உங்களது முதல் படத்திலிருந்து உங்களை ரசித்து வரும் ரசிகன் என்கிற முறையில் இந்த கடிதத்தை எழுதுகிறேன். உங்களது முதல் படமான பகல்நிலவுக்கு முன் நீங்கள் எடுத்த பல்லவி அனுபல்லவியை பெங்களூருக்கு சென்று பார்த்தவன் நான். அடுத்து வெளியான பகல் நிலவைப் பார்த்துவிட்டு அட தமிழ் சினிமாவில் இவ்வளவு சாத்வீகமாய் வயலன்ஸை சொல்ல முடியுமா? என்று ஆச்சர்யப்பட்டுக் கொண்டிருக்கும் போது, அடுத்தடுத்து மெளனராகம், அக்னி நட்சத்திரம், நாயகன், தளபதி, என்று வளர்ந்து, ரோஜா, பம்பாய், கன்னத்தில் முத்தமிட்டால்,தில்சே, இருவர், குரு, போன்ற படங்களில் சில படங்கள் ஓடாவிட்டாலும் இன்றைக்கும் திரும்பத் திரும்ப டிவிடியில் பார்த்து ரசிக்கும் ரசிகனின் புலம்பல்தான் இது.உங்களை துரோணராக ஏற்றுக் கொண்டு வளைய வரும் பல ஏகலைவன்களில் நானும் ஒருவன்.
உங்களது முந்தைய படமான ராவணனில் ஆங்காங்கே சில நாகாசுகளுடன் லேசாக ஆட்டிப்பார்த்தாலும், மொத்த படமாய் படு மொக்கையாய் அமைந்து விட்டதே என்று வருத்தப்பட்டவனில் நானும் ஒருவன் என்பதை சொல்லிக் கொள்வதில் வருத்தமேதுமில்லை. அடுத்த படத்தில் நீங்கள் என்னைப் போன்ற ரசிகர்களை திருப்திப் படுத்துவீர்கள் என்ற நம்பிக்கையில் கடல் படத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தேன். படம் ஆரம்பித்த கொஞ்சம் நாளிலே படம் கடல்புற மக்களின் கதை என்றதும் லேசாய் அடிவயிற்றில் ஒரு குத்து குத்தியது. உங்களுக்கும் கிராமத்து வாழ்க்கை படங்களுக்கும் ஒத்தே வராதே என்பது. உ.கை.நெ.கனி.
உங்களது தோல்விப் படங்களில் கூட ஏதாவது ஒரு ஸ்பெஷாலிட்டி இருக்கும். நீங்கள் எல்லாவற்றையும் மேம்போக்காக சொல்பவர் என்ற குற்றச்சாட்டு உங்களைப் பற்றி விமர்சகர்களிடம் இருந்தாலும், மணிரத்னம் படம் என்ற ப்ராண்ட் மூலம் உலகம் முழுவதும் தமிழ் சினிமா கொண்டு சென்றதில் உங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அப்படிப்பட்ட ஒருவரிடமிருந்து எப்படி இப்படி ஒரு படத்தை தர முடிகிறது என்றே தெரியவில்லை. How Could You Do It Mani Sir?
