Skyfall
சேஸிங் என்றால் உங்க வீட்டு சேஸிங், எங்க வீட்டு சேஸிங் இல்லை, ரோடு, மார்கெட், ஹைவே, ஓட்டு வீட்டின் மாடியில் பைக்கில், ட்ரெயின் மீது என்று பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஒரு பரபர சேஸிங்கின் முடிவில் பாண்ட் சுட்டு வீழ்த்தப்பட, ஸ்கைஃபால் ஆரம்பிக்கிறது. இங்கு எடுத்த வேகம் பாட்டு போட்டு டைட்டில் போட்டவுடன் தொபக்கடீர் என வீழ்ந்து, அதுக்கு பிறகு நினைத்த போதெல்லாம் செண்டிமெண்டும், பாசக் காட்சிகளுமாய் மாய்ந்து மாய்ந்து பேசி, பெரிய பெரிய க்ரேனைட்டையெல்லாம் பல்லிடுக்கில் வில்லன் கடித்து நாய்க்கு பொறை போடுவதைப் போல க்ளைமாக்சில் பாண்டின் பேண்டுக்கு கீழே போட, நம்ம விஜயகாந்த் போல ஒரே ஜம்பில் சின்ன சிராய்ப்புகூட இல்லாமல் குனிந்து தப்பித்து, வில்லனை அழிக்கிறார். MI6ன் தலைவிக்கு பிறகு மீண்டும் தன் சேவையை பிரிட்டிஷ் ஏஜெண்டாக பணிபுரிய கிளம்பிவிடுகிறார் ஜேம்ஸ்பாண்ட்.
கதை என்று பார்த்தால் ஏஜெண்டுகள் பற்றிய ஹார்டு டிஸ்கை எப்போதும் வரும் ஹெட் எம் கிழவி தீவிரவாதிகளிடம் தாரந்துவிட, அவர்கள் மீது பிரிட்டிஷ் அரசு நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து நீங்க ஏன் ரிடையர் ஆவக்கூடாது என்று கேட்க, இந்நேரம் பார்த்து ஜேம்ஸ்பாண்ட் வேறு செத்துப் போய்விட்டதாய் நம்பப்பட, வழக்கமாய் எப்படி இந்த மாதிரி ஹீரோவெல்லாம் தப்பிப்பார் என்று ஆயிரத்தி சொச்ச படங்களில் ஏற்கனவே காட்டி போரடித்திருப்பதால் நாமே அதில் ஏதோ ஒன்றை வைத்துக் கொள்வோம் என்ற நம்பிக்கையில் செத்துப் போன ஜேம்ஸ் பாண்ட் ஒரு லோக்கல் பிகருடன் படுத்திருப்பதைப் போல காட்டப்பட, டிவியில் லண்டனில் MI6 அலுவலகத்தில் குண்டு வெடித்த நிகழ்ச்சியை பார்த்ததும், பெற்ற தாயை போன்ற ஹெட் எம் கிழவியின் மானத்தையும், நாட்டின் மானத்தையும் எப்படி காப்பாற்றுகிறார் என்பதை கதை.
டேனியல் க்ரேக்குடன் நோமி ஹாரிஸ் செய்யும் நெருக்க ஷேவ் காட்சியில் மட்டும் ஒரு ஸ்மூத் ரொமான்ஸ் ஓடியது. ஸ்லீக்கான எடிட்டிங், தேர்ந்த ஒளிப்பதிவு, டெக்னிக்கலாக உயர்ந்த தரம், அழகான பெண்கள் என்று எல்லாம் இருந்தும் சுவாரஸ்யமான திரைக்கதை இல்லாமல் ஒரு உஸ் “கே” வில்லனை வைத்துக் கொண்டு, கடைசி வரை ஆட்டம் ஆடி பார்த்திருக்க வேண்டாம். க்ளைமாக்சில் எம் பாட்டியை மடியில் போட்டு கண்ணீர் மல்க பார்பதாகட்டும், கிழவி பேசிக்கொண்டே செத்துப் போகுமிடமாகட்டும் ஏதடா ஏதாவது பழைய எம்.ஜி.ஆர் படம் பார்க்க வந்திட்டோமான்னு வருத்தமாயிருச்சு. என்னதான் ஆயிரம் நொட்டை சொன்னாலும் ஜேம்ஸ்பாண்ட், என்கிற அந்த மார்கெட்டட் பிம்பத்திற்காக அடுத்த படம் வரும் வரை காத்திருக்க ரசிகர்கள் இருக்கத்தான் செய்வார்கள்.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Comments
What is the collection report says ? I heard that Its broken Harry Potter's Record in UK ?