”பவா என்றொரு கதை சொல்லி” எனும் ஆவணப் பட வெளியீட்டுக்கு சென்றிருந்தேன். பவா ஒர் எனும் மனிதனைப் பற்றி பேசி கொண்டேயிருக்கலாம். அதே போல அவர் கதை சொல்லும் பாங்கிற்காக கேட்டுக் கொண்டேயிருக்கலாம். ஒரு முறை நான், கார்க்கி, எஸ்.கே.பி கருணா, மிஷ்கின் என நண்பர்கள் முன் பவா கிணறு வெட்ட வருபவனைப் பற்றி சொன்ன கதை இன்னமும் என் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவோ ஆளுமைகளுடனான அன்பு, ஆழ்ந்த படிப்பறிவு, அனுபவறிவு என பெற்றிருக்கும் பவாவிடம் ஏதாவது சொன்னால் அப்போதுதான் கேட்பது போல அவர் முகத்தில் தெரியும் ஆர்வமும், குழந்தைத்தனமும், நாம் சொன்னதற்கான பாராட்டோ, அல்லது விமர்சனமோ ச்ட்டென உறுத்தாமல் விழும். பார்க்கும் எல்லாவற்றிலும் ஏதாவது கதை இருக்கும் என நம்புகிறவர். அதை மிக அழகாய் சொல்கிறவர்கள் இல்லாத காலத்தில் அப்படிப்பட்டவரைப் பற்றி அவர் வாழும் காலத்திலேயே ஆவணப்படுத்தும் முயற்சியை மேற்க் கொண்ட செந்தழல் ரவி, எஸ்.கே.பி.கருணாவை பாராட்டியே தீர வேண்டும். ஆவணப்படத்தில் டெக்னிக்கலாய் சவுண்ட் சைடில் சில குறைபாடுகள் இருந்தாலும், தயாரிப்பாளர் என்பதால் செந்தழல் ரவி அவர்கள் பெரும்பாலான காட்சிகளில் அவருடன் பயணிப்பதும், எல்லாவற்றிக்கும் “உம்” கொட்டுவதை தவிர்த்திருக்கலாம். பவா வேட்டை கதை சொல்லும் இடம் அருமை. பார்த்து கேட்டால் மட்டுமே அதன் சுகம் புரியும். நம் வாழ்நாளில் நம்முடன் இருக்கும் கதைசொல்லியை பற்றிய ஆவணப்படம் இன்னும் சிறப்பாக வந்திருக்க வேண்டுமோ என்ற ஒர் சிறிய ஆதங்கம் தோன்றத்தான் செய்கிறது.
@@@@@@@@@@@@@@@@@@
ஒர் ஆவணப்பட வெளியீட்டுக்கு இவ்வளவு கூட்டம் எதிர்பார்க்கவில்லை. அரங்கம் நிரம்பி வழிந்தது. மைக்குக்கு பின்னால் கிடைத்த சீட்டில் படம் பார்த்தேன். பட ஒளிபரப்புக்கு பின் வந்திருந்த பிரபலங்கள் அனைவரும் மேடைக்கு அழைக்கப்பட, இயக்குனர் சேரன், நா.முத்துகுமார் ஆகியோர் அன்புடன் அழைத்து “தொட்டால் தொடரும்” பட வேலைகள் குறித்தும் பேசினார்கள். பார்க்கும் பத்திரிக்கை நண்பர்கள், திரைப்பட நண்பர்கள் அனைவரும் படம் குறித்து விசாரித்தது ஒர் விதத்தில் சந்தோஷமாய் இருந்தாலும் உள்ளூர லேசான நடுக்கம் இருக்கத்தான் செய்கிறது. வீரம்னா பயமில்லா நடிக்கிறதுன்னு கமல் சொன்னாரில்லை அதை பாலோ பண்ணிட்டிருக்கேன்.
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@