சினிமாவிற்கு வந்திருக்கும் இன்னொரு ஆபத்து.
ஆமாம் இன்னொரு ஆபத்துதான். ஏற்கனவே டிக்கெட் விலையேற்றத்தாலும், பைரஸியினாலும், நொந்து நூலாகிப் போய் சூப்பர் டூப்பர் ஹிட் படத்தின் வாழ்நாளே மூன்று வாரங்கள் தான் என்று வந்துவிட்ட நிலையில் இருக்கிற தமிழ் சினிமாவிற்கு இன்னுமொரு ப்ரச்சனை உருவாகியிருக்கிறது. அதைப் பற்றி இப்போதே திரைத் துறையினர் யோசித்து முடிவெடுக்க முடியவில்லையென்றால் இன்றைய நிலையில் வருமானம் வந்து கொண்டிருக்கும் மல்ட்டிப்ளெக்ஸ் ஆடியன்ஸையும் நாம் இழந்துவிடுவோம்.
சில வாரங்களுக்கு முன் நானும் தயாரிப்பாளர் முக்தா ரவியும் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அவர் சொன்ன விஷயம் யோசிக்க வேண்டியதாய்த்தான் இருந்தது. அதாவது இன்றைக்கு படம் வெளியான முதல் நாளிலேயே பைரஸி டிவிடிக்கள் வெளிவந்து விடுகிறது. ஆன்லைனிலும் நல்ல பிரிண்ட் வந்துவிடுகிறது. நல்ல தியேட்டர், ஒளி, ஒலியமைப்பு கொண்டதினால் தான் மல்ட்டிப்ளெக்ஸ் தியேட்டர்களில் படம் பார்க்கிறார்கள். இப்போது அதே குவாலிட்டியுடன் வசதியாய் நாம் குடியிருக்கும் வீட்டின் காம்பவுண்டில் பத்து பேரோடு உட்கார்ந்து படம் பார்க்க முடியுமென்றால் பின்பு என்ன ஆகும்? மல்ட்டிப்ளெக்ஸ் வருமானமும் போகும்.
சில வருடங்களுக்கு முன் யு.எஃப்.ஓவில் என்னை தொடர்பு கொண்டு பேசினார்கள். நாங்கள் வெளியிட்ட படத்தை ப்ரைவேட் ஸ்கீரினிங்கிற்கு யாராவது கேட்டால் அவர்களுக்கு சார்ஜ் செய்யப்படும் தொகையில் அறுபது சதவிகிதம் தயாரிப்பாளருக்கும், நாற்பது சதவிகிதம் அவர்களும் என்று பேசினார்கள். யார் ப்ரைவேட் ஸ்கீரினிங் கேட்பார்கள் என்று கேட்டதற்கு சமுதாயத்தில் பெரிய நிலையில் உள்ளவர்கள் வீட்டிலேயே சூப்பரான ஓரு ஹோம் தியேட்டரை வைத்திருக்க, அதில் யு.எஃப்.ஓ, ரியல் இமேஜ் போன்றவர்களின் சர்வரை வாங்கி வைத்துவிட்டால் போதும், தியேட்டரில் பார்க்கும் அதே டிஜிட்டல் குவாலிட்டியில் அவர்கள் வீட்டிலிருந்தே பார்த்துவிடலாம். அதற்காக ஆகும் செலவு கொஞ்சம் அதிகம் என்றாலும் அவர்களுடய கேலிபருக்கு அது ஒரு தொகையேயில்லை. முன்னெல்லாம் பெரும் பணக்காரர்கள் கூடும் ஷோஷியல் க்ளப் போன்ற இடங்களில் வாரம் ஒரு முறை புதிய திரைப்படங்களை ஒரு கேதரிங்கின் போது ஒளிபரப்புவார்கள். அதற்கு அந்த ஏரியா விநியோகஸ்தர்களிடமிருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை கொடுத்து அன்றைக்கு மட்டும் பிரிண்டை வாங்கி வந்து ப்ரொஜக்டரில் ஓட்டுவார்கள். விநியோகஸ்தர்களுக்கு இம்மாதிரியான வருமானம் உபரியாய் வரும்.
