Thottal Thodarum

Mar 27, 2015

Evuda Subramaniyam - Telugu Film

சந்தோஷத்தை, கொண்டாட்டத்தை தரக்கூடிய படங்களே அதிகம் கோலோச்சும் தெலுங்கு சினிமாவிலிருந்து ஒரு அதிசய படம். எல்லா நேரங்களிலும் ஒரு சினிமா நமக்குள் தாக்கத்தை கொடுப்பதில்லை. கொண்ட்டாட்டமோ, அல்லது துக்கமோ படம் பார்த்துவிட்டு வந்த விநாடிகளில் ட்ராபிக் கூட்டத்தில் கரைந்து போயிவிடக்கூடிய அளவே இருக்கும். ஆனால் மிகச் சில படங்களே வீட்டிற்கு வந்தும் நம்மை அலைக்கழித்துக் கொண்டேயிருக்கும். அது போன்ற படம் தான் இந்த எவுடா சுப்ரமணியம். 


எவுடா சுப்ரமணியம்? என்றால் சுப்ரமணியம் யார்? என்ற கேள்வியை சுப்ரமணியத்திடம் கேட்டால் அவனிடமிருந்து என்ன பதில் கிடைக்கும்?. அவனைப் பற்றிய லெளகீக பின்னணிதானே? ஆனால் நிஜத்தில் அவன் யார் என்ற கேள்வியை முன் வைத்து, அக வாழ்க்கையை, நிஜ வாழ்க்கையை, தேடி சென்றடைய வைக்கும் படம் தான் இந்த எவிடா சுப்ரமணியம்.

எதிர்காலம், ப்ளானிங், அதை அடையும் வழி என எதையாவது துரத்திக் கொண்டேயிருக்கும் பணம், மற்றும் புற உலக வெற்றிக்காக மட்டுமே வாழும் சுப்ரமணி, எதைப் பற்றியும் சிந்திக்காமல், தனக்காக, தன் சந்தோஷத்துக்காகவே வாழும் அவனது பால்ய நண்பன் ரிஷி. கிட்டத்தட்ட, அதே மனநிலையில் வாழும் ஆனந்தி. தன் கார்பரேட் உலக வெற்றிக்கு தேவையான கம்பெனி ஷேர் ஆனந்தியிடம் இருக்கிறது. அதை வாங்கி விட்டால் டைரக்டர் பதவியுடன், முதலாளி பெண்ணுடனான திருமணம் என்ற அடுத்த குறிக்கோளுக்காக, ஆனந்தியின் பின்னால் அலைய ஆரமிக்கிறான் சுப்பு என்கிற சுப்ரமணியம். இதைப் பற்றி ஏதும் கவலைப்படாமல் தன் வாழ்நாள் ஆசையான “தூத் காசி”க்கு போவது பற்றியே பேசிக் கொண்டு, ஜாலியாய் இருக்கும் ரிஷிக்கும், ஆனந்திக்குமான  நட்பு இறுக, ஒரு கட்டத்தில் ரிஷி விபத்தில் இறக்கிறான். அவனது ஒரே விருப்பமான தூத் காசி எனும் இடத்தை நோக்கி போகும் பயணத்திற்கு உதவினால் தன் ஷேரை எல்லாம் தருகிறேன் என்ற கண்டீஷனுடன் சுப்பு, ஆனந்தியுடன் பயணிக்க ஆரம்பிக்கிறான். அப்பயணம், அவனுக்கு வாழ்க்கையை சொல்லிக் கொடுக்கிறது. எப்படி என்ற சுகானுபவத்தை திரையில் பார்த்து அனுபவியுங்கள்.

முதலில் பாராட்டப்பட வேண்டியவர் இயக்குனர் நாக் அஸ்வின். இம்மாதிரியான கதையை எடுக்க, அதுவும் தெலுங்கில் எடுக்க மகா துணிச்சல் வேண்டும். அதிலும் நானி போன்ற வளரும் நடிகர், தொடர் தோல்விகளுக்கு பிறகு நடித்திருப்பது அதை விட பெரிய விஷயம்.  மிக அழகாய தன் கேரக்டரை செய்திருக்கிறார் நானி. டார்கெட், வெற்றி, தன் கனவு என்பதற்காக மட்டுமே வாழும் போது இருக்கும் நானிக்கும், அட இத்தனை நாள் நான் அலைந்து திரிந்தது எல்லாமே வேஸ்ட் என்று உணர்ந்து நிதானிக்கும் நானிக்குமான நடிப்பும், பாடிலேங்குவேஜும் அருமை. ஆனந்தியாய் மாளவிகா நாயர். அந்த பெரிய கண்கள் பல எக்ஸ்பிரஷன்களை கொடுக்கிறது. பட் ரிஷியாய் நடித்த ஆனந்த் கொடுத்த இம்பேக்ட் அவர் இல்லாவிட்டாலும் நம்மை தொடர வைத்தது அவரது சிறந்த நடிப்பிற்கான சான்று. கிட்டத்தட்ட மூன்றே கேரக்டர்கள். 

நான் இப்படத்தில் வரும் எந்த சிறந்த காட்சிகளைப் பற்றியும் சொல்லப் போவதில்லை. காரணம், இப்படத்தில் பயணம்  கொடுக்கும் வாழ்வியல் அனுபவங்களை சுப்பு உணர்வது போல, படம் பார்க்கும் போது நீங்களும் உணர வேண்டும் என்கிற ஆசையால் தான். அருமையான ஒளிப்பதிவு, உறுத்தாத பின்னணியிசை, ஓட்டத்தை குறைக்காத பாடல். முக்கியமாய் இளையராஜாவின் “தென்றல் வந்து  தீண்டும் போது” பாடலின் தெலுங்காக்கத்தை படத்தில் வரும் காட்சியோடு பாருங்கள், சட்டென நெகிழ்ந்து, கண்களில் கண்ணீர் முண்டி நிற்கும். வாவ்.. வாவ்.. உலக திரைப்படங்களை கொண்டாடும் நம்மூர் ஆட்களுக்கு கொண்டாட இன்னொரு உலக படம் நம்ம பக்கத்து மாநிலத்திலிருந்து.. எவுடா சுப்ரமணியம்.
Cable Sankar 

Post a Comment

No comments: