முதல் கட்டுரையைப் பாராட்டி வந்த விமர்சனங்களைப் பார்க்கும்போது “நிஜமாத்தான் சொல்றியா?” என்று கற்றது தமிழ் அஞ்சலி போல் கேட்க ஆரம்பித்துவிட்டேன். விமர்சனங்களைப் பற்றி எழுதிவிட்டு, அதற்கு பாராட்டுகள் கிடைப்பது கொஞ்சம் ஆச்சரியம்தான்.
ஒரு துறையைப் பற்றி விமர்சித்தால் விமர்சிப்பவருக்கு அந்தத் துறை பற்றிய அடிப்படை அறிவு முக்கியம். அந்த அறிவுதான் அவரது ரசனையை முன்னிறுத்தி எழுத வைக்கிறது.சாப்பாட்டைப் பற்றி எழுத வேண்டுமென்றால் பல ஊர்/ பல விதமான உணவுகளை ருசித்துப் பழகியிருக்க வேண்டும். கேரளத்து மீன் குழம்பு என்றால் அதில் ‘கொடம் புளியும்’, தமிழகத்து மீன் குழம்பு என்றால் அதில் கொட்டைப் புளியும் பயன்படுத்துவார்கள் என்ற உணவுக் கலாச்சாரம் தெரிந்திருக்க வேண்டும்.
இசையைப் பற்றி எழுத வேண்டுமென்றால் கேள்வி ஞானமும், ரசிப்புத் தன்மையும் போதாது. ராகங்களும், தாளங்களும் தெரிந்திருக்க வேண்டும். பாடகர்களின் பாணியும் பரிச்சயமாகியிருக்க வேண்டும்.
சினிமா விமர்சனம் எழுதுபவர்கள் மட்டும் இதிலிருந்து எப்படி விதிவிலக்காக இருக்க முடியும். ஆனால் “காசு கொடுத்துப் படம் பார்த்த உரிமையை மட்டுமே வைத்துக் கொண்டு, யார் வேண்டுமானாலும் சினிமாவைக் கிழி கிழியென்று கிழிக்கலாமா?” என்று திரைத் துறையினர் கேட்கிறார்கள். மிக நியாயமான கேள்வி.
இணையத்தில் விமர்சிப்பவர்கள் யார்?
தரமான விமர்சனங்கள் வரும் ஒரு சில வெகுஜனப் பத்திரிகைகளில், தனியாகவோ, குழுவாகவோ இருந்து விமர்சனம் எழுதுகிறவர்கள், சினிமாவின் அடிப்படையைத் தெரிந்துகொண்டு எழுதுபவர்கள்;இவர்களைத் தேர்ந்த நிலையில் இருக்கும் திரை ஆர்வலர்கள் என்று சொல்லிவிடலாம்.
எனக்குத் தெரிந்தவரையில் இவர்களில் பலர் பின்னாட்களில் திரையிலும் நுழைந்து வெற்றிபெற்றிருக்கிறார்கள். இதற்கு கல்கியாரிலிருந்து பலரை உதாரணமாகச் சொல்ல முடியும். மாறாகத் திரைவிமர்சனத்தில் நெத்து என்று பெயர் வாங்கிய மூத்த விமர்சகர்கள் சிலர் பல சமயங்களில் சொந்த விருப்பு வெறுப்பில் சிக்கிக்கொள்ளும் விபத்தும் அவ்வப்போது நடப்பதை அனைத்து மொழிப் பத்திரிகைகளிலும் பார்க்க முடியும்.
அதேபோல் திரை விமர்சனத்தில் போதிய கவனம் செலுத்தும் ஒரு சில பத்திரிகைகளைத் தவிர பெரும்பாலான வெகுஜன பத்திரிகைகளின் திரைப்பட விமர்சனங்களுக்குப் பின்னால் ஒரு லகான் இருந்து கொண்டேயிருக்கிறது. அந்த லகான் இல்லாமல் படு சுதந்திரமாய் எழுதக் கிடைத்த இடங்கள் என்றால் இணையமும், சிறு பத்திரிகை வட்டமும்தான்.