காலம் மாற மாற இம்மாதிரியான பெரிய க்ளப்புகளைத் தவிர சிறிய க்ளப்புகளில் எல்லாம் உரிமை வாங்கி படம் போடாமல் நல்ல தரமான பைரஸி டிவிடியை வைத்து நல்ல டிஜிட்டல் ப்ரஜக்டர் மூலமாய் ஒளிபரப்பி விடுகிறார்கள். இதனால் நல்ல படமென்று கேள்விப்பட்டால் தியேட்டருக்கு வரும் கூட்டத்தில் ஒரு துளியளவாவது குறையத்தான் செய்கிறது. சரி.. இது ஒரு சின்ன விஷயம்தானே அது என்ன பெரியதாய் பாதிக்கப் போகிறது என்று கேட்பவர்களுக்கு இப்போது நான் சொல்லும் விஷயம் இன்னும் அதிர்ச்சியாக்கும்
இன்றைக்கு நிறைய கேட்டட் காலனிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு கேட்டட் காலனியிலும், ஸ்விம்மிங் பூல், ஜிம், விளையாட்டுக்கென்று தனிப்பட்ட் இடம், ஷோஷியல் க்ளப், என்று வீட்டை விட்டு வெளியே போகாமல் எல்லாமே கிடைக்கக்கூடிய அளவில் கட்டப்பட்டு வருகிறது. இந்த லிஸ்டில் இப்போது எல்லா கேட்டட் கம்யூனிட்டிகளிலும் உட கட்டப்படுவது மின் தியேட்டர். ஐம்பதிலிருந்து நூறு பேர் வரை ஒன்றாய் உட்கார்ந்து ப்டம் பார்க்கும் வசதியோடு ஒரு டிஜிட்டல் தியேட்டரும் அங்கே வருகிறது. இம்மாதிரியான தியேட்டர்களில் எத்தனை தியேட்டர்களில் தினமும் பைரசி டிவிடிக்களை வைத்து ப்ரொஜக்ஷன் செயயப்படுகிறது என்பதை கண்காணிக்க முடியும்?.
இன்றைக்கே இதற்கான விழிப்புணர்வோடு அரசுடன் சேர்ந்து திரையுலகினர் செயல்பட வேண்டிய நிலை வந்துவிட்டது. நிச்சயம் இம்மாதிரியான தியேட்டர் கட்டும் போது அதற்கான உரிமம் வழங்க அரசிடம் போய்த்தான் தீர வேண்டும் அப்படி போகும் பட்சத்தில் டிஜிட்டல் ஒளிபரப்பு செய்யும் தற்போதைய UFO, Real Image, Pxd, போன்ற நிறுவனங்களின் ப்ரொஜக்ஷன் நிறுவப்பட்டதற்கான அத்தாட்சி சான்றிதழ் இருந்தால் தான் தியேட்டர் கட்ட உரிமம் வழங்கப்படும் என்று சட்டம் கொண்டுவரலாம். அப்படி கொண்டு வரும் பட்சத்தில் இவர்களுடய லைசென்ஸ் கீ இல்லாமல் படம் ஒளிபரப்ப முடியாது. லைசென்ஸ் கீ வேண்டுமென்றால் குறிப்பட்ட தொகை கட்டித்தான் வாங்க வேண்டும். வழக்கமாய் தயாரிப்பாளரே தன் படத்தை மேற் சொன்ன மூன்று நிறுவனங்களிமிருந்து ஒரு ஷோ போட வேண்டுமென்றால் தியேட்டருக்கான வாடகை, மற்றும் ஒளிபரப்ப ஆயிரத்து நூறு ருபாய் வரை கட்டித்தான் ஒளிபரப்பு செய்ய முடியும். அப்படி தயாரிப்பாளருக்கே இந்த முறை என்றால் நூறு பேர் பார்க்கும் தியேட்டரில் ஒரு குழுவாய் படம் பார்க்க தோராயமாய் ஒரு தொகை நிர்ணையித்து அதற்காக பணத்தை வசூலிக்கலாம். கவனிக்குமா திரையுலகமும், அரசும்
கேபிள் சங்கர்
Comments
ஊங்கள் கவலை நிஜமானதே!
இல்லையேல், படத்தை வெளியிடும்போதே dvd , online எல்லா உரிமைகளையும் நல்ல விலைக்கு விற்று பணம் பார்த்திட வேண்டும்
மற்றவை எல்லாமே முழுமையான பலன் தராது!