தவிக்கும் தமிழ் சினிமா - சினிமா வியாபாரம் -2-6
சுமார் நூறு தியேட்டர்களிலாவது வெளியிடப்பட்டு, டிவி, ரேடியோ,போஸ்டர், பேனர்கள் என வெகு விமரிசையாய் விளம்பரப்படுத்தப்படும் இத்திரைப்படங்களின் வசூல் தான் வெற்றியா? இல்லையா? என்பதை நிர்ணையிக்கும்.
படம் ஹிட் என்றால் படம் வெளியாவதற்கு முன் தயாரிப்பாளர் சொன்னது போல “அதுக்குத்தான் இம்மாதிரியான நிறுவனங்கள் வேணுங்கிறது” என்று தான் எடுத்த முடிவை சரியெனச் சொல்வார்கள். ஆனால் பெரும்பாலான நேரங்களில் அப்படி நடப்பதில்லை. நான் சொன்ன அந்த காமெடி திரைப்படத்தின் மொத்த வசூலே சுமார் ஒரு கோடிக்குள் தான். படத்திற்கு விளம்பரம் செய்த வகையில் ஆன செலவு. திரையங்குகளை எடுத்து வெளியிட்ட செலவு என எல்லாம் கணக்கிட்டுப் பார்த்து தயாரிப்பாளர் தான் மேலும் பணம் கொடுக்க வேண்டுமென்று கேட்டிருக்கிறார்கள். தயாரிப்பாளர் இப்போது ஆளைக் காணோம்.
அதெப்படி அதான் சாட்டிலைட் உரிமை, வெளிநாட்டு உரிமை, போன்ற உரிமைகளை எல்லாம் விற்று வரும் பணத்தில் தானே இந்த பட வெளியீடு நடந்தது? என்று கேட்டீர்களானால் இம்மாதிரியான விற்பனை செய்து அதில் வரும் பணத்தில்தான் விளம்பரம் செய்வார்கள் என்றாலும், இந்த விநியோக நிறுவனங்களுக்கு முக்கிய வருமானம் இந்த வியாபாரங்களால் வரும் கமிஷன் தான். ஒவ்வொரு வியாபாரத்திற்கு வருமானம் பத்திலிருந்து இருபது சதவிகிதம் அது ஆட்களைப் பொறுத்து மாறும். ஆகையால் ஒர் படத்தை அறுபது லட்சத்திற்கு சாட்டிலைட் விற்பனை ஆகிறது என்றால் அதில் பத்து சதவிகிதம் கழித்துத்தான் செலவு செய்வார்கள். அதே போலத்தான் வசூல் ஒரு கோடி ஆகிறது என்று வைத்துக் கொண்டால் அதில் தியேட்டர் கணக்குப் போக இவர்களது பாகம் சுமார் 50 சதவிகிதம் வருகிறது என்று வைத்துக் கொண்டால் அதில் இவர்களுக்கு பத்து சதவிகிதம் கமிஷன் போக, மீடியேட்டர்கள் கமிஷன் எல்லாம் போகத்தான் காசு வரும்.
இப்போது கணக்குப் போட்டுப் பாருங்கள் அவர்கள் ஏன் தயாரிப்பாளர் தான் காசு தர வேண்டுமென்று கேட்டார்கள் என. இப்படித்தான் சின்னப் படங்களை வாங்கி வெளியிடும் நிறுவனங்கள் செயல் படுகிறது. ஆனால் பேரு தான் பெத்த பேரு.. தாக நீலு லேது என்கிற கணக்காய்த்தான் இந்த வியாபார முறையும் இருக்கிறது. எல்லா படங்களையும் அவர்கள் இந்த வியாபார முறையில் வாங்குவதில்லை. பெரிய நடிகர்கள், வளரும் நடிகர்கள் படமென்றால் வழக்கமாய் விநியோகஸ்தர்கள் கொடுக்கும் எம்.ஜியோ, அல்லது பெரிய விலை கொடுத்து அவுட்ரைட்டாகவோ, வாங்கி பிரித்து எம்.ஜி வாங்கிக் கொண்டுத்தான் விநியோகம் செய்கிறார்கள். சின்னப் படங்களுக்குத்தான் இந்த நிலை. சரி.. ஏன் இந்த நிலை..? சின்னப் படங்கள் தான் சினிமாவின் எதிர்காலம். தியேட்டர்களை வாழ வைக்கும் விஷயம். என ஆளாளுக்கு விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு என்று அறிக்கை விட்டுக் கொண்டு, ஒரு புறம் விவசாயிகளின் தற்கொலையும் நடந்து கொண்டிருக்கிறதே அது போலத்தான் தமிழ் சினிமாவிலும் நடந்து கொண்டிருக்கிறது. விநியோகக் கம்பெனிகளை சொல்லிக் குற்றமில்லை. சினிமாவின் வியாபாரத்தைப் பற்றி ஏதும் தெரியாமல் வந்து படமெடுக்க ஆரம்பிக்கும் தயாரிப்பாளர்கள் மீதுதான் குற்றம் சொல்ல வேண்டும்.
பெரிய படங்களுக்கு இருக்கும் ஓப்பனிங் சின்னப் படங்களுக்கு இல்லாமல் போவதாலேயே இந்நிறுவனங்களும், இம்மாதிரியான சேஃபான ஒப்பந்தங்களை போட்டுக் கொண்டு வியாபாரம் செய்கிறது. அது மட்டுமில்லாமல். இம்மாதிரியான சின்னப் படங்கள் தியேட்டர்களுக்கு எப்படி ஃபில்லர்களாக பயன்படுகிறதோ அதைப் போலவே விநியோகக் கம்பெனிகளூக்கும் அடுத்த பெரிய படமோ, சின்னப் படமோ வெளிக் கொண்டு வருவதற்கு தியேட்டர்களின் நெட்வொர்க்கை மெயிண்டெயின் செய்து கொள்ள வசதியாயிருக்கும். இனிமேலாவது சின்னப்படங்களை அந்த நிறுவனம் வாங்கியிருக்கு. இந்த நிறுவனம் வாங்கியிருக்கு என்று பேசுகிறவர்களுக்கு இக்கட்டுரை மூலமாய் நிதர்சனம் புரியுமென்று நினைக்கிறேன்.இன்றைய நிலையில் ஒர் சூப்பர் டூப்பர் ஹிட் படத்தின் வாழ்நாளே மூன்று முதல் நான்கு வாரங்கள் என்றாகிவிட்ட நிலையில் எப்படி சின்னப் படங்கள் சர்வைவ் செய்ய முடிகிறது?
கேபிள் சங்கர்
Comments