கோணங்கள்-15 : பெரும் பசி கொண்ட அரக்கன்
இருபதுக்கும் குறையாத சுற்றுப்பட்டு கிராமங்களுக்கு நடுநாயகமாக இருக்கும் ஒரு பெரிய கிராமத்தில் ஒரு திரையரங்கு இருக்கும். உள்ளூர் நிலக்கிழார் அந்தத் தியேட்டரை நடத்துவார். கல்நார் தகடு அல்லது தென்னை ஓலை வேயப்பட்ட கூரையைக் கொண்ட இதுபோன்ற திரையரங்குகளை ’ கிராமத்து டூரிங் டாக்கீஸ்’ என்று சொல்வது வழக்கமாக இருந்து வந்தது. மாலை மற்றும் இரவுக் காட்சி மட்டும்தான் என்றாலும் அரங்கு நிறைந்துவிடும். வயலில் உழைத்த களைப்பைப் போக்கிக்கொள்ள மக்கள் கூடிவிடுவார்கள்.
இதுபோன்று டூரிங் டாக்கீஸ் இல்லாத கிராமங்களிலிருந்து கட்டை மாட்டு வண்டி கட்டிக்கொண்டு அருகாமையில் திரையரங்கு இருக்கும் சிறு நகரத்துக்கு வந்துவிடுவார்கள் மக்கள். இன்று கிராமங்களில் டூரீங் டாக்கீஸ்களும் இல்லை.
வண்டி கட்டிக்கொண்டு படம் பார்க்க வராவிட்டாலும் பேருந்தில் ஏறிவந்து நகரத்துக்கு படம் பார்க்க வரும் மனநிலையும் கிராமத்து மனிதர்களுக்கு இல்லாமல் செய்து விட்டது. இதற்கு முக்கிய காரணம் திருட்டு டி.வி.டி. அதன் ஆதித்தாய் என்று வி.எச்.எஸ் என்று அழைக்கப்படும் வீடியோ கேசட்டைச் சொல்லிவிடலாம். வீடியோ கேசட் பிறந்தபோது திருட்டு வீடியோவும் கூடவே பிறந்துவிட்டது.
முதலில் மிக மோசமான தியேட்டர் பிரிண்டும், பின்பு வெளிநாட்டு வீடியோ கேசட் உரிமை விற்கப்பட்ட பிறகு அங்கிருந்து வாங்கிக் கொண்டு வரப்பட்ட நல்ல வண்ணங்களுடனான உருது சப்-டைட்டில்கள் போடப்பட்ட பிரதியுமாக வந்து கொண்டிருந்தது. வீடியோ கேசட் சந்தை சூடு பிடிக்க, ராஜ் வீடியோ, சினி இந்தியா, ஏக்நாத் போன்ற கம்பெனிகள் உருவாகி சட்டபூர்வமாய் வீடியோ உரிமம் வாங்கி படங்களை வெளியிட ஆரம்பித்தன.
வீடியோ கேசட் கம்பெனிகள் எல்லாம் ஒரு பக்கம் அசல் வீடியோவை அப்படியே காப்பி எடுத்து பல பிரதிகள் போடுவதை தடுக்க, அவர்களே காப்பி செய்யப்பட்ட கேசட்டுகளை விற்று திருட்டைத் தடுத்துக் கொண்டிருந்தன. வீடியோ கேசட் காலத்தில் திருட்டு வீடியோவைத் தடுக்க அன்றைய காலத்திலேயே தனிப்படைகூட இருந்தது.
ஆனால் வீடியோ கேசட் வடிவத்தில் முகம் காட்டத் தொடங்கியிருந்த திருட்டு வீடியோவை அன்று திரையுலகம் பெரிதாகச் சட்டை செய்யவில்லை. காரணம், வெறும் திரையரங்கு வருமானம் மட்டுமே என்றிருந்த காலத்தில் வெளிநாடு மற்றும் உள்நாட்டு வீடியோ உரிமம் என்கிற வருமானம் உபரியாய் படங்களுக்கு வர ஆரம்பித்தது. என்றாலும் வி.எச். எஸ் வீடியோ கேசட் சினிமாவை அழித்துவிடும் என்று கொதித்தார்கள்.
இதே காலகட்டத்தில்தான் கேபிள் டிவி எனும் புதிய தொழில்நுட்பம் வர ஆரம்பித்தது. ஊரெங்கும் ஆளாளுக்கு கேபிள் டிவி ஆரம்பித்தார்கள். எந்த வீடியோ சினிமாவை அழிக்கும் என்று சொல்லிக் கொண்டிருந்தார்களோ அந்த வீடியோ கேசட் சந்தையை கேபிள் அழிக்க வந்தது.
அந்நாளில் தமிழ் சினிமா உலகமே இதை வளரவிடக்கூடாது; கேபிள் டிவியை தடை செய்ய வேண்டுமென்று போராட்டம் தொடுத்து ஊர்வலம் போனது. ஆனால் கமல் ஹாசன் இது தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, அதனுடன் சேர்ந்து பயணிக்க நாம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னதற்கு கருங்காலி என்ற பட்டம் அவருக்கு கொடுக்கப்பட்டது .
அன்று பழித்தவர்கள் இன்று படம் தயாரிக்கும்போதே தொலைக்காட்சி உரிமையை எவ்வளவுக்கு விற்கலாம் என்ற கணக்குடன்தான் வேலையை ஆரம்பிக்கிறார்கள். வீடியோ கேசட்டில் படம் பார்க்கும் கலாச்சாரத்தை, கேபிள் டிவி எனும் ஆக்டபஸ் வந்து அழித்தது.
