Thottal Thodarum

Aug 4, 2013

Annayum Rasoolum

காதல். அது என்ன மாதிரியான அவஸ்தைகளை கொடுக்கக் கூடியது என்று காதலித்தவர்களுக்கு மட்டுமே புரியக்கூடிய விஷயம். என்ன தான் காதலிப்பவர்களுடன் பயணித்த அனுபவம் இருந்தாலும், சமயங்களில் இவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியாது. அவர்கள் செய்யும் எதிர்ப்பார்க்கும் நிறைய விஷயங்கள் வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு இதெல்லாம் ஒரு விஷயமா? இதுக்குப் போய் இவ்வளவு அலட்டிக் கொள்கிறார்களே.. என்று தோன்றும். இப்படியான காதல் கதைகளை திரைப்படமாய் எடுக்கும் போது எனக்கு தெரிந்து ரெண்டு விதமாய்த்தான் படம் முடியும். ஒன்று சந்தோஷமான ஹேப்பி எண்டிங். இரண்டாவது சோகம்.  அன்னையும் ரசூலும் ரெண்டாவது வகை.


பஹத் பாசில் ஃபோர்ட் கொச்சியில் ட்ராவல்ஸ் கார் ஓட்டும் முஸ்லிம். அதே ஊரில் ஒர் புடவைக் கடையில் வேலை பார்க்கும் கிறிஸ்துவர் ஆண்ட்ரியா. ஆண்ட்ரியாவை பார்த்த மாத்திரத்திலேயே பஹத் பாசிலுக்குள் காதல் துளிர் விட்டு விடுகிறது. அந்தக் காதல் எப்படி அவர்களுள் வளருக்கிறது என்பதை அழகாய், கவிதையாய், அவர்களின் காதல் வளரும் வேகத்திலேயே சொல்லியிருக்கிறார்கள். ஒரு பெண்ணை பார்த்த மாத்திரத்தில் ஏன் காதல் வருகிறது என்று எவராவது சொல்ல முடிந்தால் அவர்கள் காதலிக்கவேயில்லை. இப்படத்தின் கதையைப் பற்றி நான் உங்களுடன் பேசப் போவதில்லை. படமாக்கப்பட்ட விதத்தைத, திரைக்கதையமைத்த விதத்தை, நடிப்பை, பற்றித்தான் பேசப் போகிறேன்.

பஹத் பாசிலின் கண்களில் தெரியும் தயக்கம், தன் விருப்பமான பெண்ணைப் பார்த்ததும் பளீரிடும் வெளிச்சம், தாடிக்குள்ளிருந்து வரும் மென் சிரிப்பு, அவளை பார்த்ததும், அல்லது பேசியதும் கிடைக்கும் மகிழ்ச்சியை அவர் வெளிப்படுத்தும் விதம் என ஒவ்வொரு இன்ச்சிலும் மனுஷன் நடிக்கவில்லை வாழ்ந்திருக்கிறார். இந்தப்படம் வெளியான போது ஆண்ட்ரியாவை நான் காதலிக்கிறேன் என்று அறிக்கை விட்டதாய் சொன்னார்கள். படத்தை பார்க்கும் போது அவர் கண்களில் தெரியும் காதலை பாருங்க..அப்பப்பா... உயிரை உருக்கிவிடும். அம்பூட்டு காதல். நிஜமாகவே காதலித்திருப்பார் போல.