கடல் படத்துக்கு வருவோம். படம் ஆரம்பித்த முதல் காட்சியிலேயே ஒர் அதிர்ச்சி. அர்ஜுனும், அரவிந்த்சாமியும் இளைஞர்களாய் மீசை மழித்து கிறிஸ்துவ சபையில் பாதிரி ட்ரைனிங்கில் படிக்க வருகிறார்கள். பாதிரியாக இருந்தாலும் அடாவடி கில்மா பார்ட்டியான அர்ஜுனின் காமலீலையை கையும் களவுமாய் பிடித்த அரவிந்த் சாமி போட்டுக் கொடுத்துவிட, அதனால் அர்ஜுன் வெளியேறுகிறார். உனக்கும் எனக்கும் ஒர் கணக்கு இருக்கிறது என்று சொல்லிவிட்டு போகிறார். அட இவர்களின் பகைதான் கதை போலிருக்கிறதே இங்கே எங்கே கார்த்திக் பையனுக்கும், ராதா பொண்ணுக்குமான கதை என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, ஒர் சிறுவன் அம்மாவின் மேல் படுத்திருக்க, கதவு தட்டப்பட, உள்ளே வந்த பொன்வண்ணன் அக்குழந்தையை வெளியே இருக்கச் சொல்லிவிட்டு, உள்ளே கதவடைக்க, வாசலில் குழந்தை ஒர் பனை ஓலையை அடர் மழைக்கு பாதுகாப்பாய் தலையில் வைத்து உட்கார்ந்திருக்க, உள்ளே போன பொன்வண்ணன் “உங்கம்மா செத்துட்டாடா” என்று சொல்ல, அது புரியாமல் அம்மாவின் மேல் மீண்டும் படுத்துக் கொள்ளும் காட்சி வந்ததும் ஆஹா.. என்று லேசாய் சிலிர்க்க ஆரம்பித்தது. அடுத்தடுத்த காட்சிகள், விபசாரியான அவளின் உடலை புதைக்கக்கூட அனுமதிக்காத ஊரில் ஊருக்கு ஒதுக்குப்புறமான கடற்கரையில் புதைக்க, என்ன நடக்கிறது என்று புரியாமல் அழுது கொண்டிருக்கும் குழந்தை மலங்க மலங்க பார்க்க, பெட்டிக்குள் அடங்காத அப்பெண்ணின் காலை உடைத்து புதைக்கும் போது அலறி அழும் குழந்தையோடு டைட்டில் ஆரம்பித்ததும், டைட்டில் காட்சிகளில் அச்சிறுவன் விபசாரி மகன் என்று ஒதுக்கப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாய் பொறுக்கியாய் மாறி நிற்பது வரை பார்த்ததும் பத்து நிமிஷத்தில் இவ்வளவு கதை சொல்லியிருக்கிறாரே.. சூப்பர் என்று நினைக்க வைத்துவிட்டீர்கள். அதுவும் பெண் புதைக்கப்படும் போது பின்னணியில் வரும் சித்திரை நிலா உருக்கம்.
அ.சாமி, அர்ஜுனின் இளமைத் தோற்ற அதிர்ச்சியை தாண்டி இக்காட்சிகளில் இருந்த நேர்த்தியை பார்த்து மெய் மறக்க ஆரம்பித்த அடுத்த விநாடியிலிருந்து என்ன சொல்லப் போகிறீர்கள் என்று ஆர்வம் மேலிட உட்கார்ந்தவனை சும்மா சுழட்டி, சுழட்டி போட்டு விட்டீர்கள். அ.சாமிக்கும் அர்ஜுனுக்குமான கன்பர்டேஷனாகவும் இல்லாமல், கெளதமுக்கும், துளசிக்குமான காதல் கதையாகவும், இல்லாமல், மீனவர் வாழ்க்கையை சொல்லும் படமாகவும் இல்லாமல் குழப்பியெடுத்து காட்சிக்கு காட்சி க்ளிஷேக்களின் தொகுப்பாய் படம் அமைந்திருப்பதை நீங்கள் உணர்ந்தேதான் செய்தீர்களா? How Could you do this Mani Sir?
கெளதமுக்கு ஓப்பனிங் சீன் வைத்து அறிமுகப்படுத்தும் அளவிற்கு பில்டப் எதற்கு? துளசிக்கும் கெளதமுக்கும் காதல் வருவதற்கு காரணம் பிரியாணி பாக்கெட்டை பஸ்லில் கொடுத்ததினாலா? சரி.. துளசி ஏன் ஆஸ்பத்திரியில் ட்ரிப் ஏற்றிக் கொண்டிருக்கிறார்? தமிழ் சினிமா வழக்கப்படி லூஸுத்தனமாய் நடக்கும் பெண்ணைத்தான் ரசிகர்கள் விரும்புவார்கள் என்ற விதியை நீங்களும் பின்பற்ற ஆரம்பித்து விட்டீர்களே என்று யோசிக்கும் போது அவளுக்கு மனவளர்ச்சி இல்லை என்ற தடாலடி விஷயத்தை சொல்கிறீர்கள். மனவளர்ச்சி இல்லாத பெண்ணை எப்படி ஊருக்கு மருத்துவம் செய்ய சிஸ்டர் அனுப்புகிறார்?. என்ன தான் சிஸ்டர் தேவையேயில்லாமல் துளசியைப் பற்றி மனவளர்ச்சி இல்லாவிட்டாலும், பயங்கர அறிவு என்று ஸ்பெஷல் சில்ரன்களைப் பற்றி உதாரணமெல்லாம் கூறினாலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவளின் மனவளர்ச்சி குறைவுக்கான காரணத்தை வெளிப்படுத்தும் போது கொஞ்சம் கூட ஒட்டவேயில்லை. பதினைந்து வயதுக்கு அநியாய உடம்பு துளசிக்கு. உடலிலும் இல்லை, நடிப்பிலும் இல்லை துள்ளல். ஒரே ஒரு காட்சியில் மட்டும் கூடை தூக்கிக் கொண்டு போகும் பெண்களின் பின்பக்கங்கள் ஆடும் ஆட்டத்தைப் பார்த்து கெளதமிடம் ‘அந்த அக்காங்க எல்லாம் எவ்வளவு அழகா டான்ஸ் ஆடுறாங்க” என்று சொல்லுமிடம் மட்டுமே க்யூட். மற்றபடி குறிப்பிட்டு சொல்லும் படியாய் ஏதுமில்லை.
