”ஹலோ. .இஸ் ஷங்கர் ஓவர் தேர்?” என்ற அமெரிக்க ஆக்ஸண்ட் குரலை கேட்டதும் என்னுள் மின்சாரம் பாய்ச்சியதை போல ஜிவ் வென ஒரு புது ரத்தம் ஓடியது. அவளா? அவள் தானா..? இத்தனை வருடங்களுக்கு பிறகா..? நான்கைந்து வருடங்கள் இருக்குமா?
“யெஸ்”
“ஹாய்.. ஐம் ஷ்ரத்தா ஹியர்..” என்ற சொல்லிவிட்டு அமைதியாய் இருந்தாள். ஷரத்தா.. ஆம ஷரத்தாவேதான். அவளுக்குத்தான் இந்த பெயரை இவ்வளவு ஸ்டைலாய் உச்சரிக்க முடியும். கர்வமாய், மந்தஹாசமாய்.. அவளால் மட்டுமே முடியும்.
அன்று போனவள்தான், அதற்கப்புறம் இப்போதுதான் பேசுகிறாள். இத்தனை வருடங்களுக்கு பிறகு அவளின் குரலை கேட்கும் போதும் உடலெல்லாம் ஒரு சிலிர்ப்பு ஓடத்தான் செய்கிறது.
“யெஸ்.. ஷ்ரத்தா.. ஷங்கர் ஹியர்.. குட் டு ஹியர் யுர் வாய்ஸ்..”
“இன்னும் என்னை மறக்கவில்லை இல்லையா..?. நான் உன்னை சந்திக்க வேண்டுமே..? உன்னால் ட்ரைடண்டுக்கு வரமுடியுமா?”
நான் என் செல்லில் மணி பார்த்தேன். மதியத்துக்கு மேல் பெரிதாய் வேலையேதும் இல்லை. நாளை தான் ஒரு க்ளையண்டிடம் ஒரு விளம்பர பட விஷயமாய் பேச வேண்டும். “ஷ்யூர்.. ஷ்ரத்தா.. நிச்சயமா.. என்ன ரூம் நம்பர்?”
“208.. உனக்காகத்தான் காத்திருக்கிறேன்” என்று போனை வைத்துவிட்டாள்.
இவ்வளவு வருஷம் கழித்து பேசும் போதும் கூட, கொஞ்சம் கூட தயக்கம் இல்லாமல் பேசுகிறவளை நேரில் பார்க்க ஆசையாய்தானிருந்தது. ஷ்ரத்தா.. எப்படியிருப்பாள்.. முன்பை விட கொஞ்சம் முதிர்ந்து, இன்னும் அகலமாய்…? ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது அவளை பார்த்து. அவள் போன பிறகு இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒன்றும் புரியாமல் தான் திரிந்து கொண்டிருந்தேன். வெளியே வருவதற்கு கொஞ்ச வருஷம் ஆனதென்னவோ நிஜம். அடித்து பிடித்து சினிமா தான் என் கனவு என்றலைந்த போது கிடைத்த வாய்ப்பு ஒரு விளம்பர படம் நிறுவனத்தில் அஸிஸ்டெண்ட். பின்பு குட்டியாய் தனி விளம்பரக் கம்பெனி, சில பல கார்பரேட் விளம்பரங்கள் என்று செட்டிலாகியிருக்கிறேன். இன்னும் என் கனவான சினிமாவிற்கு அருகிலேயே..
காரை பார்க் செய்துவிட்டு லிப்டை அடையும் போது கொஞ்சம் படபடப்பாய்தானிருந்தது. பிரிந்த காதலியை எத்தேசையாய் பார்ப்பது வேறு, இங்கு தான் பார்க்க போகிறோம் என்பது வேறு. 208ஐ அடைந்ததும் பெல் அடிக்கலாமா? என்று யோசித்து கொண்டிருந்தபோதே, கதவு திறந்து நின்றாள் ஷ்ரத்தா.
அதே வசீகரமான சிரிப்புடன், “வெல்கம்’ என்று ஆதீதமாய் கைவிரித்து வரவேற்றாள். எனக்கு ஒரு மாதிரியிருந்தது. உள்நுழைந்ததும் கதவு சாத்தியவள் என்னை ஏற இறங்க பார்த்தாள்.
