Thottal Thodarum

Jun 30, 2014

கொத்து பரோட்டா -30/06/14

தொட்டால் தொடரும்- பாடல் மற்றும் ட்ரைலர் வெளியீடு
படம் ஆரம்பித்த போது கடவுளே எல்லாம் நல்லபடியா நடக்கணும் என்று மனதினுள் பதட்டமிருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல் கமல் சொன்ன வீரத்தை காட்டிக் கொண்டிருந்தேன். படத்தின் டிசைன் வெளியான போது கிடைத்த ஆதரவு லேசான தைரியத்தை கொடுத்தது. அந்த தைரியம் பாஸு பாஸு பாடலை சிங்கிளாய் முதலிலேயே வெளியிடுவோம் என்று முடிவெடுக்க செய்தது. அதற்கான முஸ்தீப்பு வேலைகளில் இறங்கினோம். பாடல் நக்கல் நையாண்டியோடு ஜாலியாக எழுதப்பட்ட பாடல் ஆதலால் மக்கள் ரியாக்‌ஷன் என்னவாக இருக்குமென தெரிந்து கொள்ள ஆசையாய் இருந்தது. பாடல் ரிக்கார்ட் ஆனவுடன் மொபைலில் அதை எடுத்துக் கொண்டு, சினி சிட்டி கரோக்கே பாரில் கரோக்கேவுக்கு நடுவே அப்பாடலை ப்ளே செய்தேன். சரக்கே அடிக்காமல் ஏசியிலும் வியர்த்தது. பாடல் கேட்க ஆரம்பித்த சில நொடிகளில் மக்கள் சலசலப்பு குறைந்து பாடல் வரிகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். அப்புறம் சிரிப்பும், கும்மாளமும் சேர்ந்து கொள்ள, கைதட்டல் தொடர்ந்தது பாடல் முடிந்தும்.  அப்பாடா.. பாட்டு நல்லாத்தான் வந்திருக்கு போல என நினைத்துக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்து “இந்த படத்தோட பாட்டு ரிலீஸாயிருச்சா?” என்று கேட்டார். “இல்லை”. என் கையில் ஒர் விசிட்டிங் கார்டை கொடுத்து பாட்டெல்லாம் ரெடியானதும் சொல்லுங்க. நாங்க யாஷ்ராஜ் கம்பெனியோட சவுத் டிவிஷன் ஹெட். பேசுவோம் என்றார். பாட்டை ஒரு முறை கேட்ட மாத்திரத்தில் கிடைத்த அங்கீகாரம். இப்பாடலை நல்ல முறையில் மக்களிடம் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டுமென்ற உறுதியை தந்தது.

Jun 17, 2014

தொட்டால் தொடரும் -பாஸு..பாஸு

தொட்டால் தொடரும் பட வேலைகள் ஆல்மோஸ்ட் முடிந்துவிட்டது. இன்னும் சிஜியிலும், டிஐயிலும் சில சின்னச் சின்ன வேலைகள் தான் பாக்கி. டைகர் ஆடியோ நிறுவனம் எங்களது பட பாடல்களை வாங்கி வெளியிட இருக்கிறார்கள். எங்கள் படத்தின் முதல் டீசராய் பாடலுக்கான டீசரை நேற்று இணையத்தில் வெளியிட்டோம். பாடலை நாளை புதன்கிழமை ரேடியோவிலும், இணையத்தில் யூடியூபிலும் ஒரே சமயத்தில் வெளியிடுகிறோம். பாஸு .. பாஸு என்கிற இப்பாடலை ஆண்டனிதாசன் பாடியுள்ளார். பாடலை கார்க்கிபவாவும், நானும் இணைந்து எழுதியிருக்கிறோம். உங்கள் பார்வைக்காக

கேபிள் சங்கர்

Jun 15, 2014

அப்பா

Father_by_tomK07”இன்னைக்கு என்ன ப்ரோக்ராம்? எங்கயோ விழான்னியே..?”

