தவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம் -2-2
தமிழ்நாட்டுல உள்ள எல்லா தியேட்டரையும் அவங்க கண்ட்ரோல்ல வச்சிருக்காங்க அதனாலத்தான் சின்ன படம் ஓட மாட்டேன்குது என்று காரணம் சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இப்போது என்ன காரணம் சொல்வது என்று புரியாமல் குழம்பிப் போய் நிற்பது ஒன்றும் ஆச்சர்யமில்லை. நான் என் நண்பர்களிடம் அடிக்கடி சொல்லும் விஷயம் தான். ஒவ்வொரு கால கட்டத்திலும் யாராவது ஒரு நான்கு பேரிடம் தான் சினிமா இருப்பது போலத் தோன்றும் ஆனால் அது நிஜமல்ல என்பதை அடுத்த நான்கு பேர் வரும் போது தெரியும். சென்ற ஆட்சியில் திமுக குடும்ப நிறுவனங்கள் தான் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்கள் இப்போது வேறு ஒரு நாலு நிறுவனங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
சரி இந்நிறுவனங்கள் நல்ல தரமுள்ள முறையில் தயாரிக்கப்பட்டிருக்கும் படங்களை விலைக்கு வாங்கி வெளியிடுகிறார்கள் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான சின்னப்படங்களின் விளம்பரங்களில் தங்கள் நிறுவனங்களின் பெயரை முன்னிறுத்தி போடுவதினால், வெளியே இருக்கும் சிறுபட தயாரிப்பாளர்கள், பார்த்தியா சின்ன படம் தான் நல்லாயிருந்தா பெரிய கம்பெனிக்கு வித்துரலாம் என்ற எண்ணம் எழுந்து மேலும் எழுச்சியாய் படம் தயாரிக்க ரெடியாகிவிடுகிறார்கள். ஆனால் பெரும்பாலான படங்களை அவர்கள் விலைக்கு வாங்குவதில்லை. அதன் பின்னணி பெரும் சோகம், அல்லது அதி மகிழ்ச்சி. இம்மாதிரியான நிறுவனங்கள் நான்கைந்து பெரும் படங்களை விலைக்கு வாங்கி வைத்திருக்கும். அப்படங்களை சரியான இடைவேளையில் வெளியிட நேரம் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இம்மாதிரியான சிறு முதலீட்டு படங்களை அவர்களின் பெயரில் வெளியிடும். அதே தியேட்டர்களில் அடுத்த வாரமோ, அல்லது அதற்கு அடுத்த வாரமோ, பெரிய நடிகர்கள் நடிக்கும் படத்திற்கு தியேட்டர்களை ஹோல்ட் செய்ய இந்தச் சின்ன படங்கள் உபயோகமாகும். ஏதேனும் ஒர் சமயங்களில் இம்மாதிரியான சின்னப்படங்கள் ஹிட்டடிக்க, குறிப்பிட்ட நிறுவனம் வாங்கி ரிலீஸ் செய்ததினால் தான் இந்த ஹிட்டே என்ரு விஷயம் தெரியாத புதிய தயாரிப்பாளர் அவர்களின் அலுவலக வாசலில் உட்கார்ந்திருப்பார்.
இன்றைய டிஜிட்டல் யுகத்தில் படம் தயாரிப்பது என்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. அதை மார்கெட் செய்து மக்களிடம் சேர்ப்பதுதான் பெரிய விஷயம். இம்மாதிரியான சின்னப் படங்களை வாங்கி வெளியிடும் நிறுவனங்களால் தானே சின்னப் படங்களுக்கு கூட பெரிய அளவில் விளம்பரம் செய்து ஊரெங்கும் சிக்ஸ் ஷீட் போஸ்டர், விளக்கு கம்பங்கள் எங்கும் தட்டி விளம்பரங்கள், கிடைக்கும் இடங்களில் எல்லாம் பெரிய விளபர போர்டுகள் என்று செலவு செய்து மக்களிடம் ரீச் செய்ய வைக்கிறார்கள். அதற்கு அவர்கள் செலவு செய்யாவிட்டால் சின்னப் படங்கள் எப்படி ரீச் ஆகும் என்று கேட்டால்... விளம்பரத்திற்கு செலவு செய்வது உண்மைதான். ஆனால் அதற்கு செலவு செய்கிறவர்கள் யார்? என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி?.
(தொடரும்)
கேபிள் சங்கர்
Comments