அதே போல ஆண்ட்ரியா. கொஞ்சம் கூட மேக்கப் இல்லாமல் டிபிக்கல் பக்கத்துவீட்டு பெண் கேரக்டர். மெல்லிய குரலில் பேசுவது தெரியாமல் பேசும் விதம். சின்னச் சின்ன அசைவுகளில் பஹத் தன்னை பார்ப்பதை, அந்த பார்வையின் ஊடுருவலை, மெசேஜ் கிடைத்த விநாடி முகத்தில் தெரியும் சந்தோஷம் கலந்த பயத்தை அடாடடா.. என்னா ஒரு எக்ஸ்பிரஷன். ஒரு பெண்ணை பார்த்த மாத்திரத்தில் நமக்கு மட்டும் பிடிக்க, கொஞ்சம் கொஞ்சமாய் தினம் அவரை பார்க்கும் போது அப்பெண்ணின் அழகு கூடிக் கொண்டே போகும் காதலிப்பவனுக்கு. அப்படித்தான் ஆகிவிட்டது இந்த படத்தை பார்க்க ஆரம்பித்த போது சாதாரணமாய் தெரிந்த ஆண்ட்ரியா மெல்ல, மெல்ல என்னுள் இறங்கி பெரும் அழகியாகிவிட்டாள். பஹத்தின் காதல் என்னுள்ளூம் இறங்கிவிட்டதை என்னால் உணர முடிந்தது. பஹத்தின் நண்பராய் வருபவரின் காதல் மனைவியாய் வருபவரின் நடிப்பில் தான் எத்தனை இயல்பு. கைகலப்பில் அடிப்பட்டு வந்து நிற்கும் கணவனை பார்த்து வருத்தப்படும் இடமாகட்டும், அடித்தவனை நேரில் பார்த்ததும், போய் அவனை அடி என்று ஏத்திவிடும் போதாகட்டும், கணவனின் தாராள பணப்புழக்கத்தை பார்த்து திகிலடைந்த பார்வையோடு அவனை கேள்வி கேட்கும் இடத்தில் அவன் அவளை நெருக்கித்தள்ளி ரொமான்ஸ் பண்ணும் போது, அவனை திட்டவும் முடியாமல், அவனின் ரொமான்ஸை தவிர்க்கவும் முடியாமல் அல்லாடி, அவன் வீரமாய் முதுகின் பின் அருவாளை வைத்துக் கொண்டு போவதை, கண்களில் பயத்தோடும், காதலோடும் பார்க்குமிடம் என்று இவரின் நடிப்பை பற்றி மட்டுமே தனியே ஒரு பக்கம் எழுதலாம்.

பாராட்ட வேண்டியவர்களில் மிக முக்கியமானவர் ஒளிப்பதிவாளர் மது நீலகண்டன். வாவ்.. வாவ்.. என்னா ஒரு வீஷுவல்ஸ்.  கிட்டத்தட்ட கதை மாந்தர்களூடேயே பயணித்து அவர்கள் பக்கத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோமோ என்ற எண்ணத்தை கொண்டு வந்துவிட்டார். குட்டிக் குட்டி ஷாட்களில் எல்லாம் கதை சொல்கிறார். இவரும் திரைக்கதையாசிரியரும் இயக்குனர் ராஜிவ் ரவியும் கை கோர்த்து பயணித்திருக்கிறார்கள். அப்படி ஒரு அற்புதமான மேக்கிங். இப்படத்தில் சுவாரஸ்ய முடிச்சுக்கள் என்று பெரிதாய் ஏதுமில்லை. அனால் இயல்பான வாழ்க்கை இருக்கிறது. கொஞ்சம் காதல் கதையில் சோகம் க்ளைமேக்ஸ் வருவதற்காகவே பஹத்தின் நண்பர் வட்டத்தை காட்டியிருப்பது போல தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. பஹத்தின் நண்பருக்கும், ஆண்ட்ரியாவின் அக்காவின் ஒரு தலை காதல் சுவாரஸ்யம். ஆஷிக் அபூவின் முஸ்லிம் என்பதால் பாஸ்போர்ட் கிடைக்காமல் அலையும் கதை கொஞ்சம் அலங்கடிக்கும் விஷயம்தான் என்றாலும், திணிப்பாய் தெரிகிறது.  காதலை கொண்டாடும் மனநிலையில் உள்ள அத்துனை பேருக்கும் பிடிக்கத்தான் செய்யும் படம். டோண்ட் மிஸ்
கேபிள் சங்கர்

Post a Comment

4 comments:

Hari said...

அதானே, மலையாளப்படம் நா .... வாவ், வாவ் ..

தமிழ்படம் நா ..........ஆவ்..ஆவ்..

உங்கள பத்தி தெரியாதா.. சரி.. எவ்வளவு காசு வாங்கினீங்க ..

Cable சங்கர் said...

hari thangavel.. உங்களைப் பார்த்தா எனக்கு பாவமா இருக்கு.

Unknown said...

Nice Review. But with little late. Never missed your taste.


A complete SQL guide for beginners, lot of takeaway tips for professionals.
Learn #Interactive #SQL #Tutorial #ONLINE www.FundasMadeEasy.com

'பரிவை' சே.குமார் said...

நல்ல விமர்சனம்... படம் பார்த்தவர்கள் அனைவரும் பாராட்டுகிறார்கள்...