“ஆமாம்பா.. பதிவர் சந்திப்பு ஆர்கனைஸ் பண்ணியிருக்கோம். இன்னைக்கு சாயந்திரம் முத மொதலா.. ஒரு மீட்டிங் ஹால்ல.. அதுக்கான ஏற்பாடு பார்கத்தான் போறேன். சரி நான் கிளம்பட்டா?” படுத்திருந்தவர் எழுந்து உட்கார்ந்து  இரு.. ஒரு விஷயம் உன் கிட்ட பேசணும்.” என்றார்.

நான் கிளம்பும் அவசரத்தில் இருந்தேன். அதே சமயம் ஒரு போன் அழைப்பு வந்தது. “சொல்லுங்கண்ணே… சரி.. ஏர்போர்ட்ல இருக்கீங்களா? ஓகே அப்ப போயிட்டு கூப்பிடுங்க” என்று போனை வைத்துவிட்டு நிமிர்ந்து ”அப்துல்லா” என்றேன் அப்பாவிடம்.

“நானும் அதைத்தான் கேட்கணுமின்னு இருந்தேன். என்ன ஆச்சு உன் ப்ராஜெக்ட்? ஏதாவது ப்ரோடியூசர் மீட் கிடைச்சுதா..? அவரு ப்ரெண்ட் மூலமா ஒருத்தரை பேசிட்டிருந்தியே..? என்ன சொல்றாங்க?”

“பேசிட்டிருக்கேன்பா.. ஒரு மாசத்துல சொல்றேன்னு இருக்காங்க.. சரி.. நான் கிளம்பவா..?” நிமிர்ந்து என்னை பார்த்தவர்.. “ரொம்ப டயமாயிருச்சோ..?” ஆழமாய் பார்த்தார். அவர் பார்வை அவ்வளவு சரியாக இல்லை. ஒரு மாதிரி கண்கள் டயலூட் ஆகியிருந்தது.

“என்ன காலையிலிருந்து படுத்திட்டேயிருக்கே. உடம்பு சரியில்லையா?”

“ஒரு மாதிரி அன் ஈஸியா இருக்குடா.. அவ்வளவுதான்..” என்றார். அதற்குள் எனக்கு மேலும் சில போன்கால்கள் வர, பேசிக் கொண்டேயிருந்தேன். அவர் என்னை ஒரு ஈஸி சேரில் அமர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தார். நான் அவரை அவ்வளவு தளர்வாய் பார்த்ததில்லை. போன் கட் செய்துவிட்டு அருகே போய் “என்னப்பா.. என்ன பண்றது? “

“டாக்டர் கிட்ட போயிடலாமா? ஒரு அரை மணி நேரம். சாரி.. “ என்றார். அவருக்கு ஏதாவது ரொம்ப பிரச்சனையென்றால் தான் டாக்டரிடம் போக வேண்டும் என்று சொல்வார். ஊசி போட பயம். “ஒண்ணும் பிரச்சனையில்லை.. எதுக்கு சாரியெல்லாம். நீ தேவையில்லாமல் என் ப்ராஜெக்ட் பத்தி, என்னை பத்தி கவலை பட்டுட்டுருக்கே.. எல்லாம் வர நேரத்தில வரும். கவலை படாதே. சாதாரணமா கவலை படற ஆளா நீ.? சரி இரு நான் போய் கார் எடுத்துட்டு வர்றேன்.” என்று கிளம்பினேன்.

