Mama - பேய் வளர்த்த பிள்ளைகள்
வர வர இங்கிலிஷ் படங்கள் எல்லாம் தமிழ் பட செண்டிமெண்டை மிஞ்சிக் கொண்டிருக்கிறது. பாட்மேன், சூப்பர்மேன், ஜேம்ஸ்பாண்ட் என படு பயங்கர ஆக்ஷன் ஹீரோக்கள் கூட உருகி, உருகி செண்டிமெண்ட் குழைத்து பேசிக் கொண்டிருக்க, இதில் உட்சபட்சமாய் தாயைக்காத்த தனயன் படத்தைப் போல ஜேம்ஸ்பாண்ட் மடியில் ரெண்டு வரி வசனம் பேசிவிட்டெல்லாம் உயிர் விடும் அளவிற்கு ஹாலிவுட் சினிமாக்களில் வர ஆரம்பித்துவிட்டது. அவர்களுக்கு நல்ல மாற்றம். ஆனால் நமக்கு.. டேய்.. இதைத்தானடா.. இங்க பாத்திட்டிருக்கோம் நீயுமா? என்ற அலுப்பு வரத்த்தான் செய்கிறது. அது சரி அவங்களும் என்னத்தான் பண்ணுவாங்க என்கிறீர்களா?
அந்த லிஸ்டில் இந்த மாமாவும் சேர்ந்துவிட்டது என்று சொல்ல வைத்துவிட்டார்கள். ட்ரைலரைப் பார்த்து படம் பார்க்காதே என்ற அறிய உண்மையை கிட்டத்தட்ட ஆயிரமாவது முறையாக உணர்ந்து கொள்ள செய்த படம். 2008 பெரிய பணப் பிரச்சனையின் காரணமாய் தன்னுடய பார்ட்னரையும், மனைவியும் கொலை செய்துவிட்டு, தன் மூன்று வயது மகள் விக்டோரியாவையும், ஒரு வயது லில்லியையும் காரில் அழைத்துக் கொண்டு தப்பிக்க முயல்கிறான். ஒரு கட்டத்தில் கார் விபத்துக்கு உள்ளாக, வேறு வழியில்லாமல் தற்கொலை செய்து கொள்ள விழையும் முன் தன் குழந்தைகளை சுட்டுக் கொன்று விட்டு, தானும் சாக நினைக்கும் போது ஒர் கரிய உருவம் அவனை அலேக்காக தூக்கிக் கொண்டு போய் கழுத்தை முறித்து கொல்கிறது. ஐந்து வருடங்களுக்கு பின் அச்சிறுமிகளை கண்டுபிடிக்கப்படுகிறார்கள். கிட்டத்தட்ட ஒர் விநோத மிருக நடவடிக்கைகளுடன். (பாலாவுக்கு உபயோகப்படலாம்). அவர்களின் சித்தப்பா அவர்களை தங்கள் பாதுகாப்பில் கொண்டு வைத்து வளர்க்க பிரியப்படுகிறார். மெண்டலாய் டிஸ்டர்ப் ஆகியிருக்கும் இரு பெண்களையும் சைக்கியாட்ரிஸ்ட் ஜெரால்ட் கவுன்சிலிங் கொடுக்க, இருவர் சொல்லும் மாமா அவர்களின் கற்பனை பாத்திரம் என்று நம்ப ஆரம்பிக்கிறார். ஆனால் அது கற்பனை பாத்திரம் அல்ல, என்பதும், பேய் என்பதையும் தெரிய வரும் போது விறுவிறுப்பு ஆரம்பமாகிறது. பேய் தான் வளர்த்த குழந்தைகளுடன் இருக்க ஆசைப்பட்டு அவர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்க, ப்ரச்சனைகள் ஒவ்வொன்றாய் ஆரம்பிக்கிறது. கடைசியில் யார் வென்றார்கள் என்பதை உருக, உருக டெரரோடு சொல்லியிருக்கிறார்கள்.
டெக்னிக்கலாய் ஒளிப்பதிவிலாகட்டும், மேக்கிங்கிலாகட்டும் நன்றாக இருந்தாலும் கூட தவிர நம்மை என்கிராஸ் செய்யும் அளவிற்கோ, பயபடுத்தும் அளவிற்கோ ஓரிரு காட்சிகளைத் தவிர பெரிதாய் அமையவில்லை. எத்தனையோ படங்களில் இதே போன்ற செண்டிமெண்ட் கதைகளோடு பேய் படங்களைப் பார்த்திருப்பதினால் இதனால்தான் இப்படி என்று கதை போகும் போக்கை முன்கூட்டியே சொல்ல முடியுமாதலால்.. ம்ஹும்.. பட்.. அந்த குழந்தைகளின் நடிப்பும், பேயின் பின்னணிக்காக சொல்லப்படும் கதையை சொன்ன விதமும், சூப்பர்ப். 2008 ல் இதே பெயரில் எடுக்கப்பட்ட ஸ்பானிஷ் குறும்படத்தைத்தான் திரைப்படமாய் எடுத்திருக்கிறார்கள். குறும்படமாய் இதில் சொன்ன கதை ஷாக்கிங்காய்த்தான் இருந்திருக்க வேண்டும். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்கின் போல்டர்கீஸ்ட் என்றொரு படமிருக்கும் அதை மீண்டும் ஒரு முறை பார்க்கத் தூண்டியது இந்தப் படம்.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Comments