இன்று இணையத்தில் எழுதுபவர்களில் அநேகர் தங்கள் வலைப்பூவுக்கும், இணையதளத்துக்கும் அதிக எண்ணிக்கையில் பார்வையாளர்களை இழுக்க வேண்டுமென்ற ‘டிராபிக்’ நோக்கத்துக்காகப் பரபரப்பான வார்த்தைகளைப் போட்டு விமர்சனம் எழுதுகிறவர்கள்; இப்படி எழுதுவதன் மூலம் எப்படியாவது நாமும் சினிமாவில் ஏதாவது ஓரிடத்தைப் பெற்று விடலாமென்ற பிரயத்தனத்தில் எழுகிறவர்கள் என்ற குற்றச்சாட்டு திரையுலகினரால் வைக்கப்படுகிறது.இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையா, இல்லையா என்று ஆராய்வதற்கு முன், சமீப காலமாய் நான் கவனித்து படித்துவரும் விமர்சனங்களைப் பற்றிய விமர்சனத்தை முன் வைக்கலாம் என்று நினைக்கிறேன்.
முதல் நாளே படம் பார்த்துவிட்டு மதியமோ, அடுத்த நாளோ இணையத்தில் விமர்சனம் எழுதிக்கொண்டிருந்த நிலை மாறி, படம் பார்த்துக்கொண்டிருக்கும்போது, ட்விட்டரில் காட்சிக்குக் காட்சி, ஷாட்டுக்கு ஷாட், விமர்சனம் பண்ணலைன்னா அவ்வளவுதான் என யாரோ துப்பாக்கி முனையில் மிரட்டியது போல எழுதுகிறவர்கள் அதிகம். படத்தின் தொழில்நுட்ப விஷயங்கள் எதுவுமே தெரியாமல் பொத்தாம் பொதுவாய் ஒளிப்பதிவு சூப்பர், எடிட்டிங் சுமார் என்றெல்லாம் எழுதுகிறார்கள். இவர்கள் எதை வைத்து எடிட்டிங் சூப்பர் அல்லது சுமார் என்று சொல்கிறார்கள் என்று பார்த்தால் படத்தின் திரைக்கதை ஓட்டத்தை வைத்துத்தான்.படம் அவர்களுக்கு போர் அடித்தது என்றால் அங்கேயெல்லாம் எடிட்டர் தூங்கிவிட்டாரா என்று கேட்பார்கள். சமீபத்தில் கோச்சடையான் படத்தின் இணைய விமர்சனம் ஒன்றில் அப்படத்தில் வரும் லொக்கேஷன்கள் அருமை என்றிருந்தார் அவ்விமர்சகர்.
இங்கேதான் அவர்களின் சினிமா பற்றிய அடிப்படை அறிவும் புரிலும் கேள்விக்குறியாகிறது. படம் பார்க்கும்போது ட்வீட்டோ, ஃபேஸ்புக் ஸ்டேட்டஸோ போட்டுக்கொண்டிருப்பவர்கள் எப்படிப் படத்தை ஒழுங்காய் விமர்சிக்க முடியும் என்னும் கேள்வி எழுகிறது.
விமர்சனத்தின் இன்னொரு ரகம்
தமிழ்ப் படமென்று இல்லை உலகில் உள்ள எல்லா மொழிப் படங்களையும் அவரவர் ரசனைக்கு ஏற்ப பார்த்து, ரசித்து, அனுபவித்து எழுதுகிறவர்கள் அதிகம் உலவுமிடம் இணையமும், சிறுபத்திரிகையும் மட்டும்தான். இப்படி ரசித்து எழுதும் பலர் சினிமாவில் பணிபுரியவோ, பங்குபெறவோ ஆர்வமில்லாதவர்கள். ஆனால் சினிமாவின் தீவிர ரசிகர்கள்.