“நீ பெருசா மாறல.. கொஞ்சம் வெயிட் போட்டிருக்கே.. அவ்வளவுதான். உட்கார்..” என்று சோபாவை காட்டினாள். அவள் பேச்சில் அதே ஸ்டைலும், அலட்சிய்மும் இருந்தது. வழக்கமாய் போடும் பெரிய காது ரிங்குக்கு பதிலாய் ஒரு சின்ன ஜிமிக்கி போல ஒன்றை மாட்டியிருந்தாள். அவள் தலையாட்டி பேச, பேச அது ஆடிக் கொண்டேயிருந்தது அழகாய் ரசனையாய் இருந்தது. முதல் முறை அவளை பார்த்த போது இருந்த தயக்கம் இப்போது இருந்தது. மிக அருகில் வந்தமர்ந்தாள்
“என்ன சாப்பிடுகிறாய்?”
“இல்லை ஒன்றும் வேண்டாம் ஷ்ரத்தா. எப்படியிருக்கிறாய்?”
“எனக்கென்ன குறைச்சல். நன்றாக இருக்கிறேன். கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறேன். அப்புறம் சொல்.. உன் கனவெல்லாம் நிறைவேறியதா..?”
அவள் குரலில் இருந்தது கேள்வியா? அல்லது கேலியா? என்று புரிந்து கொள்ள முடியவில்லை. நான் தொண்டையை கனைத்து ‘ம். .ஒரளவுக்கு” என்றேன்
”பேசாமல் அன்றே என்னுடன் வந்திருக்கலாம்.”
“அப்படி வந்திருந்தால் இன்று என் கனவில் பாதியை கூட அடைந்திருக்க மாட்டேன் ஷ்ரத்தா..”
“சினிமா இயக்குனர் ஆவதிலிருந்து, விளம்பர பட இயக்குனராகிவிட்டாய் என்று கேள்விப்பட்டேன். உனக்கு வேண்டுமானால் இலக்கில் பாதி அடைந்ததாய் இருக்கலாம். ஆனால் என்னை பொறுத்த வரையில்.. கொஞ்சம் கஷ்டமாக தான் இருக்கிறது. யு மிஸ்ட் த டார்கெட்”
“இல்லை ஷ்ரத்தா.. விரைவில் அதையும் அடைவேன். இது ஒரு குறுக்கு வழி மாதிரி… ஐ வில் டூ இட் இன்னும் சில மாதங்களில். சரி சொல் இதை பற்றி பேசுவதற்கா என்னை வரச் சொன்னாய்?” என்றதும் இன்னும் நெருக்கமாய் வந்து உட்கார்ந்தாள். அவளின் மிண்ட் மணம் மாறவில்லை நெருக்கத்தில் மூச்சு முட்டியது.
“உனக்கு என்னை பிடிக்கவில்லையா ஷங்கர்? சொல்.. என்னை மறந்துவிட்டாயா..? ஏன் ஒட்டாமல் பேசுகிறாய்? நான் உன் காதலி இல்லையா.? என்னதான் பிரிந்து விட்டாலும் காதல் போய்விடுமா..? எனக்கு முடியவில்லை. இவ்வள்வு வருடங்களில் என் பிரிவை நீ உணரவேயில்லையா?.
நான் பதிலேதும் சொல்லாமல் அவளை பார்த்தேன். கொஞ்சம் விரக்தியாய் சிரித்தேன். “பிரிவை பற்றி நீ பேசக்கூடாது ஷ்ரத்தா.. அந்த ஒரு நொடியில் பிரிந்தவள் அதற்கு பிறகு இப்போதுதான் ஐந்துவருடம் கழித்து. இதற்கு நடுவில் என்ன ஏது என்ற கேள்வி கூட இல்லை? ஞாயமாய் நான் தான் இந்த கேள்வியை கேட்டிருக்க வேண்டும்.”
