அங்கூர் ஆரோரா என்கிற சிறுவன் வயிற்று வலி காரணமாய் ஷெகாவத் ஹாஸ்பிட்டலில் அனுமதிக்கப் படுகிறான். அவனுக்கு சாதாரண அப்பண்டிஸ் ஐய்டீஸ் என்று முடிவெடுக்கப்பட்டு ஆபரேஷன் நடக்கிறது. ஆபரேஷனுக்கு முன் வாய் மூலமாய் ஏதும் சாப்பிடக் கூடாது என்ற விதியை சிறுவன் மீறி விடுகிறான். ஆனால் அதை ஆபரேஷனுக்கு முன் சொல்லியும் விடுகிறான். ஆனால் அதை கண்டு கொள்ளாத சீப் டாக்டர் கே.கே.மேனன் ஆபரேஷன் செய்துவிடுகிறார். வெற்றிகரமாய் முடிக்கப்பட்ட ஆபரேஷனுக்கு பின் மூச்சுதிணறல் ஏற்பட்டு சிறுவன் கோமாவுக்கு போய் இறந்துவிடுகிறான். ஆஸ்பிட்டலில் இருக்கும் நேர்மையான ட்ரையினி டாக்டர் ஒருவரால் அது டாக்டரின் கவனமின்மை காரணமாய் ஏற்பட்டது என்று தெரிய கோர்டுக்கு வருகிறது கேஸ். பின்பு என்ன ஆனது என்பது தான் கதை.
தினசரி பேப்பரில் பார்க்கும் செய்திதான். ஆனால் அதை சுவாரஸ்ய திரைக்கதையாக்கி கொடுத்ததில் தான் ஜெயித்திருக்கிறார்கள். அங்கூர் ஆரோராவின் தாய் டிஸ்கா சோப்ரா. கணவனால் கைவிடப்பட்டவள். அவளுக்கு ஆதரவான அவளது இளம் முதலாளி. அவர்களுக்குள் இருக்கும் உறவின் அர்த்தம் ஒருபுறம் என்றால். இன்னொரு புறம் அந்த ஆஸ்பிட்டலில் ட்ரைனியாக இருக்கும் அர்ஜுன் மற்றும் விகாசா. இருவரும் லிவிங் டுகெதராய் இருப்பவர்கள். காதலர்கள். அங்கூரின் இறப்பின் காரணமாய் அவர்களுக்குள் யார் பக்கம் இருப்பது என்ற குழப்பத்தினால் பிரிவு. கோர்ட்டு கேஸ் என்ற வந்த பின்பு ஹாஸ்பிட்டலின் பக்கம் வாதாடும் வக்கீலுக்கும், எதிர்தரப்பில் வாதாடும் பெண் வக்கீலுக்குமான உறவு. அதனால் ஏற்படும் கர்ப்பம். கர்பக் கலைப்பு. அதனால் ஏற்படும் மன உளைச்சல். தான் செய்தது சிறு தவறு. ஒரு முறைதானே செய்திருக்கிறேன். ஆனால் எத்தனைப் பேரை காப்பாற்றியிருப்பேன் என்று இறுமாப்போடு மார் தட்டும் மிகச் சிறந்த சர்ஜனாய், ஹாஸ்பிட்டலின் எல்லாமுமாய் வலம் வரும் கே.கே.மேனன் என ஹூயூமன் எமோஷனை கலந்து கட்டி அடித்திருக்கிறார்கள்.
டாப் க்ளாஸ் நடிப்பென்றால் அது கே.கே மேனனுடயதுதான். அந்த சிடு சிடு முகம். டாமிமென்ஸ் என்று மனிதர் வாழ்ந்திருக்கிறார். க்ளைமாக்ஸில் ஆமா நான் கடவுள் தான் என்று பேசும் நீண்ட வசனத்தின் போது அவர் காட்டும் பாடி லேங்குவேஜ் வாவ்.. இவரைப் போன்ற நடிகரை அநியாயமாய் குப்பத்திற்கும், கர்நாடக பார்டருக்கும் ஹீரோயினோடு நான்கு மணி நேரம் ஜீப்பில் போக வைத்த நம் தமிழ் சினிமாவை என்ன சொல்ல?. அதே போல கண்ணா லட்டு தின்ன ஆசையா ஹீரோயின் விசாகா. பொண்ணு என்னமா நடிக்குது. இவங்களையெல்லாம் சரியாக உபயோகப்படுத்திக் கொள்ளாமல் க்ளாமர் டாலாய் வளைய விட்டிருப்பதும் வருத்தமான விஷயமே. அர்ஜுன் ஹீரோவுக்கான முகமில்லாவிட்டாலும், அவரின் முயற்சி ஹீரோயிசமான விஷயமே.
ஒளிப்பதிவு, வசனம், என எல்லாவற்றிலும் மிக நேர்த்தியாக செய்திருக்கிறார்கள். தேவையில்லாத பாடல்கள் இல்லை. மாண்டேஜுகளாய் காட்சிகளோடு வழுக்கிக் கொண்டு போகிறது பாடல்கள். மைனஸ் என்று பார்த்தால் கொஞ்சம் சினிமாத்தனமான க்ளைமாக்ஸ். அப்புறம் அமெரிக்க கோர்ட்டுகள் போன்ற செட் இப்படி குட்டிக் குட்டியாய் தேடிப் பிடித்து சொல்லலாம். இயக்குனர் சுகாலிக்கு வாழ்த்துகள்.
கேபிள் சங்கர்
Post a Comment
1 comment:
Glamour doll-a kaatraangalaa..?
yaaruppa athu...?
Post a Comment