கோணங்கள் 24- ஒரு ஏக்கமான கேள்வி!
தமிழ் சினிமாவில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு போராட்டம் நடத்தினார்கள். அது கேபிள் டிவிக்கு எதிரான போராட்டம். கேபிள் டிவியைத் தடைசெய்ய வேண்டுமென்று கேட்டார்கள். அப்போது கமல்ஹாசன் “இது அறிவியல் வளர்ச்சி. அதை நமக்கான வியாபாரமாய் மாற்றிக்கொள்ளப் பழக வேண்டும்” என்று சொன்னார். உடனே ஊர்வலத்தில் “கருங்காலி” எனத் திட்டி பேனர் வைத்துக்கொண்டு நடந்தார்கள். ஆனால் நிஜம் என்னவாயிற்று!?
கேபிள் டிவி, சாட்டிலைட் டிவியானதுதான் மிச்சம். சாட்டிலைட் டிவி என்ற ஒன்று வருமென்று முன்னமே யோசித்தவர்கள் வீடியோ கேசட் உரிமம் வாங்கும்போதே ‘அடியில் கண்ட சொத்துகளும், எதிர்காலத்தில் வரும் எந்த விதமான புதிய தொழில்நுட்பத்துக்கும்’ என்ற ஒரு வரியை ஒப்பந்தத்தில் சேர்த்துக்கொண்டு, மிக மலிவாய் ஐந்தாயிரத்துக்கும், பத்தாயிரத்துக்கும் படத்தை வாங்கி வைத்துச் சேனல் தொடங்கினார்கள்.
பின்னாளில் டிவியின் மார்க்கெட் தெரியாமல் விற்றோமே என்று புலம்பியவர்கள் எல்லாம், அடுத்தடுத்து நல்ல விலைக்குச் சேனல்களுக்கு விற்க ஆரம்பித்தார்கள். எந்த தொழில்நுட்பத்தை ‘வரக்கூடாது’ என்று சொன்னார்களோ அந்தத் தொழில்நுட்பத்தையே பயன்படுத்தி, சேனல்காரார்களும், படத் தயாரிப்பாளர்களும் சம்பாதிக்க ஆரம்பித்தார்கள். ஒரு சேனல், இரு சேனல் என்றிருந்த காலம் போய்ப் புதிது புதிதாய் வர, படம் ஓடுகிறதோ இல்லையோ, இரண்டு கோடி ரூபாய்க்குப் படம் செய்தால் ஒரு கோடி ரூபாய் சாட்டிலைட் உரிமை வருமானம், பிறகு வெளிநாட்டு உரிமை, ஆடியோ உரிமை, விநியோக உரிமை என்று போட்ட பணத்துக்கு லாபம் எடுத்துவிடலாம் என்ற தைரியம் வந்தது.
இதனால் புதிய தயாரிப்பாளர்கள் படையெடுக்க, சாட்டிலைட் உரிமையை மட்டுமே நம்பிப் படமெடுப்பவர்கள் அதிகமாயினர். எந்தத் தொழில்நுட்பம் கூடாது என்றார்களோ அந்தத் தொழில்நுட்பத்தோடு நாமும் வளர்ந்து, அதை நம் தொழிலுக்கு லாபகரமாய்ப் பயன்படுத்திக்கொள்ளும் உத்தியைத்தான் கமல் அன்றைக்குச் சொன்னார்.
இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்புவரை சாட்டிலைட் உரிமை வருமானத்தை நம்பித் தைரியமாய்ப் படமெடுத்தவர்கள் தற்போதைய வியாபார நிலை குறித்து அச்சம் கொண்டிருக்கிறார்கள். முன்புபோல படம் வெளியாவதற்கு முன்பே சாட்டிலைட் உரிமத்தை யாரும் போட்டி போட்டு வாங்குவதில்லை. பெரிய நடிகர்கள் பட்டியலில் உள்ள எட்டு நடிகர்கள் நடிக்கும் படங்களைத் தவிர, மற்ற நடிகர்களின் படங்கள் தியேட்டரில் வெளியாகி ஓடி வெற்றிபெற்றால் தவிர எந்த சேனலும் வாங்க முன்வருவதில்லை.