கெளதம். எனக்கென்னவோ இவருக்கு கேரக்டரே சூட்டாகவில்லை என்று தோன்றுகிறது. ஆங்காங்கே படு க்ளோசப்பில் நடிக்க முயற்சிக்கிறார். இன்னும்.. இன்னும் .. போகணும். ஆக்ஷன் காட்சிகளில் வேகத்துடன் இருக்கிறார். ரெண்டு ரெண்டு ப்ரேமாக பாடல்களில் நடனம் வருவதால் நன்றாக ஆடினாரா இலலியா என்று சொல்ல முடியவில்லை. ஒரு வேளை ஆட்டம் சரியில்லாததால் கூட ரெண்டிரண்டு ப்ரேம் வந்திருக்கலாம். அர்ஜுனின் ஆரம்பக் காட்சிகளில் இருந்த இம்ப்ரசிவான விஷயங்கள் எல்லாமே போகப் போக தேய்ந்துவிடுகிறது. அ.சாமிக்கு நல்ல ரீ எண்ட்ரி.
கதை, வசனம், திரைக்கதையில் உங்களோடு பணியாற்றியிருக்கிற ஜெயமோனை பற்றி சொல்ல வேண்டுமானால் உங்கள் அவர் சக்கையாய் ஏமாற்றியிருக்கிறார். ஏற்கனவே நீர்பறவைக்கு எழுதியதையே மறுக்கா, திலுப்பி எழுதி அதே மக்கா, கோயில், சரக்கடிப்பது, சர்த் பாதர் என்று அந்த பட ஜல்லியையே இங்கிலீஷ்தனமான ஜல்லியாய் அடித்திருக்கிறார். எனக்கு தெரிந்து உங்களது படத்திலேயே அதிகமான வசனங்களை எழுதி வாங்கி கொடுத்த காசுக்கு ஜீரணம் செய்திருக்கிறீர்கள் என்று மட்டும் புரிகிறது. ஆரம்ப பாதிரி ட்ரைனிங், சர்ச் குறித்த விஷயங்களின் ஜெயமோகனின் டீடெயிலிங்கை பார்த்து மிரண்டு போய்த்தான் சுஜாதாவுக்கு அடுத்து இவரிடம் போனீர்களோ? சேஞ்ச் த ரைட்டர் சார்.
ஒளிப்பதிவு நல்லாருக்கு என்று ராஜிவ்மேனனை பாராட்டுவதில் என்ன இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை ஆரம்ப காட்சிகளில் இருந்த கலர் டோன், க்ரேடிங் படம் முழுக்க இருந்திருக்க வேண்டிய படமிது. ஆனால் அதன் பிறகு வரும் காட்சிகளில் எல்லாம் ஹைஃபை இங்கிலீஷ் கலராய் தெரிவதால் பளிச்சென்ற வண்ணத்துடன் இருந்தாலும் கதைக்கு பொருந்தாத ஒளிப்பதிவு சார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசை உங்களது படங்களின் டீசர்களைப் போலத்தான். படம் வெளியாவதற்கு கடலின் பாடல்கள் ஹிட். ஆனால் அப்போதே கடல்புரத்துக்கும் இப்பாடல்களுக்கு சம்பந்தமேயில்லையே என்று யோசித்துக் கொண்டிருக்க, கேட்க அருமையாய் இருந்த பாடல்கள் எல்லாம் கொஞ்சம் கூட ஒட்டாத மேக்கிங்கில் அடிப்பட்டு போய் பல்லிளிக்க ஆரம்பித்துவிட்டது. இந்த வருடத்தில் அற்புதமான் பாடலாய் நான் கருதிய “அடியே” என்கிற பாடலை இதை விட மோசமாய் யாரும் படமெடுத்திருக்க முடியாது. ஏற்கனவே கோட்டை அடுப்புப் போல இருக்கும் துளசியின் இடுப்பை வைத்து பெல்லி டான்ஸ் ஆடவிட்டிருக்கும் கொடூரத்தை என்னன்னு சொல்றது. ஏ.ஆர்.ரஹ்மானின் அற்புதமான உழைப்பு விழலுக்கு இறைத்துவிட்டீர்கள். How Could You Do This Mani Sir?
