“உன் கிட்ட கொஞ்சம் பேசணும் வீட்டுக்கு வர முடியுமா?” என்று போனில் கூப்பிட்டது
அனிதா அப்பா. அந்த முடியுமாவில் ஆப்ளிகேஷனில்லை வா என்ற கட்டளை தொனி லேசாய் கிலியை
ஏற்படுத்தியது. இதற்கு முன்னால் அனிதாவின் நண்பனாய் நிறைய முறை அவரிடம் பேசியிருக்கிறேன். அனிதாவுடனான காதலுக்கு,
பின்பான அழைப்பிது.
அனிதாவுக்கும் எனக்கும் காதல் என்பதே எங்கள் காலனி நண்பர்களுக்கு “இட்ஸ் எ மெடிக்கல் மிராக்கிளாய்த்தான் இருந்தது. ஏனென்றால் அனிதா அப்படி. நான் ஏ ப்ளாக், அவள் ஜி ப்ளாக். எங்கள் காலனி யூத் க்ளப்பில் தான் ரெகுலராய் சந்திப்பது வழக்கம். கொஞ்சம் உருண்டை முகமாய், துறு துறு கண்களோடு, போனி டெயிலில் செக்க சிவக்க, கொஞ்சம் ஆஜானுபாகுவாகவே இருப்பாள். பார்வையில் “போடா டேய்” என்ற திமிர்தனம் இருந்து கொண்டேயிருப்பதினால், கிட்டே போய் பேசவே யோசிக்க வைக்கும் தன்மை கொண்டவள். சண்டைக்காரி. ஆனாலும அவளது ரோஸ் நிற உதடுகள் எனக்கு மிகவும் பிடிக்கும். சண்டை போடும்போது உதட்டை ஒரு மாதிரி சுழித்துக் கொண்டு கண்களை அகல விரித்து முறைத்தபடி அவள் போடும் சண்டையிருக்கிறதே...அட அட
அவளைப்
பற்றி பேசுகையில் இப்படித்தான் இலக்கில்லாம என் மனது அலையும். படிப்பில் படு கெட்டி.
அவளின் தினப்படி செட்டியூலே படு பிஸியாய் இருக்கும். அதிகாலையில் கிளம்பி, சிஏ க்ளாஸுக்கு
போய் விட்டு, அப்படியே சென்னையின் இன்னோர் மூலையில் உள்ள ஒர் காலேஜுக்கு போய் திரும்ப
மாலையில் வந்தால் திரும்ப ஞாயிற்றுக் கிழமை தான் வெளியே தென்படுவாள். அவளின் ஒரே ஒரு
எண்டர்டெயின்மெண்ட் காலனி யூத் க்ளப். ஒவ்வொரு முறை க்ளப் நிகழ்வுகளின் போதும் எனக்கும்
அவளுக்கும் சண்டையில் தான் முடியும். “நீ வேணுன்னா பாரு.. நீங்க ரெண்டு பேரும் லவ்லதான்
விழப்போறீங்க” என்று ஏற்கனவே ஜோடி சேர்ந்திருந்த ஜோடிகள் தங்களுக்கு இன்னொரு ஆதரவை
பெருக்கிக் கொள்ள ஏற்றி விட்டுக் கொண்டிருந்தது. “யாரு இவளையா.. செத்தாலும் அவ மூஞ்சியில
முழிக்க மாட்டேன்” என்று சொன்னாலும், அடுத்த வாரக் க்ளப் மீட்டில் அவளை தேடாமல் இருந்ததில்லை.
