எவ்வளவோ பெண்களிடம் பழகியிருக்கிறேன். ஏன் ஒன்றாய் ஒட்டியபடி வண்டியில் கூட போயிருக்கிறேன். ஆனால் இது புதுசாய் இருந்தது. உடலெங்கும் ஒரு விறு விறு உணர்ச்சி ஓடியது. அந்த சில நொடிகளில் என் இதயத் துடிப்பு எனக்கே கேட்டது, பை சொன்னபடி ஷ்ரத்தாவின் பின்னால் கிளம்பிய மீராவை, கை பிடித்திழுத்து நிறுத்தி “மீரா.. ஐ திங் ஐ லவ் ஹர்” என்றேன் ஷ்ரத்தா போவதை பார்த்தபடி. மீரா என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
எதைக் கண்டு அவளை காதலிக்கிறேன் என்று சொன்னேன்?. அவளின் அழகை பார்த்தா..? அப்படியென்றால் நான் மீராவை தான் காதலித்திருக்க வேண்டும். அவளின் சுருள் சுருளான முடியை கண்டா? இல்லை அவளின் அகன்ற தோள்களை கண்டா? கொஞ்சம் ஆண் தனமாய் அதிர நடக்கும் நடையை கண்டா? இப்படி பல விதத்தில் யோசித்தாலும் சரியான பதில் கிடைக்க வில்லை. ஆனால் அவள் நினைப்பு மட்டும் மனதில் சப்பக்கென்று ஒட்டிக் கொண்டு போக மாட்டேனென்று அடம் பிடிக்கிறது. தூக்கத்தில் கூட தெலுங்கு பட ஹீரோயின் போல உதடெல்லாம் லிப்ஸ்டிக்குடன் குதித்து, குதித்து ஆடினாள்.
வெகு சமீபங்களில் இம்மாதிரி என்னை டிஸ்டர்ப் செய்தவள் எவளுமில்லை. “டேய். அவ சாதாரண பொண்ணு இல்லைடா. பெரிய இடம்.. சும்மா விளையாடாதே” என்று அடுத்த நாள் காலை மீரா போன் செய்யும் போது கூட அவ்வளவு சீரியஸாய் எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் பிறகு வேலை ஓடவில்லை. வண்டியை கிளப்பி உடனே மீராவின் ஆபீஸுக்கு போக வேண்டும் என்று துடித்தேன். இல்லை கூடாது இன்னும் இரண்டு நாளுக்காகவாவது அவளை பார்க்க கூடாது என்று முடிவெடுத்து வேலை செய்ய ஆரம்பித்த அரை நாளுக்குள் மீரா ஆபீஸில் இருந்தேன்.
அதே கேண்டீனில் இருவரும் இருந்தார்கள். நேற்றைவிட இன்று இன்னும் வசிகரமாயிருந்தாள். என் கண்களை பார்த்த மீரா கமுக்கமாய் சிரித்தாள். “ஹாய்.. ஏதாவது சாப்பிடுகிறாயா? முகமே சொல்கிறது பசியுடனிருக்கிறாய் என்று இரு “என்று சுவாதீனமாய் எழுந்து, ஒரு சாண்ட்விச் பேக்கை வாங்கி வந்து என் முன்னால் வைத்து, “ம்.. சாப்பிடு” என்றவளை, உற்று பார்த்தேன்.
இவள் எனக்கானவள், என்று மனதுள் ஒலித்துக் கொண்டேயிருந்தது. ஷ்ரத்தா என் முன் வைத்த சாண்ட்விச்சை சாப்பிடாமல் பார்த்தபடி இருந்தேன். “என் மீதான கோபம் போகவில்லையா..? இதோ.பார்.. தவறு என்னுடய்து என்று ஒத்து கொண்டுவிட்டேன். தேவையில்லாமல் மீண்டும்,மீண்டும் அதையே போட்டு குழப்பிக் கொள்ளாதே. என்ன? இனிமேல் நாம் ப்ரெண்ட்ஸ்? ஓகே. ம். சாப்பிடு” என்றாள் உரிமையோடு.
நான் உருகித்தான் போனேன். அவள் பேசுவதை பார்த்துக் கொண்டே இருக்கலாம் போலிருந்தது. “டேய்.. சாப்பிடு.. அவளையே பார்த்துக் கொண்டிருக்காதே” என்றாள் மீரா காதருகில் ரகசியமாய். நான் சமாளித்து சாப்பிட்டேன். “தட்ஸ்..மை பாய்.. என்ற ஷ்ரத்தா, என் தலையை கலைத்தாள். ஜிவ்வென இருந்தது. பதிலுக்கு உன் கன்னத்தை பிடித்து கொஞ்ச வேண்டும் போலிருக்கிறது என்றபடி அவளின் வலது கன்னத்தை என் இடது கையால் மெல்ல செல்லமாய் கிள்ள நினைத்து கையை நீட்டிய போது அவள் பட்டென விலக, அவள் காதில் மாட்டியிருந்த பெரிய ரிங், என் கையில் மாட்டி இழுக்க, ரிங்கின் கூர்மை என் கையை அறுக்க, வலியில் சட்டென் கை உதறி இழுக்க, சொட்டாய் ரத்தம் பூத்தது. ரத்தத்தை பார்த்த மீரா பதறி பொய் அவள் கைகுட்டையை எடுப்பதற்குள், ஷ்ரத்தா விரலை எடுத்து அவள் வாயில் வைத்து ரத்தத்தை உறிஞ்சினாள். அவளின் வாயால் கை விரலை அழுத்தத்துடன் பிரஷர் கொடுக்க, நான் அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன். இளஞ்சூடாக விரல் முழுவதும் அவளின் உஷ்ணம் விரவி பாய.. ஷ்ரத்தா என்று கூப்பிட்ட என் குரல் எனக்கே கேட்கவில்லை.
அவள் வாயிலிருந்து விரலை எடுக்காமலேயே என்னை கண்களால் பார்த்து என்ன என்று கேட்க.. நான் தொண்டையை கனைத்து “ஷ்ரத்தா.. போதும்” என்றேன். இவையெல்லாவற்றையும் மீரா ஒரு நமுட்டு சிரிப்புடம் பார்த்து கொண்டேயிருந்தாள். அவளின் சிரிப்பை பார்த்த ஷ்ரத்தாவுக்கு லேசாக உறைத்து சட்டென விரலிலிருந்து வாயை எடுத்து வெட்கத்துடன் என்னை பார்த்தாள். நான் ஏதும் பேசாமல் மெல்ல சாப்பிட்டு விட்டு, கிளம்பும் போது “ஷரத்தா.. ஐ லைக் யூ” என்றேன். அவள் சிரித்து “தாங்க்ஸ்.. ப்ரெண்ட்” என்றபடி, பை சொல்லிவிட்டு கிளம்பும் போது நாளை இரவு டின்னருக்கு எங்காவது மீட் பண்ணலாமா? என்று அவளை பார்த்து கேட்டேன். மீரா.. “ராத்திரியா. என்னால் முடியாது.” என்றவளை சட்டை செய்யாமல் ஷ்ரத்தாவையே பார்த்து கொண்டிருந்தேன். ஷ்ரத்தா சீரியாஸாய் என்னை பார்த்து “லெட்.. யூ..நோ.. உன் நம்பரை கொடு” என்றவளின் மொபைலை வாங்கி அவளின் நம்பரிலிருந்து என் நம்பருக்கு ரிங் அடித்து “இதுதான் என் நம்பர்.. கால் மீ” என்று போனை அவளிடம் கொடுத்துவிட்டு, அவளின் பதிலுக்கு எதிர்பாராமல் நடந்தேன்.
மனம் பூராவும் உற்சாகமாய் இருந்த்து. நிச்சயம் அவள் கூப்பிடுவாள் என்று தோன்றியது. க்டவுளே. அவள் கூப்பிட வேண்டும்.. வேண்டும். வேண்டும் என்ன. கூப்பிடுவாள். என்று சந்தோஷமாய் வண்டியை விசிலடித்தபடியே கிளப்பினேன். ராத்திரி முழுக்க அவள் கூப்பிடுவாள் என்ற நினைப்பில் விடிய விடிய தூங்காமல் போனையே பார்த்துக் கொண்டிருந்தேன். அசதியில் என்னையும் அறியாமல் தூங்கியவனை என் போன் ரிங் தான் எழுப்பியது. கூப்பிட்டது ஷ்ரத்தா.
கேபிள் சங்கர்
Post a Comment
No comments:
Post a Comment