தொட்டால் தொடரும் - தமன்
தொட்டால் தொடரும் படத்தின் கதாநாயகன் தேடல் நடந்து கொண்டிருந்த நேரம். பெரிய நடிகர்கள் முதல் ரெண்டொரு படங்கள் நடித்த நடிகர்கள் வரை பார்த்துக் கொண்டிருந்தோம். பெரிய ஹீரோக்களின் டேட்டும் சம்பளமும் பட்ஜெட்டுக்கு மேல் போக, அப் கம்மிங் ஹீரோக்களை பார்க்கலாம் என்று அலசிக் கொண்டிருந்த போது சட்டென என் மனதில் வந்தவர் இவர். மூன்று படங்களில் நடித்திருந்தார். இவரின் நடித்த முதல் படத்தில் இவரது நடிப்பு எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அடுத்த படம் பெரிய இயக்குனரின் படமாய் அமைந்தும் சரியாக போகவில்லை. மூன்றாவது படமும் அப்படியே. ஆனால் அவரிடம் ஒரு ஸ்பார்க் இருக்கிறது என்பது மட்டும் என் மனதில் தோன்றிக் கொண்டேயிருந்தது. நண்பர் ஒருவர் மூலமாய் அவரைத் தொடர்பு கொண்டு அலுவலகத்திற்கு வர முடியுமா? என்றதும் நேரில் வந்து சந்தித்தார். மிகவும் ஹம்பிளாய், சாப்ட் ஸ்போக்கனாய் இருந்தார்.
“நீங்க தமிழ் படிப்பீங்களா?” என்றேன்
”சார்.. நான் சுத்த மதுரைக்காரன் சார்.”
“அட.. ஆச்சர்யமா இருக்கு. ஓகே உங்களுக்கு என் ஸ்கிரிப்டை படிக்க சொல்லலாம்னுதான் கேட்டேன்” என்றதும்
“ஓ சூப்பர் சார்.. நிச்சயம் படிக்கிறேன்” என்றவர் அடுத்த நிமிடம் பவுண்டட் ஸ்கிரிப்டை வாங்கி படிக்க குனிந்தவர் ஒரு மணி நேரம் கழித்துத்தான் நிமிர்ந்தார். “சார்.. நாம பண்றோம்” என்றார். ஒரு சாப்ட்வேர் கம்பெனி ஹெச்.ஆர் என் ஹீரோ எப்படியெல்லாம் இருக்க வேண்டுமென்று சொல்லிக் கொண்டிருந்தேன். நாளைக்கு காலையில வர்றேன் சார் என்று கிளம்பியவர் அடுத்த நாள் காலையில் டக் இன் செய்யப்பட்ட பார்மல் உடையில் ஸ்டம்புள் லுக்குடன் வந்து நின்றார். நான் எதிர்பார்த்த சாப்ட்வேர் ஆளாய். ஒரு படத்தில் நடித்தவர்கள் எல்லாம் பண்ணிய அலட்டல்களுக்கு நடுவே இப்படி ஆட்டிட்டியூட் காட்டாத இயல்புடன் வந்து நின்றவர் தான் தொட்டால் தொடரும் படத்தின் ஹீரோ தமன்.