அனிதாவின் வீட்டு காலிங் பெல்லை அழுத்திய மாத்திரத்தில் கதவு
திறந்தது. அனிதா தான் திறந்தாள். அவள் முகத்தில் எவ்விதமான உணர்ச்சியுமில்லை. கண்களில்
லேசான சோகம் மட்டுமே இருப்பதாய் எனக்கு தெரிந்தது. எப்பவுமே இப்படித்தான் அவள் ரியாக்ட்
செய்ததேயில்லை. அவள் செய்யாத ரியாக்ஷன்களுக்கு நானே ஒர் அர்த்தத்தை புரிந்து கொண்டு
அலைவேன். அவளும் நானும் காதலிக்கிறோமா? என்று புரியாமல் அலைந்ததைப் போல.. உலகத்திலேயே
மிக மோசமாய் ஐ லவ் யூ சொன்னவன் நானாகத்தான் இருப்பேன்.
”பத்து நாள் கழிச்சு ஏற்கனவே இந்த படத்தை பார்த்துட்டேன்னு திரும்ப கொடுத்தா என்ன அர்த்தம்?. வாடகைய எவன் கொடுப்பான்?” என்று அனிதாவிடம் கடுப்படித்தேன். அனிதாவின் ஞாயிறு விருப்பங்களின் முதன்மையானது மலையாள படங்களை பார்ப்பது. அவளுக்காக நண்பர் ஒருவரின் வீடியோ பார்லரிலிருந்து வாடகைக்கு எடுத்து வருவேன். அவள் சாவகாசமாய் ஒரு வாரம் வைத்திருந்து பார்த்துவிட்டு, ஒரு நாள் வாடகை தருவாள். மிச்ச ஒன்பது நாள் வாடகை நான் என் கை காசைப் போட்டுத்தான் தர வேண்டும். அந்த ஒரு நாள் காசை வாங்காவிட்டால் எனக்கும் அவளுக்குமான ”படம் எப்படி இருந்திச்சு?” என்கிற பேச்சை ஆரம்பிக்கும் தருணத்தை மிஸ் செய்ய வேண்டியிருக்கும் என்பதாலும், அந்த காசை வாங்காவிட்டால் அனிதா கேசட்டையே வாங்க மாட்டாள். அனிதா ரொம்ப ஸ்ட்ரிக்டு.. ஸ்ட்ரிக்டு.. ஸ்ட்ரிக்டு.. ஆனால் இன்னைக்கு கடுப்படித்தற்கான காரணம் வீடியோ பார்லர்காரன் இனிமே படம் எடுத்துட்டு போனா ரெண்டு நாள்ல திரும்பிக் கொடுக்கப்பாரு இல்லாட்டி எடுக்கவே எடுக்காத என் வியாபாரம் கெடுது என்றதால்தான். சற்றே உயர்ந்த குரலில் இதை சொன்னதும் என்னை நிமிர்ந்து பார்த்தவள் “இத பாரு.. இந்த ஏரியாவில மலையாள படம் கிடைக்கலைன்னு சொல்லிட்டிருந்தப்ப, நீயா என்கிட்ட வந்து எனக்கு தெரிஞ்ச கடையிலேர்ந்து வாங்கிட்டு வர்றேன்னு சொன்னே.. நானா ஏதும் கேக்கலை. இத்தனை நாள் வாடகை கொடுக்கணும்னு சொல்லியிருந்தா நான் வாங்கியிருக்கவே மாட்டேன். எனக்காக எதுக்கு நீ பத்து நாள் காசு கொடுக்கணும்? இனிமே எனக்கு படமெடுத்துட்டு வர வேண்டாம்” என்று கட் அண்ட் ரைட்டாய் சொன்னதும் “அஹா.. கெடுத்துட்டியேடா சுந்தரா” என்று மனசுக்குள் புலம்ப ஆரம்பித்த நேரத்தில்தான் அனிதாவின் அக்கா ஆஷா உதவிக்கு வந்தாள். “பாவம்டி உனக்காக அவன் வாரா வாரம் தேடித் தேடி படம் எடுத்துட்டு வர்றான். சும்மா கடுப்படிக்கிறியே?”
”அப்படியெல்லாம் எனக்காக கஷ்டப்படத் தேவையில்லை” என்று கிளம்ப யத்தனித்தவளின் கையை
ஆஷா பிடித்து நிறுத்தி, “அவன் உன்னை லவ் பண்றாண்டி” என்றாள். அஹா.. என்னடா இது சோதனை..
என்று மெட்ரோ வாட்டர் லாரி மோட்டார் போல மனது அடிக்க, கோபத்துடன் திரும்பிப் பார்த்த
அனிதாவின் பார்வையை என்னால் தாங்க முடியவில்லை “என்ன லவ் பண்றியா?” என்றவளின் குரலில்
கோபமிருந்தது.
“ஆமா லவ் பண்றேன் என்ன இப்ப?” என்றேன் அனிதாவிடம். அனிதா ஏதும் பேசாமல் கேசட்டை என் கையை பிடித்து அழுத்தி வைத்துவிட்டு, வேக வேகமாய் போய்விட்டாள். ”என்ன மச்சான் இன்னைக்கு வழக்கம்போல சண்டையா?” என்ற நண்பனிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் சிரித்தேன். அனிதாவைப் பற்றி தெரிந்ததினால் அடுத்த நிமிடம் அவளின் வீட்டிலிருந்து யாராவது யூத் க்ளப்புக்கு வந்து என் சட்டையைப் பிடிக்க அத்துனை சாத்தியங்களும் இருப்பதால் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஒரு வாரம் அனிதா எங்கே பார்த்தாலும் என்னிடம் முகம் கொடுக்கவேயில்லை. அனிதாவின் அப்பாவுக்கு என் மேல் ஏனோ தெரியவில்லை கொஞ்சம் மரியாதை உண்டென்பது என் எண்ணம். குரு ஒயின்ஸில் நேருக்கு நேராய் பார்த்தும் யாரிடமும் சொல்லாததால் இருக்கலாம்.
பேப்பரிலிருந்து தலையை நிமிர்த்தி என்னை பார்த்த அனிதாவின்
அப்பா உள்ள வா என்பது போல தலையசைக்க, உள்ளூக்குள் அட்லிரின் பம்ப ஆக ஆரம்பித்தது. பவ்யமாய்
நடந்து அவரின் அருகில் போய் உட்கார்ந்தேன். அனிதாவின் அம்மா சமையல் ரூமிலிருந்து வெளியே
வந்து என்னை பார்த்து “வாப்பா” என்று வரவேற்க, “சுந்தருக்கு காப்பி போடும்மா” என்றார்
அப்பா. என்னடா இது வரவேற்பெல்லாம் பலமா இருக்கே என்ற யோசனையில் இருந்தவனை அனிதாவின்
அப்பா குரல் கலைத்தது.
“அப்புறம் சுந்தர் வேலையெல்லாம் எப்படி போவுது? இப்பல்லாம்
வீட்டுக்கு வர்றதேயில்லை?”
“நல்லா போயிட்டிருக்கு அங்கிள். வேற ஒரு கம்பெனியில கூட இண்டர்வியூ
அட்டெண்ட் பண்ணியிருக்கேன்.”
அதற்குள் காப்பி வர, அனிதாவின் அம்மா அருகில் இருந்த சோபாவில்
அமர்ந்தாள். ”அனிதா ஆஷா ரெண்டு பேரும் உங்க அக்கா வீட்டுக்கு போய் இருங்க.” என்றார்
அனிதாவின் அப்பா. அவரின் குரலுக்காகவே காத்திருந்தது
போல இருவரும் கிளம்ப, அனிதாவை நிமிர்ந்து பார்க்கவே முடியாமல் நான் தலைகுனிந்து காப்பி
டபராவை பார்த்துக் கொண்டிருக்க, அவள் என்னைப் பார்ப்பது என் தலையில் தெரிந்தது. அவர்கள்
இருவரும் போனதும் “வாசக் கதவை சாத்தும்மா” என்றார். நான் அவரை நிமிர்ந்து பார்த்தேன்.
