PIKU
சமயங்களில் இம்மாதிரியான படங்களைப் பார்க்கும் போது ஏன் தமிழ்ல மட்டும் இப்படி படங்கள் வர மாட்டேன்குது? என்ற ஏக்க கேள்வி வராமல் போகாது. விந்தணு தானத்தை வைத்து கம்பியில் நடக்கும் கதைக் களனை வைத்துக் கொண்டு ஹிட்டடித்தவர்களின் அடுத்த படைப்பு ஷிட்டடிக்கும் விஷயத்தை வைத்து. படிக்கும் போதே முகம் சுளிக்க வைக்கும் விஷயமாய் இருக்கிறதல்லவா? ஆனால் படம் பார்க்கும் போது அப்படி தோன்றாது. அதான் இப்படத்தின் வெற்றி.
70 வயதான் அப்பா. அவருடய ஒரே கேர்டேகரான ஆர்கிடெக்ட் மகள். அப்பாவின் ப்ரச்சனை வயதும், அவரது கான்ஸ்டுபேஷனும், உடல் டெம்பரேச்சர் ஒரு டிகிரி ஏறினாலும் தனக்கு ஏதோ வந்துவிட்டது என்று புலம்பும் மனோநிலையும் தான். வயதுக்கே உரிய, எரிச்சல், கிண்டல், நாக்கு மேல பல்லு போட்டு பேச யோசிக்கிறத முகத்தில் அடிக்கிறார்ப் போல பேசுவது என எல்லா இம்சைகளையும் கொண்டவர் அமிதாப். இவருடன் எப்போது சண்டை, சச்சரவுடன் தான் வாழ்க்கை என்று முடிவோடு வளைய வரும் மகள் தீபிகா. இதனால் அவர் முகத்தில் எப்போதும் எள்ளூம் கொள்ளூம் தான். இவரது எரிச்சல், டென்ஷனுக்கு ஒரே வடிகால் அவள் கம்பெனி அமர்த்தியிருக்கும் டாக்ஸி. ஒவ்வொரு நாளும் அவள் லேட்டாக கிளம்பி, சரியான நேரத்திற்கு செல்ல டிரைவரை வேகப்படுத்தி, டென்ஷனாகி, எதாவது ஒரு விபத்தில் சிக்கிக் கொண்டு அவதிப்படும், டாக்சி கம்பெனி ஓனர் இர்பான். அமிதாபுக்கு தன் கடைசி ஆசையாய் சொந்த ஊரான கொல்கொத்தாவுக்கு போக விருப்பம். தன்னுடய கான்ஸ்டுபேஷன் ப்ரச்சனை காரணமாய் எது எப்படி ஆனாலும் ரோட் என்றால் சட்டென எங்காவது உட்கார்ந்து விடலாம். நிறுத்தி, நிறுத்தி போகலாம் போன்ற பல வசதிகள் காரணமாய் 1500 கிலோமீட்டர்கள் காரில் பயணிக்க முடிவு செய்கிறார். தீபிகா, அமிதாப், இர்பானின் இந்த பயணம் தான் படம்.
காலையில் எழுந்ததிலிருந்து இரவு படுக்கப் போகும் வரை ஷிட் இந்த கலரில், தண்ணியாய், நேற்றை விட கொஞ்சம் கெட்டியாய், பச்சை கலந்து போயிற்று. என விரிவான பேச்சில்லாமல் இருக்காது என்கிற நிலையில் தன்னிலையை பற்றி கொஞ்சம் எரிச்சல் இருந்தாலும் அதையெல்லாம் மீறி அவர் மீது கொண்ட பாசம் காரணமாக அவரை சகித்துக் கொண்டு அதை வெளியே காட்டிக் கொண்டலையும் கேரக்டரில் தீபிகா க்ளாஸ். சமீபத்தில் அவர் அழகை வெளிப்படுத்தாமல் நடித்த படம் இது ஒன்றாய்த்தான் இருக்கும். குறிப்பாய் ஒரு காட்சியில் அமிதாப் குடித்துவிட்டு, ரகளையாய் ஒரு டான்ஸ் ஆடிக் கொண்டிருக்க, முதலில் அந்த சத்தத்தைக் கேட்டு எரிச்சலாவதும், அப்போது அவரது பாய் ப்ரெண்டின் போன் வர, அதை கண்டுகொள்ளாமல் இருப்பார். பின்பு அவரது ஆட்டமும் பாட்டமும் அவருக்குள் தொற்றிக் கொள்ள, அவரும் லைட்டாக சந்தோஷ மூடுடன் ஆட்டம் ஆடியபடி ரூமை பூட்டும் போது ஒருவிதமான மையமான வெட்கச் சிரிப்பை உதிர்த்து பூட்டுவார். அடுத்த நாள் காலையில் அமிதாப் லோ பிபி ஆகி மயங்கிப் போய் எழாமல் இருக்கும் வேளையில் பதறி அடித்துக் கொண்டு வெளியே வரும் போது அவரது பாய் ப்ரெண்ட் அவரது அறையிலிருந்து வெளியே வருவார். முன் காட்சியின் வெட்கச் சிரிப்புக்கான காரணம்.