”ஓகே…ஓகே.. நான் ஒத்துக் கொள்கிறேன். எனக்கு அவ்வளவு கோபம்.. எவ்வளவு கஷ்டப்பட்டு அவரை ஒத்துக் கொள்ள வைத்திருந்தேன் தெரியுமா..? வாழ்க்கையில் சில சமயங்களில் தான் இம்மாதிரி வாய்ப்பு வரும் அதை முட்டாள்தனமாய் கொள்கை, தன்மானம் என்று யோசித்து வேண்டாம் என்று மறுத்ததும், என்னை விட உனக்கு உன் கனவும், தொழிலும் தான் முக்கியம் என்று சொன்னது என்னை அவமான படுத்தியது போலிருந்த்து. உன்னை அப்படியே இறுக்கி ந்சுக்கி விடலாமா என்ற கோபம். அடுத்த முறை உன்னை பார்த்தால் காட்டிவிடுவேனோ என்று தான் போய்விட்டேன். உன்னை விட்டு தொலைவில் போய்விட்டேன். என் அருமையை நி உணரும் போது உனக்கு புரிய என் பிரிவு அவசியம் என்று நினைத்தேன்.”
”எல்லாமே நீ செய்த முடிவு”
“நமக்கான முடிவு.. அதை பிரித்து பார்த்ததினால் வந்த வினை தான் இந்த பிரிவு. இப்போது சொல்.. நான் உனக்காக தயாராக இருக்கிறேன். என்னுள் உனக்கான காதல் இன்னும் இருக்கத்தான் செய்கிறது ஷங்கர். நாளையே நாம் அமெரிக்கா போய் செட்டில் ஆகிவிடலாம். கொஞ்ச வருஷம் அங்கே இரு பின்பு உனக்கு என்ன ஆசையோ அதை செய்துகொள். நான் உன்னை தடுக்க மாட்டேன். என் பணமெல்லாம் உன்னுடயதுதானே? என்ன சொல்கிறாய்.? இங்கே சின்ன ப்ராடெக்டுக்கு அலைந்து அலைந்து விளம்பரம் படம் செய்ய தேவையில்லை. போராட வேண்டியதில்லை. சுகமான வாழ்க்கை. வா.. என்னுடன் வந்துவிடு.. சொர்கமாய் ஒரு வாழ்க்கை என்னுடன்..வா..”
அவளது பேச்சை கேட்டு ஆச்சர்யமாய் பார்த்துக் கொண்டிருந்தேன். ஷ்ரத்தா மாறவில்லை. அப்படியே தானிருக்கிறாள். இன்னும் எனக்கான முடிவுகளை அவளே எடுத்து என் முடிவாக அதை அறிவிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறாள்.
“இல்லை ஷ்ரத்தா.. என்னால் முடியாது”
“என்ன முடியாது. என்னுடன் வர முடியாதா? அல்லது என்னுடன் வாழ ஆசையில்லையா..?”
“இப்படி திடுதிப்பென கேட்டால் என்னால் பதில் சொல்ல முடியாது ஷ்ரத்த.. உனக்கும் எவ்வளவு கோபம் என் மீதிருக்கிறதோ.. அதே அளவு கோபம் எனக்கும் உன் மீது இருக்கிறது. வாழ்க்கையில் காதல் ஒன்று ம்ட்டும் தான் முக்கியம் என்று என்னால் நினைக்க முடியாது. திருப்தியில்லாத திருமணமும், திருப்தியில்லாத வேலையும் ஒரு ஆணின் வாழ்க்கையை புரட்டிப் போட்டுவிடும். என்னை பொருத்தவரை ஒரு ஆணுக்கும் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் ஒருவருக்கு ஒருவர் இணைந்து இருவரது கனவை நினைவாக்க உதவியாய் இருக்க வேண்டும். அப்போது தான் காதலும், கல்யாணமும் நிலைக்கும். இல்லாவிட்டால் அடுத்த ஒரு வருடத்தில் கோர்ட்டில் தான் நிற்போம்.”
“அப்போ நீ என்னை வேண்டாம் என்கிறாய். அப்படித்தானே.. உனக்கு ஏற்ற மனைவியாய் என்னால் இருக்க முடியாது என்று சொல்கிறாய். அப்படித்தானே.. புல்ஷிட். மேல்ஷாவனிஸ்ட் இடியட்..என்னை… என்னை.. ஷ்ரத்தாவை.. ரிஜெக்ட் செய்கிறாய்.. ஹாங்.. ஓகே…ஓகே..” என்று ஆரற்றிய அவள் கண்களில் கண்ணீர் தளும்பி நிற்க, அவள் அழுது நான் முதல் முறையாய் பார்க்கிறேன். உதடு துடிக்க, அவ்வளவு நெருக்கத்தில் அவ அழுவதை பார்த்ததும், என்னையறியாமல் அவள் முகத்தை என் பால் இழுத்து அவள் கண்ணீரை துடைத்தேன். கிட்டத்தட்ட அவளை அணைத்த நிலையில் இருக்க, ஷ்ரத்தா என்னை அப்படியே இருக்க அணைத்தாள்.
