Thottal Thodarum

May 31, 2014

சாப்பாட்டுக்கடை - சீனா பாய் இட்லிக்கடை

இட்லி சாப்பிடறதுக்காக சவுக்கார்பேட்டை போகலாமா? என்று கேட்ட போது தமன் ஆச்சர்யமாய் பார்த்தார். எனக்கு அவரின் பார்வை போலவே நிறைய நண்பர்களின் ஆச்சர்ய பார்வையை சந்தித்திருப்பதால் சாதாரணமாய் எடுத்துக் கொண்டு ‘வாங்க.. ஒரு வாட்டி வந்து சாப்பிட்டு பார்த்துட்டீங்கண்ணா ஏன் இவ்வளவு தூரம் வந்தோம்னு கேட்க மாட்டீங்க” என்றேன். என்னைப் போலவே கொஞ்சம் அட்வென்சரஸ் ஆனவர் என்பதால் விட்டோம் போர்ட் பிகோவை சவுக்கார்பேட்டை என்.எஸ்.சி போஸ் ரோட்டுக்கு.



 

சுமார் பத்தடி மட்டுமே இருக்கும் மிகச் சிறிய கடை. கடை முகப்பை அடைத்தபடி தோசைக்கல். அதில் குட்டிக்குட்டியாய் ஊத்தப்பங்கள். உள்ளே பெரிய குண்டானில் இட்லி வெந்து கொண்டிருந்தது. வாசலில் அந்த இட்லி குண்டானை திறப்பதற்காக ஒரு பெரிய கூட்டமே அந்த 11 மணி ராத்திரியில் காத்துக் கிடந்தது. இட்லி குண்டானைத் திறந்து இட்லிகளை எடுத்த மாத்திரத்தில் வாழை இலை போடப்பட்ட தட்டில் சுமார் 12 சிறிய இட்லிகளை வைத்துவிட்டு, அதன் மேல் இரண்டு கரண்டி நெய்யை தாராளமாய் ஊற்ற, இட்லியின் சூட்டின் காரணமாய் ஊற்றப்பட்டவுடன் சர்ரென இழுக்கப்பட்டு இட்லியின் உள்ளே போனது நெய். அதன் மேல் நல்ல நைஸ் மிளகாய்ப் பொடியை தூவ, பார்த்த மாத்திரத்தில் அப்படியே ஒரு லபக் எடுத்து சாப்பிட மாட்டோமா என்று வாய் ஊறுவதை தவிர்க்கவே முடியாது. கூட தொட்டுக் கொண்டு சாப்பிட, ஒரு வெங்காய சட்னி, புதினா சட்னி அவ்வளவுதான்.
லேசாய் சட்னியை தொட்டுக் கொண்டு, அரை அரை விள்ளலாய் இட்லியை வாயில் போட்டால் நெய்யும், அதனுடன் ஊறலாய் சேர்ந்த மிளகாய்ப் பொடி காரமும், வாவ்வாவ்.. வாவ்.. டிவைன்..டிவைன்.  இட்லி வெறி அடங்கிய மாத்திரத்தில் நான் மேற்ச் சொன்ன தோசைக்கல்லின் மீது பார்வை விழ, அதில் மொறுமொறுப்பாய் மெருகேறிக் காத்திருக்கும் ஆனியன் ஊத்தப்பம் அழைக்க ஆரம்பிக்கும். அவை ரெடியாகும் ப்ராசசே ஒர் அழகு.
ஒரே கல்லில் சுமார் பதினைந்து ஊத்தப்பங்கள் மூன்று வரிசையாய் ஊற்றப்பட்டவுடன், தாராளமாய் கை நிறைய வெங்காயத்தை அள்ளி அதன் மேல் தூவப்பட்டு, அதன் மேல் மிகத் தாராளமாய் அரைக்கரண்டின் நெய்யை ஊற்றி, ஒரு பக்கம் வெந்தவுடன், சட்டென வெங்காயப் பக்கத்தை கல்லில் சூட்டுப் பக்கம் போட்டு மீண்டும் அதன் மேல் கரண்டி நெய்யை ஊற்றி, கீழே இருக்கும் வெங்காயம், பொன் முறுவலாய் வரும் வரை நெய்யில் வேக, மீண்டும் ஒரு  முறை திருப்பி போடப்பட்டு லேசாய் போனால் போகட்டும் என்று அதன் மேல் நெய்யை குறைவாய் தெளித்துவிட்டு, மிளகாய் பொடியை ஒரு தூவு தூவி, கல்லில் எடுத்த சூட்டோடு, ஆளுக்கு ரெண்டு என்று வைத்த மாத்திரத்தில் கல் காலி. அடுத்த ரவுண்ட் போட ஆரம்பித்து விடுவார்கள். இதற்கும் அதே சட்னிதான்.  நைட் ஷோ முடித்துவிட்டு வரும் அத்தனை சேட்டான்களும் குடும்பம் குடும்பமாய் க்யூ கட்டி சீனா பாய் கடை இட்லியையும், ஊத்தப்பத்தையும் சாப்பிடாமல் போக மாட்டார்கள். என்ன மாசத்துக்கு ஒரு வாட்டி சாப்பிட்டாலே கொலஸ்ட்ரால் எகிறிரும். சாப்பிட்டு விட்டு குடிப்பதற்கு டயட் வகை குளிர்பானத்தை கேட்ட போது கடைக்காரர் ”கொஞ்சம் மனசாட்சியோட கேளுங்க சார். நீங்க டயட்லயா இருக்கீங்க? “ என்றார். நான் “ஙே”.இரவில் மட்டுமே இக்கடை நடைபெறுகிறது. தமிழரான சினு இந்திக்காரர்கள் உள்ள ஏரியாவில் சீனா பாயாய் விளிக்கப்பட்டு நாமகரணம் பெற்றுவிட்டார்.
கேபிள் சங்கர்


சீனா பாய் இட்லிகடை
என்.எஸ்.சி. போஸ் ரோட்,
தங்கசாலை சந்திப்பு

Post a Comment

5 comments:

துளசி கோபால் said...

வாவ்!!!!! இரவுக்கடைன்னால்..... போய் சாப்பிட ச்சான்ஸே இல்லை:(

ஆர்வா said...

தலைவா.. அந்தக்கடைய ஒரு ஃபோட்டோ புடிச்சு போட்டா அட்லீஸ்ட் ஃபோட்டாவுலையாவது பார்த்து திருப்தி அடைஞ்சிருப்போம் இல்லையா...இருந்தாலும் கடைசியில டயக் கோக் கேட்டதுதான் மாஸ்டர் பீஸ்... ஹி.ஹி..

”தளிர் சுரேஷ்” said...

ஊத்தப்பம் தயாராவதை வர்ணித்து நாவில் நீர் ஊற வைத்துவிட்டீர்கள்! நன்றி!

Unknown said...

sir nsc bose la enga irukku adress sollunga pls

Darren said...

No. 51, NSC Bose Road, Sowcarpet, Chennai - 600079
Contact Number
+91 44 25291680+91 94444 79797+91 83443 44344