Aashiqui-2
எந்த பார்ட்டிக்கு சென்றாலும், எந்த ஒரு குழு நிகழ்வுக்கு சென்றாலும் இந்த “தும்பிஹோ” பாடலை கேட்காமல் இருந்ததில்லை. இப்பாடலில் பல டி.ஜே வர்ஷன்களை கேட்டுக் கொண்டேயிருந்தேன். ஒவ்வொரு முறை இப்பாடலை கேட்டதும் இப்படத்தை பார்க்க வேண்டுமென்ற எண்ணம் எழுந்து கொண்டேயிருந்தாலும், ஏனோ தள்ளிப் போய்க் கொண்டிருந்தது. பாடல் நன்றாக இருக்கிறது என்பதை விட, ஒவ்வொரு இடத்திலும் இப்பாடலை கேட்ட மாத்திரத்தில் படம் பார்த்தவர்களின் கண்களின் ஓரம் லேசாய் ஒர் ஈரம் படர்வதை தவறாமல கவனித்தேன். பாடலை பாடியவரின் குரலும், பாடல் வரிகளும், காதலை, அதன் வலியை சொல்வது புரிந்தும் ஏனோ எனக்கு கண்ணீர் வரவில்லை. காரணம் படத்தின் கதையைப் பற்றி கேட்டறிந்ததுதான். உலகில் உள்ள எல்லா மொழிகளிலும், பார்த்த கதைதானே A Star Is Born படத்தின் உல்டா, எத்துனை படங்களில் இம்மாதிரியான டெம்ப்ளேட் காதல், காட்சிகளை பார்ப்பது, அவனவன் இந்திய படங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போய்க் கொண்டிருக்கும் வேளையில் மீண்டும் இருபது வருஷத்துக்கு பின்னாடி ரீவைண்ட் பண்ற மாதிரியான கதை என்பது போன்ற பல அலட்சியக் காரணங்கள் என்று கூட சொல்லலாம். பட்.. படம் பார்த்து முடித்த மாத்திரத்தில் போங்கடா.. நான் கொஞ்சம் அழுதுக்குறேனு எனக்குள்ள இருக்குற பாமர சினிமாக்காரன் தான் முன்னாடி நின்னான். அடுத்த கட்டத்திற்கு போறோமோ இல்லையோ இன்னைக்கு பார்த்த மாத்திரத்தில் உருக வைக்குது பாருங்க.. அதான் சினிமா. அந்த மேஜிக் தான் சினிமான்னு மனசு சொல்லிட்டேயிருக்கு.
ராகுல் ஜெயகர் அற்புதமான பாடகன். பாடகர்களில் சூப்பர் ஸ்டார். ஆனால் இவ்வளவு புகழ், பணம் எல்லாம் சேர்த்து அவன் ஒர் மொடாக்குடிகாரன். அந்த குடியினால் தன் புகழை தக்க வைத்து கொள்ள தடுமாறிக் கொண்டிருக்கும் வேளையில், ஒரு பாரில் ஆரோஹியை சந்திக்கிறான். அவன் பாடிய பாடலையே அவள் மிகச் சிறப்பாய் பாடுவதை ரசிக்கிறான். அவளை உயரத்தில் கொண்டு போய் வைத்து பார்க்க ஆசைப்படுகிறான். வைக்கிறான். ஆனால் அவள் உயர உயர, இவர்களுக்கிடையே ஆன காதலும் உயர்கிறது. ஆனால் இவனின் குடிப்பழக்கமும், லோ செல்ப் எஸ்டீமும், ராகுலின் கேரியரை காலில் போட்டு மிதித்து நாசமாக்குகிறது. அவனுக்காக எல்லாவற்றையும் இழக்க தயாராகி நிற்கிறாள் ஆரோஹி. அப்படியும், ராகுலை தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை.
கொஞ்சம் யோசித்தால் என்ன இது போல எத்தனையோ படம் பார்த்தாகிவிட்டது, டெம்ப்ளேட் கதைதானே என்று தோன்றினாலும், படம் ஆரம்பித்த விநாடியிலிருந்து அங்கிங்கு கவனம் சிதறவிடாத படியான மேக்கிங். பிரம்மாண்டம். க்யூட்டான ஆரோஹி. அவள் முகத்திலிருக்கும் இன்னொசென்ஸ். ராகுலின் போதை கண்களில் தெரியும் அவள் குரலின் மீதிருக்கும் ஆர்வம், பின்பு அதே ஆர்வம் காதலாய் மாறி பளபளக்கும் கண்களுடன், அவளின் முதல் பாடல் ரிக்கார்டிங்கின் எமோஷனலாகி பாட முடியாமல் தவிக்கும் நேரத்தில் மூடிய கதவுகளின் பின்னே தன் காதலை ராகுல் சொல்லும் காட்சி. வாவ்.. வாவ்வ்..
இத்தனை காதலும், அன்பும், ஆரவணைப்பு கொடுக்க முடிந்த பெண்ணால் கூட கழிவிரக்கத்திலும், தோல்வியின் விளிம்பிலும், நம்பிக்கையில்லாத ஒர் ஆல்கஹாலிக்கை காப்பாற்ற முடியவில்லையே என்ற ஆதங்கம் என்னை அலைக்கழித்துக் கொண்டேயிருக்கிறது. அந்த காதல் அவன் மறைந்தும் அவளுள் உறைந்திருக்க, அவர்களைப் போலவே ஒரு ஜோடியை மழையில் பார்த்ததும், உள்ளுக்குள் உறைந்த புன்னகையுடன் அவள் பார்க்கும் போது மீண்டும் பின்னணியில் காதலின் வலியோடு, கரகர குரலில் ஆரம்பிக்கும் “தும்பி ஹோ” கேட்ட மாத்திரத்தில் குபுக்கென கண்களில் கண்ணீர். இப்போது புரிந்தது பாட்டை கேட்ட அத்துனை பேரின் கண்களில் எட்டிப்பார்த்த கண்ணீருக்கான காரணம். திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆரோஹியை பார்த்துக் கொண்டிருக்கிறேன். காதலும் அது தரும் வலியின் அவஸ்தையோடு, ஒர் மஸோகிஸ மனநிலையில் விடுபட விரும்பாமல். தும் பி ஹோ..
Comments