நடுநிசிக் கதைகள் -7 வடபழனி சிக்னல் போலீஸ் ஸ்டேஷன் வாசலில் வழக்கம் போல போலீஸ் டிடி செக்கிங். பத்து மணி வாக்கில் முதல் கஸ்டமரை பிடிக்க படையோடு காத்திருந்தார்கள். முதல் களபலியாய் ஒர் டிவிஎஸ் 50க்காரர் வந்து மாட்ட, அவரும் அவரது வண்டியும் பார்க்கவே பாவமாய் இருப்பதாகவும், அவரிடம் ஏதும் தேறாது என்று ப்ரீத் அனலைசர் வைத்திருந்த சார்ஜெண்ட் சொன்னதால் உடனடியாய் விடப்பட்டார். இதற்குள் இரண்டு மூன்று பேர் மாட்ட, சார்ஜெண்டை தாண்டிக் கொண்டு போய் நிறுத்தி, தனியாய் கட்டிங் வாங்கிக் கொண்டு, அனுப்பிக் கொண்டிருந்தனர் சக போலீஸார்கள். கொஞ்ச நேரம் கவனித்துப் பார்த்தால் அவர்களின் டார்கெட் கார் தான் என தெரிந்தது. அப்போது ஒர் குவாலிஸ் வர, வண்டியை மறித்த போலீஸ்காரர் கதவை திறக்கச் சொன்னார்.