கண்ணீர் கலந்த பிளாக் காமெடி!
“இயக்குநரை விடுங்க… கேமராமேன், எடிட்டர், எல்லாரும் புதுசு. ஸ்டில் கேமராவுல போட்டோ எடுத்துட்டு இருந்தவரெல்லாம் ஒளிப்பதிவாளர். சொந்தமா செலவு பண்ணி ரெக்கார்டிங் ஸ்டூடியோ வச்சிருக்கிறவர் எல்லாம் இசையமைப்பாளர். இவங்களால எவ்வளவு பிரச்சினை தெரியுமா? ஒரு கோடிக்குள்ள நச்சுன்னு படமெடுத்துக் கொடுக்கிறேன்னு ஷார்ட் பிலிம் எடுக்கிற நினைப்பிலேயே தயாரிப்பாளர்கிட்ட சொல்றாங்க. அது எப்படிங்க எடுக்க முடியும்?. யார் கிட்டேயும் பர்மிஷன் வாங்காம, ஒரு 5டி கேமராவை வச்சிட்டு கூட இருக்கிறவங்கள வச்சி ஷார்ட் பிலிம் எடுக்குறது, முழுநீளப் படம் எடுக்குறது மாதிரி சாதாரண விஷயமா? லெஃப்ட் ரைட் பார்க்கத் தெரியுமா? ஷாட் வைக்கத் தெரியுமா..? (மூச்சு விட்டுக்கொள்கிறார்)
நாலு இங்கிலீஷ் படத்தப் பார்த்துட்டு அதுல சுட்டு, இதுல சுட்டு ஒரு கதைய ரெடி பண்ணிக்கிறது. யூனிட் பூரா அல்லாரும் ஆளாளுக்கு ஷாட்டுக்கு நடுவுல தம்மடிக்கிறானுங்க. சீனியர் ஜூனியர்னு ஒரு மட்டு மரியாயாதையில்லை. இவனுங்களால சினிமாவே ரொம்பக் கெட்டுப் போச்சு” என்று கண்கள் சிவக்கப் பொங்கினார் ஒரு குறும்பட இயக்குநரிடம் இணை இயக்குநராக வேலை செய்து கொடுக்கும் பாரம்பரிய வழியில் இணை இயக்குநர் ஆன நண்பர் ஒருவர்.
“டீமா வர்றாங்க… ஒவ்வொருத்தரோட வீக்னெஸ். ப்ளஸ் பாயிண்ட் தெளிவா தெரிஞ்சு வச்சிருக்காங்க… அண்ணே எனக்கு இது வேணும்னே அதுக்கு என்ன பண்ணனும்னு தெளிவா ஈகோ இல்லாம கேட்டு வேலை வாங்கிக்கிறாங்க… இதெல்லாம் சினிமால காட்டக் கூடாது. செய்யக் கூடாதுன்னு ரூல்ஸுன்னு சொல்றத எல்லாத்தையும் சட்டு சட்டுன்னு யோசிக்காம ஒடைக்கிறாய்ங்க… லேப்டாப்பையும், டேப்லெட்டையும் வச்சி முழு படத்தை எடுத்திர்றாங்க... அன்னன்னைக்கு எடுக்கிறத அங்கயே எடிட் பண்ணி பார்த்திர்றாங்க... பேஸ்புக், ட்விட்டர்னு கையில இருக்கிற செல்போன வச்சிட்டே பாப்புலர் பண்றாங்க... இவங்க ஷூட்டிங்ல டென்ஷனா இருந்து நான் பார்த்ததேயில்லை. ரொம்ப கூலா வேலை பாக்குறாங்க... உண்மைய சொல்லப் போனா நாமதான் அப்டேட் ஆவணும். இவங்களோட வேலை செய்ய யூத்புல்லா ப்ரெஷ்ஷா இருக்கு” என்றார் இன்னொரு குறும்பட இயக்குநரிடம் வேலை செய்யும் மற்றொரு இணை இயக்குநர் நண்பர்.
இரண்டு பேரும் பல இயக்குநர்களிடம் வேலை பார்த்துக் கிடைத்த அனுபவத்தை வைத்து தனியாகப் படமெடுக்க வாய்ப்பு தேடி அலைபவர்கள்தான். வாய்ப்பு கிடைக்கும்வரை சர்வைவ் ஆவதற்காக வேலை பார்த்து வருகிறவர்கள். குறும்பட இயக்குநர்களைப் பற்றிய இருவரின் பார்வைதான் வேறு. ஆனால் எல்லாக் குறும்பட இயக்குநர்களும் கார்த்திக் சுப்பாராஜாகவோ, நலன் குமரசாமியாகவோ ஆகிவிடுகிறார்களா? என்றால் இல்லையென்றே சொல்ல வேண்டும்.
பாரதிராஜா, பாக்யராஜ் போன்றவர்களை முன் மாதிரியாய் வைத்துப் பல இளைஞர்கள் ஊரிலிருந்து கிளம்பி வந்து நடிகராய், இயக்குநராய் கண்களில் கனவுகளை ஏந்திக்கொண்டு கோடாம்பாக்கத்தை வலம் வந்தார்களோ... அப்படித்தான் சாப்ட்வேர் உள்ளிட்ட பல்வேறு வேலைகளில் உழன்றுகொண்டே கிடைத்த, சேமித்த, பணத்தை வைத்துக் குறும்படம் எடுக்க குவிந்தார்கள். இவர்களில் எத்தனை பேர் இன்று இயக்குநர் ஆகியிருக்கிறார்கள்? மிகச் சிலரே.
