கோணங்கள் -13 -எல்லாவற்றையும் மாற்றுமா சேரனின் முயற்சி?
கோணங்கள்-13: எல்லாவற்றையும் மாற்றுமா சேரனின் முயற்சி?

திரையரங்க வசூல் மட்டுமே சினிமாவில் போட்ட முதலை எடுப்பதற்கான வழி என்றிருந்த காலம் கடந்து போய்விட்டது. மொழிமாற்று உரிமை, மறுஆக்க உரிமை, ஆடியோ உரிமை என ஆரம்பித்து, வானொலியில் பாடல்களை ஒலிபரப்ப, ஒலிச்சித்திரம் ஒலிபரப்ப என்று வழிகள் கிளைத்தன. தூர்தர்ஷனில் பாடல்களையும், படத்தையும் போட வரிசையில் நின்று விற்றுக் காசாக்கும் காலம் வந்ததது.
இலங்கை தமிழர்கள் உலகம் முழுவதும் பரவப் பரவ, தமிழ்ச் சினிமா பார்க்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகமாகியது. இதனால் படத்தில் கடல் கடந்து வெளியிடும் உரிமை, வீடியோ கேசட், வி.சி.டி, டிவிடி உரிமைகள், சாட்டிலைட் உரிமை எனப் போட்ட முதலை எடுக்கப் பல வழிகள் வந்துவிட்டன.
ஆனாலும் தற்போது மீண்டும் கற்காலத்திற்கே தமிழ் சினிமாவின் நிலை போய்க் கொண்டிருக்கிறது என்று சொன்னால் என்னடா இவன் நல்லதே சொல்ல மாட்டானா என்று நீங்கள் சலித்துக் கொள்ளலாம். ஆனால் இன்றைக்கு கோடம்பாக்கத்தைச் சலித்துப் பாருங்கள் உண்மை உங்கள் முன்னால் கசப்பாக நிற்கும்.
வியாபாரமா? விவகாரமா?
சினிமா வியாபாரம் என்ற ஆவணப்படத்திற்காகப் பல சினிமா வியாபாரப் பிரமுகர்களை நேரில் சந்தித்துப் பேட்டியெடுத்து வருகிறேன். எல்லோரும் சினிமாவின் தற்போதைய வியாபாரம் குறித்துக் கவலையாகத்தான் பேசுகிறார்கள். ஒரு சினிமா தயாரித்துவிட்டு, மேற்சொன்ன வியாபாரத்தில் இன்று ஒன்றைக் கூடச் செய்ய முடியாமல் படங்களை வெளியிட என்ன செய்வது என்று பல தயாரிப்பாளர்கள் விழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
வியாபாரம் இன்று விவகாரமாக மாறிவிட்டதில் படத்தில் ஆடியோவில் ஆரம்பித்து, எந்த உரிமையும் வாங்க ஆளில்லை. இன்று கோடம்பாக்கத்தின் வண்ணமயமான விழாக்களாக நடக்கும் பல இசை வெளியீடுகள் தயாரிப்பாளர் சொந்தச் செலவில் படத்தின் விளம்பரத்துக்காகச் செய்வதாக நோக்கம் குறுகிப்போய்விட்டது.
பெரிய படங்களே திரையரங்குகளைப் பிரித்துக்கொள்வதில் சண்டையிட்டுக்கொள்ளும் நிலை உருவாகிவிட்டது. இப்படிப்பட்ட நிலையில் போட்ட பணத்தை எடுக்கச் சின்னப் படங்களுக்கு வேறேதாவது வழி இருக்கிறதா? எனப் பல தயாரிப்பாளர்கள் தேடிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
மாற்று வருமான வழிகளைத் தடுப்பது எது?
ஒரு சினிமாவை எடுத்துவிட்டு, கமர்ஷியல் திரையரங்குகளில் வெளியிடாமல் உலகத் திரைப்பட விழாக்களில் மட்டுமே திரையிட்டு, கோடிகளில் சம்பாதிப்பவர்களைப் பற்றி நிறைய பேருக்குத் தெரியாது. அப்படிச் சம்பாதிப்பவர்கள் அதற்கான வழிகளைச் சிரமேற்கொண்டு வெளியே சொல்லுவதேயில்லை. எங்கே அங்கேயும் கூட்டம் அதிகமாகிவிடுமோ என்கிற பயம் கூடக் காரணமாக இருக்கலாம்.
ஆனால் வேறு என்னென்ன வழிகள் இருக்கின்றன என்று கேட்டீர்களானால் நிறைய இருக்கிறது. ஆனால் இல்லை என்றே சொல்ல வேண்டும். உதாரணமாய் இன்றைய நிலையில் தமிழ் சினிமாவில் தேவைக்கு மீறிப் படங்கள் தயாரிக்கப்படுகின்றன. அவை எல்லாவற்றையும் திரையரங்குகளில் மட்டுமே வெளியிட்டு, போட்ட பணத்தை எடுக்க வேண்டுமென்றால் அதற்கான சாத்தியங்களும் மிகக் குறைவாகவே இருக்கின்றன.
ஒரு சில படங்களை நாம் திரையரங்குகளில் பார்க்காமல் டிவியில் பார்க்கும் போது “ அட நல்லாத்தானேயிருக்கு இந்தப் படம் ஏன் ஓடலை?” என்று நம்மை நாமே கேட்டிருப்போம். காரணம் போதிய விளம்பரமின்மை, அரங்குகள் கிடைக்காமை என ஆயிரம் காரணங்கள். அரங்குகளில் ஒருசில நாட்களோடு பிடுங்கி எரியப்பட்ட படங்களைத் தேடிப் பார்க்கிறவர்களுக்கு இருக்கும் ஒரே வழி திருட்டு வீடியோதான்.
அதுவும் ஓரளவுக்குப் பெயர் பெற்ற, மிகவும் குறைந்த அளவிற்காகவாவது முகம் தெரிந்த இயக்குநர், அல்லது நடிகர் நடித்த படத்தைத்தான் வாங்குவார்கள். திருட்டு வீடியோ கேசட் விற்கும் காலத்திலிருந்து இன்று வரை ஓரளவு கவனம் பெற்ற படங்களும், பெரிய நடிகர்கள் நடித்த படங்களைத் தவிர மற்றப் படங்களின் திருட்டு வீடியோகூட விற்காது என்பதுதான் நிதர்சனமான உண்மை.
சிங்கப்பூரில் வாழும் நண்பர் ஒருவர் அடிக்கடி கூறுவார். “அட்லீஸ்ட் இங்க ரிலீஸ் பண்ணாட்டிக்கூட பரவாயில்லை. திருட்டு டிவிடியில வர்ற அளவுக்காவது படமெடுங்க சார்” என்று கிண்டலடிப்பார். எனக்கு உள்ளுக்குள் கோபமெழுந்தாலும் அவர் சொல்வது ஜீரணிக்க முடியாத நிஜம்தான் என்பதை மனம் ஒப்புக் கொள்ளும். இன்று தயாராகும் பல படங்கள் திருட்டு டிவிடிக்கு கூட லாயக்கில்லையென்றால் நாம் அதை நேர்மையாக ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்.
எல்லாவற்றையும் மாற்றுமா?
ஒரு திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் பெற்றவர்கள் அவ்வுரிமத்திலிருந்து, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளின் சாட்டிலைட் உரிமை, ஓரளவுக்குப் பெரிய படங்கள் என்றால் அங்குள்ள திரையரங்குகளில் வெளியிடும் உரிமை, மற்றும் உலக நாடுகள் அனைத்துக்குமான சாட்டிலைட் உரிமை, டிவிடி, இண்டர்நெட், ஏர் பவுண்ட் எனப்படும் வான் வழி ஒளிபரப்பு, ரோட் பவுண்ட் எனும் தரைவழி ஒளிபரப்பு என நிறைய வழிகளில் பணத்தை எடுக்க வழியிருக்கிறது.
எல்லாப் படங்களின் பைரஸியும் வெளிநாட்டு உரிமம் பெற்ற டிவிடிக்களிலிருந்து காப்பியடித்து இங்கே தருவிப்பதுதான் என்ற நம்பிக்கை பெரும்பாலும் இருந்தாலும் இன்றைய நிலையில் பெரும்பாலான திருட்டு டிவிடிக்கள் உள்ளூரில் இருந்து வருகிறது என்பதுதான் உண்மை. இதையெல்லாம் மீறித் தியேட்டர் தருகிறீர்களோ இல்லையோ நான் என் படத்தை உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து சேர்க்கிறேன் என இயக்குநர் சேரன் நேரடி டிவிடி விற்பனைக்காகத் தமிழ்நாடு பூராவும் முகவர் நெட்வொர்க்கை அமைத்து வருகிறார்.
பொங்கல் முதல் தன் படமான ‘ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை’ படத்தின் 50 லட்சம் டிவிடி விற்கும் முயற்சியை மேற்கொண்டிருக்கிறார். இது சாத்தியமா? சாத்தியமில்லையா? என்று நிறைய பேர் இத்துறையில் உள்ளவர்கள் நீயா? நானா? விவாதக்களம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவரது முனைப்பு துணிவான நல்ல முயற்சியென்றே சொல்லுவேன். சினிமா டூ ஹோம் வெற்றிபெற்றால் தரமான சின்னப் படங்களுக்கான பொற்காலம் கண்டிப்பாக உருவாகும். ஆனால் சேரனின் வலைப்பின்னலில் அரசியல் மற்றும் மாபியா சிலந்திகள் கூடுகட்டலாம் என்று கோடுபோட்டு களமிறங்கினால்...!? அது நடந்துவிடக் கூடாது என்று இப்போதைக்குப் பிரார்த்தனை செய்வோம்.