கதவ சாத்தி வச்சி அடிக்கப் போறாங்களோ?. அனிதாவின் அம்மா எந்தவிதமான ரியாக்ஷனுமில்லாமல்
கதவை தாள் போட்டுவிட்டு மீண்டும், அதே சோபாவில் வந்து அமர்ந்தாள். யாரும் ஏதும் பேசாததால்
உலக அமைதியெல்லாம் அங்கே இருந்தது போல இருக்க, அனிதாவின் அப்பாவையும், அம்மாவையும்
நிமிர்ந்து பார்த்தேன். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு, தொண்டையை கனைத்தபடி
“எத்தனை நாளா இப்படி ரெண்டு பேரும் ஊர் சுத்துறீங்க?”
”பைக்கு பின்னாடி முகத்த துப்பட்டாவுல மூடிட்டு கட்டிக்கிட்டு போறது, வீட்டுல பொய் சொல்லிட்டு சினிமா போறது, சான்ஸ் கிடைக்கும் போது லேசா ப்ரெக் அடிச்சி இடிச்சிக்கிறது, லைட்டா அகஸ்மாத்தா தொடுறா மாதிரி தொடறது,. கிடைக்கிறப்ப ஸ்மூச்சிங் இதையெல்லாம் எதிர்பார்த்துதான் என்னை லவ் பண்றேன்னா நீ ரொம்ப பாவம்.. எனக்கு என் சிஏ, டிகிரி, ஒரு பெரிய கார்பரேட் கம்பனியில பைனான்ஸ் டிபார்ட்மெண்டுல போஸ்டிங். இதைத் தவிர வேறேதும் கனவேயில்லை. சோ.. என்னை லவ் பண்றது வேஸ்ட். சுவாரஸ்யம் இருக்காது. ஒரு வாரமா உன் முகத்த பாக்க சகிக்கலை. எங்கேர்ந்துடா கத்துக்கிறீங்க இப்படி நடிக்க?.. அதுவும் நான் க்ராஸ் செய்யும் போது ஒரு மாதிரியும், நான் போனதும் வேற மாதிரியும் முகத்த வச்சிக்கிறதுல சிவாஜிய மிஞ்சிருவ. என்னதான் நமக்குள்ள எப்பவும் சண்டை அது இதுன்னு இருந்தாலும் எனக்கு உன்னை பிடிக்கும் உன்னை அப்படி பாக்க எனக்கு பிடிக்கலை. ஸோ.. டோண்ட் வேஸ்ட் யுர் டைம். என்றவளின் ரோஸ் நிற உதட்டையே பார்த்துக் கொண்டிருந்தேன். பிடித்திருக்கிறது என்கிறாள் இது போதுமென்றே தோன்றியது. அவளைப் பார்த்து அசட்டுத்தனமாய் சிரித்ததைப் பார்த்து, என் கன்னத்தில் லேசாய் தட்டிவிட்டு, “லூசு” என்று சொல்லிவிட்டு போனாள். ரெண்டு இன்ச் மேலே மிதந்தேன்.
அதன் பிறகு அவளுக்கும் எனக்கும் சண்டை வரவேயில்லை. அப்படியே வந்தாலும் நான் விட்டுக் கொடுத்துவிடுவேன். ஞாயிற்றுக் கிழமையைத் தவிர சந்திப்பதற்கு வாய்ப்பேயில்லை. வீட்டு டெலிபோனில் அவளிடம் பேசலாம் என்று முயற்சித்தால் எடுத்த மாத்திரத்தில் சத்தமாய் என்ன விஷயம் இப்பத்தானே க்ளப்பில மீட் பண்ணோம்? என்பாள் நான் போனை வைத்துவிடுவேன். இவளுக்குள் ரொமான்ஸேயில்லையோ? என்று தோன்றும். வேறு வழியேயில்லாமல் அதிகாலையில் அவள் கிளம்பும் நேரத்திற்கு ஜாகிங் போகப் போவதாய் சொல்லி ஸ்கூட்டரை எடுத்து கிளம்ப தயாரான என்னை மொத்த வீடே அதிசயமாய் பார்த்தது. அவள் பஸ் ஏறும் வரை காத்திருந்து அவளின் பஸ் பின்னாலேயே நுங்கம்பாக்கம் வரை போய் அவள் பஸ்ஸிலிருந்து இறங்கி போகும் போது திரும்பி பார்த்து லேசாய் முறைப்பதை பார்த்துவிட்டு, வண்டியை லெப்ட் ஒடித்து திரும்பிவிடுவேன்.