இடைவேளை வரை ஒரு மாதிரி ஒலியும் ஒளியும் போல ஒப்பேத்திவிட்டாலும், இடைவேளைக்கு பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் தேவையேயில்லாமல் கெளதமை அர்ஜுனடன் சேர்த்து தளபதி படத்தை ரீமேக்க என்ன காரணம்? துளசியின் ப்ளாஷ்பேக், அர்ஜுன் ஏன் மெண்டல் போல் நடந்து கொள்கிறார்? அர்ஜுனின் துரோத்துக்கு ஏன் அவளின் காதலியாய் சொல்லப்படும் பெண் ஒப்புக் கொண்டாள்? 5 ரூபா கொடுத்து படுக்க வர்றியான்னு கேக்குறவன் மத்தியில கட்டிக்கிறேன்னு சொன்னவரு அவரு என்று வசனமாய் சொன்னாலும் ம்ஹும் போதலை. அர்ஜுன் என்ன கடத்துகிறார்? அரவிந்த்சாமி ஏன் அவருக்கு எதிராய் நடந்த விஷயத்துக்கு போராடவில்லை?. அர்ஜுன் ஏன் யாரைப் பார்த்தாலும் கொன்று கொண்டிருக்கிறார்?. ஆர்பரிக்கும் கடலின் நடுவே அர்ஜுனை கூப்பிடும் காட்சிகள் எல்லாம் அபத்தத்தின் உட்சம். என்ன தான் சொல்ல வருகிறீர்கள் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது திடீரென க்ளைமாக்ஸ் வந்துவிடுகிறது. க்ளைமாக்ஸ் சண்டைக்காட்சி அதை விட மோசம். படு குழப்படியாய் முடிந்தால் போதும் என்று எண்ணத்தை ஏற்படுத்திவிட்டீர்கள் சார். நாங்கள் உங்களிடமிருந்து ஒரு நல்ல காதல் கதையை தருவீர்கள் என்ற நம்பிக்கையோடு வர, நீங்களோ, காதல் கதையாகவும் இல்லாமல், அ.சாமி, அர்ஜுனின் கதையாகவும் இல்லாமல், ஏகப்பட்ட உட்கதைகளை வைத்து எங்களை வதைப்பதை விட, சிம்பிளாய் ஒர் சின்ன லைனை எடுத்துக் கொண்டு நீங்கள் வெற்றி பெற்ற இதயத்தை திருடாதே, மெளனராகம், அலைபாயுதே, போன்ற படங்களைத் தான் எதிர்பார்க்கிறோம். இந்தக் கடிதம் கூட நான் ஆதர்சமாய் மதிக்கும் இயக்குனரிடமிருந்து இவ்வளவு பெரிய சறுக்கலை எதிர்ப்பார்க்காததால் தான். நீங்கள் எப்படி இப்படி ஒரு படத்தை எடுக்கலாம் என்ற ஆதங்கத்தில்தான். அப்புறம் ஒர் எச்சரிக்கை இந்த இலக்கியவாதிகளுடன் சேராதீர்கள். கெடுத்து வச்சிருவாங்க.
கேபிள் சங்கர்
Post a Comment
28 comments:
correctu, correctu - merattu merattu
ஆஹா ! ! அருமையான கடிதம் கேபிள்ஜி ! ! அப்படியே பிரிண்ட் எடுத்து அவருக்கு அனுப்பவும் ! ! அதை சுஹாசினியம்மா அவருக்கு படித்து காட்டட்டும் ! !
மொக்கை ராவணன் படத்தை எப்படி நல்ல படமாக மாற்றுவது என்று கடுமையாக யோசித்த
மணிரத்தினம் , தற்போது கடல் படத்தை உருவாக்கி உள்ளாரோ ....
how could you do this Mani Sir..
சரி சீக்கிரம் டேவிட் பார்த்துட்டு விமர்சனம் போடுங்க/
என்னடா அண்ணாச்சி விமர்சனம் இன்னும் வரலையேநு பார்த்தே , இப்பத புரியுது நீங்க குமுறி குமிறி எழுதுன பார்த்த உடனே புரிஞ்சி போச்சி ஏன் lateநு.
flop?