சமீப நாட்களாகவே என்னை பற்றிய கவலை அவருக்கு அதிகமாகத்தான் இருந்தது. அவர் ஜெயிக்க நினைத்த சினிமாவில் நான் காலூன்றியதே தன்னுடய வெற்றியாய் கொண்டாடியவர். நடிக்க ஆரம்பித்த நாட்களில் டிவியில் ஒளிபரப்பானதும் உடன் பார்த்துவிட்டு,  வந்து ஒருசில நிமிடங்கள் தோன்றியதிலிருந்து ஆயிரம் ப்ளஸ் மைனஸ் சொல்லுவார்.  மெல்ல குறுகிய காலத்தில் பெரிய கேரக்டர்கள் நான் நடிக்க ஆரம்பித்தும் திருப்தியடைந்ததேயில்லை. என் கவனமெல்லாம் இயக்கத்தில் இருக்க, ஒரு கட்டத்தில் நடிப்பதை குறைத்துக் கொண்டு டிஸ்கஷன்கள், கதை திரைக்கதை பற்றி பேசுவது என்றிருக்க, அவர் எழுதிய கதைகளையெல்லாம் தூசி தட்டி எனக்காக உட்கார்ந்து பேச ஆரம்பிப்பார். பழுப்படைந்த பல ஸ்கிரிப்டுகள், நாடகங்கள் எனக்காக திறக்கப்பட்டது. முதல் இரண்டு குறும்படங்கள் இயக்கியதை பார்த்து.. பெரியதாய் சந்தோஷப்படவில்லை.. நல்ல ஸ்கிரிப்ட் மட்டும் ஒருத்தனுக்கு போதாது. ஒரு டைரக்டரா.. நல்ல பர்பாமென்ஸ் வாங்கணும் அதுதான் ஒரு டைரக்டர் ஸ்கிரிப்டுக்கு செய்யிற தர்மம். குறும்படம் தயாரித்தவரே படம் தயாரிக்க அட்வான்ஸ் கொடுக்கும் போது

“டேய். படம் கிடைச்சிருச்சுன்னு தலையில தூக்கி வச்சிக்காதே.. சினிமா.. எதுவும் ஆகலாம்.. அதனால உன் வேலை மட்டும் பாரு. என் படம் ட்ராப் ஆன போது நான் கத்துகிட்டது”  என்று தன் அனுபவத்தை சொல்லும் போது எரிச்சலடைதாலும்.. அப்படம் ட்ராப்பாகி நிற்கும் போது அவர் வார்த்தையை தலையில் ஏறறியதனால் டென்ஷனில்லாமல் இருந்தது.

சினிமா மட்டுமல்ல.. எனககு பல விஷயங்களில் அவர் நண்பர். “அதோ போறா பாருங்க.. அந்த பிங்க் சூடிதார் அவ தான் உன் மருமகள். ஓகேவா..” எதுவும் சொல்லாமல் சிரிப்பார்.

”நான் பிசினெஸ் ஆரம்பிச்சபோது அய்யாயிரம் ரூபா மட்டும் தானே தந்தே..? ஒவ்வொரு விட்டிலேயும் எவ்வளவு சப்போர்ட் செய்யுறாங்க தெரியுமா? நானே அம்பதாயிரம் ஏற்பாடு செஞ்சிட்டேன்.” என்றேன் திமிருடன். அதற்கும் பதில் சொல்லாமல் சிரித்தார். அப்போது புரியவில்லை. பின்பொரு நாளில் அர்ஜெண்டாக பணம் தேவைப்பட்டபோது.. என்னால் உடனடியாய் பணம் ஏற்பாடு செய்ய முடிந்த போது.. சொன்னார்..” இதோ.. இதுக்காகத்தான் அன்னைக்கு நான் உனக்கு காசு ஹெல்ப் பண்ணல.. நீயா கடன் வாங்கி அதை அடைச்சி, மேலும் கடன் வாங்கி இவ்வளவு தூரம் பிஸினெஸ் இம்ப்ரூவ் பண்ணியிருக்கேயில்ல.. அதான் நீ போன் பண்ணா காசு தர ரெடியாயிருக்கான். உனக்கொன்னுன்னா நான் விட்ருவேனா.? நீ வளரணும்.. அதும் தயவில்லாம்..” என்றதும் புரிந்தது. பின்பு வேறொரு கடுமையான பணப் பிரச்சனையின் போது என் நெருங்கிய உறவே பத்து பைசா வட்டிக்கு வேணுமின்னா கடன் வாங்கி தரவா? என்றதை கேட்டு உடைந்த  போது அவர் முனைப்பில் ஒரு துளி உதவி பெருங்கடல்.

