Thottal Thodarum

May 12, 2015

ஒரு பழைய விமர்சனம் - லெமன் ட்ரீயும் ரெண்டு ஷாட் டக்கீலாவும் நூலைப் பற்றி

விளம்பரத்துல கேபிள் அண்ணனோட புத்தக தலைப்பை அவசரமா படிச்சப்ப டக்கீலான்னுங்குறதை ஷக்கீலான்னுதான் முதல்ல படிச்சேன்.(எனக்கு வயசாகிப்போச்சோ...முதல்ல கண்ணை ஒழுங்கா செக்கப் பண்ணணும்.)



தொகுப்பு முழுக்க கதைகளோட வர்ணனை ஒரு மாதிரியாத்தான் இருந்தது.மனசுக்குள்ள இருக்குறது வெளியில தெரிஞ்சுடக்கூடாதுன்னு நினைச்சுகிட்டு முகமூடியோட இந்த சிறுகதைகளை விமர்சனம் பண்ணினா அது எப்படி இருக்கும்னு தெரியுமா?



அளவுக்கு அதிகமா பெண்ணின் அங்கங்களை இப்படி வர்ணிச்சா, அது எல்லார் மனசையும் கெடுத்துடும்.-இப்படி சொல்லி, கதைகள்ல இருக்குற, சிந்திக்க வைக்கிற விஷயங்களையும் இருட்டடிப்பு செய்துடுற விமர்சனமாத்தான் இது இருக்கும்.



நாம கண்ணை மூடிட்டா உலகத்துல நடக்குற எல்லா சம்பவங்களும் நின்னா போயிடுது?அதனால எது நல்லது, எது மோசம்னு குற்றம் குறை கண்டுபிடிக்காம, ஒரு ஓரமா நின்னு என் மனசுக்குத் தோணின விஷயங்களை தட்டச்சிருக்கேன்.



முத்தம் கதையில் வரும் நிஷாவைப்போல் அவதிப்படும் பெண்கள் நம் நாட்டில் ஏராளமாக இருக்கிறார்கள்.அவளிடம் எதையும் எதிர்பார்க்காமல் அவன் உதவி செய்தான் என்பதற்கு காரணம், இது போன்ற சந்தர்ப்பங்களில் என்ன செய்வது என்றே தெரியாமல் இருப்பதுதான். அதாவது இதுவரை இப்படிப்பட்ட சந்தர்ப்பங்கள் வாய்க்கவில்லை. சில விஷயங்களில் ஆற அமர யோசித்து முடிவெடுப்பதற்குள் அந்த சூழ்நிலைகள் நம்மை விட்டு எங்கோ போய்விடும்.



ஆண்டாள் கதையில் வருவது போன்று நம்மில் பெரும்பாலானோருக்கு பால்ய வயது அனுபவங்கள் கொஞ்சமாவது ஏற்பட்டிருக்கும்.அந்த வயது பொறாமையில் எந்த உள் நோக்கமும் இருக்காது.அவங்க நம்ம கூட மட்டும் நட்பா இருக்கணும் என்ற ஒரே ஒரு குறிக்கோள்தான் இருக்கும்.(ஆனால் இப்போது ஊடகங்களின் தாக்கத்தால் பெரியவர்களையும் தாண்டிய கறை படிந்த மனசு பால்ய வயதிலேயே ஏற்பட்டு வருவதாக எனக்குத் தோன்றுகிறது.)



ஒரு காதல் கதை, இரண்டு கிளைமாக்ஸ் - இப்படியெல்லாம் நடக்குமா என்ற சந்தேகத்துக்கே இடமில்லாமல் ஒப்புக்கொள்ள வைக்கும்  வகையில் உறுதியாக சொல்லப்பட்ட கதை.



துரை, நான்...ரமேஷ் சார் - கோடம்பாக்கத்தை நம்பி வந்த ஆயிரக்கணக்கான ராஜூக்களை நினைவூட்டிய கதை.இப்படிப்பட்ட மனிதர்கள் யாரும் இல்லை என்று மறுக்க யாரும் இல்லை.



என்னைப்பிடிக்கலையா கதை, இப்போது நிறைய குடும்பங்களில் உள்ள தலையாய பிரச்சனையை அப்பட்டமாக்குகிறது.செய்தித்தாள்களில் வரும் கள்ளக்காதல் கொலைகள் பற்றிய செய்திகளுக்கு இந்தக்கதையில் அந்தப்பெண் சொல்லும் காரணம்தான் முக்கியப்பங்கு வகிக்கிறது என்பது அனைவரும் அறிந்த உண்மை.



மாம்பழ வாசனை - தொடக்கத்தில் ஒரு மாதிரியாகவே போனாலும் கதையின் இறுதியில் எல்லாவற்றையும் மறந்து அடப்பாவமே என்று சொல்ல வைத்துவிட்டது.



நண்டு சிறுகதை, நம் நாட்டின் மருத்துவ சிகிச்சை ஏழைகளை ஓரங்கட்டுவதில் எவ்வளவு தீவிரமாக இருக்கின்றன என்பதை மறைமுகமாக சொல்கிறது.இவர்களுக்கெல்லாம் நம்பிக்கைதான் வாழ்க்கை.



ஒட்டுமொத்தமாக இந்த சிறுகதைத்தொகுதியைப்பற்றி சொல்லவேண்டும் என்றால் மனதில் உள்ள ஒரு மாதிரியான உணர்வுகளைத்தூண்டின என்று சொல்லவில்லை என்றால் நான் பொய் சொன்னவனாவேன்.



ஆனால் இதுதான் உண்மை.இந்தக்கதையில் உள்ள கதாபாத்திரங்கள் யாருமே முழுவதும் கற்பனையானவர்கள் என்று சொல்லவே முடியாது. எங்கோ வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள். அதனால் கதையில் உள்ள அவலங்களை, நம் சமூகத்தில் உள்ள அவலமாக கருதி, அதற்கு நாமும் நேரடியாகவோ மறைமுகமாவோ காரணமாக இருக்கும் உண்மையை ஒப்புக்கொண்டு, நம் மீதே கோபப்பட வேண்டியதுதான்.



இதை  விமர்சனம் என்று சொன்னாலும் அவ்வளவுக்கு எனக்கு திறமை போதாது. சாதாரண வாசகனின் உளறல் என்று இதை எடுத்துக்கொள்ளவும்.

சரண்

Post a Comment

No comments: