Thottal Thodarum

Feb 17, 2015

மீண்டும் ஒரு காதல் கதை -3

International_House_of_Coffee_by_germancarsவண்டியை எலக்ட்ரிக் ஸ்டார்ட் செய்து, பதட்டமில்லாமல் ஓட்டினேன். வண்டியை பார்க்கிங்கில் வைத்துவிட்டு நேரே ஏழாவது மாடிக்கு லிப்டில் ஏறி, நடந்து, அலுவலகத்தின் கதவை திறந்து, ரிஷப்ஷனில் இருந்த பெண்ணிடம் “லைக் டு மீட் மிஸ்.ஷ்ரத்தா ரெட்டி” என்றேன்

ரிஷப்ஷனிஸ்ட் என்னை பார்த்தபடி இண்டர்காமில் நம்பர் ஒத்தினாள். காத்திருக்க பொறுமையில்லாமல் மீராவின் செல்லுக்கு போன் செய்தேன்.

“என்னடா..?” என்றாள் குரலில் கொஞ்சம் கோபத்துடன்

“கொஞ்சம் ஷ்ரத்தாவை கூட்டிட்டி வெளியே வாயேன்”

“ஏன் வாங்கி கட்டிட்டு போனது பத்தாதா.? வேண்டாம்டா. திரும்ப ஏதாவது பிரச்சனை ஆகப்போவுது.”

“அதெல்லாம் ஆகாது. ஜஸ்ட் அவளை பார்த்து ஒரு விஷயம் சொல்லிட்டு போயிடறேன். ப்ளீஸ்.. “என்று கெஞ்சும் நேரத்தில், ரிஷப்ஷன் பெண் “சார்.. லைன் எங்கேஜ்டா இருக்கு. வெயிட் பண்ணுங்க” என்றவளை பார்த்து ‘சரி’ என்பது போல தலையாட்டிவிட்டு மீராவிடம் தொடர்ந்தேன். “ஜஸ்ட் எ மினிட்” என்று போனை மீரா கட் செய்ய, மூச்சை நன்றாக உள்ளிழுத்து வெளியேற்றினேன். கைவிரலில் சிகரெட் சுட்ட எரிச்சல் இப்போது தெரிந்தது. ஷ்ரத்தாவும் மீராவும் வரும் வாசலை எதிர் நோக்கியிருந்தேன். ஏனோ உள்ளுக்குள் ஒரு விதமான எக்ஸைட்மெண்ட் இருந்தது. அவளிடம் என்ன பேச வேண்டும் என்று மனதினுள் ஓட விட்டேன். ஜஸ்ட் லைக் தட். எந்த விதமான உறுத்தலும் இல்லாமல் கண் பார்த்து சொல்லிவிட வேண்டியதுதான். ஜஸ்ட் லைக் தட். என்ற யோசனையை மீரா வந்து கலைத்தாள்.

நிமிர்ந்து பார்த்த போது ஷ்ரத்தாவுடன் நின்றிருந்தாள். அவள் முகத்தில் எந்தவித உணர்வும் தெரியவில்லை. “கேண்டீன் போய்டலாம்” என்ற மீராவை தொடர்ந்தேன். பேஸ்மெண்ட் வரை எதுவும் பேசாமல் ஒருவரை ஒருவர் பார்த்தபடி லிப்டினிலிருந்து இறங்கினோம். என்னை கேட்காமலேயே ஷ்ரத்தா ஆளுக்கொரு காபியை எடுத்து வந்து டேபிளினில் வைத்து விட்டு எதுவும் பேசாமல் இருந்தாள். அங்கிருந்த அமைதி ஒரு மாதிரி எரிச்சலாக இருந்தது. சரி நாமே ஆரம்பிக்கலாம் என்று யத்தனித்த போது

“ஸாரி.. என் தவறுதான், அதுவும் முதல் சந்திப்பிலேயே உன்னிடம் அப்படி விளையாடியது தவறுதான். என்னிடம் யாரும் இம்மாதிரி கத்தியது இல்லை. ராணி மாதிரி இட்ட கட்டளையை செய்து கொடுத்தவர்களுடன் வளர்ந்தவள். நீ கத்தியதும் அதிர்ந்து போய்விட்டேன். கோபத்தில் சாண்ட்விச்சை தூக்கி அடித்தது நீ கத்தியதை விட மோசமான ஒரு செயலாகத்தான் பட்டது. அதனால் ஸாரி.. நீ திரும்ப வந்ததினால் இதை நான் சொல்லவில்லை என்னால் தாங்க முடியவில்லை இன்றைக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் என் தலை வெடித்திருக்கும். நவ் ஐவ் ரிலீவ்ட். ” என்ற ஷ்ரத்தாவை பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

சே.. எவ்வளவு நல்ல பெண்ணிவள் இவளிடம் ஏன் அப்படி நடந்து கொண்டேன் என்று என்னையே நான் திட்டிக் கொண்டேன். “நானும் உன்னிடம் மன்னிப்பு கேட்கத்தான் வந்தேன். திரும்ப திரும்ப பேசியதையே பேசுவதை விட்டுவிட்டு நாம் வேறு ஏதாவது பேசுவோமா.. அதற்கு முன் ஒரு விஷயம் நீ கோபிக்காமல் இருந்தால் ஒரு விஷயம் சொல்கிறேன்.” என்றவுடன் ஷ்ரத்தாவும், மீராவும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, மீராவின் முகத்தில் மட்டும் “இப்போ என்ன சொல்ல போகிறாய்” என்கிற கலவரம் தெரிந்தது.


“யூ ஆர் பியூட்டிபுல். நீ பேசும் போது ஆடும் உன் காது ரிங்.. சோ..க்யூட்” என்றேன். என்னை நேராக பார்த்துவிட்டு ஷ்ரத்தா வெட்கப்பட்டு ‘தாங்க்ஸ்” என்றாள். மீராவின் முகத்தில் நிம்மதி தெரிந்தது. “அப்பாடா. ஒரு வழியா சரியாயிருச்சு. என்னடா முதல் மீட்டிங்கிலேயே சொதப்பிவிட்டதே என்று வருத்தப்பட்டேன். சரி.. சரி.. எங்களுக்கு நேரமாகிவிட்டது பிறகு பார்க்கலாம்” என்று கிளம்பியவளை தடுத்து, கை நீட்டி ஷ்ரத்தாவிடம் “ப்ரெண்ட்ஸ்?” என்றேன். அவள் மீண்டும் என்னை நேராக பார்த்தபடி என் கை பிடித்தாள். சில்லென்றிருந்தது. உள்ளங்கைக்குள் ஒரு இறுக்கம் வர கை குலுக்கிவிட்டு “பை” என்று கிளம்பினாள். எனக்கு மனசேயில்லை அவள் கையை விடுவதற்கு. எவ்வளவோ பெண்களிடம் பழகியிருக்கிறேன். ஏன் ஒன்றாய் ஒட்டியபடி வண்டியில் கூட போயிருக்கிறேன். ஆனால் இது புதுசாய் இருந்தது. உடலெங்கும் ஒரு விறு விறு உணர்ச்சி ஓடியது. அந்த சில நொடிகளில் என் இதயத் துடிப்பு எனக்கே கேட்டது, பை சொன்னபடி ஷ்ரத்தாவின் பின்னால் கிளம்பிய மீராவை, கை பிடித்திழுத்து நிறுத்தி “மீரா.. ஐ திங் ஐ லவ் ஹர்” என்றேன் ஷ்ரத்தா போவதை பார்த்தபடி. மீரா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
கேபிள் சங்கர்

Post a Comment

1 comment:

Unknown said...

கதை நல்லா இருக்கு...

மலர்