கேபிள் டிவி தொழிலில் ஒரு அரசியல்/ரவுடி ப்ரச்சனை.. கல்யாணமான புதிது.. போனால் உயிர் என்ற நிலைமையில் எல்லாருக்கும் முன்னே நின்று சென்னையில் இருந்த ஒரு முக்கிய புள்ளியை எதிர்த்து கேஸ் கொடுக்க என்னை தயார்படுத்தி எதிர்த்து  நிற்க வைத்தவர். பின்பு அதனால் அவன் தோற்று பாதிப்படைந்ததும், வெளியே அதை பற்றி பேசி புளகாங்கிதம் அடையாமல் அமைதியாய் இருக்கச் சொல்லிக் கொடுத்தவர்.

ஜெயா டிவியில் பேட்டி கொடுத்துவிட்டு போனை ஆன் செய்தபோது அப்பா மெஸெஜ் அனுப்பியிருந்தார். கால்மீ என்று.. கூப்பிட போவதற்குள் அவரே கூப்பிட்டார். “எக்ஸலெண்ட்.. சூப்ப்ர்டா.. என்ன கான்பிடெண்ட்.. என்ன க்ளாரிட்டி.. ஐம் ப்ரவுட் ஆப் யூ” என்ற போது அவர் குரல் கம்மியதாக தெரிந்தது. சிறிது மூச்செடுத்து “வீட்டுக்கு கொஞ்சம் வந்திட்டு போறியா.. இல்லை வேலையிருக்கா?” என்ற்வர் குரலிலிருந்த செய்தியை புரிந்து கொண்டு வர்றேன் என்றேன். என்னை குழந்தையாக இருந்த போது என்னை அவர் முத்தமிட்டிருக்கலாம் ஆனால் வளர்ந்து எனக்கே இரண்டு குழந்தைகள் இருக்கும் நேரத்தில் என் கை பிடித்தபடியே என் நெற்றியில் முத்தமிட்டார்.. ரொம்பவும் எக்சைட் ஆகியிருந்தார்.  உறவினர்கள் பலர் தொடர்ந்து போன் செய்திருந்து கொண்டேயிருந்தார்கள். “உன் ஆசையை உன் பிள்ளை நிறைவேத்துறான்” என்று எல்லோரும் பேசினார்கள். அன்று அவர் மிகவும் சந்தோஷமாய் இருந்தார்.

ஏன் என்றே தெரியவில்லை காரை என் பக்கத்து ஷெட்டிலிருந்து எடுத்து வருவதற்குள் இவ்வளவு விஷயஙகள் ஓடியதென்று.. காரை கிளப்பி கீழிருந்து ஆரன் எழுப்பிய போது பால்கனியிலிருந்து என் மனைவி உடனே மேல வாங்க என்றாள். என்னவென்று யோசிக்காமல் பரப்ரவென மாடியேறி சோபாவில் தலை குனிந்து உட்கார்ந்திருந்த அப்பாவை பார்த்து “வாங்க போகலாம்” என்று அருகில் வர, என் மனைவி என் கை பிடித்தாள். நிமிர்ந்து பார்த்தேன் அவள் கண்களில் செய்தியிருந்தது. பாத்ரூமிலிருந்து அம்மா வெளியே வந்து என்ன டாக்டர்கிட்ட போலாமா? என்ற்வள் எனனை பார்த்து அதிர்ந்து என்னடா..? என்று அருகே வர, அப்பா.. என்று அழ ஆரம்பித்தேன்.

“பேண்ட் போட்டுண்டு வந்து உட்கார்ந்தார். வாங்க கீழ போகலாம்னு கூப்பிட்டேன் இரும்மா கொஞ்சம் உக்காந்துக்குறேனு சொன்னவர் சட்டுன்னு ஒரு மாதிரி பாத்துட்டு இடது தோள்பட்ட இழுத்துட்டு, இழுத்து மூச்சிழுத்து, சட்டுனு ரிலாக்சானார் அவ்வளவுதான்.” என்று நடந்ததை பதட்டத்தோடு விளக்கிய மனைவியை பார்த்தேன். அப்பாவை பார்த்தேன்.

“அப்பா.. அடுத்தது என்ன செய்யணும்?” தன் கனவையெல்லாம் நினைவாக்குவான் என்ற நம்பிக்கையை என் மேல் ஏற்றி வைத்துவிட்ட சந்தோஷத்தோடு நொடியில் விட்டு பிரிந்து போனவரை பார்த்து கேட்டேன். பதிலில்லை.