அதன் பிறகு நிறைய மீட்டிங், கலந்தாய்வுகள் எங்கள் சந்திப்பு அதிகமாக, அதிகமாக, அவரின் சினிமா அறிவு, கதை பற்றி பேசும் திறன். மற்றவர்களின் மனது நோகாமல் பேசும் முறை, முக்கியமாய் சாப்பாட்டு கடை விருப்பங்கள் என எங்கள் நெருக்கம் அதிகமானது. அதையெல்லாம் விட முக்கியம் ஒர் முதல் பட இயக்குனருக்கு கிடைக்க கூடிய ஒத்துழைப்பு. பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு ஆரம்பம் ஆன முதல் நாள். ஆக்ஷன் காட்சி ஒன்றை படம் பிடிக்க, நெருக்கமான வீடுகள் கொண்ட இடத்தின் மேல் மூன்று கேமராக்களுடன் எங்கள் குழுவினர் இருக்க, ஒரு மாடியிலிருந்து இன்னொரு மாடிக்கு தாவி குதிக்க வேண்டிய காட்சி, ப்ராக்டீஸ் செய்ய முதல் அடி எடுத்து வைக்க, அம்மாஆஆஆ.. என்ற அலறலுடன் கீழே விழுந்தார். இடது கால் முட்டி நழுவி விட்டது. மொத்த யூனிட்டுமே ஸ்தம்பித்துவிட்டது. உடனடியாய் ஹாஸ்பிட்டலுக்கு போய் திரும்பி வந்தவர் ஆபரேஷன் செய்தால்தான் முழுவதுமாய் குணமாகும் என்று டாக்டர் சொல்லிவிட, ஷூட்டிங்கை நிறுத்திவிட்டு திரும்பி விடலாமா? என்று தயாரிப்புக் குழு பேசிக் கொண்டிருக்க, “சார்.. வேணாம். நான் நடிக்கிறேன். என்னால ஷூட்டிங் தள்ளிப் போச்சுன்னா எல்லாருக்கும் கஷ்டம் என்று சொல்லி, அந்த பதினைந்து நாள் ஆக்ஷன் ப்ளாக் ஷுட்டிங்கில் ஒரு சின்ன முகச் சுளிப்பு கூட இல்லாமல் நடித்துக் கொடுத்தார். ஆக்ஷன், சேசிங் காட்சியில் அவர் ஒவ்வொரு முறை ஓடி, படியேறி, குதித்து நடிக்கும் போது ப்ரேமை விட்டு போனதும், அம்மாஆஆஆ என்று அவ்ர் வலி தாங்காமல் அலறிய ஷாட்டுக்களை ஒவ்வொரு முறை எடிட்டிங்கில் பார்க்கும் போது எனக்குள் கேட்டுக் கொண்டேயிருக்கும். இத்தனை வலியும், வேதனையும், டெடிகேஷனோடு பொறுத்துக் கொண்டு ஒத்துழைப்பு கொடுக்கும் ஹீரோ என் போன்ற முதல் பட இயக்குனருக்கு பெரிய பலம்.
படம் ஆரம்பித்த போது ஹீரோவாய், இயக்குனராய் ஆரம்பித்த உறவு, தினசரி சந்திப்புகள், சாப்பாட்டுக்கடை தேடல்கள், கதை விவாதங்கள், ஊர் சுற்றல்கள், குடும்பத்துடன் உருவான நெருக்கம் எல்லாம் சேர்ந்து படம் முடிந்திருக்கும் நிலையில் ஆழ்ந்த நட்பாய் இறுகியிருக்கிறது. அந்த நட்பு எங்களின் அடுத்த பட அறிவிப்பு வரும் அளவிற்கு வளர்ந்திருக்கிறது.
திரையில் நடிக்க முடியாதவர்கள் நிறைய பேர் நேரில் சிறப்பாய் நடிக்கும் திரையுலகில், இந்த தொட்டால் தொடரும் பயணத்தில் நான் கடந்து வந்த பல மெண்டல் டெர்மாயிகளுக்கு இவர்தான் வடிகால் இன்று அவரது பிறந்தநாள். நண்பா உன் அன்பும், பண்பும், நடிப்புத் திறனும், உன்னை மேலும் பல சிறந்த உயரங்களுக்கு இட்டுச் செல்லும் என்பது நம் பட தலைப்பு போலவே தொட்டால் தொடரும். அதற்கு உன் இனிய நண்பனின் மனதார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகள். வா.. சேர்ந்து கலக்குவோம்.
Comments
4 years! 1st Comment!!! That too for a good combo of TT. I am waiting for TT...
Endrum Anbudan,
Eswaran,
சூப்பர் பெர்பாமன்ஸ் அண்ணே . . .
தமனுக்கு வாழ்த்துகள் ( அவரின் நான்காம் படம் வெற்றி அடையவும் )