சில மாதங்களுக்கு முன் வெளியான முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படங்கள் இன்னமும் சாட்டிலைட் வியாபாரம் ஆகாமல் தங்கிப் போய்விட்டன. என்னதான் ஆச்சு இந்தத் தமிழ் சினிமா உலகத்துக்கு என்று ஆளாளுக்குக் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். பலரும் செய்வதறியாது பேந்தப் பேந்த விழித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதேநிலை கேரளாவில் சில ஆண்டுகளுக்கு முன் வந்தது. அங்கே நான், நீ என்று சேனல் போட்டிகளின் காரணமாகப் படங்களின் விலையெல்லாம் தயாரிப்புச் செலவைவிட அதிகமாகிப் போனது. ஒரு கட்டத்தில் சேனல்காரர்கள் எல்லாம் ஒரு கூட்டம்போட்டு ‘படம் ஓடின பிறகு வாங்கிக்கொள்கிறோம்’ என்று அறிவித்தார்கள். அது மட்டுமல்லாமல் அங்கே இருந்த பிரச்சினை தொழில் போட்டியின் காரணமான ஏற்பட்ட பொருளாதாரச் சிக்கல்.
அதிக விலை கொடுத்து வாங்கப்படும் படங்களின் மூலமாய் அவர்கள் போட்ட மூலதனத்தை எடுக்க உன்னைப்பிடி, என்னைப்பிடி என்ற நிலை உருவானது. ஏனென்றால் அவர்களின் சேனல் நிலையைப் பொறுத்துத்தான் விளம்பரத்துக்கான கட்டணத்தை நிர்ணயிக்க முடியும். போட்டிக்காகப் பிள்ளை பெற்றுப் பெரிய படங்களை வாங்கினாலும், தொடர்ந்து அவர்களின் மூலதனத்தை எடுக்க முடியாத நிலை உருவாகி வியாபாரத் தேக்கம் ஏற்பட்டதை வெளிப்படையாகச் சொன்னார்கள்.
ஆனால் இங்கே அப்படியில்லை. சேனல்களுக்குத் தேவைக்கு அதிகமான விளைச்சல் என்பது ஒரு முக்கியக் காரணமாகச் சொல்லப்படுகிறது. இங்கே முதல் நிலை சேனல்கள் என்று கூறப்படும் சன், விஜய், ஜி டிவி, கலைஞர், ஜெயா என ஐந்து சேனல்கள் மட்டுமே படங்களை வாங்குகின்றன. முதல் நிலைப் படங்கள் என்பது நம்மூர் அரசியல் நிலவரத்தைப் பொருத்து அந்தக்கட்சியோடு தொடர்புடைய சேனல்களுக்கு வாயைப் பொத்திக்கொண்டு விற்க வேண்டிய நிலை ஒரு புறமிருக்க, இன்னொரு புறம், மற்ற சேனல்கள் எல்லோரும் அடுத்த நிலை நடிகர்கள், வெற்றிபெற்ற படங்களை மட்டுமே வாங்குகிறார்கள்.
ஐந்து சேனல்களும் வருடத்துக்குக் குறைந்த பட்சம் 15 முதல் 20 படங்கள்வரை புதிய படங்கள் வாங்குவதற்கான தேவையிருக்கிறது. எனவே மொத்தமாக நூறு படங்களை சேனல்களால் வாங்க முடியும். ஆனால் தமிழ் சினிமாவில் கடந்த வருடம் மட்டும் 230க்கும் அதிகமான படங்கள் வெளியாயின. மீதமிருக்கும் 130 படங்களின் நிலை என்ன என்று பார்த்தால் ஒன்றுமில்லை என்கிற நிலைதான்.
இந்த ஐந்து முன்னிலை சேனல்களைத் தவிர மேலும் 45 சேனல்கள் தமிழகத்தில் இயங்கிக்கொண்டுதானிருக்கின்றன. அதுவும் முழுக்க முழுக்க, சினிமாப் பாடல்கள், பேட்டிகள், படக்காட்சிகள், காமெடிக் காட்சிகள் என ஒரு நாளில் 12 மணி நேரத்துக்கு மேல் சினிமா உள்ளடக்கத்தை மட்டுமே நம்பி இயங்குகின்றன.