”அப்பா.. பெரியாளாயிட்டே.. டிவியில.. பேப்பர்ல எல்லாம் பேட்டிக் கொடுக்கிற.. கதை புக்கு எழுதற.. என் ப்ரெண்ட் உன் இண்டர்வியூ பார்த்துட்டு உங்கப்பா பெரிய ஆளாடா?னு கேட்டான். ஆமாடா… சொல்லிட்டு வந்திட்டேன். அடுத்தது உன் படம் ரிலீஸ்தான் அப்புறம் உன்னை பிடிக்கவே முடியாது” என்ற என் பையனை பார்த்தேன். கண்ணெல்லாம் சந்தோஷத்துடன் என்னை கட்டி அணைத்து என் கன்னத்தில்  அழுத்தமாய் முத்தமிட்டான். அப்பா……..


அப்பாக்கள் தினமாம் இன்னைக்கு. ”தொட்டால் தொடரும்” படத்துக்கு அட்வான்ஸ் வாங்கின நாள்லேர்ந்து இன்னைய வரைக்கும் நீ என் கூட இல்லேன்னே தோணலை. பக்கத்துல உக்காந்திட்டு ஒழுங்கா வேலை செய்யிறேனான்னு பார்த்துட்டு இருக்கிற மாதிரித்தான் தெரியுது என் மனசுக்கு. 

”அப்பா நாளைக்கு என் படத்தோட ஆடியோ டீசர் ரிலீஸ்.. உனக்கு தெரியும்னு நினைக்கிறேன். பார்த்துட்டு சொல்லு.”

கேபிள் சங்கர்

Jun 9, 2014

கொத்து பரோட்டா - 09/06/14- Filimistaan- உன் சமையல் அறையில் - ஈடிவி- தமிழ் சினிமா நிலவரம்.

மேற் காணும் வீடியோவில் நம் சமுதாயத்தில் உள்ளவர்களில் எத்தனை பேர் மற்றவர்களின் ப்ரச்சனைகளுக்கு செவி சாய்க்கிறார்கள் என்பதை ஒர் காண்டிட் நிகழ்ச்சி மூலம் வெளிப்படுத்த நினைத்து எடுத்த வீடியோ. நிஜமாகவே பெரும்பாலானவர்கள் நமக்கெதுக்கு வம்பு என்கிற நினைப்புடன் தான் நடந்து கொண்டிருக்கிறார்கள். எல்லாமே நமக்கு நடக்கும் வரை செய்தியாகவே இருக்கும். அட்லீஸ்ட் இந்த வீடியோ பார்த்தாவது இனிவரும் காலங்களில் நாம் ஹீரோயிசமாய் செயல்படாவிட்டாலும் அட்லீஸ்ட் போலீஸுக்காகவாவது தெரிவிப்பது நல்ல குடிமகனுக்கு அழகு
@@@@@@@@@@@@@@@@@@@@@

Jun 2, 2014

கொத்து பரோட்டா -02/06/14 -ப்ளாஷ்பேக்- திருமணம் எனும் நிக்காஹ்- கேட்டால் கிடைக்கும்- தொட்டால் தொடரும் - CityLIghts

செல்ஃபி போட்டோக்கள்
இது ஒரு விதமான மனவியாதி என்று ஆராய்சிகள் சொன்னாலும், மோடியிலிருந்து தெருக்கோடி ஆள் வரை இந்த செல்பி போட்டோக்கள் பரவித்தான் இருக்கிறது. சமீபத்தில் ஒர் இணைய தளத்தில் இன்ஸ்டாகிராம் மூலமாய் செக்ஸுக்கு பிறகு அவர்களாகவே எடுத்த செல்ஃபி புகைப்படங்களை like.com டாப் 10 ஆக தொகுத்திருக்கிறது. செம சுவாரஸ்யம்.. அதிலும் சில முகங்களில் தெரியும் எக்ஸ்ப்ரெஷன்களை வர்ணிக்க முடியாது. வாவ்.. இங்கே க்ளிக் செய்யவும்
@@@@@@@@@@@@@@@@@@@@@