திரைக்குத் தோதான கதை! - மினி ரிவ்யூ
என்னைப் பொறுத்தவரை பெருமாள் முருகனின் ‘மாதொருபாகனை’ மாஸ்டர் பீஸ் என்று கூடச் சொல்வேன். அருமையான ப்ரீயட் நாவல். குழந்தை பாக்கியமில்லாத பொன்னா, காளி தம்பதியரின் வலியைச் சொல்லும் கதை. குழந்தைக்காக ஏங்கி அவர்கள் செய்யும் சடங்குகள், நம்பிக்கைகள், மருத்துவ முறைகள், உறவு கொள்ளும் முறை என எல்லாவற்றையும் முயன்று நொந்திருக்கும் வேளையில், தன் கணவனுக்காக, இன விருத்திக்காக, அவன் தன் மேல் வைத்திருக்கும் காதலுக்காக அவள் ஊர் திருவிழாவில் வேறொரு ஆடவனுடன் கூடிப் பிள்ளை பெற விழைகிறாள்.
விருந்தாளிக்குப் பிறந்தவன், திருவிழாவில தரிச்சது போன்ற வசை சொற்களைச் சொல்லிப் பிள்ளைகளைத் திட்டுவதைக் கேட்டிருப்போம். குலம் காக்க, வம்சம் தழைக்க, செவி வழிக்கதைகளாகவும், மகாபாரதக் கதைகள் மூலமாகவும், நாட்டுப்புறக் கதைகளிலும் கேள்விப்பட்ட, பேசப்பட்ட விஷயம்தான்.
குழந்தையில்லாததற்குப் பெண் மட்டுமே முழு காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள மனமில்லாமல், வேறொரு திருமணம் செய்ய விரும்பாத காளியின் மனநிலை, அவனுக்காகப் பொன்னா படும் மன ரீதியான அவஸ்தை, ஒவ்வொரு முறை கூடும் பொழுதும், இந்த முறை தங்கிரணுமே என்ற பரிதவிக்கும் மனநிலை எனப் பொன்னா, காளியின் காதலை, மன விசாரங்களை மிக அற்புதமாய் எழுதியிருக்கிறார் பெருமாள் முருகன். முக்கியமாய்க் கதையின் முடிவை எழுதிய விதம் உயர்தரம். வாய்ப்பிருந்தால் ஒரு சிறந்த திரைப்படமாய் வர எல்லாத் தகுதிகளைக் கொண்ட கதை.
சமீபத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் நாவல் 2010ல் வெளிவந்தது. நாலு வருஷம் கழித்துத் தடை கோர அப்படி என்ன பூதம் கிளம்பிவிட்டது என்று தெரியவில்லை. பேசாமல் எதையெல்லாம், எப்படி எழுதலாம், படமெடுக்கலாம், கருத்து சொல்லலாம்னு கோனார் நோட்ஸ் ஒண்ணைப் போட்டுட்டாங்கன்னா நல்லாயிருக்கும்.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Comments
மாதொரு பாகன் வாசிக்கும் வாய்ப்பு இங்கில்லை...
பரவினார்கள் பார்த்தார்கள் பரவாயில்லை அண்ணா அண்ணா ஆனால் இலங்கையில் இருந்தும் இந்தியா மசாலா படங்கள் போல மட்டும் தான் வர வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களே அது தான் உறுத்தல்
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
WWW.mathisutha.COM
i am in USA and i see tamil movies in netflix or similar in Single digit only. I feel they should market movies here on online streaming or else the only way is to get a pirated DVD in indian stores or somewhere.
Regards,
Santhana krishnan
உதா: ஓர் இரவு (அமானுஷ்ய கதை) - உங்கள் பிளாகில் படித்து பார்க்கவேண்டும் என்று ஆவல் வந்தது.. இந்தியாவில் விடுமுறைக்கு சென்றபோது எங்கு ரிலீஸ் ஆனது என்று தெரியவில்லை சரி விசிடி கடையில் கேட்போம் என்றால் அவன் சிவாஜி நடித்த படத்தை எடுத்து தரான்.. நெட்டில் தேடினாலும் அதே பதில் தான்.. இன்று வரை அந்த படத்தை பார்க்கும் ஆவல் இருக்கிறது.