75 லட்சம் ஹிட்ஸுகளை வாரி வழங்கி ஆதரவு கொடுத்துக் கொண்டிருக்கும் என் இனிய வாசகர்கள், நண்பர்கள், பதிவர்களுக்கு என் நன்றியும் வணக்கமும்.-கேபிள் சங்கர் நண்பர் ஒருவர் சினிமாக்காரர். செட் வேலை போய்க் கொண்டிருந்தபடியால் ஜாலியாய் பேசிக் கொண்டிருந்தோம். டாஸ்மாக் பற்றியும் சமீபகாலமாய் நடந்து வரும் இரவு நேர டி.டி செக்கிங் பற்றியும் பேசிக் கொண்டிருந்தோம். எந்தெந்த ஏரியாவில் எங்கெங்கு செக்கிங் நிற்பார்கள்? போலீஸ்காரர்கள் பேசும் முறை பற்றியும் காமெடியாய் பேசிக் கொண்டிருந்தோம். நான் ஒரு முறை போத்தீஸ் அருகே காரில் செல்ல, வழக்கமாய் அங்கே செக்கிங்கிற்கு நிற்கும் போலீஸ் எல்லா வண்டியையும் மறித்து, பைக்குகளை ஒரு பக்கமாகவும், கார்களின் கதவுகளை இறக்கச் சொல்லி கிட்டே வந்து “எங்க போறீங்க?:” என்பது போன்ற அபசகுன கேள்விகளை கேட்டு குடித்திருக்கிறார்களா? இல்லையா? என்று செக் செய்வது வழக்கம். அன்றும் அதே ரொட்டீன் தான். நான் வேண்டுமென்றே காரில் சத்தமாய் பாட்டை வைத்துக் கொண்டு, தலையை ஆட்டிக் கொண்டே இருக்க, கிட்டே வந்த போலீஸ் காரர் கதவை இறக்கச் சொன்னார்.