“உனக்கு என்ன வேணும்? நான் தான் சொன்னேன் இல்லை.. நீ நினைக்கிறது எல்லாம் என்னால பண்ண முடியாதுன்னு”
“சரி இங்கேயிருந்து வேண்டாம். மவுண்ட் ரோட்லேர்ந்து நுங்கம்பாக்கம் வரை என் ஸ்கூட்டர்ல வரலாம் இல்லை உன்னை என்ன சினிமாவுக்கா கூப்ட்டேன். உன் ரொட்டீனை டிஸ்ட்ரப் பண்ணேனா? “ என்று பாவமாய் முகத்தை வைத்து ஆறு மாத தொடருதலுக்கு பிறகு கேட்டேன். அடுத்த நாள் மவுண்ட் ரோட்டில் இறங்கி ஸ்கூட்டரில் என் மேல் படாமல் உட்கார்ந்து வந்தாள். பின்பு அதுவே ரொட்டீன் ஆக, “அன்னைக்கு கேட்டேயில்லை என் ரொட்டீனை டிஸ்டர்ப் பண்ணுறேனான்னு டிஸ்ட்ரப் ஆகத்தான் செய்யுது. வண்டிய கொஞ்சம் நிறுத்து” என்றாள்.
“ஏன்
என்ன?”
என்று
கேட்டுக் கொண்டிருக்கும் போது மீண்டும் வண்டியில் ஏறி இரண்டு பக்கமாய் காலை போட்டுக்
கொண்டு உட்கார்ந்து என் முதுகின் மேல் மெல்ல சாய்ந்தாள். மெத்தென்ற அவளின் மார்பு என்
முதுகில் அழுத்த, இத்தனை நாள் காத்திருப்பும், வண்டியோட்டுதலுக்கும் வேளை
வந்திருச்சு என்று தோன்றியது. ஒரு பெண்ணின் அருகாமை இவ்வளவு அற்புதமா? வண்டி ஓட்டுவதே
தெரியவில்லை. எதுவுமே பேசாமல் நுங்கம்பாக்கம்
வந்து வண்டியை நிறுத்தினேன். வண்டியை விட்டு கீழிறங்கியவள் என்னை நேரே பார்த்து :சந்தோஷமா?
என்றாள். அவள் கண்ணெல்லாம் பளபளவென இருந்தது.
“உனக்கு?” என்றேன். அவள் பதிலேதும் சொல்லாமல் கிளம்ப
யத்தனிக்க, அவளின் கையை பிடித்திழுத்து, அவளின்
ரோஸ் நிற உதட்டின் மேல் அழுத்தமில்லாமல் என் உதட்டை அந்த ஆளில்லாத அதிகாலை நேரத்தில்
பதித்தேன். அவள் வாயிலிருந்து ஒரு விதமான பெப்பர் மிண்ட் மணம் வந்தது. சட்டென என்னிடமிருந்து விலகாமல் சில நொடிகள் அப்படியே
இருந்து விட்டு, பின்பு விலகி “எத்தனை மாசமா என் பின்னாடி வந்திட்டிருக்க, உன் பொறுமைக்காகத்தான் என்னை கொஞ்சம்
தளர்த்திக்கிட்டேன். இன்னும் கொஞ்சம் ரிலாக்ஸானேன். என் ரொட்டீன் டிஸ்டர்ப் ஆகத்தான்
செய்யும் சுந்தர். நாளையிலேர்ந்து நீ வர வேணாமே?” என்று சொல்லிவிட்டு போன அடுத்த நாள்
தான் அனிதா அப்பாவிடமிருந்து போன் வந்தது.
