பட்ஜெட்டைப் பற்றின (வியாபாரம்) ஏக்கம் எப்பவுமே உண்டு..
குரு சிஷ்யன் (சத்யராஜ்-சுந்தர்C) பட வெளியீட்டு விழாவில் சேரன் பேசியது:
டைரக்சன் சொல்லிக்கொடுத்த எங்கள் குருநாதர் என்ன சம்பளம் வாங்கனும்னு சொல்லிக்கொடுக்கல...

- உங்களுக்கு பிடிச்ச தயாரிப்பாளர்'ன்னு கேட்ட கேள்விக்கு கே.எஸ்.ரவிகுமார் ஒரு பேட்டில சொன்ன பதில்:
பிரம்மாண்டமா கதை சொல்லனும்னு தோணும்.. ஆனா தயாரிப்பாளர்க செலவு ரொம்ப ஆகும்ன்னு யாருமே அப்படி சொல்லமாட்டங்க... நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி தான் எப்படி சொன்னாலும் சரி செய்துக்கலாம்னு சொல்வாரு..தயாரிப்பளார் ஸ்பாட்ல போயி செய்வாங்களோ இல்லையோ... சரி செய்துக்கலாம்'ன்னு சொன்னாதான் கதை சொல்லும் போதே ஒரு ஊக்கம் வரும்....