இவை தவிர ஒவ்வொரு ஊரிலும் உள்ள உள்ளூர் சேனல்கள் எனக் கணக்கிட்டால் நூற்றுக்கும் மேற்பட்ட சேனல்கள் தமிழ் சினிமா படங்களையும், அதன் காட்சித் துணுக்குகளையும், பாடல்களையும் மட்டுமே நம்பி இயங்கிவருகின்றன. இந்தச் சேனல்களை லாபகரமாய் நடத்த இவர்களுக்கு உதவும் தமிழ் சினிமாவுக்கு இவற்றால் பத்து பைசாகூடப் பிரயோஜனமில்லை. இதுவும் இன்று வருத்தம் தரும் கசப்பான உண்மை.
சென்னையைத் தவிர, வெளியூர்களில் மட்டுமே தெரியும் பல சேனல்களின் நிகழ்ச்சிகளுக்கான மாதச் செலவு எவ்வளவு தெரியுமா? வெறும் ஒரு லட்சத்திலிருந்து மூன்று லட்சங்களூக்குள்தான். ஐந்து லட்சம் செலவு எல்லாம் சின்ன சேனல்களிலேயே கொஞ்சம் வசதி படைத்த சேனல்காரர்களுக்குத்தான். பாதி நேரம் சினிமா கிளிப்பிங், பாடல்கள் என்றால் மீதி நேரம் இருக்கவே இருக்கிறது. ஷாப்பிங் நிகழ்ச்சிகள், யுனானி, ஆயுர்வேத, சித்த வைத்தியச் சிகாமணிகளின் விளம்பர நிகழ்ச்சிகள். இவற்றுக்கு ஸ்லாட்டுகளை விற்று, 1500 சதுர அடி வீட்டிலிருந்து சாட்டிலைட் சேனல்கள் நடத்தி மாதம் குறைந்தபட்சம் முப்பதிலிருந்து ஐம்பது லட்சம் ரூபாய் வரை சம்பாதித்துக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கான வருமானம் ஸ்லாட் விற்பனையில் வருகிறது என்றாலும், இவர்களது சேனலைப் பார்க்க வைக்க, நடுநடுவே குறைந்தபட்சம் ஆறிலிருந்து எட்டு மணி நேரத்திற்காகவாவது சினிமா உள்ளடக்கம் தேவை. இவை இல்லையென்றால் சேனலைத் திரும்பிக்கூட மக்கள் பார்க்க மாட்டார்கள். எல்லோரும் லாபத்தோடு இருக்கிறார்கள் என்று சொல்ல வரவில்லை. ஆனால் குடிசைத் தொழில்போல ஆகிவிட்டது சாட்டிலைட் சேனல் என்பதைச் சொல்லவருகிறேன்.
இப்படி சினிமாவை நம்பி இயங்கிக்கொண்டு, லாபம் சம்பாதிக்கும் சாட்டிலைட் சேனல் எனும் தொழில்நுட்பம் அந்த சினிமாவைக் கோடிகளில் முதலீடு செய்து தயாரிக்கும், தயாரிப்பாளர்களுக்கு எந்த விதத்தில் லாபம் கொடுக்கிறது என்று கேட்டால் நயா பைசாகூட இல்லை என்றே சொல்ல வேண்டும். இதை சினிமாவின் லாபமாய் மாற்ற முடியாதா என்பதுதான் கோடம்பாக்கத்தில் சினிமாவை நேசித்து முதலீடு செய்பவர்களின் ஏக்கமான கேள்வி.
Post a Comment
2 comments:
நியாயமான ஏக்கம்தான்
புக் போட்டு விக்கிற மாதிரி ஆகிப்போச்சா சினிமா நிலைமையும் ஹ்ம்ம்.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)
ஏன் சார்... ஒரு தடவை பாட்டு ஒலிபரப்பாக்குவதற்கு 10,000 ரூ என்று, தயாரிப்பாளர்கள் சங்கம் நிர்ணயக்க முடியாதா? (படத்தின் தகுதியைப் பொறுத்து. உதாரணம் ஷங்கர் சார் ஃபிலிமுக்கு மிக அதிகம் என்பதாக). இதே போன்று காமெடிக்கும் நிர்ணயத்தால், தயாரிப்பாளர்களுக்கு காசு வரும் அல்லவா? அதே போன்று படம் வாங்கிக்கொண்டால், அது பாடல் தனியா, காமெடி தனியா என்று உபயோகப்படுத்தக் கூடாது என்று சொன்னாலும் தயாரிப்பாளர்களுக்கு நல்லதுதானே. கோடம்பாக்கத்தில் 100 தயாரிப்பாளர்களில் 10 பேர்தானே நன்றாக இருக்கிறார்கள்.
Post a Comment