தொழில்நுட்பம் எனும் பெரும் பசி கொண்ட அரக்கன் ஈவு இரக்கமில்லாமல் எது கிடைத்தாலும் அள்ளிப் போட்டுக்கொண்டு ஏப்பம் விட்டுக்கொள்வதை எதிர்க்கவோ, அல்லது தடுக்கவோ சினிமாவில் சரியான முயற்சியை யாரும் செய்வதில்லை. மாறாக எப்படியும் அரக்கன் சாப்பிடப் போகிறான்; பேசாமல் நாமே போய் வாய்க்குள் விழுந்துவிடுவோம் என்ற நினைப்பில் இயங்கிக்கொண்டிருப்பது தொடரும் சோகம். ஒவ்வொரு தொழில்நுட்பம் வரும்போதும் அது எப்படி சினிமாவை பயன்படுத்திக்கொள்கிறதோ அதைப் போலவே சினிமா உலகமும் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
வீடியோ உரிமம் எனும் ஒரு சந்தையைக் கண்டுபிடித்து அதன் மூலம் குறிப்பிட்ட வருமானத்தைப் பார்த்த தயாரிப்பாளர்கள், அந்த தொழில்நுட்பம் பயன்பாட்டிலிருந்து மறைந்து புதிய தொழில்நுட்பம் வரும்போது (கேபிள் டிவி) அதை எதிர்க்காமல் அதை எப்படித் தங்களுக்கு சாதகமாய் பயன்படுத்திக் கொள்வது என்று யோசித்து வீடியோ உரிமம் விற்றது போல அதற்கான உரிமையை விற்க வழி வகுத்திருந்திருக்கலாம். அன்றே முயன்றிருந்தால் இன்று அது ஒரு பெரிய வருமானத்தை ஒவ்வொரு சினிமாவிற்கும் கேபிள் டிவி தொழில் கொடுத்திருக்கும்.
ஆனால் சினிமா தயாரிப்பாளர்கள் தங்கள் தூக்கத்திலிருந்து விழித்தெழும்முன் ஒவ்வொருமுறையும் தொழில்நுட்பத்தை கள்ளச்சந்தைக் காரர்கள் தங்களுடையதாக வளைத்துக் கொள்வது தான் சினிமாவுக்கு நடந்துவரும் ஆண்டி க்ளைமாக்ஸ்.
சினிமாவும் ஒரு தொழில் நுட்பம்தான். அது தன்னை அப்டேட் செய்து கொண்டேயிருக்கிறது அதனால்தான் இத்தனை இடர்களையும் மீறி அது தரும் உன்னதத்தை, பொழுது போக்கை தொடர்ந்து கொடுத்துக் கொண்டேயிருக்கிறது. அதை பயன்படுத்தும் நாம் தான் நம்மை ’அப்டேட்’ செய்துகொள்ள வேண்டிய இடத்தில் நின்றுகொண்டிருக்கிறோம்.
மினி ரிவ்யூ - திரைச்சீலை
திரைச்சீலை தேசிய விருது பெற்ற சினிமா பற்றிய நூல். ஓவியர் ஜீவா எழுதியது. அவர் ரசித்த படங்களைப் பற்றிய விமர்சனமில்லாத ரசனையை சார்ந்த எழுத்து. சுவாரஸ்ய விஷயங்களை மீறி குறையாய், எனக்கு உறுத்திய சில விஷயங்கள், குறிப்பாய் மலையாள கதையாசிரியர் ஸ்ரீ நிவாசனைப் பற்றி எழுதியிருந்த விஷயம் தான். நிஜமாகவே மலையாள சினிமாவில் பொற்காலம் என்று சொன்னால் ப்ரியதர்ஷன், ஸ்ரீ நிவாசன், மோகன்லால் கூட்டணி தொடர்ந்து கொடுத்த பொறாமை ஏற்படுத்தும் வெற்றிகள்தான். இவையனைத்துக்கும் முக்கிய காரணமாய் ஸ்ரீ நிவாசனின் கதை, திரைக்கதை வசனம் என்று சொல்வார்கள். ஆனால் அந்த மூவர் கூட்டணியில் வெற்றிபெற்ற பெரும்பாலான படங்கள் பல ஹாலிவுட், பிரெஞ்ச் படங்களின் தாக்கமும் தழுவலும் ஆகும். இந்நூலைப் படிக்கும் போது கிடைக்கும் பழைய நினைவுகளில் ஆழும் உணர்வுக்காகவும், அருமையாய் தன் ரசனையை எழுத்தில் கொண்டுவந்த ஜீவாவின் எழுத்துக்கும் தாராளமாய் தலைவணங்கலாம்.
Post a Comment
4 comments:
பகிர்வுக்கு நன்றி அண்ணாச்சி.
why dont you post reviews of your movie from popular bloggers :) :) :P??
ji still we could not find your movie in net,did you use any technology to block this... share with us it will help other producer too...
"எனது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘தொட்டால் தொடரும்’ படத்தின் திருட்டு விடியோவோ, அல்லது, இணைய டோரண்டோ இதுவரை வெளியாகவில்லை. அப்படத்தின் வெளிநாட்டு உரிமையை நாங் களே வைத்திருப்பதே இதற்குக் காரணம். " கோணங்கள் -16
"அண்ணே . . . படத்துல வர்றதை விட இது செம காமெடி அண்ணே "
Post a Comment