நடு நிசிக் கதைகள் -5
கட்டங்கடைசியாய் நானும் என் ஹீரோ தமனும் படம் பற்றி பேசிவிட்டு, அவரவர் வீட்டுக்கு கிளம்பினோம். வழக்கம் போல உதயம் தியேட்டர் அருகில் போலீஸ் செக்கிங். இளைஞரான போலீஸ் ஒருவர் அமைதியாய் வண்டியை நிறுத்திவிட்டு வண்டியின் பேப்பர்களையும், லைசென்சையும் கேட்டார். கொடுத்தேன். தண்ணியடித்திருக்கிறோமா இல்லையா? என்பதை கண்டுபிடிக்க மரியாதையாய் குனிந்து பேசுவதைப் போல வாடை பிடித்தபடி பேசினார். லைசென்சையும் வண்டி ஆர்.சியையும் விளக்குக்கு அருகில் கொண்டு போய் ஒர் நோட்டு புத்தகத்தில் எழுதிக் கொண்டார். திரும்ப பேப்பரை கொடுக்க வந்த போது “என்ன நோட் பண்றீங்க?” என்று கேட்டேன். உங்க வண்டி நம்பர், அட்ரஸ், எல்லாம் என்றபடி உங்க செல் நம்பர் சொல்லுங்க என்றார். நான் எதுக்கு? என்றேன். :”இல்ல வாங்க சொல்லியிருக்காங்க” “அதாங்க எதுக்கு கொடுக்கணும்?. நீங்க பேப்பர் கேட்டீங்க கொடுத்திட்டேன். அட்ரஸ் நோட் பண்ணிட்டீங்க அது கூட ஓகே.. லைசென்ஸ் ஓகே.. ஆனா போன் நம்பர்ங்கிறது அதுவும் செல் நம்பர்ங்கிறது ப்ரைவசியான ஒரு விஷயம். அதை எப்படி நீங்க எல்லா பேப்பரும் சரியா இருக்கிற ஆளுகிட்ட கேட்பீங்க. நான் என் செல் நம்பரை தரமாட்டேன். அதோட நானும் பொதுவெளியில் இயங்கும் ஒர் எழுத்தாளன். சினிமாக்காரன். காரணம் என்னன்னு தெரிஞ்சுக்க எனக்கு உரிமை இருக்குன்னு நினைக்கிறேன்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே.. எஸ்.ஐ. வந்தார். “என்ன ப்ரச்சனை என்பதைப் போல பார்த்தார்” இளம் அதிகாரி விஷயத்தை சொல்ல, “சார்.. எங்க உயரதிகாரி வாங்க சொல்லியிருக்காங்க. வாங்குறோம்.” என்றார். அதெப்படி சார்.. என்று ஆரம்பித்து இளம் அதிகாரியிடம் கேட்டதையே கேட்க, நம்பர் கொடுக்கிறதினால என்னா நடந்திரப் போவுது?” என்றார். இந்த ரிஜிஸ்தர்ல இருக்கிற போன் நம்பரை யாரும் மிஸ் யூஸ் பண்ண மாட்டாங்கன்னு என்ன நிச்சயம்? “அதெப்படி சார்.. நடக்கும்? “நம்மூர்ல ப்ரைவஸிக்கு என்ன அர்த்தம்னே தெரியாது சார்..நாளைக்கு உங்க ஸ்டேஷன்லேர்ந்தே யாராவது எடுத்து டேட்டாவா வித்துருவாங்க” என்றதும். சார்.. உங்களுக்கு கொடுக்க இஷ்டமில்லைன்னா விடுங்க...என்ன நாளைக்கு அதிகாரிங்க வந்து கேட்கும் போது ரெண்டு ஸ்டார் போட்டிருக்கிறியே உன்னால ஒரு போன் நம்பர் வாங்க முடியலையான்னு கேட்பாங்க. ஆனால் நீங்க நினைக்கிறா மாதிரி எல்லாம் நடக்க வாய்ப்பேயில்லை. என்றவர். நீங்க கேட்குற கேள்வி கரெக்ட் தான். பத்திரிக்கையில எழுதுறேன்னு சொல்லுறீங்க.. இதைப் பத்தி எழுதி ப்ரஸ் மீட்டும் போது கேளுங்க. என்றார். கடைசியாய் கிளம்பும் போது இளம் அதிகாரி “எங்கேயிருந்து வர்றீங்க? என்ன விஷயமாய் போனீங்க? ” என்றார் விடாப்பிடியாய். “காலையில வடபழனி போனேன் என்று கடுப்பாய் ஆரம்பித்தேன். “இல்லை சார்.. இப்ப எங்கிருந்து வர்றீங்க அத சொன்னாப் போதும்” என்றார் பொறுமையாய். சொன்னேன். நிச்சயம் நம்பர் கேட்கும் விஷயத்தைப் பற்றி எழுதுகிறேன் என்று தளத்தின் முகவரியை சொல்லிவிட்டு கிளம்பினேன். இத்தனை கேள்விகளுக்கும் மிக மரியாதையாய், பொறுமையாய் பதில் அளித்த போலீஸ் அதிகாரிகளுக்கு என் வந்தனங்கள்.
@@@@@@@@@@@@@@@@@@@@@