Thottal Thodarum

May 19, 2015

சாப்பாட்டுக்கடை - மன்னார்குடி டேஸ்டி செட்டிநாடு மெஸ்


நண்பர் கே.ஆர்.பி ரொம்ப நாளாக சொல்லிக் கொண்டிருந்தார். மன்னார்குடி போகும் போது ஒரு நடை வந்து சாப்ட்டு பார்த்துட்டு எழுதுங்க. அம்பூட்டு நல்லாருக்கு என்று. எனவே இம்முறை மன்னார்குடி ப்ளான் போட்ட போதே அங்கே போக வேண்டுமென்று முடிவெடுத்திருந்தேன்.
போன வேளையில் நேரம் ஆகிவிட்ட படியால் மதிய சாப்பாடு கிட்டத்தட்ட மாலை நேர சாப்பாடாகிவிட்டது.  மூன்று மணிக்கு போய் சேர்ந்தோம்.

மன்னார்குடி பஸ்ஸ்டாண்டிலிருந்து இடது பக்கமாய் திரும்பினால் கொஞ்சம் தூரம் போனவுடன் வந்துவிடும் இந்த மெஸ். சின்ன வழியாய் உள்ளே சென்றால் தாபா போன்ற குடிசையில் அமைந்துள்ளது ஒரு மாதிரியான வில்லேஜ் அட்மாஸ்பியரை கொடுத்தது. உட்கார்ந்த மாத்திரத்தில் பரபரவென நியூஸ்பேப்பரைப் போட்டு, அதன் மேல் வாழையிலையை விரித்தார்கள். கூட்டு பொரியல் மட்டுமில்லை நேரம் ஆயிருச்சு என்றார் கடை ஓனர் செந்தில். இருந்த பசிக்கு வாழையிலையைக் கூட தின்னகூடிய மனநிலையில் இருந்ததால் பரவாயில்லைங்க சோற்றைப் போடுங்க அது போதும் என்றேன். 

பரபரவென கொஞ்சூண்டு வெங்காய பச்சடியை மட்டும் வைத்துவிட்டு, சாதத்தை பரிமாறினார்கள். போடும் போதே கே.ஆர்.பி “தலைவரே எல்லாத்தை ஒரே கிரேவிக்கு கலந்துறாதீங்க” என்றார்.  முதலில் சிக்கன் குழம்பில் ஆரம்பித்தோம். நல்ல சுவையுடன் இருந்தது. அடுத்தது மட்டன் குழம்பு. வழக்கமாய் பல இடங்களில் கொஞ்சம் நீர்த்து போய்த்தான் இருக்கும் மட்டன் குழம்பு. இங்கே திக்காக, நல்ல காரம் மணத்துடன், அருமையாய் இருக்க, அடுத்த ரவுண்ட் போகலாம் என்று யோசிக்கும் போதே மீன் குழம்பு வந்தது, அருமையாய் இருந்தது. நெக்ஸ்ட் நாட்டுக்கோழி குழம்பு. சுவையாய் ஓகே என்றாலும், குழம்பு என்பதற்கு பதிலாய் ரசமென்று சொல்லியிருக்கலாம். காடை கிரேவி, நண்டு கிரேவி, எரா தொக்கு என வரிசைக்கட்ட, காடையும்,எராவும் கிட்டத்தட்ட ஒரே விதமான மசாலாவாக இருந்ததால் பெரிய வித்யாசம் தெரியவில்லை. நண்டு ஓகே. பட் சூடான சாதத்தோடு இத்தனை விதமான கிரேவிக்களை வளைத்துக் கட்டி, குழைத்து அடிப்பதில் உள்ள சுவையே அலாதிதான்.
உடன் சைட்டிஷ்ஷாய் ரெண்டு மீன், ஒரு நண்டு, பெப்பர் சிக்கன் என வேறு ஆர்டர் செய்திருந்தார் ஓ.ஆர்.பி.ராஜா. மீன் சின்னதாய் இருந்தாலும் நன்றாகவே இருந்தது. நண்டை ராஜாவே முழுக்க முழுக்க எனக்கு கொடுக்காம சாப்பிட்டுவிட்டார். எனக்கு கொஞ்சம் உடைச்சு உள்ள இருக்குறத மட்டும் கொடுங்கன்னு அவர் கிட்ட தாட்டிவிட்டதோட பலன். வயிற்றை பாதிக்காத சுவையான ஊர் சைட் சாப்பாடு சாப்பிட வேண்டுமென்று நினைப்பவர்கள், மன்னார்குடி பக்கம் போகிறவர்கள் ஒரு நடை போய்விட்டு வரக்கூடிய நல்ல மெஸ்.

பின் குறிப்பு : நான்கு பேர் இத்தனையும் சாப்பிட்டு வந்த பில் 750 மட்டுமே  ஓ.ஆர்.பி.ராஜா ஹேப்பி அண்ணாச்சி :)
கேபிள் சங்கர்

Post a Comment

1 comment:

Muthukumar S said...

Dear Sankar Ji,

Could you please suggest good Chettinad Mess in Chennai.
Thanks in advance.

With rgds,
Muthu.