”இல்லை சார். எங்கேயும் சுத்துனதில்லை. ”
“அனிதா எங்கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டா சுந்தர்.” என்றவரின்
முகத்தை ஏறிட்டு பார்த்தேன்.
“நேத்து பூராவும் அவ முகமே சரியில்லை. என்னான்னு கேட்டபோது
எல்லாத்தையும் சொல்லிட்டா. நான் அவள அப்படித்தான் வளர்த்திருக்கேன். என் கிட்ட சொல்லாம
ஒரு விஷயம் செய்ய மாட்டா. உன்னை பார்க்கும் போதெல்லாம் கில்ட்டியாவே ஃபீல் பண்ண முடியாதுப்பான்னு
அழறா.. அதே சமயம் உன்னையும் அவளுக்கு பிடிக்குது. அவளால முடிவெடுக்க முடியலை. அவளோட
கோல் ஆ, இல்லை நீயான்னு?. நான் சொல்றது பொண்ணைப்
பெத்த அப்பனோட அட்வைசா தெரியலாம். பட் பேக்ட். இந்த வயசுல காதல் எல்லாம் வரத்தான் செய்யும்,
வரணும் அதான் நாமெல்லாம் மனுஷங்கன்னு ஃபீல் பண்றதுக்குனான வழி. ஆனா அது நம்ம வாழ்க்கைய
பொரட்டிப் போட்டுறக் கூடாது. அவ போட்டுறுமோம்னு பயப்படுறா? பயத்தோடயே பண்றதுக்கு பேர்
காதலா? சரி.. நான் உங்க காதலை ஒத்துகிட்டா, உனக்கும் என் பொண்ணுக்கும் சந்தோஷம், உன்
வீட்டுல ஒத்துக்கணும், இல்லாட்டி ஜாதி, பணம் ஆயிரம் காரணம். யாரையோ எதிர்த்துட்டு,
வாழ்ந்து காட்டணுங்கிற வெறியில கல்யாணம் பண்ணிட்டு, காதலை தொலைச்சிட்டு போராடுவோம்.
பின்னாடி போராட்டமே வாழ்க்கையாப் போய் காதலை தேட வேண்டியிருக்கும். எல்லாருக்கும் இது
நடக்கும்னு சொல்லை ஆனா பெரும்பாலனவங்களுக்கு இதான் நடக்குது. இப்படி பயந்துட்டே காதலிக்க
உனக்கோ இல்லை அவளுக்கு என்ன நெஸசிட்டி?”
நான் ஏதும் பேசாமல் இருந்தேன். காதலில் ஜெயித்தவர்களை நான் பார்த்திருக்கிறேன். வாழ்க்கையில் ஜெயித்தார்களா? என்று யோசிக்க சொல்கிறார். “சார்.. நான் இனிமே உங்க பொண்ணுகிட்ட பேசக் கூட மாட்டேன். என்னால அவளுக்கு டிஸ்டர்பன்ஸ் ஏதும் வராது. நீங்க சொன்னது உண்மைதான் சார்.. பயந்துட்டே பண்றதுக்கு பேர் காதல் இல்லை” என்று அனிதாவின் வீட்டிலிருந்து கிளம்பினேன்.
அதன் பிறகு காலனியின் யூத் க்ளப்பில் அவளை பார்ப்பதேயில்லை.
அதையும் மீறி வழியில் பார்த்தால் கண்கள் விரிய, அந்த ரோஸ் நிற இதழ்களை பிரித்து சிரிப்பாள்.
அந்த சிரிப்பில் பயமேயில்லாமல் இருப்பது எனக்கு மட்டும் தெரிந்தது.
கேபிள் சங்கர்- கல்கி சிறுகதை
Post a Comment
1 comment:
அருமையான கதை...
Post a Comment