விமரிசனத்தைப் படித்ததும் ரொம்ப வருத்தம்மாக இருந்தது - உங்களை நினைத்துத்தான்!
//.. படு மொக்கையாய் அமைந்து விட்டதே என்று வருத்தப்பட்டவனில் நானும் ஒருவன் என்பதை சொல்லிக் கொள்வதில் வருத்தமேதுமில்லை..//
மூன்றாவது பாராவில் //How Could You Do It Mani Sir?// - இத்துடன் விமரிசனத்தை நிறுத்திக்கொண்டிருந்தால் சுஜாதா கதை போல் ஷார்ப்பாக இருந்திருக்கும்! ஒருவேளை மணிரத்னத்தின் 'சட்டி' காலியாயிருக்கும். இனி எதிர்பார்ப்புகள் இருக்காது!
//அ.சாமிக்கும் அர்ஜுனுக்குமான கன்பர்டேஷனாகவும்..// டைபிங் எர்ரர் - 'கான்ப்ரன்டேஷன் ' என்று திருத்தவும்.
விஸ்வரூபம் பட தாமதத்தால் அலெக்ஸ் பாண்டியனும் கண்ணா லட்டு..வும் பிழைத்தன; கடல், டேவிட் மொக்கையினால் விஸ்வரூபம் பிழைக்கும் (அதிக தியேட்டர் கிடைக்கும்.)!!
-ஜெ.
Don't watch the Movie "Devid", better watch the "Kadal" Movie once again.
// "சரி சீக்கிரம் டேவிட் பார்த்துட்டு விமர்சனம் போடுங்க" //.... அய்யா சிவா David க்கு விமர்சனமே வேண்டாம். உலக மகா மொக்கை. பேசாம டிக்கெடொட ஒரு Quarter பாட்டிலையும் குடுத்துடலாம். அந்த அளவுக்கு Vikram சரக்கு அடிக்கிற ஸீன் தான் படம் முழுக்க. படம் போட்ட 20வது நிமிஷதிலையே எப்படா முடியும்ன்னு தோணுது. Vikaram மாதிரி நல்ல actor நடிக்க scope இருக்கற படத்த விட்டுட்டு குடிக்க scope இருக்கற படத்தில ஏன் நடிச்சாருன்னு புரியல. படத்தில வர எந்த ஒரு பிகரும் பாக்கற மாதிரி இல்லை. படத்தோட ஒரே ஆறுதல் Jeeva & Nassar. மத்தபடி படம் முடிஞ்சவுடன் வண்டி தானா wine shop பக்கம் போறத தடுக்க முடியல...
சட்டி காலியாகி 10 வருசம் ஆச்சு....இன்னுமா இந்த ஒலகம் ‘மணி’ய நம்புது...எல்லாம் அவங்க விதி.....இன்னும் பத்து வருசத்துக்க அவரையே நம்புங்க.....தமிழ் சினிமா நல்லா வெளங்கும்.....
sujatha illamal thadumarum manisir
தங்களது விமர்சனத்துக்கு நன்றி.படம் நமது பொறுமையை சோதிப்பதில் எந்த வித மாற்று கருத்தும் இல்லை.ஏன் இது மாதிரி எல்லாம் படம் எடுகிறார்கள் என்று தெரியவில்லை
அட தேவுடா , இதுவும் மொக்கையா... தப்பி தவறி டேவிட் படத்துக்கு போயிராதீங்க அண்ணா.... மரணக்கடி... என்ன இந்த வருஷம் இப்படி கேவலமான படமா வருது...... கடவுளே இதுகாகவாது விஸ்வரூபம் ரிலீஸ் ஆகணும்.... முடியல..
தமிழ்நாட்டில் அடுத்த பிரச்சினை காண காரணம் ரெடி .கிறிஸ்துவ பாதரியார் காம லீலைகளில் ஈடுபடுவதாய் காண்பித்ததற்காக சில கிறிஸ்துவ அமைப்புகள் போராட கூடும்.
என்ன சார் சொல்றீங்க? ..
நாயகன் படத்தை அப்படியே தளபதி என்ற பெயரில் இவர் ரீமேக் செய்யவில்லையா ?
இவர் தயாரிப்பில் இயக்குனர் வசந்த் "நேருக்கு நேர்" என்று - அக்னி நட்சத்திரம்" படத்தை அப்படியே காப்பியடித்து இவரை ஏமாற்றவில்லையா?