முன் தள்ளிய தொந்தியுடன், காசு மிஷினுடன், எப்போது சந்தேகமும், எரிச்சலும், சர்காசமும், துக்கிரித்தனமாய் பேசிக் கொண்டும்,எங்கே தன்னை தன் மகள் கவனிக்க தவறிவிடுவாளோ என்ற நம்பிக்கையின்மையுடனும், அவளுக்கு திருமணம் ஆகிவிட்டால் தன்னை விட்டுவிடுவாள் என்பதற்காக, அவள் பாய்ப்ரெண்டுடன் உறவு கொள்ள அனுமதித்ததை, உனக்கான எல்லா சுதந்தரத்தையும் அளித்திருக்கிறேன். அதனால் நீ பிறந்த போது உன்னை நான் சரியாய் பார்த்து கொண்டேனல்லவா? அது போல இப்போது நான் குழந்தை நீ பார்த்து கொள்ள வேண்டியது உன் கடமை என்று அடம்பிடிக்கும் வீட்டில் உள்ள வயதானவரின் கேரக்டர். மனுஷன் பின்னி பெடலெடுத்திருக்கிறார். ஒவ்வொரு முறை டாய்லெட்டிலிருந்து வெளியே வரும் பொது திருப்தியில்லாத ஒரு மனநிலையில் அவர் காட்டும் முக பாவம், பார்ட்டியில் தீபிகாவை இம்ப்ரஸ் செய்ய வரும் பையனிடம், அவள் ஒன்றும் வர்ஜின் அல்ல என்று அவள் மேல் ஏதும் இம்ப்ரசன் வராமல் பார்த்துக் கொள்ளூம் காட்சியிலாகட்டும், க்ளைமேக்ஸில் சைக்கிளில் கொல்கொத்தாவை சுற்றி விட்டு வரும் காட்சியாகட்டும் மனுஷன் வாழ்ந்திருக்கிறார்.
அதே போல இர்பான். என்னடா இது கஸ்டமர் என்ற எரிச்சலுடன் தான் தன் பயணத்தை ஆரம்பிக்கிறார். மெல்ல வேறு வழியேயில்லாமல் பயணத்தை தொடர ஆரம்பித்து, கொஞ்சம் கொஞ்சமாய் பெரிசிடம், நெருங்க, அவருக்கு பிடித்தமான காண்டுபேஷனைப் பற்றி பேசி, படம் வரைந்து பாகம் குறித்து விவாதித்து, அவர் குரலுயர்த்தும் போது அடங்கி, மீண்டும் குரலுயர்த்தி அடக்கி, கொஞ்சம் கொஞ்சமாய் அவருக்கும் தீபிகாவுக்கும், அமிதாபுக்குமிடையே ஆன ட்ரைவர் கஸ்டமர் உறவின் நிலையை தாண்டுமிடமும், அவரது நடிப்பும் அட்டகாசம். வீட்டில் இவருக்கு தனியே இம்சையைக் கொடுக்கும் அம்மாவும் தங்கையும் இருக்கிறார்கள். அவர்களிடம் பேசுமிடமாகட்டும், இங்கே அமிதாப் குடும்பத்துடனான உறவாகட்டும் மனுஷன் நடிக்கிறார் என்றே தெரியவில்லை.
மைனஸாய் ஒரிரு விஷயங்கள் இருந்தாலும், அதையெல்லாம் தூக்கி அடித்துவிடும் பர்பாமென்ஸ், அருமையான, காமெடியான வசனங்கள், அழகான ஒளிப்பதிவு, சட்சட்டென மாறாத மூட் மாற்றாத எடிட்டிங், சுர்ஜித் சர்காரின் இயக்கம் என பல ப்ளஸ்கள் இருப்பதால் அதெல்லாம் குறையாகவேயில்லை. வீட்டில் உள்ள பெரியவர்கள், குடும்பமாய் பாருங்கள் நிச்சயம் என் ஜாய் செய்வீர்கள். இந்தி தோடா தோடா மாலும் பார்ட்டிகள் சப்டைட்டிலுடன் பார்த்தால் மட்டுமே மொத்தமாய் ரசிக்க முடியும் இல்லாவிட்டால் எல்லோரும் சிரிக்குமிடத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை தவிர்க்க முடியாது.
ஹிட் என்று சொல்ல ஆரம்பித்தாலே ரீமேக்க கிளம்பிவிடும் நம்மூர்காரர்கள் யாரும் இதுவரை விக்கி டோனரையோ, அல்லது இப்படத்தையோ ரீமேக்க கிளம்பவேயில்லை. ஏனென்று கேட்டால் தமிழ்ல இதெல்லாம் ஓடாது பாஸ் என்பார்கள். வாழ்க காமெடி, பேய்ப்படங்கள்.
கேபிள் சங்கர்
கேபிள் சங்கர்
Comments