அந்த மில்லியன் டாலர் கேள்விக்கு பதில் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்தான். இதென்ன கலாட்டா? படத்தைத்தான் பெரிய நிறுவனம் வாங்கி வெளியிடுகிறதே? என்று கேட்பீர்களானால் நீங்கள் அப்பாவி. இம்மாதிரியான சின்ன படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்கள் ஏதோ இந்நிறுவனங்கள் வெளியிட்டால் மட்டுமே தங்கள் படத்திற்கு மதிப்பு என்று நினைத்துக் கொண்டு, பத்து பைசா கூட வாங்கிக் கொள்ளாமல் தங்கள் படத்தின் எல்லா உரிமைகளையும், அவர்கள் மூலமாய் வியாபாரம் செய்ய எழுதிக் கொடுத்துவிட்டு ஓரமாய் உட்கார்ந்துவிடுகிறார்கள். படத்தை தங்கள் வசம் வாங்கி வைத்துக் கொண்ட நிறுவனம் அதற்கு பிறகு காய் நகர்த்த ஆரம்பிக்கும். முதலில் அப்படத்தின் சாட்டிலைட் உரிமை எவ்வளவு போகும் என்பதற்காக அவர்களுடன் இணைப்பில் இருக்கும் சாட்டிலைட் சேனல்களிடம் பேச்சு வார்த்தை நடத்தும். பேச்சு வார்த்தைகளுக்கு பின் ஒர் ரேட் பிக்ஸ் ஆகும் வரை இதோ அதோ நல்ல டேட் பார்த்து ரிலீஸ் பண்ணனும், பெரிசா விளம்பரம் பண்ணாத்தான் ஒர்கவுட் ஆகும் என்றெல்லாம் தயாரிப்பாளரிடம் சொல்லிக் கொண்டிருப்பார்.
சாட்டிலைட் ஒர்கவுட் ஆனவுடன் அதன் அட்வான்ஸை வைத்துக் கொண்டு, அப்படத்திற்கு தங்களின் நிறுவனத்தின் வெளியீடு என்று பெரும் பேருடன் பேப்பர் விளம்பரம் முதல், ஹோர்டிங் வரை செலவு செய்வார்கள். இச்செலவுகள் அனைத்தும், படத்திற்கு சாட்டிலைட் என்ன விலை கிடைக்கிறதோ அதை வைத்துத்தான். ஒர் உதாரணத்திற்கு சாட்டிலைட் உரிமை ஒரு கோடி என்றும், எப்.எம்.எஸ். உரிமை ஒர் 8 லட்சம் என்றும் வைத்துக் கொள்வோம். ஒரு கோடியே எட்டு லட்சத்திற்குள் தான் படத்தின் விளம்பர, ரிலீஸ் செலவு எல்லாமே. அதை மீறி போகாது.
இதே மாதிரி படத்தின் தயாரிப்பாளரே செய்யலாமே? என்றால் அவருக்குத்தான் எதுவும் தெரியாதே? அப்படியே அவர் நேரில் போனால் அவருக்கு இந்நிறுவனங்களுக்கு கொடுக்கும் அளவுக்கு வியாபாரம் செய்ய மாட்டார்கள். சரிங்க உங்களுக்கு பண்ணத் தெரியாத வியாபாரத்தை அவங்க செய்து கொடுத்து உதவித்தானே பண்றாங்க? என்று கேட்பீர்களானால்.. ஆம் உதவிதான் ஆனால் அவர்கள் செய்யும் உதவிக்கு 15-20 சதவிகிதம் வரை கமிஷன் எடுத்துக் கொள்வார்கள். ஒரு படம் இம்மாதிரி ஒர் நிறுவனம் மூலம் வெளியாகினால் அட்லீஸ்ட் தியேட்டர்கள் கிடைக்குமே? அதன் மூலமாய் சின்ன படங்களுக்கு நல்ல ரீச் கிடைத்து, அப்படங்கள் ஓடுகையில் சினிமாவுக்கு நல்லதுதானே? என்று நினைப்பது சரிதான். ஆனால் இம்மாதிரியான நிலையில் வரும் படங்கள் எல்லாமே சுமார் நிலையில் இருப்பதால் தான் வியாபாரம் செய்ய முடியவில்லை என்று நம்பப்படும் நிலையில் அட்லீஸ்ட் ரிலீஸாவது செய்து தருகிறார்களே என்று சந்தோஷப்பட வேண்டிய நிலையில் தான் இன்றைய தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். சரி.. எல்லாவற்றையும் கொடுத்து ரிலீஸ் செய்ய சொல்லியாயிற்று.. வருமானம்?
(தொடரும்)
Post a Comment
2 comments:
வியா " பாரம் " ?
Very sad...
Post a Comment