இவரை எப்படிதான் சிறந்த இயக்குனர் என்று புகல்கிரீர்களோ தெரியவில்லை..
HOW COULD YOU DO THIS SANKAR SIR?
கேபிள் அவர்களே ,
போன வாரம் கேப்டன் டிவியில் விஸ்வரூபம் பற்றிய Interview பார்த்தேன் . உங்கள் பதில்கள் நன்றாக இருந்தது. வாழ்த்துகள் .
நீங்கள் சொல்வது தவறு, மணிரத்தனம் அவர்களுக்கு சரக்கு போய்விட்டது .
எனக்கு ஓர் சந்தேகம். ஒரு படம் ஹிட் ஆனா, தனக்கு பிடித்த டைரக்டர் இல்ல ஹீரோ தான் காரணம் சொல்லரிங்க . அதுவே பலாப் ஆனா தனக்கு பிடிக்காத டைரக்டர் இல்ல ஹீரோ தான் காரணம் சொல்லரிங்க. ஒரு வேள டைரக்டர் , ஹீரோ இரண்டு பேரும் புடிச்சா கதை ஆசிரியர் காரணமா?. அப்ப கதை ஆசிரியரயும் புடிச்சா யார சொல்லுவிங்க? ? படம் பார்பவர்களையா ?
உங்க கிட்ட ஒரு கேள்வி .
"சுறா படம் பலாப் ஆனது காரணம் "ஹீரோவா", "டைரக்டர்ரா இல்ல "கதை ஆசிரியர்ரா" ?
//உங்களது முதல் படமான பகல்நிலவுக்கு முன் நீங்கள் எடுத்த பல்லவி அனுபல்லவியை பெங்களூருக்கு சென்று பார்த்தவன் நான். //
பல்லவி அனுபல்லவி வந்து முப்பது வருசமாச்சு. நீங்க இருபது வயசுல பெங்களூர் போயிருந்திங்கன்னா கூட இப்போ அம்பது வயசு.. மாட்டிக்கிட்டிங்களே அங்கிள் :)
என் கல்லூரி காலங்களில் மணி சாரின் அநியாய விருப்பன் நான்..
மணி, மணி என்று கொண்டாடி தீர்த்தவன். எனக்கு பம்பாய் படத்துடன் முடிந்து விட்டது..
அவரின், படத்தை பல வருடங்களுக்கு பின்பு ரொம்பவே நம்பி ராவணன் பார்த்ததுடன், முடிவே எடுத்து விட்டேன். மணி சாரின் படத்தை இனிமேல் பார்க்கவே கூடாது என..
என் ஞாபக அலையிலிருந்து கழன்று விடுவார் என்ற நல்லெண்னமே..
I think Karthik would have helped manirathnam by playing a guest role (Agni natchathram)for him in his growing stage in cine industry. In order to repay his contribute to karthik he would have booked Gautham even though he dont like the story making i feel.
கடித வரிகள் அனைத்தும் அருமை..
ஆரம்பகால ஏணிகளை உதைக்க நினைத்தவருக்கு..சரியான தண்டனையாக அமைந்துவிட்டது படம்.
'யாகாவாராயினும் நா காக்க"
My comment 1 here
My comment 2 here
யாராவது 'SAW' KADAL என்று எழுதியிருந்தால்
கடல் பார்த்தேன் என்று அர்த்தம் இல்லை
கடல் ரம்பம் என்று அர்த்தம் :) :)
:)
Mr.Sankar,
Pls dont praise Mr.Subramaniam for Naaygan. I was an ardent fan of Mr.Mani till I see Godfather. Kamal was great in imitating Mr.Brando. I m not a movie freak, but still I doubt his other movies as they could also be copied from somewhere.
சார், எனக்கென்னவோ மணி சார் கன்வர்ட் ஆயிட்டார்னு தோனுது.
First of all this is manirathnam's film..not jeyamohan's.A director is having all rights to accept or deny a writer'own ideas.....we people r having sense..this statement by u actually means that 'manisir'was totally depending on jeyamohan.so when sujatha worked with 'manisir'...was that a film by sujatha....Kaaval kottam won sahithya academy...a part of that'aravaan'?...There are so many movies in all languages based on novels but no one blames the writer.pls try to understand.....kudicchittu vaandhi edukkum nirayaper solradhu"sarakku sariyilla machi"aana unmai?
Ellame saridhan director yaaru..'.manisar'a jeyamohan a
Post a Comment