அணைத்த வேகத்தில் என் மீது அப்படியே சரிந்து மேலே பரவினாள். முகம், கழுத்து, காது, நெற்றி என வெறி கொண்டு முத்தமிட்டுக் கொண்டே வந்தவள்,
என் உதடுகளை தன் உதடுகளால் ஆக்கிரமித்து உறிய, அவளின் திடமான மார்புகள், என் மீது அழுத்த, என்னுள் கிளம்பிய கிளர்சியை என்னால் கண்ட்ரோல் செய்ய முயற்சிக்க, அவளின் சூடான மூச்சு, அவளின் ஆக்கிரமிப்பும் என்னை மேலும் உந்த, அவளின் தோளை பிடித்து அவளை தள்ளிவிட்டேன்.. அப்படியே தரையில் மல்லாக்க விழுந்தவள், அதிர்ச்சியுடன் என்னை பார்த்தபடியிருந்தாள். அடிபட்ட பார்வை, நான் எழுந்து உடைகளை சரி செய்து நின்றபடி, கை கொடுத்து அவளை தூக்க கை நீட்டினேன். அவள் என் கை பிடிக்காமல் தானே எழுந்து நின்றவள், “ஷங்கர்.. என்ன பழி வாங்குகிறாயா..? பழி வாங்குகிறாயா..?’ என்று கத்தினாள்.
“இல்லை ஷ்ரத்தா.. என்னால் முடியாது.. வெறும் செக்ஸ் மட்டுமென்றால் இப்போதே உடனே நான் தயார். எனக்கு உடல் மட்டும் தேவையில்லை மனமும் சேர்ந்த கூடல் வேண்டும். அதற்கு இருவரிடத்திலும் காதல் வேண்டும். எனக்கு உன்னிடம் இப்போது காதல் இல்லை ஷரத்தா.. என் காதல் இப்போது வேறு ஒருத்தியிடம் இருக்கிறது. என்னுடய நிறை குறை ஆசை, கோபம், கெட்ட விஷயஙக்ள் அனைத்தும் தெரிந்தவள் அவளின் குறை நிறைகளோடும், என் நிறை குறைகளோடும் ஏற்றுக் கொள்ள பழகியவர்கள். நீ விட்டு போன பிறகு இன்றளவுக்கு எனக்கு உறுதுணையாய் இருக்கிறவளுக்கு என்னால் துரோகம் செய்ய முடியாது. வாழ்க்கையில் எல்லோரும் ஒரு நேரத்தில் காதல் வயப்ப்டத்தான் செய்கிறார்கள். எல்லொருகுக்கு அவர்களே துணையாய் அமைவதில்லை. அப்படி நினைத்துக் கொள்.. ஸாரி.. எனக்கும் உன் பழக்கம் தொற்றிக் கொண்டுவிட்டது.. உனககான முடிவை எடுக்க நான் யார். சரி.. நான் கிளம்புகிறேன் ஷரத்தா..இன்னும் இங்கேயிருந்து உன்னை என்னையும் எம்பராஸ் செய்து கொள்ள விருப்பமில்லை.? ”
“அப்படி உனக்காகவே வாழ்க்கையை அர்பணித்த அந்த ஜீவன் யார் என்று தெரிந்து கொள்ளலாமா..?”
கதவை திறக்க போன நான் திரும்ப நிதானமாய் அவளை உற்று பார்த்தேன். கண்கள் சிவந்திருந்தது. முகத்தில் ஏகப்பட்ட கோபம் மண்டியிருக்க, இடுப்பில் கைவைத்து நின்றிருந்தவளை பார்த்து “மீரா” என்று சொல்லிவிட்டு கதவை மூடிவிட்டு கிளம்பினேன் மீண்டும் என்னை உயிர்பித்த காதலை நோக்கி…
முற்றும் @@@@@@@
டிஸ்கி : இக்கதையின் ஆங்கில மொழியாக்கம் தயாராகிக் கொண்டிருக்கிறது. அத்தோடு இக்கதை ஒரு திரைக்கதையாய் எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.
கேபிள் சங்கர்