சில வருடங்களுக்கு முன் குறும்படங்களுக்கான நிகழ்ச்சி ஒன்றை வடிவமைத்துக் கொண்டு சேனல் சேனலாய் நானும் என் நண்பரும் அலைந்தபோது இதையெல்லாம் யாரு பாப்பாங்க? இது விக்காது என்றார்கள். இன்று ஆளாளுக்கு ஒரு குறும்பட நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கிறார்கள். ஏன்? டி.ஆர்.பி. அப்படியானால் குறும்படம் பார்ப்பதற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். இக்குறும்படப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குத் திரைப்படம் இயக்கும் வாய்ப்பு என்று வேறு அறிவித்திருந்ததால் பெரிய ஆர்வம் குறும்பட இயக்குநர்களுக்கு குளூக்கோஸாய் அமைந்தது. இம்மாதிரி நிகழ்ச்சிகள் வருவதற்கு முன் பெரும்பாலான குறும்பட இயக்குநர்கள் ஓரிரு குறும்படங்கள் செய்துவிட்டு, யாராவது பெரிய இயக்குநரிடம் உதவி இயக்குநராய் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும் ஒரு விஷயமாகவே இருந்தது. அப்படி ஒர் குறும்பட விழாவில் கலந்துகொள்ள முதலில் ஒர் குறும்படம் எடுக்க வேண்டும்.
அப்படி ஒரு படமெடுக்க என் நண்பரின் தம்பி சாப்ட்வேர் வேலையை விட்டுவிட்டு, கையில் கிடந்த காசை எல்லாம் வைத்து ரெண்டு குறும்படங்களை எடுத்தார். முதல் கட்ட தேர்வில் அவரது இரண்டு படங்களில் ஒன்றை அந்நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் ஓகே செய்ய, முதல் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நிறைய செலவு செய்து இம்பரஸ் செய்ய வேண்டும் என்று, தன் கைக்காசை மீறி ஒரு சினிமாவிற்கு பயன்படும் அத்துனை உபகரணங்களையும் வைத்து சுமார் ஒன்றரை லட்சத்துக்கும் மேல் செலவு செய்தார். அதில் கடைசி 50ஆயிரம் ரூபாய் துண்டுவிழ, நண்பன் ஒருவனின் கழுத்துச் சங்கிலியை அடமானம் வைத்து படத்தை முடித்தார். என்ன காரணமோ தெரியவில்லை, கடைசி நேரத்தில் அவரின் முதற்கட்ட படமே செலக்ஷனிலிருந்து விலக்கப்பட்டதால் அவர் எடுத்த புதிய குறும்படத்தை லிஸ்டிலேயே கொண்டு வரவில்லை. இருந்த வேலையையும் விட்டு, குறும்படமெடுத்ததால் ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு கடன்காரனாகி, வீட்டிலும் சொல்ல முடியாமல், நண்பனின் செயினைத் திருப்பவும் முடியாமல் பிரச்சினையாகி, சினிமா எனும்விடாது கருப்பின் பார்வை பட்டதால் விலகி வேறொன்றுக்கும் போக முடியாமல் இவரைப் போன்று பல இளைஞர்கள் பணம், பொருள், வேலை எல்லா வற்றையும் இழந்து இருதலைக் கொள்ளியாய் அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களின் பிரச்சினை ரெகுலர் சினிமா இயக்குநர்களின் நிலைக்கு எந்த விதத்திலும் குறைவானது இல்லை. என்னைப் பொறுத்தவரை, இரண்டு பேருமே தம் நிலைகளில் போராடித்தான் அடுத்த கட்டத்தை அடைகிறார்கள். வழி மட்டுமே வெவ்வேறு. முதல் வாய்ப்பு..? கிடைக்கும் ஆனா கிடைக்காது என்ற வடிவேலு வசனம் போல் கண்ணீர் கலந்த பிளாக் காமெடிதான்.
மினி ரிவ்யூ
பெரிய நடிகரின் படம் தயாரிக்கப்படும்போதே விற்பனையாவது போல சேத்தன் பகத்தின் “Half Girlfriend” நாவல் வெளியாவதற்கு முன்னமே படமாக்க ரைட்ஸ் வாங்கப்பட்டுவிட்டதாம். எல்லாம் 3 Idiots, Kai Po Che, 2 States போன்ற படங்களின் வெற்றியும், சேத்தன் பகத் என்ற மாயப் பெயருமே காரணம். இந்திய ஆங்கில எழுத்தாளர்களில் பெரிய மார்க்கெட்டைப் பிடித்து ட்ரெண்ட் செட்டராய் வலம் வருகிறவர். இவருடைய எல்லா நாவல்களையும் படித்திருக்கிறேன்.
கொஞ்சம் ரொமான்ஸ், ஒரு தடாலடி செக்ஸ், டெம்ப்ளேட்டான சினிமா பாணி திரைக்கதைகள், இலக்கியத் தரமில்லாத எழுத்து என்றெல்லாம் இவரைப் பற்றிய விமர்சனம் இருந்தாலும் எனக்கு சுவாரசியமான எழுத்தாளராகவே தெரிந்தார். சினிமாவின் ஆதிக்கம் பரவியதாலோ என்னவோ இவரது லேட்டஸ்ட் புத்தகம் படு சினிமாவாய் எழுதப்பட்டிருக்கிறது.
கொஞ்சம் 7ஜி ரெயின்போ காலனி, வாரணம் ஆயிரம், விண்ணைத் தாண்டி வருவாயா, என்பதுகளின் இந்தியக் காதல் படங்கள் எல்லாம் கலந்து கட்டிய கலவையாய் ரொம்பவே சினிமாத்தனமாய் இருக்கிறது. நாவல் சினிமாவாகலாம். சினிமா நாவலாகக் கூடாது.
Post a Comment
No comments:
Post a Comment