மிக நுணுக்கமாய் ஒவ்வொரு படத்தையும் ஆராய்பவர்கள். அப்படி ஆராய்ந்து எழுதுகிறவர்களில் வெகு சிலரைத் தவிர மற்றவர்களின் மொழிநடையைப் புரிந்துகொள்வதற்குத் தமிழில் நவீனப் புலமை பெற்றவர்களால் மட்டுமே முடியும்.
இவர்கள் ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் நவீன இலக்கியச் சூழலில் புழங்கும் ஒரு டஜன் வார்த்தைகளைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு அப்படத்தின் இயக்குநரே யோசிக்காத பல விஷயங்களை இவர்களாகவே யூகித்து ‘அட அட’ என்று சிலாகித்து ஒரே பத்திரிகையில் நான்கைந்து பேர், ஒரே படத்தைப் பாராட்டியும், திட்டியும் எழுதுகிறவர்களும் இங்கே உண்டு.
சமீபத்தில் நான் படித்த ஜிகர்தண்டா பற்றிய சிறுபத்திரிகை விமர்சனம் ஒன்றில் “முதல் கொலைக்காட்சிக்கு ‘மலர்ந்தும் மலராத பாதி மலர் போல’ என்ற பாசமலர் படத்தின் சென்டிமெண்டல் பாடலை இணைத்ததிலிருந்தே இசையமைப்பாளரின் ரகளை ஆரம்பித்துவிடுகிறது” என்று எழுதியிருந்தார் விமர்சகர். அப்பாடல் திரைக்கதையில் எழுதப்பட்ட ஒன்று.
காட்சியின் பின்னணியில் ஓடும் விஷயம். அதில் எங்கு இசையமைப்பாளர் வந்தார்? இப்படியாகத் திரையில் யார் யார் எந்தத் துறையில் செயல்படுவார்கள் என்பது போன்ற அடிப்படை விஷயங்கள் தெரியாமல் எழுதும்போதுதான் இம்மாதிரியான விமர்சனங்கள் மேல் கோபம் வருகிறது என்கிறார்கள் திரைத் துறையினர்.
இலக்கிய விமர்சனம் என்பதே அரிதாகிவிட்ட நம் சூழலில், ஏன் எல்லோரும் சினிமா விமர்சனத்தைப் பிடித்துக் கொண்டு தொங்க வேண்டும் என்ற கேள்வியும் வரலாம்? ஏனென்றால் சினிமா மக்களுக்கு நெருக்கமான கலையாக இருக்கிறது. ஒருமுறை பார்த்துவிட்டு உடனே விமர்சனம் எழுத முடியாத அடர்த்தியுடன் தமிழ்ப் படங்கள் வெளியாகும்போது, இத்தகைய விமர்சன ஜித்துகள் ஓடி ஒளிந்துவிடுவார்கள். அதுவரை திருட்டு விசிடியைப் போல இந்த விமர்சகர்களையும் கட்டுப்படுத்த முடியாது.
கேபிள் சங்கர்
Post a Comment
4 comments:
சூப்பர் சார்!
நல்ல கட்டுரை அண்ணா...
அருமை அண்ணா! நீங்கள் இந்த காட்டு காட்டியதன் பின் சிலரின் வலை பூக்கள் வாடி வதங்கி விட்டன.எப்படி என்றால், இப்போ சினிமா சொந்த விமர்சனமே இல்லை.முன்னணி வலைப்பூ ஒன்றில் கோச்சடையான் ட்ரைலரை வாங்கு வாங்கு என்று வாங்கி விட்டு படம் ரிலீசானதும் ஆஹா ஓஹோ!என்ன நியாயமையா இது ?அதை விட கொடுமை சில வாழ்க்கை வரலாற்று படங்களின் இயக்குனர்களிடம் லாஜிக் கேள்வி கேட்டு , அவர்களை மடக்குகிறாராம். அண்ணா நீங்கள் "அந்த இயக்குனர்களே சிந்திக்காத விசயங்களை இவர்கள் விமர்சிப்பது " என்ற வரி சத்தியமானது.
விமர்சனம் எழுதவே யோசிக்க வச்சிருச்சு :)
Post a Comment